நரைத்தடம்
வயதானவர்கள் என்றால் வெட்டிக்கதை பேசிக்கொண்டு, ஊர் வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டு, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு மரத்தடியில் கட்டில் போட்டு சுகமாக ஓய்வெடுப்பவர்கள் என்கிற சினிமா மாயையை உதறிவிட்டு,
நரைகூடிக் கிழப் பருவம் எய்தி –
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?! என்ற பாட்டுடைக் கவிஞன் பாரதியின் வரிகளுக்கு உயிர்ப்பித்துக் காண்பிக்கிறது ‘நரைத்தடம்’.
பொதுவாகக் குறும்படம் என்றால் காமெடி, தினசரி ஹாட் டாபிக் மற்றும் காதல் கதைகளையே முக்கியமாகத் தேர்ந்தெடுக்கும் இந்தச் சூழலில் தனிமனித சுதந்திரத்திற்காகத் தன் கடைசி மூச்சுவரை வாழ்ந்துவரும் இடதுசாரி சிந்தனை கொண்ட பெரியவர் ஒருவரின் வாழ்க்கையையும் சமூகத்தின் மேல் அவர் கொண்டுள்ள அக்கறையையும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.
வயதானவர்களையும் அவர்களுக்கே உரித்தான குணாதிசயங் களையும் தாண்டி, பொதுச் சேவைகளில் ஈடுபடுவோர் படும் இன்னல்களையும் மற்றவரிடம் அடி வாங்கும் சூழ்நிலையையும் அசாதாரண மாகக் கூறுகிறார் இந்த கதையின் நாயகன். ‘சாதி, மத, அரசியல் பேதமின்றி சமூக அவலங்களை சிந்தனை செய்தால் நீயும் ஒரு போராளியே!’ என எதார்த்தமாக வாழ்ந்து வருகிறார் அந்தப் பெரியவர்.
தொடக்கக் காட்சியில் பசுமையான கிராமத்து மலை, ரசிக்கத் துடிக்கும் மனம் என கதையின் நகர்வில் உள்ள இடங்களைப் பார்த்துகொண்டே இருக்கலாம். மலையையும் மலை சார்ந்த இயற்கைச் சூழலையும் கண்ணாடிப் பேழைக்குள் திணித்து பச்சைப் பசேலென வளர்ந்துள்ள சினிமா வனத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சிறிய வீட்டில் இருந்து வெளியே வரும் முதல் காட்சியில் நரைத்த தலை முடியுடன் கண்ணாடி அணிந்த வயதான ஒருவர் பனியனுடன் வெளியே வரும் வேளையில் கதையின் மாற்று சிந்தனையை நன்கு அறியமுடிகிறது. கண்ணாடிக்கு முன் நின்று தனது தோள்பட்டை மீது கைவைத்துத் தடவிப் பார்க்கும் வேளையில் அதன் காரணம் நமக்குப் புரியவில்லை. முந்தையநாள் கள்ளச்சாராயம் விற்றவர்களைக் காவல்துறையிடம் காட்டிக் கொடுத்ததால், சாராய வியாபாரிகள் அடித்த இடத்தைத் தடவிக்கொடுப்பதாக வரும் காட்சி நம்மை நெகிழ்ச்சியான மனநிலைக்கு கொண்டு சென்று முந்தைய காட்சிக்கு விளக்கமளிக்கிறது.
வயதானவரின் மகனாக வரும் நடிகர் ஒரு மகனாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். “நாமக் கட்டியும், கோவணத்தையும் தவிர வேறு அனைத்தும் விலை உயரும்” எனும் போதும் சிரிப்பையும், “இந்திய தேசியக் கொடியை உருவாக்கியதே ஒரு முஸ்லிம் பெண்மணிதானே!” என்று கூறும்போது நமது சமுதாயத்தின் நிதர்சனத்தையும் காட்சிப் படுத்துகிறார் கதையின் நாயகன். ஒருகட்டத்தில் “யோக்கியனாக எவன் வேண்டுமானாலும் வேசம் போடலாம், ஆனால் வாழ்வது கடினம்” என்று கூறும் வசனத்தில் தனிமைச் சுழலில் வளர்ந்த சிங்கத்தின் கர்ஜனை ஒலிக்கிறது.
டீ குடிக்கக்கூட மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் போக வேண்டும் என்கிற அந்தப் பகுதியில், அவர் வாழும் தனிமைச் சூழல் மற்றும் சந்திக்கும் மனிதர்களுடன் கதையின் நாயகன் பேசும் விதத்தைப் பார்க்கும் போது, அவர் வாழும் காலத்திற்குள் சென்று அவருக்கு கிடைக்கப்பெற்ற வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் காளிதாஸ்.
“ஒரு நாளைக்கு 24 மணி நேரம் எனக்குப் போதவில்லை, 50 மணிநேரம் வேண்டும்” என்று கூறும் வேளையில் இன்றைய இயந்திர வாழ்க்கையில் சிக்கிப் போயுள்ள நாம் வாழ்க்கையை எப்படி நகர்த்தி வருகிறோம் என்று நச்சென்று கூறுகிறார்.
தினமும் காலையில் உணவு கொண்டு வந்து கொடுக்கும் மகன், மகன் போனபிறகு அந்த உணவைப் பறவைகளுக்கு வைத்துவிட்டு, தனக்கான உணவைத் தானே சமைத்து சாப்பிடும் அப்பா என, தந்தை மகன் உறவில் இருவரும் வாழ்கிறார்கள். இந்தக் கதைக்கு நாயகனாகவும், கதையின் கருப் பொருளாகவும் இறுதிவரை நம்மை அழைத்துச் செல்கிறார் அந்த நரைமுடிக் கிழவர்.
இடையில் வரும் கார்த்திக் கதாபாத்திரம் எதார்த்தத்தின் உச்சம்.
பகுத்தறிவுச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு சமூகத்தின் மீது அக்கறை கொண்ட தனிமனிதர் ஒருவரின் வயோதிக வாழ்க்கையை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டி இருக்கிறார்கள் படக்குழுவினர்.
படத்தின் இசை, ஒளிப்பதிவு மற்றும் வசனம் அனைத்தும் சிறப்பு. உலகம் முழுவதும் பல குறும்பட விழாக்களில் கலந்துகொண்டு சுமார் 22 விருதுகளையும், நார்வே குறும்பட விழாவில் சிறந்த குறும்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நரைத்தடம்.
பொதுத்தொண்டு மற்றும் சமூகம் என்றால் என்னவென்று சரியான புரிதலின்றி எடுக்கப்படும் இன்றைய படங்களுக்கு மத்தியில் “நரைத்தடம்” ஒரு சிறந்த படைப்பு.
Comments (0)