சுண்டிய குடலின் வாசம்

கங்குகளில் தெறிக்கும்
அனலைக் குடித்து
சிவப்பேறி வெந்து தணிந்த
சூளையிலிட்ட செங்கல்களில்
கொடும் பசியில் கொதித்துச்
சுண்டிய குடலின் வாசம்
பூத்துக் கிடக்கும்

மணிக்கணக்காய்
மூச்சடக்கி மிதித்தெடுக்கும்
களிமண்ணின் பதத்தை
கொப்புளங்கள் வெடித்து
ரணங்கூட்டி வதைக்கும் பாதங்கள்
முணுமுணுத்துச் சொல்லும்

வாங்கிய முன்பணத்துக்காய்
இளைத்துப்போன
வாங்காத கூலியில்
வெந்தது வேகாதது
கணக்கில் தப்பியதென்று
சேதாரம் போக
அதிகாரங்களின் அத்தனை நரித்தனத்துக்கும்
ஈடு சொல்லி வீடு வந்து
சேர்ந்த பணம்
பொழுதுக்கும் கும்பி நிறைக்கும்
டீக்கடை பாக்கிக்கும்
மூட்டுவலி தைலத்துக்குமாய்
மூச்சுமுட்டி நிற்கும்

காலங்காலமாய் கல்லறுத்த பிழைப்பில்
முடமாகிப்போன காலும்
சவமாகிப்போன கண்ணுமாய்
தலைமுறை தாண்டியும்
தலையெழுத்து சிரிக்கும்
குடிசையின் அக்னிமூலை உயிர்ப்பு
சூளையின் தனலோடும்
வெறிக்கும் வெய்யிலோடும்
ஊசலாடிக் கிடக்கும்

சாமம் தாண்டியும்
சாளரங்கட்டும் பச்சைக் கல்லோடு
கூட்டிக் கழித்துப் பார்க்கும்
கந்துவட்டிக் கணக்கு
பொறையோடும் டீயோடும்
பசித்த வயிறைப்
புறத்தே தள்ளும்

அடக்கிவைத்த சிறுநீரின்
அடிவயிற்றுக் குத்தலாய்
தேக்கி வைத்த
வெசனமெல்லாம்
தேகத்தை மென்று தின்னும்

ஆண்டுக்கொருமுறை
அய்யனாரு பூசையில்
குறை சொல்லி
முறையிட்டு நிற்க
தை பிறந்தால்
வழி பிறக்குமென்று
குறி சொல்லும்
பூசாரியின் வாக்கில்
விடியாத நாட்களின்
நுகராத வெளிச்சம்
கைசேராக் கனவுகளில்
இளைப்பாறியே களைக்கும்

-அன்புமணிவேல்


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *