காரல் மார்க்ஸ்இந்தியாவைச் சிதைத்தாரா?
“கம்யூனிஸ்ட் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் நடுநடுங்கட்டும்” என்றார் காரல் மார்க்ஸ். அதேபோல் உலகெங்கும் ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கின. கம்யூனிஸ்டுகள் மீது சொல்லொணா அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டன. இருப்பினும் கம்யூனிசத்தின் செல்வாக்கை ஹிட்லர் கூட புறக்கணிக்க முடியாமல் தனது கட்சிக்கு தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி என்று பெயர் சூட்டிக் கொள்ள நேர்ந்தது. ஹிட்லர் வகையறாக்கள் தான் இன்றும் இந்தியாவை காரல் மார்க்ஸ் சிதைத்து விட்டார் என்று பிதற்றுகிறார்கள்.
காரல் மார்க்ஸை பற்றி நேரு கூறும் போது, ’19 ஆம் நூற்றாண்டின் இடையில் ஜெர்மனியில் ஒருவர் தோன்றினார். அவர் பிற்காலத்தில் அபேதவாதத்தின் தீர்க்கதரிசியாகவும் அபேதவாதத்தின் இன்னொரு உருவமாகிய பொதுவுடைமை வாதத்தின் தந்தையாகவும் விளங்க வேண்டும் என்று விதி வகுத்திருந்தது. அவர்தான் காரல் மார்க்ஸ். செயலாக்கத்திற்கு உதவாத வெறும் வறட்டு சித்தாந்தங்களை விவாதிக்கும் தர்க்கவல்லுநரோ அல்லது வழவழா குழகுழா என்று பேசும் தத்துவ வல்லுநரோ அல்ல. அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகளை விஞ்ஞான முறைப்படி ஆய்வு செய்து உலகத்தின் தீமைகளுக்கு தீர்வு காண வழிவகுத்தவர் காரல் மார்க்ஸ். இதுவரையில் தோன்றிய தத்துவ நூல்கள் எல்லாம் உலகத்தைப் பல்வேறு விதங்களில் விமர்சித்தன. ஆனால் காரல் மார்க்ஸோ உலகத்தை மாற்றி அமைக்கும் செயலில் முனைய வேண்டும் என்ற பொதுவுடைமைத் தத்துவத்தை உலகிற்கு வழங்கினார். உலக வரலாற்றை விஞ்ஞான முறைப்படி விமர்சனம் செய்து மனித சமுதாயம் எத்திசையில் வளர்ந்து வருகிறது என்றும் அவ்வளர்ச்சியை எவ்வாறு துரிதப்படுத்த முடியும் என்றும் பகுத்தாய்ந்து தனது கருத்துக்களை வெளியிட்டார்’ என்றார்.
காரல் மார்க்ஸ் தனது இணைபிரியா நண்பன் பிரெடெரிக் ஏங்கெல்சுடன் வெளியிட்ட கருத்துக்கள் இந்த உலகை குலுக்கியது; உலகின் சுழற்சியில் புரட்சிகர மாறுதலை ஏற்படுத்தியது ; உலகின் பல நாடுகளில் புதிய சமூக அமைப்பை, புதிய நாகரீகத்தை ஏற்படுத்தியது; ஆண்டாண்டு காலமாக அடிமை நுகத்தடியில் அவதியுற்று வாடிய உழைக்கும் மக்களுக்கு போராட்ட உணர்வை இன்றளவும் வளர்த்து வருகிறது.
சமூக மாற்றத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மார்க்ஸ் சாதாரண முனிவரல்ல. அவரை மாமுனிவர் என்று திரு.வி.க. அழைத்தார். அர்ப்பணிப்பால் மாமுனி தான் என்றாலும் அவர் ஒரு புரட்சிக்காரர். ஆபத்தான புரட்சிக்காரர் என்று நாடு கடத்தப்பட்டதால் பல நாடுகளில் அகதியாக வாழ்ந்தார். அத்தகைய வாழ்க்கை கடுமையானது தான். அதே நேரத்தில் வறுமையில் வாடிய போதும் சோரம் போகாமல் செம்மையாக வாழ்ந்தார்.
ஏங்கெல்ஸின் கூற்றுப்படி மார்க்ஸ் தனது வாழ்நாளில் இருபெரும் கண்டுபிடிப்புகளைச் செய்து மாபெரும் புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர். அவை ஒன்று வரலாற்றியல் பொருள் முதல் வாதம்; மற்றொன்று முதலாளித்துவத்தின் உள்ளடக்கத்தைக் கண்டறிந்தது.
என்னுடைய ராஜ்யத்தில் எந்த ரயில் பாதையும் போட விட மாட்டேன். என்னைப் போல் வேகமாக பிரயாணம் செய்ய ஒரு செருப்பு தைப்பவனையோ அல்லது துணி தைப்பவனையோ நான் விரும்பவில்லை என்று கூறிய ஜெர்மானிய குறுநில மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் நமது காரல் மார்க்ஸ். இயற்கைக்கும் மனிதனுக்கும் அப்பால் எதுவும் இல்லை. மேலான பரம் பொருள் என்பதெல்லாம் மனிதனுடைய மத கற்பனை மூலம் படைக்கப்பட்டவை என்றார். உற்பத்தி சாதனங்களில் தனி சொத்துடைமை தான் எல்லா கேடுகளுக்கும் மூல வேர் என்பதைத் தெளிவுபடுத்திய காரல் மார்க்ஸ் பொருளாதார செல்வங்களை உற்பத்தி செய்பவர்கள் உண்மையில் வரலாற்றை உண்டாக்குபவர்கள். இவர்கள்தான் முன்னேற்றத்தின் மீது தங்களது செல்வாக்கை செலுத்துகிறார்கள் என்று கூறினார் கார்ல் மார்க்ஸ். ஒரு வர்க்கத்திற்கெதிராக மற்றொரு வர்க்கம் நடத்தும் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டம் தான் என்றார். மூலதனம் என்பது ஒன்று சேர்த்து குவிக்கப்பட்ட உழைப்புதான் என்றும் அது மீண்டும் புதிய உற்பத்திக்கு பயன்படுத்தப் படுகிறது என்றும் காரல் மார்க்ஸ் வலியுறுத்திக் கூறினார்.
காரல் மார்க்ஸ் இந்தியாவிற்கு வந்ததும் இல்லை; அந்நாட்டைச் சுற்றி பார்த்தறியவும் இல்லை. இருப்பினும் சமுதாயத்தில் எங்கு பெரிய நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அது குறித்து புலனாய்வு வல்லுநரை போல துருவி தேடி அலைந்து முழு விவரங்களையும் கண்டறிந்து அவை பற்றி ஆய்வாளராக விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதே அவருடைய வழிமுறையாக இருந்தது. நேரில் பார்க்க வாய்ப்பைப் பெறாத 7000 கிலோமீட்டர் அப்பால் இருந்த தீவில் இருந்து கொண்டு அரிதாக கிடைத்த தகவல்களை கொண்டு அமெரிக்காவிலிருந்து வெளியிடப்பட்ட பத்திரிக்கையில் இந்தியப் போர் பற்றி செய்தி கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.
இப்போரை பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் அதிருப்தி அடைந்த சிப்பாய்களின் சிப்பாய்க் கலகம் என்றனர். 1857 ல் போர் நடந்து கொண்டிருந்த போதே அதை இந்தியர்களின் முதல் சுதந்திரப் போர் என்று காரல் மார்க்ஸ் குறிப்பிட்டார். இந்திய மக்களை அடிமைப்படுத்தி கொள்ளையடித்து வரும் வெள்ளையரின் கொள்ளை ஆட்சி துரத்தப்பட வேண்டும் என்று எழுதிய காரல் மார்க்ஸ் அதே நேரத்தில் இந்தியர்களிடம் நவீன வெடிமருந்து,பீரங்கி சாதனங்கள் போதுமானதாக இல்லை என்பதை அறிந்து போரில் வெல்லப் போதுமான போர்த் தளவாடங்கள் இல்லாத தங்களிடம் உள்ள வாள், வில், கேடயம் கொண்டு வீரத்தோடு போராடினாலும் வெல்வது கடினமே என்று வேதனையோடும் எழுதினார். ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு மையத் தலைமை இல்லாது சிதறி கிடக்கும் இந்திய மக்களை பார்த்து வேதனைப்பட்டு எழுதியவரும் அவரே. இந்தப் போரில் இந்தியர்கள் வெற்றி பெற இயலாமல் போகலாம். ஆனால் இப்போது தொடங்கிய முதல் சுதந்திரப் போர் தொடரும். பின்னர் வென்று சுதந்திர நாடாகும் என்று 1857 லேயே எழுதினார்.
ஏழ்மை நிறைந்த இந்தியாவில் உப்புக்கு வரி போடுவதை கண்டித்தும், உப்பு வணிகத்தில் ஈடுபட்ட வெள்ளையர்கள் உப்பில் சாம்பலை கலந்து விற்பதை கண்டித்தும் எழுதினார். உப்பு வரியை ரத்து செய்யக் கோரிக்கை எழுப்பிய முதல் மனிதரும் அவர்தான்.
மூலப்பொருட்களை ஏற்றி செல்லவும் வெள்ளையரின் சரக்குகளை இந்தியாவில் விற்பதற்கும் 1853 முதல் 1905 வரை 28,000 மைல் அளவிற்கு ரயில்வேக்களை கொண்டு வந்ததையும் தங்களது வர்த்தக நலனுக்காக தபால் தந்தி முறைகளை கொண்டு
வந்ததையும் தனது கட்டுரையில் எழுதியுள்ளார். இருப்பினும் இந்திய மக்களுக்கு சில நன்மைகளை செய்யக்கூடும் என்று எழுதினார். ஆனால் அப்படி நல்ல மாற்றங்கள் ஏற்படவில்லை. நகர்ப்புறங்களில் தொழிற்சாலைகள் கட்டுவதால் இந்தியாவில் சாதி வேறுபாடுகள்மறைய கூடும் என்று கருதினார். அதுவும் நடக்கவில்லை. இந்தியாவினுடைய சமுதாய அமைப்பும் பொருளாதார முறைகளும் புரிந்து கொள்ள முடியாத அளவில் குழப்புவதாக இருக்கிறது என்றும் எழுதியுள்ளார்.
திருச்சிக்கு அருகே திருவரங்கத்தில் இருந்து காவிரி ஆற்றைக் கடக்க மூங்கில் பாலம் அமைக்க அந்த வட்டாரத்தில் இருந்த நிலக்கிழார்களுக்கு மூங்கில்கள் தர வெள்ளை மாவட்ட ஆட்சித் தலைவர் கட்டளையிட்டார். அதில் ஓரிரு பிராமண நிலக்கிழார்களும் உண்டு. மூங்கில் மரத்தை வெட்ட ஆள் கிடைக்காததால் இரண்டு பிராமண நிலக்கிழார்கள் மாவட்ட துரையிட்ட கட்டளையை நிறைவேற்றவில்லை என்பதற்காக ஆற்றங்கரை மணலில் வெயில் அடிக்கும் போது மூன்று மணி நேரம் நிறுத்தி சவுக்காலும் அடித்தான் என்பதையும் அதை அநாகரிகக் காட்டுமிராண்டித்தனம் என்றும் மார்க்ஸ் எழுதியுள்ளார். இந்தியா எனும் பழம்பெருமை பெற்ற நாடு தன் பழைய பெருமைகளை இழந்தும் புதிய வாய்ப்புகளைப் பெற முடியாமலும் அவலத் தோற்றத்தில் நிற்கிறது என்று நமக்காக வேதனைப்பட்டவர் காரல் மார்க்ஸ்.
இலண்டனில் உள்ள உலகின் மிகப்பெரிய நூலகத்தில் காரல் மார்க்ஸ் தொடர்ந்து படிக்க வந்து கொண்டிருந்த காரணத்தால் அவருக்கு அங்கு ஒரு தனி இடம் நூலக மேலாளரால் ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த அறையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மூத்த
தலைவர் தாதாபாய் நௌரோஜி வந்து படித்துக் கொண்டிருந்தார். இவ்விருவரும் ஏறத்தாழ 10 ஆண்டுகள் அங்கு படித்து ஆய்வு செய்ய வந்து போய்க் கொண்டிருந்தனர். இருப்பினும் ஒரு நாள் கூட ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவே இல்லை.மூன்றாவது நண்பர் யாராவது அறிமுகம் செய்வதற்கு வாய்ப்பு இல்லாமலும் போய்விட்டது. ஒருவேளை அவர்கள் இருவரும் சந்தித்திருந்தால் தாதாபாய் நௌரோஜி, மார்க்ஸ்க்கு இந்தியாவைப் பற்றி விளக்கி இருக்கக்கூடும்
“இந்தியாவின் வறுமைக்கு யார் காரணம்” என்ற நூலைத் தான் தாதாபாய் நவரோஜி எழுதி வந்தார். அந்தச் சூழலில் மார்க்ஸிடம் விவாதித்து இருந்தால் தாதாபாய் தன் எழுத்தை, கருத்தை கூர்மைப்படுத்தி இருக்க முடியும். தாதாபாய் நௌரோஜி எழுதி வெளியிட்ட அந்தப் பிரசுரம் தான் சுதந்திரப் போராட்ட இயக்கத்திற்கு பேசும் பொருளாக இருந்ததை நாடறியும்.
இந்தியாவுக்கு வராமலே இந்திய மக்களுடன் பழகாமலே அகதியாக வாழ்ந்து வந்த காரல் மார்க்ஸுக்கு இருந்த மனிதாபிமானம், இந்திய விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கை இந்தியாவிலேயே பிறந்து படித்து பட்டம், பதவி பெற்ற இந்தியர்களில் பலருக்கு
அன்றும் இல்லை;இன்றும் இல்லை. தனது விசாலப் பார்வையால் எல்லை கடந்து மக்களை நேசித்த மாமனிதன் காரல் மார்க்ஸ்.
மார்க்சியத்தின் மூலப்பகைவனான முதலாளித்துவம் இனப்பகை,குறுகிய தேசிய வெறி, இராணுவ சர்வாதிகாரம், மேலாதிக்க வல்லாண்மை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தற்கொலைகள், போதைப் பொருள்களுக்கு அடிமையாகி அழிதல், வாழ்க்கையில் நம்பிக்கையற்று தனித்திருந்து புலம்புதல், பித்துக்குளித்தனம், பித்தம் வெறியாகி சித்தம் கலங்கிய நிலை ஆகிய மோசமானவிளைவுகளைத்தான் சமுதாயத்தில் உண்டாக்கி இருக்கிறது.
இனவெறி, மதவெறி, சாதி வெறி, மொழி வெறி, பிரதேச வெறி, ஏகாதிபத்திய சதி ஆகியவை மார்க்சியத்தைப் புரிய விடாமல் செய்கின்றன. மார்க்சியம் பொதுவான விஞ்ஞான அடிப்படைகளைக் கொண்டது.அதை ஒவ்வொரு நாட்டிலும் அதன் விசேட
நிலைமைகளுக்கேற்ப ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்ப பொருத்திச் செயல்படுத்துவது மிக, மிக முக்கியமானது. திருத்தல் வாதம், வறட்டுத்தனம், சந்தர்ப்பவாதம், அதிதீவிரவாதம், குறுகிய தேசிய வெறி போன்ற கொடிய விஷ ஜந்துக்களிடமிருந்து மார்க்சிய சிந்தனையை நாம் காப்பாற்றியாக வேண்டும். பிறகு நேரடியான எதிரிகளிடம் போராடியாக வேண்டும். பொருளாதார அரசியல் தத்துவார்த்த துறைகளில் போராட்டம் நடைபெற வேண்டும்.
மார்க்சிய சிந்தனை இந்திய மண்ணுக்கு அந்நியமானதல்ல; இந்திய நாட்டைச் சிதைக்கவில்லை. 1853லும் 1857 முதல் 1859 வரையிலும் இந்தியாவைப் பற்றி எழுதியுள்ள காரல் மார்க்ஸின் கட்டுரைகள் இந்திய வரலாற்றைப் பற்றி சரியான மதிப்பீடுகளை வழங்கி உள்ளன. இந்தியாவைப் பற்றி இவ்வளவு தெளிவாக இது நாள் வரை மார்க்சை போல் யாரும் எழுதவில்லை என்பது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த முடிவு.
மழை இல்லாத காலத்தில் கொடூரமான வரி வசூல் நடத்தப்பட்டதை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் மார்க்ஸ். வெள்ளைத் துரைமார்களுக்கு வெஞ்சாமரம் வீசிய போலீஸ்காரர்கள் மற்றும் தாசில்தார்களைப் பற்றியும் விவசாயிகளுக்கு இழைத்த கொடுமைகளைப் பற்றியும் பட்டியல் போட்டு காட்டியுள்ளார். பிரிட்டிஷ் படை கடந்து சென்ற இடமெல்லாம் கொள்ளை அடித்துச் சென்ற கொடூரத்தை விவரித்துள்ளார். இந்தியா பழமையான நிலவுடைமை உறவுகளிலிருந்து விடுபட்டு படிப்படியாக முதலாளித்துவ வளர்ச்சியை நோக்கிச் செல்வதை விவரித்துள்ளார்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி – கிழக்கிந்திய கம்பெனி – அதன் வரலாறும் விளைவுகளும், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள் போன்ற கட்டுரைகளில் இந்தியாவில் நிலவிய சாதி, மத, இனச் சண்டைகளைப் பயன்படுத்தி பிரிட்டிஷார் நாட்டைச்சூறையாடிய வரலாற்றை காலனியாதிக்க எதிர்ப்புணர்ச்சியோடு விளக்கியுள்ளார். கடுமையான வரி வசூலித்து விட்டு நாட்டின் ஏரி, குளம், கண்மாய்களைக் கூட செப்பனிட மறுத்த வெள்ளையரின் ரத்த வெறி தோய்ந்த சுரண்டலை மார்க்ஸை விட வேறு யாரும் கடுமையாகச் சாடி இருக்கவில்லை. இந்திய எழுச்சி என்ற கட்டுரையில் விவசாயிகள் வெள்ளைக்கார ராணுவத்திற்கு சப்ளைகள் செய்யாமல் தடுத்ததைக் கூறியுள்ளார். இந்திய விடுதலை வடக்கில் உள்ள மக்களால் மட்டுமின்றி தெற்கிலும், மத்தியிலும் வாழ்ந்த இந்திய மக்கள் அனைவரின் பேராதரவோடு வெற்றி பெறும் என்று எழுதினார்.
இந்தியாவின் புகழ்மிக்க கைத்தறித் தொழிலை அழித்து, கிராமச் சொத்தாக விளங்கிய நில உறவில் ஜமீன்தாரி, ரயத்துவாரி அமைப்பை உண்டாக்கி சீர்குலைத்து நாட்டை சின்னாபின்னம் ஆக்கிய பிரிட்டிஷ் கொடுமைக்கு இந்திய மக்கள் முடிவு கட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றார். காரல் மார்க்ஸ் வகுத்தளித்த விஞ்ஞான பூர்வமான சிந்தனைகள் படிப்படியாக சுரண்டலற்ற சமுதாயத்தை நோக்கி நமது நாடு முன்னேற கிடைத்துள்ள மா மருந்து என்பதில் ஐயமில்லை.
அதே நேரத்தில் முதலாளித்துவ வர்க்க குணங்களைக் கொண்டவர்கள், காரல் மார்க்ஸை, அவரது சிந்தனைகளைப் பழித்துக் கொண்டும் ஏசிக் கொண்டும் தான் இருப்பார்கள். அவர்களுக்கான பதிலைக் காலம் வழங்கும். அதுதான் மார்க்சிய சிந்தனை. ஏனென்றால் ஒரு டஜன் தடவை பல்வேறு வழிகளில் தமது கூற்றை நிரூபிக்க முடியும் என்று நம்பிக்கை நிச்சயம் ஏற்பட்ட பிறகு தான் மார்க்ஸ் தனது சிந்தனையின் வாக்கியத்தைக் காகிதத்தில் எழுத முற்படுவார்.
மனித சமுதாய வளர்ச்சியை விஞ்ஞான அறிவு கண் கொண்டு ஆய்வு செய்தவர் காரல் மார்க்ஸ். காரல் மார்க்ஸ் பாசிச எண்ணம் கொண்டவர்களைப் போல மலிவான பிரச்சாரகர் அல்லர். மனித குல மேம்பாட்டிற்காகத் தனது வாழ்நாள் முழுவதையுமே ஆய்விற்காக செலவிட்டவர் காரல் மார்க்ஸ்.
- அக்ரி பரத்வாஜ்

Comments (0)