தமிழக கல்வித்துறையின் அறிவிப்புகள் நாள்தோறும் ஒன்றாக வந்து ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பொதுமக்களையும் எப்போதும் மன அழுத்தத்திற்கு ஆட்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது எதுவென்றால், ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக 2381 அரசு நடுநிலைப் பள்ளிகளின் வளாகங்களில் ஏற்படுத்தப்பட்ட மழலையர் வகுப்புகளை மூடுவதாகவும் குழந்தைகளைத் திரும்ப அங்கன்வாடிகளுக்கு அனுப்பிவிட்டு பள்ளிக்கல்வித்துறையில் மழலையர் கல்விக்கான வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கக்கூடாது எனவும் அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அரசின் குழப்பமான அறிவிப்புகள்
தமிழகம் முழுவதிலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்ப, அடுத்த நாளே முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கல்வி அமைச்சர் அறிவிப்பு வெளியீட்டுள்ளதாக மீண்டும் அரசு அறிவிப்பு வருகிறது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் உள்ள பணியாளர்கள்தான் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறையிலிருந்து மழலையர் வகுப்புகளைத் திரும்ப அங்கன்வாடிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஒன்று கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. 
அங்கன்வாடிகளில் இருந்து பள்ளிக்குள்
சமூக நலத்துறையின் கீழ் இயங்கக் கூடிய இந்த அங்கன்வாடி மையங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை ஐந்து வயது வரை பராமரிக்கும் பணி நடக்கிறது. 5 வயது முடிந்த பின்னர் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் வந்து சேரக் கூடிய சூழல் பல ஆண்டு காலமாக நிலவி வந்தது.
ஆனால் சமீப பல ஆண்டுகளாக பொதுமக்களுக்குத் தனியார் பள்ளிகளின் மீதான விருப்பம் அதிகரித்தது. அதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புவதை விரும்பவில்லை. இந்தச் சூழலில்தான் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தின் 2019ஆம் ஆண்டில் மழலையர் கல்விக்கான வகுப்புகள் 2381 அரசு நடுநிலைப்பள்ளிகளில் (வளாகத்திற்குள்ளேயே அங்கன்வாடி மையங்கள் இருக்கும் பட்சத்தில்) முதற்கட்டமாகத் துவங்கப்பட்டன. அதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. 
முன் மழலையர் கல்வி (ECCE) என்பதற்கான ஒரு பகுதி, புதிய தேசியக் கல்விக் கொள்கையில் கொடுக்கப்பட்டு இருப்பதனாலேயோ, NEP 2020-ஐ நாம் விமர்சிப்பதாலேயோ, மழலையர் கல்வி வகுப்புகளை வேண்டாம் எனக் கூறிடவோ தமிழக அரசு வெளியிட்ட இந்த ஆணையை நாம் வரவேற்கவோ முடியாது. ஏனெனில் களத்தில் என்ன நிகழ்கிறது என்பதே முக்கியம்.
இன்று, அரசுப் பள்ளிகளின் பக்கம் பொதுமக்கள் தங்கள் பார்வையைத் திருப்பியதற்கான மிக முக்கியக் காரணங்களில் ஒன்று, அரசுப் பள்ளிகளில் மழலையர் கல்வி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டதுமாகும். அதைத் திடீரென வேரோடு பிடிங்கிப் போட்டால் என்ன நிகழும்? அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பில் படிக்கும், படிக்கக் காத்திருக்கும் பல ஆயிரம் குழந்தைகளில் 30% மட்டுமே அங்கன்வாடிகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. மீதி 70% குழந்தைகள் நிச்சயமாகத் தனியார் பள்ளிகளின் ஆளுகைக்குள்தான் சரணாகதி அடைவார்கள்.
அங்கன்வாடி மையங்கள் குறித்துச் சிந்தித்தால், அங்கு இருக்கக்கூடிய பொறுப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் குழந்தைகளிடம் கவனம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், பள்ளிகளில் நடைபெறக்கூடிய அளவிற்குத் தரமான கல்வியும், பாதுகாப்பான சூழ்நிலையும், கற்பித்தல் அணுகுமுறையும் கடந்து, குழந்தைகளுடனான உறவும் அங்கு கிடைக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. உடனே நாம் மழலையர் வகுப்பில் கற்பித்தலா? என்ற புரிதலுக்குள் செல்ல வேண்டியதில்லை. விளையாட்டு முறையிலான கல்வியாக இருந்தாலும் பள்ளிக்கல்வி முறைக்குள் வரும்போது அங்கன்வாடியைக் காட்டிலும் சிறப்பாகவே இருக்கும் என்பது கண்கூடு.
ஆசிரியர் நியமனம் இல்லை
2019ஆம் ஆண்டில் திடீரென மழலையர் வகுப்புகள் தொடங்குவதற்கான ஆணையைப் பிறப்பித்து, தொடக்கப்பள்ளிகளில் 1-5 வகுப்புகள் கற்பித்த இடைநிலை ஆசிரியர்களையே வேறு பள்ளிகளில் இருந்து பணி நிரவல் வழியாக மாற்றி, மழலையர் வகுப்புகளில் நியமித்தது அப்போதைய அரசு. ஆனால் தொடர்ச்சியாக இதில் சீர்திருத்தம் கொண்டு வந்து, இதற்கான பிரத்யேகக் கல்வி கற்ற ஆசிரியர்களை நியமனம் செய்திருக்க வேண்டும். முந்தைய அரசு அதைச் செய்யவில்லை. குறைந்தபட்சம் ஒப்பந்த அடிப்படையிலாவது ஆசிரியர்களை நியமிக்கக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கவேண்டும். அவற்றையெல்லாம் அப்போதைய அரசு புறந்தள்ளிவிட்டது.
2020-க்குப் பிறகு கொரோனா பெருந்தொற்றுக் காலம் வந்தது; பள்ளிகள் இயங்கவில்லை. இப்படியான சூழல்களில் மழலையர் வகுப்புகள் குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் அப்படியே விட்டிருந்தனர்.
மீண்டும் தலைதூக்கிய பிரச்சினை
தற்போதைய புதிய அரசு அமைந்தவுடன், கடந்த இரு கல்வி ஆண்டுகளில் ஏராளமான குழந்தைகள் (சுமார் 6 லட்சம்) அரசுப் பள்ளிகளுக்குப் புதிதாக வந்திருக்கின்றனர். ஆனால், புதிய ஆசிரியர்கள் நியமனம் நடைபெறவில்லை.
புதிய அரசு அமைந்த பிறகு, கடந்த கல்வி ஆண்டின் 2021 – 2022 இறுதிப்பகுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டபோது, ஏற்கனவே பணிநிரவலில் மழலையர் வகுப்புகள் கற்பிக்கப் பணியமர்த்தியிருந்தவர்களைத் திரும்ப தொடக்கப்பள்ளிகளுக்கே அனுப்பியது. ஆனால் அப்போது இது அரசியல் பிரச்சனையாக மாறவில்லை.
மாணவர் இல்லையேல் பள்ளிகள் இல்லை
மழலையர் வகுப்புகள் நடத்தும் பல தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் தங்களிடமிருந்த குழந்தைகளை இழக்க மனமின்றி, அவர்களை கவனித்துக்கொள்ளத் தங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி ஊதியம் தர முன்வந்து, உள்ளூர்ப் பகுதிகளிலிருந்து ஆசிரியர்களை நியமித்துக் கொண்டனர். இது தமிழகம் முழுவதும் பரவலாக நடந்த எதார்த்தம். ஏனெனில் அங்கு சுணங்கினால் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் எண்ணிக்கை குறையும்; இருக்கும் ஆசிரியர் பணியிடத்துக்கு ஆபத்து நேர்ந்துவிடும்.
அப்பொழுதும் அரசு மழலையர் கல்விக்காக எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை; ஆசிரியர் நியமனமும் செய்யவில்லை. ஆனால், தற்போது புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்கள். மொத்தமாக மழைலையர் கல்வியை அங்கன்வாடிக்கு அனுப்புவது என்பதுதான் இந்த நிலைப்பாடு. இது முழுக்க முழுக்க தனியாருக்கே சாதகமாக முடியும். 
கைப் புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? என்பதைப் போல, இதன் பின் விளைவுகள் தெரிந்தாலும் ஏன் இந்த முடிவை எடுத்தனர் என்ற ஐயம் எல்லாத் தரப்புகளிலும் உண்டு.
ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில் தொடக்கப்பள்ளிகளுக்கு கற்பித்தல் பணியில் ஈடுபட இடைநிலை ஆசிரியர்கள் அதிகம் தேவைப்படும். அதனால் அவர்கள் அப்பள்ளியில் பணியமர்த்தப்பட்டனர் என்ற ஒரு காரணத்தை அரசு முன்வைக்கிறது. எனில், சிக்கல் என்ன என்று நன்றாகவே தெரிந்துவிட்ட பிறகு, ஆட்சியாளர்கள் ஏன் தீர்வை நோக்கி நகர மறுக்கின்றனர்?
எனவே அரசு தூரிதமாகச் செயல்பட்டு, மழலையர் வகுப்பு மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமனத்தை உடனே தொடங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த லட்சக்கணக்கானவர்கள் வரிசை கட்டிக் காத்துக் கொண்டுள்ளனர். அவர்களை உடனடியாகப் பணியில் அமர்த்தலாம். நிதிப் பிரச்சினை காரணம் எனில், குறைந்தபட்சம் ஒப்பந்த ஊதியத்திலாவது அனைத்துப் பணி இடங்களையும் நிரப்பலாமே?
எல்லோரும் இணைந்து குரல் கொடுப்போம்
கல்வித் துறையின் உயர் மட்டப் பதவியில் இருப்பவர்கள், தங்கள் அலுவலுகப் பணிகளில் காலியாக எந்த இருக்கைகளையும் வைத்துக் கொள்வதில்லை. கார் ஓட்டுநர், உதவியாளர், அலுவலகப் பணியாளர் உட்பட எல்லா நிலைகளிலும் வசதியாக மாற்றிக் கொள்ளும் நீங்கள், துறைக்கு ஆதாரமான குழந்தைகளுக்குக் கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்காமல் வஞ்சிப்பது ஏன்? ஏனெனில் குழந்தைகளுக்காகக் கேட்க எவருமில்லை; பெற்றோருக்கும் விபரம் தெரியாது; விபரம் தெரிந்த ஆசிரியர்களுக்கு, குரல் கொடுக்கத் துணிவு வராது. குரலற்றவர்களின் குழந்தைகள் எப்படிப் போனால் என்ன? என்ற வகையிலேயே எந்த அரசு வந்தாலும் நடந்து கொள்கிறது. மக்களுக்காகச் சிந்திக்கும் பாதையிலிருந்து விலகுகிறது. 
ஆகவேதான் இப்படியான குழப்பமான முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. கல்வியே நாட்டின் முதுகெலும்பு. உங்கள் குழப்பமான முடிவுகளால் அதைச் செல்லரிக்க வைத்து விடாதீர்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, களத்தில் உள்ள தலைமை ஆசிரியர்களிடம் அரசு உரையாடி தெளிவாகத் திட்டமிட வேண்டும். காத்திருக்கிறோம்.
- உமா
Comments (0)