சர்தார் உத்தம்
திரை விமர்சனம்
1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி, பஞ்சாப் மாநில ஆளுநர் லெப்டினன்ட் மைக்கேல் ஓ டயர் ஆணையின் பேரில், அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில், அமைதியாகக் கூடியிருந்த 20 ஆயிரம் பேர்கள் மீது முன்னெச்சரிக்கை ஏதும் செய்யாமல், பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு டயர் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட, ரத்தக் குளியலில் ஆயிரக்கணக்கில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் கொல்லப்பட்டனர்.

அப்படுகொலையைக் கண்ணுற்றுத் தகித்துப் போன மாணவர் உத்தம் சிங், 1933 ஆம் ஆண்டு ஆப்கான், ரஷ்யா வழியாகக் கடும் பயணம் மேற்கொண்டு, லண்டனுக்குச் சென்று, படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயர் மரணமுற்றதை அறிந்து, அடுத்து அப்படுகொலைக்கு ஆணையிட்ட அன்றைய ஆளுநர் மைக்கேல் ஓ டயரை 1940 மார்ச் 13 ஆம் தேதி சுட்டுக் கொன்று, ஜூலை 31 ஆம் தேதி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வரலாற்றின் இந்தி திரை வடிவம்தான், விஷால் கௌசல் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து, சூஜித் சிர்கார் இயக்கி அமேசான் பிரைம் வீடியோவில் தமிழில் வசன எழுத்துகளுடன், தற்போது வெளியாகியுள்ள ‘சர்தார் உத்தம்’.

படம் ஆரம்பித்து இருபத்தேழாவது நிமிடத்தில் எதிர்பாராத அதிர்ச்சிகரமான அந்த நிகழ்வு நடந்தேறிவிட, அதற்குப் பிறகும் படம் தொடர்கிறது. அடுத்த ஒன்றேகால் மணி நேரத்தில், பேரதிர்ச்சியான தீர்ப்பு வெளியாகிவிட, படம் முடியவில்லை, தொடர்கிறது. அதற்கடுத்த 15 நிமிடங்களில் முத்தாய்ப்பாக, எல்லாவற்றுக்கும் அடிப்படையான நிகழ்வு விரிந்து, 24 நிமிடங்கள் நீடித்து மனதை ரணமாக்கிட, அதற்குப் பிறகான நிகழ்வில் உள்ளம் கனத்தும் போகிறது.
ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் ஓடும் இந்தப்படத்தின் முக்கியமான ஒவ்வொரு நிகழ்வுக்குப் பிறகும், தொய்வில்லாமல் விறுவிறுப்புடன் படம் தொடர்வதற்கு அடித்தளம், வலுவான திரைக்கதையும், அர்ப்பணிப்புடன் கூடிய இயக்கமும்தான்.

சுதந்திரமும் உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில், அந்தச் சுதந்திரத்திற்காகவும் மனித உரிமைக்காகவும் போராடும் மனித குலப் பிரதிநிதிகளின் வீரமும் தியாகமும் செறிந்த வரலாற்றின் ஒரு கீற்றுதான், சர்தார் உத்தம்.
லண்டன் காக்ஸ்டன் ஹாலில், காவல்துறை பிடியில், எதிர்த்து ஆரவாரம் செய்யும் மக்களிடையே, பதட்டம் இல்லாமல் தெளிவான முகத்துடன் வெளியே வரும்போதாகட்டும், ஸ்காட்லாந்து யார்டின் மூன்றாம் தர விசாரணை நடைமுறையின் போதுகூட “மரணத்தப் பார்க்கற நான், வலியை உணரல” என்று சிரித்துக் கொண்டே சொல்லும்போதாகட்டும், சுதந்திரத்திற்காகப் போராடுவது குறித்து எலீன் பால்மரிடம் விவாதிக்கும் போதாகட்டும்,

இந்தியர்களைப் பற்றி, சுதந்திரத்திற்காகப் போராடும் புரட்சியாளர்களைப் பற்றி மைக்கேல் ஓ டயர் பேச்சுகளைக் கேட்ட உணர்வில் தகிக்கும் போதாகட்டும், “அதனாலே பகத்சிங் பத்தி பேசாதே… அவரப்பத்தி உனக்குத் தெரியாதா?” என்று டிடெக்டிவ் ஸ்வைனிடம் சொல்லும் போதாகட்டும், கள்ளம் கபடமற்ற தோழி ரேஷ்மாவுடன் அளவளாவும் போதாகட்டும், “உங்க பிரிட்டிஷ் சட்டத்தில் இந்தக் கொலை, போராட்டமாகக் கருதப்படுமா? அல்லது கொலையாகக் கருதப்படுமா?” என்று லாயர் ஹாட்சிசனிடம் அப்பாவியாகக் கேட்கும் போதாகட்டும்,

“என்னைச் சுடு, இந்த வழக்கே நேர விரயம். பேசாம என்னைச் சுட்டு விடு. டயர் குற்றவாளி, நீங்களும் உங்க கொள்கைகளும்தான் குற்றவாளிகள்…” என்று துவங்கி, தண்டனை அறிவிப்புக்குப் பிறகு, “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக, கொடுங்கோன்மை ஒழிக, புரட்சி நீண்ட காலம் வாழ்க” என தீரத்துடன் நீதிமன்றத்தில் வாதாடுவதாகட்டும், “நான் ஒரு புரட்சியாளன் என்பதை இந்த உலகுக்குத் தெரிய வைங்க” என்று ஸ்வைனிடமும், ‘செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கோரினால் வாழ முடியும்’ என்று கூறும் எலீன் பால்மரிடம் மறுத்து, “என் நண்பன பாக்கற நேரம் வந்துடுச்சு…” என்று பகத்சிங்கை நினைத்துச் சொல்லும் போதாகட்டும் இப்படத்தில் விஷால் கௌவுசல், சர்தார் உத்தம் சிங்காகவே வாழ்ந்திருக்கிறார்.

மைக்கேல் ஓ டயர் (ஷான் ஸ்காட்), டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஸ்வெயின் (ஸ்டீபன் ஹோகன்), பகத்சிங் (அமோல் பரசார்), ரேஷ்மா (பணிட்டா சந்து), ஜெனரல் ரெஜினால்ட் டயர் (ஆண்ட்ரூ அவில்), எலீன் பால்மர் (கிறிஸ்டியன் அவெர்டன்) ஆகியோரும் தத்தம் பாத்திரத்திற்கு உரிய பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர்.
சிந்தனைக்குரிய வசனங்களும் தத்ரூபமான காட்சியமைப்புகளும் அருமையான ஒளிப்பதிவும் மிகவும் பொருத்தமான பின்னணி இசையும் நேர்த்தியான படத்தொகுப்பும் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பும் படத்தின் சிறப்புக்குப் பக்கபலம்.

“ஒரு உண்மையான புரட்சியாளர் சில கொள்கைகள பின்பற்றணும். நீங்க பாரபட்சமாக, மத வெறியனாக, சாதி வெறியனாக இருக்க முடியாது. பொருளாதார அல்லது சமூக வர்க்க வேறுபாடு இல்லாது கடைப்பிடிக்கும் ஒரே உண்மை, சமத்துவமாகும். எல்லாரையும் சமமாக நடத்தி மனித நேயத்தில் வலுவான நம்பிக்கையோடு இருப்பது…. “
“அவங்க என்னைக் கொன்று விடலாம். ஆனா என் கருத்துகள கொல்ல முடியாது. ஒரு கொள்கைக்கான நேரம் வந்துட்டா அதன் பிறகு அதைத் தடுக்க முடியாது. நீங்க எதிர்த்திடா விட்டால் அல்லது ஒடுக்குபவருடன் போராடாம விட்டால், உங்க உரிமைகள் உங்களுக்கு எப்பவுமே கிடைக்காது. ஒரு உண்மையான கொள்கை இன்றிக் கிடைக்கும் சுதந்திரம், அடிமைத்தனத்தை விட மோசமாக இருக்கும். சுதந்திரம் நமது பிறப்புரிமை, எனவே, இந்த அடக்குமுறை ஆட்சியை நாங்கள் நிராகரிக்கிறோம்”. இவை யாவும் பகத்சிங்கின் வார்த்தைகள்தாம்; எனினும், அவரது நிலையில் உலகில் இருக்கும் எவர் சிந்தனையும் இவையாகத்தான் இருக்கக்கூடும்.

முதல், இரண்டாம் உலகப் போர்களில் பிரிட்டிஷ் நாட்டிற்காக 2.6 மில்லியன் இந்தியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்காலக் கொள்கையின்படி ‘மனித ஏற்பாடா’க உருவாக்கப்பட்ட வங்காளப் பஞ்சத்தால் 4 மில்லியன் இந்தியர்கள் பட்டினியால் இறந்திருக்கிறார்கள். நூறு ஆண்டுகள் கடந்தும், நிகழ்த்திய ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு, பிரிட்டிஷ் அரசிடமிருந்து அலுவல் பூர்வமான மன்னிப்பை இந்தியாவால் இன்னும் பெற இயலவில்லை என்பது கூடுதல் கொடுமை.

எது தேசபக்தி என்று பாடம் எடுக்காமல், இதுதான் தேசபக்தி என்று பாடமாகவே வாழ்ந்து, மன்னிப்புக் கேட்டு மறுவாழ்வு பெறுவதை மறுத்து, சுத்த சுயமரியாதை வீரனாகத் திகழ்பவன்தான், சர்தார் உத்தம்சிங். வரலாற்றை மறைப்பதற்கோ திருத்துவதற்கோ முன்னரே, அதனைப் படித்து விழிப்புணர்வு பெறுவது மிகவும் அவசியம்; அந்த வகையில், ‘ சர்தார் உத்தம் ‘ வரலாற்றுத் திரைப்படத்தைப் பார்ப்பதும்கூட.
மதிப்பெண் : 9/10
விமர்சனம்: மது ராஜேந்திரன்
படங்கள்: இணையத்திலிருந்து
Comments (0)