ஆளரவமற்ற கட்டடங்களுக்கு உயிர் உண்டா?

மேப்படியான் திரைப்படத்தில் ஒரு காட்சி. வாழ்ந்த வீட்டை சந்தர்ப்ப சூழ்நிலையால் விற்றுவிட்டு வெளியேறுவார் நாயகன்.  வீட்டைக் காலி செய்து மூட்டை முடிச்சுகள் கட்டி, டெம்போ, ஜீப் வெளியேறும்.  அந்த ஜீப்பின் பின்பக்கம்,  உள்ளிருந்து நாய் அந்த வீட்டையே பார்த்துக்கொண்டு செல்லும்.  அந்த  நாயின் கோணத்தில் இருந்து காட்சிப்படுத்தி இருப்பார்கள்.  நாயகன் வருத்தத்துடன் அப்படியே பார்த்துக்கொண்டு சற்று நேரம் நிற்பார்.  அதன் பின் பைக்கில் ஏறிக் கிளம்புவார். அன்றைய திரைப்படங்கள் முதல், இன்று வரை பல திரைப்படங்களிலும் சூழ்நிலை காரணமாக, நாயகனின் சோதனை காலங்களில், அவர்கள் வாழ்ந்த வீட்டைவிட்டு வெளியேறும் காட்சிகளில் இதுபோலவே வீட்டை உற்றுநோக்கி விட்டுத்தான் வெளியேறுவது நடக்கும். கூடவே கனமான அல்லது சோகமான பின்னணி இசையும் ஒலிக்கும். பல படங்களில் அது மனதை உருக்கும் சென்டிமென்ட் நிறைந்த க்ரிஞ் காட்சிதான்.

அந்த வீடுகளுக்கு அல்லது கட்டிடங்களுக்கு உயிர் உண்டா?  என்ற பெருங்கேள்விக்கான பதில்: மனிதர்களின் நிரம்பி வழிந்து உரையாடல்கள் வழி மென் உணர்வுகள் கடத்தப்படும்போது அந்தக் கட்டிடங்களுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு விடுகிறது.   அந்த இடங்களுக்கு, கட்டிடங்களுக்கு மீண்டும் செல்லும்பொழுது, தேங்கிக் கிடந்த நினைவலைகளுக்கு மீண்டும் உயிர் வந்து, சிறகடிக்க ஆரம்பித்து விடுகின்றன. அதற்காகவே மனம் அந்தப் பழைய இடங்களுக்குச் சென்று, அந்த நினைவலைகளில் பயணித்து, வாழ்வை உயிர்ப்பித்து, மனதைப் பரவசப்படுத்திக் கொள்ள நினைக்கின்றது. 

ITPL.jpg

5 வருடங்களுக்குப் பிறகு, கடந்த மாதம் ITPL அலுவலகம் சென்றேன் அல்லது வரவழைக்கப்பட்டேன்.  எப்போதும் மூன்று, நான்கடுக்குப் பாதுகாப்பு சோதனைகள் நிறைந்த அலுவலகம் இந்த  ITPL .  அடர் நீல நிறப் பேண்ட்டும்,  வெளிர் நீல நிறச் சட்டையும் அணிந்த இறுக்கமான பாதுகாப்புப் பணியாளர்கள்/அதிகாரிகள், வட கிழக்கு மாநிலத்தில் இருந்த இறக்குமதி ஆனவர்கள். வழக்கமாகக் கூட்டமாக இருப்பவர்கள், அன்று ஒரு சிலர் மட்டுமே இருந்தார்கள்.     

பைக்கில் உள்ளே சென்றால் துப்பாக்கி போன்ற ஒரு சோதனைக் கருவியை வைத்து பின்புறம் மாட்டியுள்ள பையை ஸ்கேன் செய்யும் பாதுகாப்பு சோதனை இல்லை.  உள்வரும் வாகனனங்களை வரிசையாக  ரேஸ் விடுவதுபோல நிறுத்தி, அதற்கு முன்னால் ஒரு கம்பியை நீட்டிக்கொண்டு செல்லும் சோதனையும் இல்லை.  சில சோதனைகள் எல்லாம் எதற்கு செய்கிறார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது; நமக்கும் தெரியாது.  அந்த வகை சோதனைகளில் இதுவும் ஒன்று.  

ஆரம்பத்தில் புதிதாக உள்ளே சென்றபோது நிறுவன ஸ்டிக்கர் இல்லாமல் இவர்களிடம், தங்லீஷ் ஹிந்தியில் பேசி விருந்தினர் அட்டை வாங்கி  உள்ளே நுழைந்தது  தனிக்கதை.   இன்று அடையாள அட்டையை மட்டும் சோதனை செய்து அதில் ITPL ஸ்டிக்கர் உள்ளதா என்று பார்த்து அனுப்புகிறார்கள்.  அவர்களுக்குத் தேவை, அந்த குறிப்பிட்ட ஸ்டிக்கர்தானே தவிர, நமது முகம் அல்ல.  புதிய சோதனையாக, காய்ச்சல்  சோதிக்கும் கருவியைக் கையில் காண்பித்து  சோதனை செய்கிறார்கள். உள்ளே நுழைந்தாயிற்று.  

‘பார்க்கிங் காசு வாங்குவார்களே, எங்கு நிறுத்தலாம்?’ என யோசிக்கும் பொழுது, காசு வாங்கும் அறை காலியாக இருந்தது.  ஒவ்வொரு வண்டியாகத் தடுத்து நிறுத்தும் ஆட்டோமேட்டிக் குச்சியைக் காணோம்.  நிரம்பி வழியும் இரு சக்கர வாகன நிறுத்துமிடம், புல் முளைத்துக்  கிடந்தது.  மரங்களின் சருகுகள் சற்று அதிகமாவே கிடந்தன. மரங்ககளின் நிழல்களில் அங்கங்கு சில பழைய வாகனங்கள், சிலந்திகள் கூடு கட்டி சமூக இடைவெளியில் இளைப்பாறிக்  கொண்டு இருந்தன.  காலியாகக் கிடந்த பைக் நிறுத்தத்தைப் பார்க்கும்பொழுது, ‘எத்தனை கொள்ளை எங்க கிட்ட அடிச்சிருப்பீங்கடா?’ என்றுதான் தோன்றியது. பார்க்கிங்கின் வெளியே அங்கங்கு சொற்ப பணியாட்கள். 

இவை அனைத்தும் இன்னும் அலுவலகங்களுக்கு மக்கள் வரவில்லை என்பதை அழுத்திச் சொன்னது. ஏதோ யாருமில்லாத உலகத்துக்குள் பயணிப்பது போல ஒரு மயான அமைதி.  கல்லூரி போல குழுமம் குழுமாகச் சாலையில் நடந்துகொண்டே இருக்கும் பட்டாம்பூச்சிகளைக் காணவில்லை.  டவுன் பஸ் ஏறும் கூட்டம் போல  இருக்கும் லிப்ட் லாபிகள், காலியாக இருந்தன. புதிதாக வெளிவரும் திரைப்படத் தியேட்டர் போல எந்நேரமும் கூட்டமாக இருக்கும் கா∴படீரியா, மொக்கைத்  திரைப்படத்தின் பகல் காட்சி போல யாருமின்றி இருட்டடித்துக் கிடந்தது. ஏதோ யாருமற்ற இடத்திற்குள் நுழைந்து போன்ற ஒரு பிரம்மை.   

மனிதர்கள் இல்லாத இந்தக் கட்டிடங்கள், ஏதோ வாழ்ந்து கெட்ட  குடும்பத்தைப் போலத்தான் காட்சி அளிக்கின்றன. நகரமோ, கிராமமோ, இடங்களோ, கட்டிடங்களோ, மனிதர்கள் இல்லாவிடில்  அவை தொல்பொருள் இலாகாவின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட இடம் போலத்தான்.  மூடப்பட்ட அன்றைய மில்களும், தியேட்டர்களும் கடத்தும் வலிகள் அசாதாரணமானவை. 

ஈரோடு பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ராயல் தியேட்டரைக் கடக்கும் போதும் இதேதான் தோன்றும்.  ஆயிரம் ஆயிரம் மக்களைச் சுமந்து அவர்களைக் குதூகலப் படுத்திய  ஒரு அரங்கம்.  முண்டி அடித்துக்கொண்டு கம்பிகளின் இடையே கூட்டம் இருக்கும்.  பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக 100 நாள் கடந்து ஓடிய கட்டிடம்.  மேலே குறிப்பிட்ட, நாயகன் வீட்டைக் காலி செய்துவிட்டுப் போகும் காட்சி, அதில் ஓடிய திரைப்படங்களில் ஏதேனும் ஒன்றிலாவது வந்து இருக்கும். நிழல் உலகம் போல, நிகழ் காலங்களில் யாரும் பின்னணி இசை வாசிப்பது இல்லை.  இன்றைக்கு சண்டைக்காட்சிகள் எடுக்கப்படும் பின்னி மில் கூட இதுபோலத்தான் ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்திருக்கும்.   பலமாடிகளில் பகல் போல மின்னும் IT  நிறுவனக் கட்டிடங்களுக்கும் அந்த நிலைமை வருமா?

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் நம் ஊருக்கு வந்த 2000 களின் ஆரம்பத்தில், ‘5000 பேர் கொண்ட xy நிறுவனம் பழைய மஹாபலிபுரம் சாலையில் தொடங்க உள்ளார்கள்’ எனும் செய்தி செய்தித்தாள்களில் அவ்வப்போது வரும்.  இது மறைமுகமாக ஒரு 500 பேருக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் எனும் ஒரு வரியும் அந்தச் செய்தியில் சேர்ந்து இருக்கும்.  அந்த ‘மறைமுகமான வேலைவாய்ப்பு’ என்பது அங்குள்ள கா∴படீரியா, அட்மின் துறை, கட்டிடங்களைப் பராமரிக்கும் பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், அலுவலகப் பேருந்தை இயக்குபவர்கள் என இன்னும் பலரும் அடங்குவார்கள்.  அது தவிர அந்தந்த அலுவலகங்களின் வெளியே உள்ள சின்னச் சின்ன பெட்டிக்கடைகள், இளநீர், பஜ்ஜி, பஞ்சர் கடைகள் என இன்னும் பலவும் சேரும்.   

இந்த இரு வருடங்ககளாக அவர்கள் அப்படியேவா இருப்பார்கள்?  தெரியவில்லை. மீண்டும் இதுபோன்ற அலுவலகம் திறப்பார்கள், உலகம்  திரும்ப வரும் எனப் பலர் காத்துக்கொண்டு கூட இருக்கலாம். ஏனெனில் நம் கடந்த காலம் அப்படி. 

தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளர்கள் இனி பழைய முறையில், அனைத்து நாட்களும் அனைவரும் அலுவலகம் வந்து இயங்குமா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.  பல நிறுவனங்களும் ஹைபிரிட் என்று சொல்லக்கூடிய சில நாட்கள் அலுவலகம், பல நாட்கள் வீட்டிலிருந்து எனும் முறைக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இதுவே வழக்கமான முறையாக மாறக்கூடும்.  இது ஒரு வகையில் பெரு நகரங்களை, குறிப்பாக சென்னை, பெங்களூரை மூச்சு விட வைக்கும். ஆனாலும் நேரில் பார்க்கும்பொழுது வரும் தொடர்பு, உரையாடல், நெருக்கம்,  என்னதான் இணைய வழியே வேலை பார்த்தாலும் வருவது இல்லை.   

இன்னும் திறக்கப்படாத டீக்கடைகள், பூட்டிக்கிடக்கும் பெட்டிக் கடைகளுக்காகவேனும் மீண்டும் இந்தக் கட்டிடங்களுக்கு மனிதர்களின் மூலம் உயிர் வர வேண்டும்.   

  • க்ருஷ்


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *