வாழ்க்கை ஒரு வட்டம்

கடந்த 15 மாதங்களில் என்னுடைய பயன்பாட்டுக்கென அதிகபட்சமாக 400 – 500 ரூபாய்க்கு மட்டும் பெட்ரோல் போட்டு ஈருருளி ஓட்டியது போக, மீதி அத்தனை தூரங்களையும் மிதிவண்டியிலேயே பயணிப்பதன் அனுபவக் குறிப்புகள்:

அலுவலகம் சென்று வருவது, இடையில் தேநீர் பருக, மதிய உணவுக்குச் செல்வது, அஞ்சல்/தூது அஞ்சல் அனுப்பச் செல்வது என, ஒரு நாளைக்கு சராசரியாக 20 கிலோமீட்டர் தூரம் மிதிவண்டியிலேயே சென்று வருகிறேன். வெளியூர் பயணங்கள், நகர எல்லைக்குள் பிறருடன் செல்வது, குடும்பத்தினருடன் ஆங்காங்கே சென்று வருவது, பெட்டிகள், மூட்டைகளை எடுத்துச் செல்வது போன்றவற்றிற்கு மட்டுமே மகிழுந்து. மற்ற நாட்களில் அதைத் தொடுவதே இல்லை.

சில நாட்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டு வேலைகள் இருந்து, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டிய அழுத்தம் இல்லாத நாட்களில், நகர எல்லைக்குள் 40 கிலோமீட்டர் கூட மிதிவண்டியில் பயணிப்பதுண்டு. எப்போதாவது கொஞ்சம் சோம்பலாக இருக்கும் நாட்களில் நகருக்குள் சென்றுவர, ஒரு வேலையை முடிக்க நேரம் குறைவாக இருக்கும்போது, கட்டுச்சிப்ப அலுவலகங்கள் சென்றுவர, மகிழுந்து பராமரிப்புக்கு விட்டிருக்கும்போது என அரிதிலும் அரிதாக மட்டுமே ஈருருளியை எடுப்பதுண்டு.

2009-இல் வாங்கிய BSA SLR Photon Freedom மிதிவண்டிதான். சன்னமான சுமைதாங்கி உண்டு. கியர் கிடையாது. Ralco, Bedrock, Hartex போன்றவற்றில் டயர் போட்டாலும் நைலான் டயர் விரைவில் தேய்ந்து விடுவதோடு எதிர்பாராத நேரத்தில் ஓட்டையாகி விடுவதால் இரப்பர் டயரே சிறந்தது என்று தோன்றுகிறது.

கடந்த ஒரு வருடத்தில் கோயமுத்தூர் நகர எல்லைக்குள், தோராயமாக 2500 – 3000 கிலோமீட்டர் மிதிவண்டியில் ஓட்டியிருந்தாலும், பயணத்தொலைவு, கலோரிகளை அளப்பதற்குச் செயலி எதுவும் பயன்படுத்தவில்லை; திறன்மிகு கைக்கடிகாரமும் (ஸ்மார்ட் வாட்ச்) பயன்படுத்துவதில்லை.

எப்போதுமே ஒரு லிட்டர் தண்ணீர் புட்டியை சுமைதாங்கியில் வைத்திருப்பதுண்டு. நிதானமாக அளவான வேகத்தில் செல்வதால் கபால கவசம் அணிவதில்லை. எப்போதாவது வெயிலுக்குத் தொப்பி அணிவதுண்டு. இதுவரைக்கும் மற்ற வண்டிகள் இடித்து விழுந்தது, சறுக்கியது, நாய்கள் துரத்தியது என்று எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.

பாதாசாரி, மிதிவண்டி, ஈருருளி, மகிழுந்து என எதுவாக இருந்தாலும் மற்றவர்கள் நம் மீது மோதக்கூடிய எதிர்பாராத விபத்தைத் தடுக்க வேண்டுமெனில் Be visible என்ற அடிப்படையை மறக்கக்கூடாது. ஒரு விநாடி யாரோ ஒரு ஓட்டுநர் கவனிக்கத் தவறுவதாலேயே விபத்து ஏற்படுகிறது.

சைக்கிளை பைக் என்று விளிக்கும் நவயுக மிதிவண்டி வெறியர்கள், ஈருருளி ஓட்டுபவர்கள், மகிழுந்து ஓட்டுநர்கள் என எல்லோருமே மிகவும் அலட்சியமாக இருப்பது வாகனத்தின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் எதிரொளிப்பான் (Retro Refelective Strip/Sticker) விசயத்தில்தான். இரவு நேரங்களில் be visible என்பது மிக முக்கியம். பாதாசாரி, மிதிவண்டி, ஈருருளி ஓட்டி வரும் ஒரு நபரை நான்கு சக்கர வாகனங்களில் உள்ள A piller ஓரிரு நொடிகள் மறைத்து blindspot-ஐ ஓட்டுநருக்கு உண்டாக்கக் கூடியது.

கணிசமான ஓட்டுநர்கள் அலைபேசியில் பேசுவது, உடனிருப்பவர்களுடன் தீவிரமான உரையாடலில் ஈடுபடுவது என வருகிறார்கள். குடிகார நாய்கள் வண்டி ஓட்டி வருவதும் நம் ஊரில் இயல்பானதாகிவிட்டது. இத்தகைய ஆபத்தான ஓட்டுநர்கள் தூரத்தில் உள்ள சின்னச்சின்ன அசைவுகளை எல்லாம் கவனித்து முகப்பு விளக்கின் dim, bright-ஐ மாற்றி மாற்றி அடித்துப் பார்த்தெல்லாம் வண்டி ஓட்டுவதில்லை. குத்து மதிப்பாக பிரேக்கையும், ஆக்சிலரேட்டரையும் மிதித்துக்கொண்டே இருப்பார்கள்.

அவர்களுக்காக நாம் அன்றாடம் reflective jacket போட்டும் வாகனம் ஓட்ட முடியாது. தினமும் இரவு வீடு திரும்புவபவர்களுக்கு மிதிவண்டியுடன் வரும் எதிரொளிப்பான் போதாது. நாமே சிவப்பு நிற 3M எதிரொளிப்பான் ஸ்டிக்கரை முன்னும் பின்னும் ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டியதுதான் (முறைப்படி பார்த்தால் முன்புறம் வெள்ளை நிற எதிரொளிப்பான் மட்டுமே இருக்க வேண்டும். இருந்தாலும் சிவப்பு அல்லது மஞ்சள் பட்டையை ஒட்டுவதில் தவறில்லை).

இரு சக்கரங்களுக்கும் முழுமையான Mud guard இல்லாத மிதிவண்டிகளை அன்றாடம் வேலைக்குச் செல்பவர்கள் பயன்படுத்தவே முடியாது. சாலைகளில் திடீரென சாக்கடை ஓடும், மழை பெய்த பின் மணிக்கணக்கில் தண்ணீர் வந்துகொண்டே இருக்கும், வண்டியில் அடிபட்ட நாய் அல்லது பூனையின் உடல் சாலை முழுவதும் ஒட்டியிருக்கும். கண்ட இடத்தில் எச்சில் துப்பி வைத்திருப்பார்கள்; சில இடங்களில் வாந்தி எடுத்து வைத்திருப்பார்கள். எவ்வளவு பார்த்துப் பார்த்து ஓட்டினாலும் சில இடங்களில் ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலையில் காலை இரண்டையும் தூக்கிக்கொண்டு நேராக விட வேண்டியதுதான். அப்போதுதான் இரும்பு mud guard-இன் அருமை புரியும்.

காற்றில் ஆடிக்கொண்டே வரும் பிளாஸ்டிக் mud guard இருக்கும் மிதிவண்டிகளில் அவ்வப்போது எதிரொளிப்பானை mud guard மறைத்து விடுகிறது. இதை அறியாமல், ஆபத்தை உணராமல் பலர் இரவு நேரங்களில் செல்கின்றனர். சக்கரத்தின் கம்பியில் மாட்டியிருக்கும் ஆரஞ்சு வண்ண எதிரொளிப்பான் வில்லைகள் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டவை. அதன் முக்கியத்துவம் தெரியாத பலர் அவற்றைத் துடைப்பதே இல்லை; உடைந்துவிட்டால் புதியது மாட்டுவதும் இல்லை. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அவற்றை கழட்டிவிட்டு புதியது மாட்டுவது அவசியம். சுமைதாங்கியும்,

இரும்பு mud guard-உம் இல்லாத நவயுக மிதிவண்டிகளை அன்றாடப் பயன்பாட்டுக்கு வைத்திருப்பது சவாலான செயல். நமக்குப் பயன்பட வேண்டிய பொருளே நமக்கு சுமையாக மாறிவிடக்கூடாது என்பது என் கருத்து. Gear உடைய, suspension வைத்த மிதிவண்டிகளின் இயல்பான பயன்பாடு பற்றித் தெரியவில்லை. கோயமுத்தூர் போன்ற சமதளமான நகரத்தில் அவற்றால் என்ன பயன் என்று நானறியேன்.

பஞ்சாங்கத்தைப் பார்த்து செவ்வாய் கிரகத்துக்கு இராக்கெட் விடுவதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். Gym-க்கு car-இல் வந்து நின்றுகொண்டிருக்கும் cycle-ஐ ஓட்டி கலோரிகளை எண்ணுவதை ஜீரணிக்கவே முடிவதில்லை.

பல இடங்களுக்கும் நான் மிதிவண்டியிலேயே செல்வதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சிலர் மிதிவண்டிக்கு மாறினார்கள். ஆனால் ஓரிரு மாதங்களில் அதைக் கைவிட்டுவிட்டு பழையபடி ஈருருளிக்குத் திரும்பிவிட்டனர். தனிப்பட்ட விருப்பம், தன்னூக்கம், ஈடுபாடு என்பதைத் தாண்டி அதற்கான முக்கிய காரணம் அவர்களது மிதிவண்டி டயர். அன்றாடப் பயன்பாட்டுக்கான மிதிவண்டியில் டயர் சன்னமாக இருக்க வேண்டும். நம் மக்கள் பெரிய button கொண்ட MTB அல்லது மிக சன்னமான track டயர் உள்ள ஒன்றை எந்தவிதமான யோசனையும் இல்லாமல் வாங்குகின்றனர்.

காதணிபாடி மாட்டி பாட்டுக் கேட்டுக்கொண்டே ஒருநாளும் சாலைகளில் சென்றதில்லை. அவ்வாறு செய்வது நமது உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடியது என்பதோடு இசையை அவமதிக்கும் செயல். வெளியூர் செல்லும்பொழுது மிதிவண்டியை பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள bike stand-களில் நிறுத்தி விட்டுச் சென்றுவிடுவதால் இப்போதெல்லாம் வீட்டிலிருந்து சென்று வரும் taxi செலவும் இல்லை. நாளொன்றுக்கு 20 ரூபாய் நிறுத்தக்கட்டணம் மட்டுமே.

வெயில் நேரத்தில் செல்வது பழகிவிட்டால் ஒன்றுமே தெரியாது. வியர்வை வந்தாலும் அலுவலகம் சென்றவுடன் பத்து நிமிடங்களில் இயல்பாகி விடுகிறது. சட்டை அழுக்காவதும் இல்லை. மழை நின்ற அடுத்த சில நாட்கள் சாலைகளில் உள்ள சேறு, சகதி காய்ந்து புழுதியாக பறக்கும். அதுவும் முகக் கவசம் அணிவதால் பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் தலை முடி முழுவதும் புழுதியாக இருக்கும். அப்படியே சீவினால் சீப்பு நிறம் மாறுவது தெரியும்!

Traffic jam என்ற பிரச்சினை ஒருபோதும் மிதிவண்டிக்காரர்களுக்குக் கிடையாது. ஈருருளிகளே செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து மொத்தமாக நின்றுவிட்டாலும் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு நடந்து சென்று பத்து மகிழுந்துகளைத் தாண்டிய பிறகு இறக்கி வைத்து எப்போதும் போல ஓட்டிச் செல்லலாம்.

இதைவிட இன்னும் குறைவான நுகர்வுடைய minimalist வாழ்க்கை முறைக்குச் செல்ல மூன்று கிலோமீட்டருக்குக் குறைவான தூரத்தை நடந்து மட்டுமே செல்வது என்ற இலக்கை 2023-க்கு செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறேன்.

  • ஆர். எஸ். பிரபு

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *