பேராசிரியரைப் பெயர் சொல்லி அழையுங்கள்

ஐரோப்பாவில் உள்ள பல்கலையில் வருகை தரு ஆராய்ச்சியாளராகச் சேர்ந்த புதிதில், பேராசிரியரை வழக்கம்போல் Sir என்று கூப்பிடத் தொடங்கினேன். முதல்முறை ‘அவ்வாறு அழைக்க வேண்டாம்’ என்று கூறிய அவர், இரண்டாம் முறையும் தவறி அழைத்தபோது சார் என்று சொல்ல வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறி, அவர் பெயரைச் சொல்லி அழைக்கும்படி கூறினார். ஆங்கிலத்தில் பெயர் சொல்லி அழைத்தலே மரியாதைக்கு உரியதுதான் என்பது தாமதமாகத்தான் தெரிந்தது. நம்மவர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தின்போது அவர்களை Sir என்று அழைக்க ஆரம்பித்து, பிற்பாடு அக்கலாச்சாரம் அனைத்து மட்டத்திலும் வேரூன்றி விட்டது.

சார் என்று தங்களை அழைத்தலை எந்த ஐரோப்பிய, அமெரிக்க அல்லது வளர்ந்த நாடுகளின் பல்கலைப் பேராசிரியர்களும்/ஆராய்ச்சியாளர்களும் சற்றும் விரும்புவதில்லை. உளவியல் ரீதியாகவே தாங்கள் இவ்வாறு அழைக்கப்படுவதை அவர்கள் வெறுக்கிறார்கள். தங்கள் அறைக்கு எந்த மாணவர் வந்தாலும் சரிசமமாக அமர வைத்தே பேசுகிறார்கள் /விவாதிக்கிறார்கள். பெரும்பாலும் எந்த இடத்திலும் அடிமைத்தனம் இருக்காது.

சர்வதேசப் பல்கலையில் பி.எச்டி / முதுமுனைவர் ஆய்வுப் பணியிடங்களுக்குப் பேராசிரியர்களைத் தொடர்பு கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன். உயர்கல்வி மற்றும் அயலகப் பணிகளுக்குச் செல்ல விரும்புவோருக்கு இந்தத் தகவல்கள் பயன்படும் என்று நம்புகிறேன்.

  1. மின்னஞ்சலின் துவக்கத்தில் ‘Dear Sir/Madam, Respected Sir/Madam’ என்று துவக்குவதை அறவே தவிர்க்க வேண்டும்.. எனவே, இ-மெயிலில் Sir என்று தொடர்ந்து பயன்படுத்துவது நமக்கான வாய்ப்பை நாமே கெடுத்துக்கொள்வது போன்றதாகும். Dear Prof. XXX அல்லது Dear Dr. XXX என்று பெயருடன் இ-மெயில் ஆரம்பித்தல் நலம். இதைப்போலவே இ-மெயிலின் இறுதியில் Thanking you sir என்பதையும் தவிர்க்க வேண்டும். மெயிலின் எந்த ஒரு இடத்திலும் Sir என்பது கட்டாயம் இருத்தல் கூடாது.
  2. சுருக்கமான சுய அறிமுகத்துடன் எத்துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளோம்/பெற விண்ணப்பித்துள்ளோம் என்பதைக் கூறி விண்ணப்பிக்கும் பதவிக்கு/படிப்பிற்கு அப்பேராசிரியரின் ஆய்வுக் குழுவைத் தேர்ந்தேடுத்த காரணத்தையும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். அதற்கு முன்னர் அக்குழுவிற்கு விண்ணப்பிக்கும் தகுதி நமக்கு ஓரளவேனும் இருக்கிறதா என்ற சுய பரிசோதனை செய்வது சாலச் சிறந்தது.
  3. அக்குழுவினர் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஈடுபடும் ஆய்வுத்துறை பிரிவுகள், பெற்றுள்ள நிதியுதவி, பேராசிரியரின் அனுபவம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தொடர்பு கொள்ள வேண்டும். அப்பேராசிரியரின் சிறப்புரைக் காணொளி ஏதேனும் Youtube போன்ற ஊடகங்களில் இருந்தால் அவற்றைக் கண்டும் அவரது ஆராய்ச்சி ஈடுபாட்டை, மாணவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனை அறியலாம்.
  4. அப்பேராசிரியரின் குழு வெளியிட்டுள்ள ஓரிரு சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சொல்லி அவற்றின் உள்ள ஆய்வு முடிவுகள் நம்முடைய ஆராய்ச்சி ஆர்வத்துடன் ஒத்துப்போவதைச் சுருக்கமாக குறிப்பிடலாம்.. நம்முடைய தனித்திறன்களையும் (skills) குறிப்பிடலாம்.
  5. தனிப்பட்ட முறையிலான சுருக்கமான ஆராய்ச்சி சுய விவர அறிக்கையை (CV) கட்டாயம் இ-மெயிலில் இணைக்க வேண்டும். அதில் பக்கம் பக்கமாகக் கதை எழுதாமல், முக்கிய ஆய்வுக் கட்டுரை வெளியீடுகள், வாங்கிய விருதுகள், பங்கேற்ற கருத்தரங்குகள் (conference) மற்றும் செமினார் நிகழ்வுகள் போன்றவற்றைக் குறிப்பிட்டு கல்வித் தகுதி போன்ற பொதுவான பிற தகவல்களை இணைத்தால் போதுமானது. இதற்கான மாதிரி CV-க்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
  6. பி.எச்.டி-க்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் தன்னுடைய உத்தேச ஆராய்ச்சித் திட்டம் (Proposed research work) குறித்த ஒரு பக்க அறிக்கையை இ-மெயிலுடன் இணைத்தல் நலம். தாங்கள் முதுகலை படிக்கும்போது ஏதேனும் ஆய்வுக் கட்டுரை (Research article) /காப்புரிமை (Patent) எழுதி வெளியிட்டிருந்தால் அதன் Soft copy-யை இ-மெயிலுடன் இணைத்தல் நலம். இது அவர்களின் தேர்வை இன்னமும் உறுதிப்படுத்தும்.
  7. இ-மெயிலின் Subject மற்றும் எழுத்துப் பிழைகள், ஆங்கில இலக்கணக் குறைபாடுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, பிழையின்றி அனுப்ப வேண்டும். இது மிக முக்கியமானது.
  8. ஒரே இ-மெயிலை காப்பி செய்து பல பேராசிரியர்கள்/ ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்புவதை அறவே தவிர்க்க வேண்டும். இது தனிப்பட்ட ஆய்வு/ வேலை வாய்ப்பு என்பதால் ஒவ்வொரு பேராசிரியர்/ ஆராய்ச்சியாளருக்கு அனுப்பும்போதும் அதீத கவனம் கொண்டு நேரம் செலவழித்து அனுப்புவதில் தயக்கம் காட்டுதல் கூடாது.
  9. பி.எச்.டி-க்கு விண்ணப்பிக்கையில் ஒரு பேராசிரியர் /ஆய்வாளர் தன் ஆய்வகத்தில் காலிப் பணியிடம் இல்லை பதில் என்று சொன்னாலும் அவரது இ-மெயில் முகவரியை தவறாது சேமித்துக் கொள்ளுங்கள். பிற்காலத்தில் முது முனைவர் (Post-doctoral) ஆராய்ச்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கையில் அவரை மீண்டும் தொடர்பு கொள்ள அது வசதியாக இருக்கும். அனைத்துப் பேராசிரியர்களும் நாம் அனுப்பும் இ-மெயிலுக்கு பதில் கூறுவது இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  10. பெரும்பாலும் சர்வதேசப் பேராசிரியர்கள் மாணவர்களை Skype போன்ற ஊடகங்கள் மூலமே தொடர்பு கொள்வார்கள் என்பதால், நேர்முகத் தேர்விற்காக அவர்கள் தொடர்பு கொள்ளும் முன்னர் யாரேனும் நண்பருடன் இணைந்து மாதிரி Skype உரையாடலை மேற்கொள்வது பதற்றமடைதலைக் குறைக்கும்.

தட்டுங்கள் திறக்கப்படும், தன்னம்பிக்கையோடு தட்டுங்கள் வாய்ப்புகள் தானாகவே வழி திறக்கும்.

  • ஆனந்தகுமார் சூசைமாணிக்கம், நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி அறிவியலாளர், மாட்ரிட், ஸ்பெயின்.

Comment (1)


A SATHISH
A SATHISH
July 15, 2022

It’s a good information and needful one.
Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *