அடிக்கும்போதும் வராத அப்பா
‘அப்பனை முழுங்கின சனியன்’ என்று
பாட்டி திட்டும்போதெல்லாம்
என் தோழிகளின் அப்பாக்களை
நினைவு கூர்வேன்
அவ்வளவு உயரமாக இருக்கும் அப்பாவை
நான் எப்படி விழுங்க முடியும் என்று
புரியாமல் விழித்துவிட்டு
பாட்டியிடம் கேட்டிருக்கிறேன்
சிலசமயம் பாட்டி அடிப்பதுண்டு
சிலசமயம் அலுப்பதுண்டு
சிலசமயம் என்னை அடித்துவிட்டு
அவளும் அழுவாள்
ஆனால் நான் எப்போதும்
அப்பா என்றுதான் அழுதிருக்கிறேன்
அப்பா என்று சொல்லி அழதே என்று
மேலும் அடித்திருக்கிறாள் பாட்டி
ஆனால் ஒருமுறைகூட
அப்பா வந்ததே இல்லை.
- பவித்ரா பாண்டியராஜூ

Comments (0)