சிறுபத்திரிகைகளா..! அதென்ன?
சிறிய, பெரிய, நடுவாந்திரப் பத்திரிக்கைகள் என்று தனித்தனியே உள்ளனவா என்று உங்களில் சிலர் கேட்கலாம். உண்மையிலேயே middle magazines என்று அழைக்கப்பட்ட பத்திரிகைகள் உட்பட, பல விதமான வகைகளில் பத்திரிக்கைகள் வந்தன; வந்துகொண்டிருக்கின்றன.
இந்த வகைப்படுத்தல் எவ்வாறு என்பது அந்தந்தப் பத்திரிகையின் ரீச்சபிலிட்டி, சர்க்குலேஷன் போன்ற பல சமாச்சாராங்களைப் பொறுத்தது. அவை தங்களுக்குள் சில சமயங்களில் குழுக்கள் சார்ந்தும் அரசியல் நம்பிக்கைகள் சார்ந்தும் வேறுபட்டன. உதாரணம் வேண்டுமெனில் விகடன், குமுதம் போன்றவை பெரியன என்றால், காலச்சுவடு, உயிர்மை போன்றவை middle magazine வகைமையில் வரும்.
சிறு பத்திரிகைகள் கையெழுத்துப் பிரதிகளாக ஒரு காலத்தில் வந்து, தற்போது இணையப் பத்திரிகைகளாக வலம் வருபவை. கனத்த விஷயங்களுடன் குறைந்த பார்வையாளர்களை அணுகுபவை. தற்காலத்தில் இணையப் பத்திரிகைகள், e – magazines என்பவை உலகம் முழுவதும் பார்வையாளர்களை, வாசகர்களை அணுகி வருகின்றன.
சிறு பத்திரிக்கைகள்தான் ஆரம்பத்தில் இருந்தன. நமக்குத் தெரிந்து எழுத்து என்ற பத்திரிகையை சி. சு. செல்லப்பா நடத்தி வந்தார். காத்திரமான படைப்புகள் இதில் வந்தன. இலக்கியங்களுக்கான வெட்டுக்குத்து சண்டைகள்கூட வந்தன என்பார்கள். எல்லாமே எழுத்தில். நேரில் சந்தித்தால் தோள்மீது கை போட்டுச் செல்லும் நெருக்கமும் இருந்தது.
இன்றுகூட அமேசான் கிண்டிலில் எழுத்து மின்நூலாகக் கிடைக்கிறது. படிப்பது ஒரு சிறந்த அனுபவத்தைத் தரக்கூடும். எழுத்து கூடவே புகழ் பெற்ற இன்னொரு பத்திரிக்கை மணிக்கொடி. அது இலக்கிய உலகின் பொற்காலம் எனலாம்.
புதுமைப்பித்தன், கு.ப.ரா., கு.அழகிரிசாமி போன்ற ஜாம்பவான்கள் இதில் சிறுகதைகளை அள்ளி இறைத்தார்கள். ஆரம்ப காலத் தமிழ் சிறுகதை எழுத்தாளர்களின் பட்டறை மணிக்கொடி என்றால் மிகையில்லை.
சரஸ்வதி என்ற பத்திரிகையை விஜயபாஸ்கரன் சிறப்பாகக் கொண்டுவந்தார். பிறகு வந்த தாமரை, செம்மலர் போன்ற பத்திரிக்கைகளுக்கு இது முன்னோடியாய் அமைந்தது.
நாகர்கோவிலிலிருந்து, எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் காலச்சுவடு என்ற சிறு பத்திரிகையை எண்பதுகளில் ஆரம்பித்தார். எட்டு இதழ்களுக்குப் பிறகு நின்று போனதை, அவருடைய மகன் கண்ணன் மீண்டும் கொண்டுவந்தபோது, அது இடைநிலை இதழ் (middle magazine) என்ற புதிய வடிவத்திற்கு அடிகோலியது. சற்று வணிகமய வாசனையுடன், நிறைய இலக்கிய வாசகர்களைச் சென்றுசேரும் வகையில் வெளிவந்தது. மிகவும் காத்திரமான விவாதங்களையும் வேறு மொழியில் வந்த படைப்புகளின் மொழிபெயர்ப்புகளையும் கொண்டுவந்தது இதன் சிறப்பு.
பின்னர் அதைத் தொடர்ந்து உயிர்மை, உயிரெழுத்து என பல பத்திரிக்கைகள் தமிழ் இலக்கிய உலகில் வலம் வந்தன. இவை தாங்களே பதிப்பகம் ஆரம்பித்ததும் தங்கள் பத்திரிக்கையில் வந்த கதை, கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிட்டதும் தமிழ்ப் பதிப்புலகில் ஒருபெரிய மாற்றத்தினை உருவாக்கியது எனில் மிகையில்லை.
இந்த இடைப்பட்ட காலத்தில், சிறப்பாக வந்து நின்றுபோன சிலவற்றைப் பார்க்கலாம். இனி, படிகம், சுபமங்களா, பரிக்ஷா ஞானி நடத்தி வந்த தீம்தரிகிட போன்றவை இலக்கிய வாசகர்களிடம் பெயர் பெற்றவை. இதே காலத்தில் நிறப்பிரிகை, அன்னம் விடு தூது, போன்றவை நல்ல அழுத்தமான தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டன.
சில பத்திரிக்கைகள் துறை சார்ந்த இதழ்களாக வெளிவந்தன. இவற்றில் முக்கியமானவை திரைத்துறை சார்ந்த நிகழ், நாடக இலக்கியம் சார்ந்த வெளி போன்றவை.
எனக்குத் தெரிந்து இலக்கியத்தரமான, அதே சமயம் பெரிய ஆளுமைகளுடன் நேர்காணல், சுயவரலாறு என்று 5 வருடங்கள் வந்தது சுபமங்களா. இதில் வந்த சி.சு.செல்லப்பாவின் தொடர் ஒன்று, தமிழ் இலக்கியத்தின் பல வகைப்பட்ட போக்குகளை எளிமையாக அறிமுகப்படுத்தியது. யதார்த்தவாதம், சர்ரியலிஸம், மாடர்னிசம், போஸ்ட் மாடர்னிசம் என்று பல ஜானர்களை எளிமையாக உதாரணம் சொல்லி விளக்கினார். தொடர் நூலாக வந்ததா என்று நினைவில்லை. மீண்டும் வந்தாலும் நல்லதே. சுபமங்களாவின் ஆசிரியர் கோமல் சுவாமிநாதன், ‘மாதபலன்’ என்றொரு தொடர் எழுதினார். அந்தந்த மாதத்தில் நடந்த, இலக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக இருந்தது அது. சுபமங்களாவின் சிறுகதைகள் மூலமாக, அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் தமிழுக்குக் கிடைத்தனர். ஜெயமோகன், வண்ணதாசன், சுப்ரபாரதிமணியன் போன்ற இன்றைய ஜாம்பவான்கள், அன்றைய இளைய வயதினர் இதில் எழுதி வந்தனர். ஐந்து வருடங்களில் சுபமங்களாவின் நேர்காணல்கள், தமிழ் படைப்பாளர்களின் பாதையை தெள்ளத் தெளிவாகக் காட்டியது. அது தனி நூலாகவும் வந்துள்ளது.
பெரிய நிறுவனங்கள், இலக்கியம் பக்கம் தலைவைத்துப் பார்க்க ஆரம்பித்தது ஒரு காலம். அறிவியல் வளர்ச்சி அசுரத்தனமான இயந்திரங்களை உற்பத்தி செய்தது. அதற்குத் தொடர்ந்து தீனி போட வேண்டிய தேவையில் விகடன், குமுதம் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய இடைநிலை இதழ்களை ஆரம்பித்தன. விகடன் தடம், குமுதம் தீராநதி என்ற இதழ்கள் வெளிவந்தன. தடம் அச்சிதழ் நின்றுபோனாலும், தீராநதி வந்துகொண்டிருக்கிறது.
தற்போது வந்துகொண்டிருக்கும் நூல்கள் எனில், மேற்சொன்ன காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து தவிர, அமிர்தா, தமிழ் வெளி, தமிழ்த்தடம், இலக்கிய வெளி, தளம் போன்றவை முக்கியமானவை. அகநாழிகை என்று ஒரு இதழ் காலாண்டிதழாக வெளிவருகிறது. திசை எட்டும் என்று ஒரு காலாண்டிதழ் மொழி பெயர்ப்புக்காகவே வருகிறது. சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள், கதைகள், பிற மொழிக் கலைஞர்களிடம் நேர்காணல் என்று பத்து வருடங்களுக்கு மேல் தொடர்ந்து வரும் இதழ் இது.
சமீப காலங்களில் வாசகசாலை வெளியீடாக வரும் புரவி, பொள்ளாச்சியிலிருந்து வரும் கொலுசு, இணைய இதழ்களாக வரும் சுவடு, ஆவநாழி, தமிழினி போன்றவை முக்கியமானவை. இளைஞர்கள் பலர் இவற்றில் தங்கள் படைப்புகளை எழுதி வருவது
மகிழ்ச்சியளிக்கிறது.
2007-2012 காலகட்டத்தில் அச்சிதழாக சுவடு வெளிவந்த காலத்தில் தமிழ்நாட்டின் அன்றைய இரு முதல்வர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே தினசரிகள்கூட இலக்கியம்பற்றிப் பேச ஆரம்பித்திருக்கின்றன. இவற்றில் சிறுபத்திரிகை பற்றிய அறிமுகங்களும் வருகின்றன. இலக்கியம் வளர்வது நல்லதுதானே.
- கோவை பிரசன்னா

GOMATHISANKARR
June 1, 2023அருமை
Sankar TAB
June 1, 2023அறிந்திராத சில பத்திரிக்கைகளை அறிய முடிந்தது. நாளிதழ்களும் இலக்கியம் பற்றி பேசுவது நல்ல முன்னேற்றமே.
அருமையான கட்டுரை.. 👍
ம. செ. மோகன் ராஜா
June 1, 2023சிற்றிதழ்கள் குறித்த அருமையான கட்டுரை. ❤️
பானுரேகா
June 2, 2023அருமையான கட்டுரை சார்.💐💐.சி.சு. செல்லப்பாவின் கட்டுரைகள் புத்தகமாக வெளியிடப்படவில்லையா? இலக்கிய வகைகளை எளிமையாக தெரிந்து கொள்ள இன்றைய வாசகர்களுக்கு உதவும் அல்லவா?
சுவடு அச்சு வடிவில் வெளிவந்ததும் எனக்கு புதிய தகவல்..