இரண்டாம் வேற்றுமை உருபு

நூல் அறிமுகம்

சமூகம், இயற்கை, இலக்கியம் என மூன்றின் மீதும் அக்கறை கொண்டு செயல்பட்டுவரும் பறம்பு தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில் பங்கு பெற்ற சுமார் ஆயிரம் சிறுகதைகளில் ஆறு நடுவர்கள் மற்றும் சங்கத்தின் இலக்கியப் பிரிவான பாட்டாபிறையின் முன்கள நிர்வாகிகள் பன்னிருவர் உதவியுடனும் தேர்தெடுக்கபட்ட சிறந்த இருபத்தெட்டு சிறுகதைகளின் தொகுப்புதான் இரண்டாம் வேற்றுமை உருபு.

முதல் கதையே வாசகனை ஈர்த்து உள்ளுழுத்துக்கொள்கிறது. ‘அம்சவேணியின் ஞாயிற்றுக்கிழமைகள்’ என்ற கதையில் வருவது போன்ற துயரங்களும் சமூக அவலங்களும் நித்தமும் நிறையவே நடக்கின்றன. இந்த சமூகத்தைக் கேட்க நினைக்கும் கேள்விகளையெல்லாம் அம்சவேணியின் மூலம் சாட்டையடியாய்க் கேட்கிறார் எழுத்தாளர் வா.மு கோமு.

‘நொண்டிக் கருப்பு’ எனும் தலைப்பில் உலகநாதன் கருப்பசாமி, மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இருக்கும் உறவையும் உணர்வுகளையும் கிராமத்துச் சூழலையும் சொல்லியிருக்கும் விதம் வெகு அழகு. ‘அம்மாவின் நடனம்’ என்ற தலைப்பில் ஒரு கைம்பெண்ணாகிப்போன அம்மாவின் இருண்ட வாழ்க்கையையும், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய மகனோ மகளோ பாதுகாக்கத் தவறியதையும் சிறப்பாச் சொல்லியிருக்கிறார் கோமதி சங்கர்.

தமிழகத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான திருவிழாக்களில் வட தமிழகத்தின் அடையாளமாக மாறிப்போன திருவிழா எனில் அது திரௌபதி அம்மன் வசந்தப் பெருவிழாதான். அதை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையில் காட்சிகளை எல்லாம் எழுத்தின் வழி கண்முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார் ஆசிரியர். உதிரச்சோறு உண்மையில் வடதமிழகத்தினரின் உற்சாகச் சோறு. இதை எழுதிய அ.மோகனாவுக்குப் பாராட்டுகள்.

கல்யாணம் ஆகாத கீதாரி பற்றிய கதை ‘பாயும் புலி’. அவனின் மனநிலையையும் காம உணர்வுகளையும் கண்முன்னே கொண்டுவர முயன்றிருக்கிறார் ஆசிரியர் மௌனன் யாத்ரீகா. சம்சாரியின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கும் விதம் அற்புதம். ஒரு திருடன் படும் பாட்டை வெகு அழகாய் ‘களவு’ எனும் தலைப்பில் எழுதியுள்ளார் முத்துச்செல்வன். இப்படி ஒரு கதையைப் படித்தால் திருட நினைப்பவர்கள்கூட திருந்தி வாழ ஆசைப்படுவார்கள்.

ஒரு சாதாரண கிராமத்து தினக்கூலித் தொழிலாளியின் வாழ்க்கையை, ‘அழிஞ்சைக் காட்டின் கிளிகள்’ கதையில் அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் சிவக்குமார் முத்தப்பா. வயதான, அதே நேரத்தில் மனதளவில் இளைஞரான முருகேசு இல்ல முருகேஷ் பற்றிய கதை வெகு சுவாரஸ்யம். கதையை மிக நேர்த்தியாகச் சொல்லியுள்ளார் திசு சிவசங்கர்.

திருப்பதி வாசகன் எழுதிய ‘கங்கா நதி’ கதை நெகிழவைக்கும் கதை. இப்படியும் நடக்குமா என்று மனம் குமைந்து நம்மை நொறுக்கிப் போடும் வலி நிறைந்த கதை இது. தெருவோரங்களில், சிக்னலில், சுங்கச் சாவடிகளில் கையேந்தும் சில குழந்தைகளின் அவலநிலையைக் கண்முன்னே காட்சிப்படுத்தி இருந்தார் விஜி முருகநாதன். சுதந்திர இந்தியாவில் இன்னும்கூடப் பலர் மூன்று வேளையில் ஒருவேளை உணவுகூட இல்லாமல் மாண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை ‘வடகறி’ சிறுகதை மூலம் சொல்லியிருக்கிறார்.

மனநிலை பாதித்த குழந்தையை வளர்க்க ஒரு பெண் படும் பாடு ஒவ்வொன்றையும் மிகவும் கச்சிதமாக ‘பிள்ளைக் கனியமுதே’ எனும் தலைப்பில் டி.கே.வித்யா கண்ணன் எழுதியுள்ளார். விவசாயப் பின்னணியில் இருக்கும் இளைஞன் படுகிற பாட்டை மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார் மகேஷ் குமார். கதைக்கு செவலை என்ற தலைப்பு ஆகப்பொருத்தம்.

ஒரு தனியார் அலுவலகத்தில் நடக்கும் பாலியல் சீண்டல்களையும் அது தொடர்பான விசாரணைகளில் பெண்கள் படும் பாட்டினையும் சமூகம் அதை எவ்வளவு அலட்சியமாகக் கடந்துசெல்கிறது என்பதையும் மிக எதார்த்தமாகயும் துல்லியமாகவும் எழுதி இருக்கிறார் ‘பெண் விழை’ எனும் தலைப்பில் ஹேமா ஜெய்.

வசதி படைத்த உயர்சாதியினர் தங்களைக் கீழ் சாதியினராகக் காட்டிக்கொண்டு அரசாங்கச் சலுகைகளைப் பெறுவது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்பதை ‘வாழ்வியல் அறம்’ தலைப்பில் கே.சுப்புராஜ்
அசத்தலாக எழுதியிருக்கிறார். அதுவும் அந்தப் பின்குறிப்பும் கதையில் வரும் கவிதைகளும் அருமை.

காதலியை இழந்த தவிப்பை, வலியை ‘எங்கே என் இதயம் அன்பே’ கதையில் வெகு அற்புதமாகச் சொல்லியிருந்தார் கவிஜி. ஒரு சமமான காதலை வேறு கோணத்தில் சொல்லி இருந்தார் ‘சமன்பாடுகள்’ எனும் தலைப்பில் எம்.சங்கர்.

‘பச்சை’ கதையில் ஒரு கிராமத்துப் பையன் நகரத்திற்கு வந்து படும் வாழ்வியல் போராட்டங்களைக் கணகச்சிதமாக எழுதியுள்ளார் சந்துரு மாணிக்கவாசகம். ‘குறிப்புகள்’ கதையில் ஒரு மாற்றுத்திறனாளியும் அவரது குடும்பமும் படும் பாட்டை நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் க.மூர்த்தி. நடுத்தர வர்க்கத்தினரின் காதலை மிகச்சரியாக சொல்லி இருந்தார் ‘பூவண்ணம்’ கதையில் கே.எஸ்.சுதாகர்.

ஒரு சாதாரண மனிதனுக்குப் பேரிடர் காலத்தில் கிடைத்த அனுபவத்தையே கதையாக மிகவும் நேர்த்தியாக எழுதி இருந்தார் கோவார்த்தனா. மலை கிராம மக்களின் வாழ்க்கையைப் ‘வெறியாட்டு’ எனும் தலைப்பில் படம் பிடித்துக் காட்டியிருந்தார் நெய்வேலி பாரதிகுமார்.

பாலியல் வன்கொடுமைகளையும் அதனால் ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் ‘பழியும் பாவமும்’ கதையில் சிறப்பாகச் சொல்லி இருந்தார் ஞா.கலையரசி. மரத்தை மையப்படுத்தி படைக்கப்பட்ட நேர்த்தியான கதை ‘புளிய மரத்தின் சுவை’. மரம் நடச் சொல்லும் அந்த மனிதரே மரத்தை வெட்டினால்தான் வியாபாரம் நடக்கும் என்று கூறுகிறம் அபாரம்.

தீராத நோய்க்கு ஒரே வழி மரணம்தான் என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக வலியால் சாவதைவிட ஒரேயடியாகப் போய்ச் சேருவது நலம்தானே என்று நமக்கே தோன்றிவிடும் அளவுக்கும் எழுதியிருந்தார் ‘யாறப்பே’ எனும் தலைப்பில் ஜவ்வாது முஸ்தபா. 

தனது சொந்த அனுபவங்களையே ‘விளையும் களை’ என்ற கதையாக எழுதியிருக்கிறார் புதுவை அருண்.கோ. முள்ளிவாய்க்கால் துயரத்தையும் அதனூடாகக் காதலையும் ‘பொய்மையும் வாய்மையுடைத்து’ எனும் தலைப்பில் அற்புதமாக எழுதியுள்ளார் சண் தவராஜா. ஒரு பெண்ணின் அவலத்தை வெகு இயல்பாக எழுதி இருக்கிறார் ‘குலசாமி’ எனும் தலைப்பில் எஸ்.மோகன். நம் குல தெய்வங்களை நாம கும்பிட மறந்துவிட்டோம் என்பதை வெகு அழகாக தனது பாணியில் எழுதி இருந்தார் ‘கடவுள் கோட்பாடு’ தலைப்பில் ஏ.ஆர் முருகேசன். 

மொத்தத்தில் இந்தக் கதைகள் அனைத்தும் ஒரு கதம்ப சாதத்தைப் போல மிகவும் சுவையானவை. இரண்டாம் வேற்றுமை உருபு – இன்னொரு உலகின் திறவுகோல்.

  • தினேஷ் கண்ணா

Comments (12)


Kalpana

அருமையான விமர்சனம் தம்பி! வாழ்த்துகள்!!

இ.தினேஷ்கண்ணா
இ.தினேஷ்கண்ணா
June 5, 2023

நன்றிங்க அக்கா

Mahalakshmi
Mahalakshmi
June 5, 2023

நூல்களின் தொகுப்பு மிகவும் சிறப்பு..👏👏👏👏
கலர் கலர் பூக்களை தொடுத்த கதம்பம் போல் அமைந்துள்ளது..பூக்களுடன் சேர்ந்த நாறும் மணப்பது போல் மிகவும் அருமையாக எழுதி இருக்கிங்க…😍😍😍😍

மேலும் மேலும் எழுதுங்கள்…

எழுத்துநடை மிகவும் அழகு..👏👏👏

தினேஷ்கண்ணா
தினேஷ்கண்ணா
June 6, 2023

நன்றிங்க தொடர்ந்து ஆதரியுங்கள்

Sivakumar
Sivakumar
June 5, 2023

அருமையான மற்றும் தெளிவான விமர்சனம் 👏👏👏👏

தினேஷ்கண்ணா
தினேஷ்கண்ணா
June 6, 2023

நன்றிங்க தொடர்ந்து ஆதரியுங்கள்

Bismi Domi
Bismi Domi
June 6, 2023

விமர்சனங்கள் நல்லா இருக்கு… தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் 💐

தினேஷ்கண்ணா
தினேஷ்கண்ணா
June 7, 2023

நன்றி மா

Skymoon

விமர்சனங்கள் நல்லா இருக்கு… தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் 💐

தினேஷ்கண்ணா
தினேஷ்கண்ணா
June 7, 2023

நன்றிங்க

சுதர்சனம்.E.S
சுதர்சனம்.E.S
June 15, 2023

தொடர்ந்து விமர்சிக்க வாழ்த்துகள்!

தினேஷ்கண்ணா
தினேஷ்கண்ணா
June 19, 2023

நன்றிங்க தொடர்ந்து ஆதரியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *