நூல் அறிமுகம்

அன்றாடம் வணங்கும் தெய்வங்களைப் பற்றி நாம் சிந்தித்ததுண்டா? தெய்வச் சிலைகளைப் பார்த்தவுடன் கன்னத்தில் போட்டுக்கொள்வதோடு நம் பக்தி முடிந்துபோகிறது, அதிகம் போனால் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் விளக்குப் போடுவோம் இதற்குமேல் இந்த தெய்வங்களை பற்றி நாம் சிந்திப்பதில்லை, நம் கவலைகளை மட்டும் அவர்களிடம் பட்டியலிடுகிறோம்.

‘குலதெய்வ வழிபாடு செய்யாவிட்டால் வீட்டில் நல்ல காரியங்கள் எதுவும் நடக்காது; குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்துகொண்டே இருக்கும்’ என்று நம் முன்னோர்கள் நம்மிடம் அழுத்தமாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதனால் நம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளான திருமணத்திற்கு முன்போ அல்லது பின்போ குலதெய்வத்திற்குப் படையல் போடுவதும் குழந்தைக்கு முதல் மொட்டை போடுவதும் குலதெய்வக் கோவிலில்தான் செய்வது என்பதை இன்றுவரை பல குடும்பங்கள் கடைபிடித்து வருகின்றன.

இந்தக் குலதெய்வங்கள் பெரும்பாலும் சிவனாகவோ விஷ்ணுவாகவோ இருப்பதில்லை. மாறாக, சுடலை மாடன், அய்யனார், முனீஸ்வரன் அல்லது துர்க்கை, பிடாரி போன்ற ஏதாவது ஒரு அம்மனாகத்தான் இருக்கிறார்கள். இந்த தெய்வங்களை எல்லாம் நாட்டார் தெய்வங்கள் என்றே பொதுவில் அழைக்கிறார்கள்.

நிறுவன சமயம் (Institutionalised religions)

சைவம், வைணவம், கிறித்தவம், இஸ்லாம் போல ஒரு முழுமுதற் கடவுளையும் வேத ஆகம விதிகளையும் மடம், சபை, கோவில், மசூதி போன்ற நிறுவன ஏற்பாடுகளையும் கொண்டதுதான் நிறுவன சமயம். இந்த தெய்வங்களைப் பெருந்தெய்வங்கள் என்று அழைக்கிறார்கள்.

ஆங்கிலேயர் காலக் கணக்கெடுப்பிலேயே இந்தியர்கள் அதிகம் வழிபடுவது நாட்டார் தெய்வங்களைத்தான் என்ற குறிப்புகள் உள்ளதாம், இந்த நாட்டார் தெய்வங்கள் அதிகம் வழிபடப்பட்டதற்குப் பல முக்கியக் காரணங்களை இந்த நூலில் எடுத்து வைக்கிறார் ஆசிரியர். நாட்டார் தெய்வங்களுக்குப் பெரிய கோவில்கள் எல்லாம் எழுப்பப்படவில்லை, சிறிய கல், பீடம் மற்றும் கற்சிலைகள். அவ்வளவே போதுமானதாக இருக்கிறது.

இந்த தெய்வங்கள் பெரும்பாலும் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்கள், உடன்கட்டை ஏறியவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் ஆவர். பின்னாளில் அவர்களே மக்களின் கனவில் வந்து தன்னை வழிபடச் சொன்னதாகத்தான் வழிவழியாகச் செய்திகள் கிடைக்கின்றன. தான் அறிவொளி இயக்கத்தில் பேராசிரியர் ச.மாடசாமி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இயங்கிய காலத்தில், மக்களிடம் ஏராளமான தகவல்களைச் சேகரித்ததாகவும் அவற்றில் நாட்டார் தெய்வங்கள் பற்றிய கதைகளைத் தனியாகத் தொகுத்ததாகவும் கூறுகிறார் நூலாசிரியர். அவற்றிலிருந்து நாற்பது கதைகளை இந்தப் புத்தகத்தில் விவாதித்திருக்கிறார்.

தீப்பாஞ்சம்மன்

சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண் குழந்தை, தன் கணவனான அந்தப் பாலகன் உடல்நலக்குறைவால் இறந்துவிடும்போது இவளும் சேர்த்து எரிக்கப்படுகிறாள். அந்த அப்பாவிக் குழந்தைதான் பின்னாளில் பக்தர்களின் கனவில் வந்து தன்னை வழிபடச் சொல்லி தெய்வமாக மாறிய தீப்பாஞ்ச அம்மன். இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தீப்பாஞ்ச அம்மன் இருக்கையில், இவை எல்லாமே சீதையின் அவதாரங்கள் என்று ஏமாற்றப் பார்க்கின்றன நிறுவன சமயங்கள்.

கம்பங்குழி அம்மன்

குளித்து முடித்து தலையைச் சிக்கலெடுத்துக்கொண்டிருக்கும் பெண்ணின் முடியில் இருந்து ஒரு முடி பறந்துபோய் விழுந்ததில் அவளைக் கவர்ந்துசெல்ல வரும் ஜமீனிடமோ அல்லது மன்னனிடமோ இருந்து அவளையும் தன் வீட்டு மானத்தையும் காப்பாற்றுவதாக எண்ணி அவளை நிலவறைக்குள் போட்டு மூடி வைத்து கொடூரமாகக் கொன்றுவிடுகிறார்கள், அவள் குடும்பத்தார். பின்னாளில் அவர்கள் கனவில் அவள் வந்து தன்னை வழிபட்டால் அவர்கள் நலம் பெறுவார்கள் என்று கூறி கம்பங்குழி அம்மன் என்ற தெய்வமாகிறாள்.

மக்கள் தங்களின் குற்ற உணர்வினை மறைக்க பக்தியைக் கையில் எடுக்கின்றனர். குடும்ப மானத்தை ஏன்தான் பெண்ணின் உடலில் வைக்கிறார்களோ?! “அப்பா.. அம்மா.. காப்பாற்று..” என்று அந்தப் பெண் கதறிய கதறலை யோசித்துக்கூடப் பார்க்க இயலவில்லை. “அப்பா.. அம்மா.. காப்பாற்று..” என்ற பெயரிலே இந்தத் தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டதாம். இப்படி நாம் படிக்கும் ஒவ்வொரு கதையும் நம் ரத்தத்தைக் கொதிப்படையச் செய்கிறது.

மரத்தியம்மன்

பெரும்பாலும் பெண்கள் ஆண்களின் இறப்பினாலோ அல்லது அவர்கள் கைவிட்டதாலோ கிணற்றில் விழுந்து இறந்து பிறகு தெய்வமாகியிருக்கிறார்கள். மரத்தியம்மா என்கிற கதையில் தொட்டிய நாயக்கர் சமூகத்தினரைச் சாப்பிடவிடாமல் அந்த ஊர் இளைஞர்கள் துப்புவார்களாம். இப்படி தினம் அரங்கேறிய இந்த எச்சில் அவமானத்தால் மனம் வெறுத்து ஊரைவிட்டுப் போய்விட்ட அந்தச் சமூகத்தினர் ஒரு இளம் பெண்ணை மட்டும் தெரியாமல் விட்டுவிட்டுப் போய்விட்டனர். அவள் மனமுடைந்து மரத்தில் தூக்கு மாட்டிக்கொள்கிறாள். பின்னாளில் அவளே மரத்தியம்மன் ஆகிறாள்.

நீலியம்மன்

நீலியம்மாவின் கதை சற்றே வித்தியாசமானது. நீலி என்கிற மாந்திரீகம் தெரிந்த பெண்ணுக்கு கணவனைத் தவிர வேறு ஒருவருடன் உறவு இருக்கிறது. இதை அறிந்துகொண்ட கணவன் திடீரென வீட்டுக்கு வருகிறான். இருட்டில் யாரென்று அடையாளம் தெரியாமல் தன் கணவனையே கொன்றுவிடுகிறாள் அவள். பின்பு தானும் தீயில் விழுந்து இறந்து நீலியம்மன் ஆகிவிட்டாள்.

நாட்டார் தெய்வங்கள் பெரும்பாலானவற்றுக்கு ஆடு, கோழி அடித்துப் படையல் செய்கிறார்கள். பல தெய்வங்களுக்கு பணியாரப் பானைகளை வைப்பதும் தொன்றுதொட்டு நடந்துதான் வருகிறது.

கன்னி தெய்வம் என்கிற கட்டுரையில் அவ்வையார் விரதத்தைப் பற்றியும் அதையொட்டிய பெண்ணிய சுதந்திரத்தைப் பற்றியும் அலசுகிறார். இப்படி அகால மரணமடைந்த இந்த மனிதர்களையே தெய்வங்களாய் வழிபடுவதால் இவற்றை சிறு தெய்வங்கள் என்று நிறுவன சமயங்கள் கீழ்மைப்படுத்திக் காட்டுகின்றன, எனினும் எந்த வித ஆகம விதிகளும் இல்லாமல் இயல்பான பக்தியோடு படையலிட்டுப் பகிர்ந்துண்டு மக்களால் பரவலாக வழிபடப்படுபவை இந்த நாட்டார் தெய்வங்கள்தான் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.

சேகரிக்கப்பட்ட கதைகள் அனைத்தும் யாரால் யாரிடமிருந்து பெறப்பட்டவை, எந்த ஊரில் இந்த தெய்வங்கள் இருக்கின்றன என்று புத்தகத்தில் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

இந்த நூலை வாசிக்கும் அனைவருக்கும் அவரவர் குலதெய்வம் குறித்து அறிந்துகொள்ளும் ஆவலும் தேடலும் பிறக்கும் என்பதில் ஐயமில்லை. அறியாமையில் மூழ்கிக்கிடக்கும் எளிய அப்பாவி மக்களை, கல்வி ஒன்றைத்தவிர வேறெதுவும் காப்பாற்ற இயலாது. அந்தக் கல்வியாவது இவர்களின் வாழ்வின் வர்க்க பேதங்களை மாற்றுமா என்றால் தெரியாது, ஆனால் அப்படி ஒரு மாற்றம் நிகழும் என்று உறுதியாக நம்புவோம். அதற்கு இந்த தெய்வங்களே சாட்சியாக இருக்கட்டும்.

நூல் : தெய்வமே சாட்சி
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
வகைமை : சிறுகதைகள் / வரலாறு
விலை : ரூ.160
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

  • இந்துமதி கணேஷ்

Comments (7)


Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
June 9, 2023

சபாஷ்.. அருமையான நூல் அறிமுகம்.

Kmkarthikn
Kmkarthikn
June 9, 2023

அருமை, சிறப்போ சிறப்பு

உமா
உமா
June 9, 2023

சிறப்பான அறிமுகம் 🎉

தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செல்வன்
June 9, 2023

நல்ல அறிமுகம். மகிழ்ச்சி

Selvaraj

அருமை. படிக்க வேண்டும் ஆவல் ஏற்படுகிறது.

ம. செ. மோகன் ராஜா
ம. செ. மோகன் ராஜா
June 9, 2023

இந்த நூலை வாசிக்கும் அனைவருக்கும் அவரவர் குலதெய்வம் குறித்து அறிந்துகொள்ளும் ஆவலும் தேடலும் பிறக்கும் என்பதில் ஐயமில்லை/// இந்த அறிமுக கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் இந்த நூலை வாசிக்கும் ஆவலும், தேடலும் பிறக்கும் என்பதில் அய்யமில்லை.

சுதர்சனம்.E.S
சுதர்சனம்.E.S
June 15, 2023

அருமையான விமர்சனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *