துள்ளிக் குதிக்கும் ஜீன்கள்

மக்காச்சோளக் கதிரில் இருக்கும் முத்துக்கள் சில சமயம் இயல்பான மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட புள்ளிகள், சிவப்பு, நீலம் என வேறு வண்ணங்களில் காணப்படுவது உண்டு. இது எதனால் நிகழ்கிறது என்பதை, பார்பரா மெக்ளின்டோக் கண்டறிந்தார்.

பார்பரா மெக்ளின்டோக் ஜூன் 16, 1902-ல் அமெரிக்காவில் பிறந்தவர். அவரையும் சேர்த்து மொத்தம் நான்கு குழந்தைகள். அவர்களை வளர்க்கப் போதுமான பொருளாதார வசதி இல்லாதாதால், மூன்று வயதிலிருந்தே  உறவினர் வீட்டில் வளர்ந்தவர். பெண் என்ற ஒரே காரணத்திற்காக, கார்னெல் பல்கலைக்கழகம் அவருக்குப் பேராசிரியர் பதவியைத் தர மறுத்தது.

செல்லில் காணப்படும் குரோமோசோம் மாறுபட்டால் தாவரத்தின் வெளிப் பகுதிகள் மாறுபாடு அடையும். இதைப்பற்றிப் படிக்கும் பிரிவுக்கு சைட்டோ ஜெனட்டிக்ஸ் என்று பெயர். சைட்டோ என்றால் செல். ஜெனட்டிக்ஸ் என்றால் மரபியல். பார்பராவின் ஆய்வு வழிகாட்டிக்கே (Guide) இது முற்றிலும் புதிய துறையாக இருந்தது.

உயிர்கள் அனைத்தும் செல்களால் ஆனவை. செல்களை நுண்ணோக்கியில் பார்த்தால் அவற்றுக்குள் இருக்கும் நிறைய நுண் பகுதிகள் தெரியும். அவற்றில் முதன்மையானது உட்கரு. இது மேம்பாடு அடையாத உயிரிகளான பாக்டீரியா போன்றவற்றில் மேலுறை இல்லாமல் காணப்படும். அதனை நியூக்ளியாய்டு என்பார்கள். நம் செல்களில் இருப்பது நியூக்ளியஸ். இதற்குள் குல்பி ஐஸ் போன்று இருப்பவை குரோமோசோம்கள். அதற்குள் DNA நன்றாக சுருட்டி சுற்றப்பட்டு இருக்கும்.

பார்பரா முதலில் மக்காச்சோளத்தில் காணப்படும் குரோமோசோம்களை ஆராய்ந்தார். அவற்றை நேரடியாக நுண்ணோக்கியில் வைத்துப் பார்க்க முடியாது. இதற்காக குரோமோசோம்களை முதலில் சாயமேற்றும் கார்மைன் முறையைக் கண்டறிந்தார். மொத்தம் பத்து ஜோடி குரோமோசோம்கள் மக்காச்சோள உட்கருவில் இருந்தன.

அவற்றில் ஒன்பதாவது ஜோடி குரோமோசோம்கள் விநோதமாகச் செயல்பட்டன. இரண்டு பகுதிகள் அதற்குக் காரணமாக இருந்தன. ஒன்று பக்கத்தில் உள்ள ஜீனை ஒதுக்கி வைத்து அதன் செயல்பாட்டைத் தடுத்தது. இன்னொன்று அந்த ஜீனை செயல்பட வைத்தது. இவற்றுக்கு முறையே Ds- Dissociation, Ac-Activator என்று பெயரிட்டார்.

DNAவின் குறிப்பிட்ட ஒரு பகுதி ஒரு குறிப்பிட்ட செயலுக்குக் காரணமாக இருந்தால் அதனை ஜீன் என்று சொல்வார்கள். மேம்பாடு அடைந்த உயிரிகளில் இப்படி வேலை செய்யும் பகுதியும் (Exons), சும்மா இருக்கும் பகுதியும் (Introns) ஒன்றுகொன்று மாறி மாறி அமைந்திருக்கும். செயல்படும்போது எக்சான்கள் ஒன்றாக இணைந்துவிடும். DNAவில் உள்ள நைட்ரஜன் கார வரிசையில் (A,T,G,C) ஏதேனும் மாறுதல்களைக் கட்டாயப்படுத்தி மேற்கொண்டால் அவற்றின் வரிசை அமைப்பு குலையும். இவை கதிர்வீச்சு போன்ற புறக்காரணிகளால் நிகழ்வதுண்டு. இதற்கு திடீர் மாற்றம் (Mutation) என்று பெயர்.

செல்லுக்குள் இருக்கும் DNA-வின் வரிசை மாறினால், வெளிப்புறத் தோற்றத்தில் மாறுதல்கள் ஏற்படும். இத்தகைய மாறுபாடுகள் இயற்கையாகவே நடக்கின்றன. அதற்குக் காரணம் ஓரிடத்தில் இல்லாமல் தாவிக் குதிக்கும் ஜீன்கள். இதன் காரணமாகவே ஆரம்பத்தில் சொன்ன அரிதான சில மக்காச்சோள முத்துக்கள்  விதவிதமான வண்ணங்களில் காணப்படுகின்றன.

ஆரம்பத்தில் இதனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் என்று அழைத்தனர். பின்னர் நகரும் மரபியல் கூறுகள், ட்ரான்ஸ்போசான்கள், குதிக்கும் ஜீன்கள் போன்ற பெயர்களை வழங்கினார்கள்.

மரபியலின் தந்தை என்று அழைக்கப்படும் கிரிஹர் மெண்டலின் கண்டுபிடிப்புகள் 1900இல் மறு ஆய்வு செய்யப்பட்ட பின்பே  உலகுக்குத் தெரியவந்தன. சென்ற வருடம் அவர் பிறந்து இருநூறாவது ஆண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடினார்கள். மரபியல் பண்புகள் ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் செயல்பாட்டை மெண்டல் இரண்டு விதிகளின் மூலமாக, பரிசோதனைகள் செய்து வெளியிட்டார்.

மெண்டலின் ஆய்வுகள் உலகுக்குத் தெரியவந்து இருபது ஆண்டுகளுக்குப் பின்பு அதன் நீட்சியாக பார்பராவின் ஆய்வுகள் இருந்தன என்று நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. குதிக்கும் ஜீன்கள் மூலம் மாறுபாடுகள் ஒரு தலைமுறையில் இருந்து மற்ற தலைமுறைக்குக் கடத்தப்படும் என்பது முற்றிலும் புதியது. இன்னும் சொல்லப்போனால், இது மெண்டல் சொன்ன விதிகளுக்கும் அதன் நீட்சியாக ஏற்கனவே மேற்கொள்ளப்ட்ட ஆய்வுகளின் கட்டங்களுக்குள்ளும் பொருந்தி வராத ஒன்று. இதன் காரணமாகவே இவருடைய ஆய்வுகளும் 1940களில் பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. ஏனெனில் அப்போது DNAவின் ஈரிழை வடிவமைப்போ, மரபு சங்கேதக் குறியீடுகளோ கண்டறியப்பட்டிருக்கவில்லை. 

DNA அமைப்பு கண்டறியப்பட்ட ஆண்டான 1953லிருந்து, இத்தகைய நிராகரிப்பின் காரணமாக பார்பரா தன் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டார். DNA-வின் குறிப்பிட்ட பகுதிகள் எவ்வாறு மின்சார சுவிச்சைப் போன்று செயல்படுகின்றன என்பதை ஒபரான் மூலமாக ஜேக்கப் மோனாட் கண்டறியும்போது பார்பரா ஆய்வின் தனித்துவம் உலகுக்குத் தெரியவந்தது. குதிக்கும் ஜீன்களைக் கண்டறிந்தமைக்காக முப்பது வருடங்கள் கழித்து 1983இல் பார்பராவுக்கு செயலியல் மற்றும் மருத்துவத் துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதுவரை இத்துறையில் தனியொரு பெண்ணாக நோபல் பரிசு பெற்றவர் பார்பரா மெக்ளின்டோக் மட்டுமே ஆவார்.

இத்தகைய குதிக்கும் ஜீன்கள் நுண்ணுயிரிகள், பூச்சிகள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் நமக்குள்ளும் இருக்கின்றன. 1960களில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துக்கு எதிராக இயங்கும் தன்மையை பாக்டீரியாக்கள் இத்தகைய குதிக்கும் ஜீன்கள் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தி அழிந்து போகாமல் வம்சத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன என்று கண்டறிந்தனர்.

டார்வின் சொன்ன பரிணாமக் கோட்பாட்டில் முக்கியமானது இத்தகைய வேறுபாடுகளே ஆகும். இவை பரிணாமத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஓம்புயிரியில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்த ட்ரான்ஸ்போசான்களைத்தான் ஒட்டுண்ணிகள் முகமூடியாகப் பயன்படுத்துகின்றன.

ஒரு ஜீன் ஒரு நொதிக் கோட்பாட்டை நிறுவிய பீடில், டாட்டம் ஆய்வுகளில் பார்பரா முக்கியப் பங்கு வகித்துள்ளார். அவர்களுக்கு 1958இலேயே நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மக்காசோளத்தின் முதல் மரபியல் வரைபடம், குரோமோசோம் நுனிப் பகுதியின் செயல்பாடுகள் என்று பார்பரா ஏராளமாகக் கண்டறிந்துள்ளார். இத்தகைய குதிக்கும் ஜீன்கள், பாக்டீரியாவை தாக்கும் வைரஸ்களிலும் புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ்களிலும் காணப்படுகின்றன. கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமல் இத்தகைய அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பார்பரா 1992, செப்டம்பர் 2இல் தனது 90ஆவது வயதில் நியூயார்க்கில் இயற்கை எய்தினார்.

அவர் பிறந்த இந்த ஜூன் மாதத்தில் இந்தக் கட்டுரையின் மூலம் அவரை நினைவு கூர்வோம்.

  • ஈ கோலை

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *