மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 5

6. மகாபாரதத் திருமணங்களில் ‘சமூக ஒப்பந்தம்’ இருந்ததா?

இன்றைய சட்டங்களின்படி வேறொரு தம்பதிக்குப் பிறந்த குழந்தையை ஒருவர் தத்து எடுத்துக்கொள்ள முடியுமே தவிர, தன் மனைவிக்கு வேறொரு ஆண்மூலம் தனது சம்மதத்துடன் பிறந்த குழந்தையைத் தத்து எடுக்க முடியாது.

மகாபாரதக் காலத்தில் நடந்ததையே பாருங்களேன்..! கர்ணன் பாண்டுவின் மகனும் அல்ல; பாண்டுவின் வாரிசும் அல்ல; அதனால் ராஜ்ஜியத்திற்கு உரிமை கோர அருகதை உள்ளவனும் அல்ல. அதேபோல் அவன் மகனுக்கும் முடிசூட்டிக்கொள்ள உரிமையில்லை.

மகாபாரதக் காலத்தில் நடைமுறையில் இருந்த இந்தச் சட்டங்களில் ஜாதி அல்லது குலம் எவ்வளவு பெரிய பங்கு வகித்திருக்கிறது என்பதை, கர்ணனும் விருஷகேதுவும் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது, தாய்வழியில் கர்ணன் க்ஷத்திரியன் என்றாலும் பாண்டுவின் புதல்வன் என்ற அங்கீகாரம் அவனுக்குத் தரப்படவில்லை. கர்ணனின் புதல்வன் என்றாலும் தாய் சூத்திரக் குலத்தில் வந்ததால் விருஷகேதுவுக்கும் பீஷ்மர் அங்கீகாரம் தரவில்லை.

இது சரி என்றால், விசித்திர வீரியன் மீனவப் பெண்ணின் புதல்வன் ஆயிற்றே..! அவனுக்கு எப்படி அரச பதவி கிடைத்தது  என்ற பெரிய கேள்வி வருகிறது. அதை பீஷ்மரே அங்கீகரித்தும் இருக்கிறார்.

பீஷ்மரின் இயற்பெயர் தேவவிரதன். அவர் கங்காதேவிக்குப் பிறந்த எட்டாவது மகன். பீஷ்மரின் தந்தையின் பெயர் சந்தனு. சந்தனு அவள் கங்கை என்று அறியாமல் கங்காதேவி மேல் காதல் கொள்கிறான். கங்காதேவியும் திருமணத்திற்குச் சம்மதித்ததால் அவள் சந்தனுவின் முதல் மனைவியானாள்.

ஆனால் திருமணத்தின்போது கங்காதேவி,  சந்தனு மகாராஜனுக்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறாள். தன்னை ‘யார்’ என்று சந்தனு மகாராஜன் ஒருபோதும் கேட்கக்கூடாது என்பது அதில் முதல் நிபந்தனை.  தான் என்ன செய்தாலும் ‘ஏன் செய்கிறாய்’ என்று கேட்கக் கூடாது என்பது இரண்டாவது நிபந்தனை.

மோகத் தீயில் கொதித்துக்கொண்டிருந்த சந்தனு மகாராஜன், அந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு கங்காதேவியை, அவள் கங்காதேவி என்று அறியாமலேயே திருமணம் செய்துகொண்டான். சந்தனு மகாராஜனுக்கும் கங்கா தேவிக்கும் எட்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.

முதல் குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தையை கங்காதேவி கங்கையில் கொண்டுபோய் வீசி மூழ்கடித்துக் கொன்றுவிட்டாள். சந்தனு மகாராஜனால் அதுபற்றி எதுவும் கங்காதேவியிடம் கேட்கமுடியவில்லை. அமைதியாக இருந்துவிட்டான். அதேபோல தொடர்ந்து பிறந்த இதர ஆறு குழந்தைகளையும் கங்காதேவி கங்கையில் வீசிக் கொன்றுவிட்டாள். சந்தனு மகாராஜனால் எதுவும் கேட்க முடியவில்லை.

கடைசியாக எட்டாவது குழந்தை பிறந்த பின்பு  அதையும் கொல்வதற்கு கங்காதேவி குழந்தையை எடுத்துக்கொண்டு கங்கைக் கரைக்குக் கிளம்பியபோது, சந்தனு மகாராஜனால் முன்போல அமைதியாக இருக்க முடியவில்லை.

‘நீ யார்? ஏன் குழந்தைகளைக் கொல்கிறாய்?’ என்று சந்தனு  மகாராஜன்,  நிபந்தனையை மீறி கங்காதேவியைக் கேட்டுவிட்டான். கங்காதேவி சொன்னாள், ‘நான்தான் அமிர்தமாய் ஓடும்  கங்கை; நான் ஒரு சாபத்தால் மானுட வடிவத்தில் இருக்கிறேன்; இதுவரை நான் கொன்ற என் ஏழு மகன்களும் அஷ்ட வசுக்கள்; வசிட்ட முனிவரின் பசுவை அவர்கள் கவர்ந்துபோனதால் அஷ்ட வசுக்களை பூமியில் மனிதர்களாகப் பிறந்து வாடும்படி வசிட்ட முனிவர் சாபமிட்டார். (மனிதனாகப் பிறப்பதே இந்த ரிஷிகளுக்கு ஒரு தண்டனையாகத் தெரிவது வேடிக்கையான விஷயம்).

பயந்துபோன அஷ்டவசுக்கள் தங்களால் மனிதர்களாகப் பிறந்து வாடமுடியாது என்றும் சாபத்தைத் திரும்பப் பெறும்படியும் வசிட்ட முனிவரைக் கெஞ்சினார்கள். மனமிரங்கிய வசிட்ட முனிவர், ‘எட்டு அஷ்டவசுக்களாகிய உங்களில் ஏழு பேர் மட்டும் பிறந்ததும் இறந்து சாப விமோசனம் பெற்றுவிடுவீர்கள்; ஆனால் பசுவைக் கவர்ந்துபோன எட்டாவது அஷ்டவசுவான பிரபாஸ் மட்டும் மனிதனாகப் பிறந்து நீண்ட காலம் வாழ்ந்த பின்புதான் மரணமடைய வேண்டும்’ என்று சாபத்தை மாற்றினார். அஷ்டவசுக்கள் என்னிடம் வந்து தன்னை அவர்களுடைய தாயாக இருக்கும்படியும் அதில் தங்களில் ஏழு பேரைப் பிறந்தவுடன் கங்கையில் வீசிக் கொன்று சாப விமோசனம் அளிக்கும்படியும் எட்டாவது அஷ்டவசுவை மட்டும் கொல்லாமல் வளர்த்து ஆளாக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.

அதன்படி, நான் எனக்குப் பிறந்த ஏழு அஷ்டவசுக்களைக் கொன்று அவர்களுக்கு சாபவிமோசனம் கொடுத்தேன். எட்டாவது மகனாகப் பிறந்த இந்த அஷ்டவசுவைக் கொல்லமாட்டேன். நானே வளர்த்து மாபெரும் ஆளுமையாக்கி, தக்க நேரத்தில் அவனை உன்னிடம் ஒப்படைப்பேன்’ என்று சொல்லிவிட்டு மகனை அழைத்துக்கொண்டு போய்விட்டாள்.

கங்காதேவிக்கும் சந்தனு மகாராஜனுக்கும் இடையே நடந்த திருமணத்திலும்  ஒரு சட்டப் பிரச்சனை இருக்கிறது. பாரதக் கலாச்சாரத்தின்படி, திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் புனிதமான செயல் என்பார்களே.. பாரதக் கலாச்சாரத் திருமணத்தை மேலை நாட்டினரைப் போல ‘சமூக ஒப்பந்தம்’ (Social Contract) என்று ஒப்புக்கொள்வது இல்லை.  துல்லியமாகச் சொல்லப்போனால் பெண்களுக்கு ஆன்மா என்று ஒன்று இருப்பதையே மனு சாத்திரம் ஒப்புக்கொள்ளவில்லை.

அதனால்தான் கணவன் இறந்தபின்பு மனைவியைக் கணவனின் சிதையில் அமர வைத்து அவனுடனே தீயில் கொளுத்திப் பஸ்பமாக்கி, சதிமாதா என்று கோயில் கட்டி வணங்கினார்கள்.  அதனால் ‘சமூக ஒப்பந்தம்’ என்ற கருத்தியல்  பாரதீயக் கலாச்சாரத்திற்கு எதிரானது. 

ஆனால் கங்காதேவி விஷயத்தில் கங்காதேவி விதித்த நிபந்தனைகளை சந்தனு மகாராஜா ஏற்றுக்கொண்ட பின்புதான் கங்காதேவி திருமணத்திற்கே உடன்படுகிறாள். தான் யாரென்பதை வெளிக்காட்டாமலேயே சந்தனு மகாராஜனுடன் குடும்பம் நடத்துகிறாள். ஏழு குழந்தைகளைக் கங்கையில் வீசிக் கொல்கிறாள். அதுபற்றி சந்தனு மகாராஜன் கேள்வி கேட்டதும் தன்னை கங்காதேவி என்று வெளிப்படுத்திவிட்டுப் பிரிந்து போய்விடுகிறாள்.

இது மகாபாரதத்தில் வேறு எந்தப் பெண் பாத்திரத்திற்கும் கிடைக்காத சுதந்திரம்.  ‘சமூக ஒப்பந்தம்’ என்ற கருத்தியலில் விவாகரத்து என்ற உரிமை ரகசியமாக உள்ளடங்கியுள்ளது என்பதைக் கவனிக்கத் தவறிவிடக்கூடாது.

மகாபாரதத்தில் உள்ள விதிவிலக்கான நிகழ்ச்சி இது.  இதுதான் அப்போதைய சட்டவிதி என்று சொல்லமுடியாது. இது தாளமுடியாத மோகத்தின் காரணமாக அப்சரஸ் போன்ற ஒரு அழகியின் நிபந்தனைக்கெல்லாம் ஒரு மன்னன் கட்டுப்பட்டு நடந்ததைக் காட்டும் வித்தியாசமான நிகழ்ச்சி.

இந்த தேவவிரதன் செய்த மகத்தான சபதத்தால் மகாபாரத வாரிசுரிமை மீனவப் பெண்ணின் மகனுக்கு போனது.

(அதை வரும் சனிக்கிழமை பார்க்கலாம்)

  • சி.ஞானபாரதி

Comment (1)


Anita Srikanth
Anita Srikanth
July 19, 2023

மகாபாரத காலத்தில பெண்கள் கொஞ்சம் சுதந்திரமாத்தான் இருந்திருக்காங்க போல.
சமூக ஒப்பந்தம் எல்லாம் கதைல பார்க்கிறேன்…

நல்லா இருக்கு ஐயா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *