அணுகுண்டின் தந்தையும் பகவத்கீதையும்
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது இரண்டு அணுகுண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டன. 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டன. 60க்கும் மேற்பட்ட நகரங்கள் ஒரு நொடியில் பஸ்பமாக்கப்பட்டு 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களும் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
லிட்டில் பாய் (Little Boy) மற்றும் ஃபேட் மேன் (Fat Man) என்று பெயரிடப்பட்ட அந்த அணுகுண்டுகள்தான் உலக வரலாற்றில், மனித வரலாற்றில் முதல்முறையாக, போரில் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டுகள் (Atomic Bombs). இந்த அணுகுண்டுகளைத் தயாரிக்க, அமெரிக்க அரசால் உருவாக்கப்பட்டிருந்த மன்ஹாட்டன் புராஜெக்ட் (Manhattan Project) குழுவினர்தான் இதைச் செயல்படுத்தினார்கள்.
மன்ஹாட்டன் புராஜெக்டின் ஒரு அங்கமாக நியூ மெக்ஸிகோவில் உள்ள லாஸ் அலமாஸ் என்ற இடத்தில் மிக ரகசியமாக உருவாக்கப்பட்டிருந்த ஆய்வுக்கூடத்தில்தான் இந்த அணுகுண்டுகள் உருவாக்கப்பட்டன. அங்குதான் உலகத்தின் முதல் அணுகுண்டு பரிசோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அந்த அணுகுண்டுகளை உருவாக்கும் ஆய்வின் தலைமை சயிண்டிஸ்டாக – மாஸ்டர் மைண்டாகச் செயல்பட்டவர்தான் ஓப்பன்ஹெய்மர் என்கிற இயற்பியல் அறிவியலாளன். குவான்டம் பிஸிக்ஸ் மீது ஓப்பன்ஹெய்மருக்கு இருந்த தீவிரமான காதல்தான் அணுகுண்டின் தந்தை என்ற நிலையை நோக்கி அவரை இழுத்துச் சென்றது.
1945 ஜூலை 16ஆம் நாள், நியூ மெக்ஸிகோ நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு, ட்ரினிட்டி (Trinity) என்று ஓப்பன்ஹெய்மரால் பெயர் சூட்டப்பட்டிருந்த அந்த உலகத்தின் முதல் அணுகுண்டு பரிசோதனை நடத்தப்பட்டு வெற்றி பெறுகிறது. அந்த வெற்றிதான் Father of Atomic Bomb என்ற வரலாற்றுப் பெயரை ஓப்பன்ஹெய்மருக்குத் தருகிறது.
அணுகுண்டு பரிசோதனை வெற்றியடைந்த பின் அமெரிக்கா நீண்ட காலம் எல்லாம் காத்திருக்கவில்லை. வெறும் 20 நாட்களில் அமெரிக்கா ஜப்பான்மீது அணுகுண்டுகளை வீசுகிறது. “இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் கை ஓங்கி இருக்கிறது. ஜெர்மனியில் அணுகுண்டு ஆராய்ச்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு அது சாத்தியமாகும் எனில், உலகம் பேரழிவைச் சந்திக்கும். அதைப்போல ரஷ்யாவும் இந்த அணுகுண்டு ஆராய்ச்சியில் மிகவும் மும்முரமாக இருப்பதாக அறிகிறோம். உலகத்தின் பேரழிவைத் தடுக்க, இதை நாம் செய்தாக வேண்டியிருக்கிறது” என்று சொல்லித்தான் ஓப்பன்ஹெய்மர் இதைச் செய்யச் சம்மதிக்க வைக்கிறார்கள்.
ஏனெனில், ஓப்பன்ஹெய்மர் கம்யூனிஸ ஆதரவாளராக இருக்கிறார். கூடவே, ‘தியரட்டிக்கல்தான் என் விருப்பம்; எக்ஸிகியூஸன் அல்ல’ என்றும் கூறுகிறார். ஆனால் ஜெர்மனியையும் ரஷ்யாவையும் ஹிட்லரையும் காரணம் காட்டித்தான் லாஸ் அலமாஸில் அந்த ரகசிய ஆய்வுக்கூடத்தை, ஓப்பன்ஹெய்மரை வைத்து உருவாக்குகிறார்கள். இதுதான் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஓப்பன்ஹெய்மர் படத்தின் கதை சாராம்சம்.
இது தவிர ஹெய்மரின் காதல்கள், அவரின் கம்யூனிஸ ஆதரவு மற்றும் அணு ஆயுதங்கள் (Nuclear Weapons) குறித்த அவரது நிலைப்பாட்டால் அவருக்கு ஏற்பட்ட அரசாங்க ரீதியான பிரச்சினைகள், நெருக்கடிகள், சக விஞ்ஞானிகளின் பொறாமைகள் என, கொஞ்சம் எமோஷனல் ஏரியாவும் உண்டு.
ஓப்பன் ஹெய்மருக்கு, அணுகுண்டு சோதனை வெற்றிபெற்று விடும்; உலகத்தின் முதல் அணுகுண்டு லாஸ் அலமாஸில் உருவாக்கப்பட்டு விடும் என்று, தன் ஆய்வின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வருகிறது. அப்போது அதன் கூடவே அவருக்கு மிகப்பெரிய அவநம்பிக்கையும் சந்தேகமும் எழுகிறது. ஏனென்றால், இந்த அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக முடிந்தால் உலகம் இதை வைத்து எவ்வளவு மோசமான கொடுரங்களைச் செய்யும், எவ்வளவு மக்கள் கொல்லப்படுவார்கள், இதைக் கண்டிப்பாக நாம் செய்தே ஆக வேண்டுமா என்றெல்லாம் ஓப்பன்ஹெய்மர் குழம்புகிறார்.
அங்கேதான் ஓப்பன் ஹெய்மரின் தோளில் தட்டி, ‘அதெல்லாம் தப்பில்லை, கண்டிப்பாக இதை நீ செய்ய வேண்டும்’ என்று நம்ம ஊரிலிருந்து ஒருவர் ஆறுதல் கூறி, ஆதரவுக் கரம் நீட்டுகிறார். அவர் வேறு யாருமல்ல. ‘தி கிரேட் லார்ட் கிருஷ்ணா அலைஸ் கண்ணன்’தான். ஆம். ஓப்பன்ஹெய்மர் பகவத் கீதாவை வாசித்தபோது, அதில் அர்ஜூனன், போரில் தன் சொந்தபந்தங்களை நானே கொல்வதா என தவித்துக் கலங்கி நின்றபோது, கண்ணன் கீதாசாரத்தைக் கூறுகிறார்.
அதாவது, “மரணம் என்பது நான்தான். மக்கள், மரம், செடி, கொடி எல்லாம் நான்தான். கொல்பவனாகிய நீயும் நான்தான். கொல்லப்படுபவர்களாகிய மக்களும் நான்தான். கொல்லச் சொல்பவனும் நான்தான். நீ எதையும் செய்யவில்லை. நான்தான் அனைத்தையும் செய்கிறேன். நீ இதைச் செய்வதனால் போற்றப்பட்டாலும் தூற்றப்பட்டாலும் அது என்னையே சேரும்; உன்னைச் சேராது. நீ இதைச் செய்யவில்லை என்றாலும் இன்னொருவன் செய்யத்தான் போகிறான். எனவே, உன் கடமையை நீ செய்; பலனைப் பற்றி நீ யோசிக்காதே” என்கிறான்.
அதில் தெளிவு?! பெற்ற அர்ஜூனன் போல, ஓப்பன்ஹெய்மரும் தெளிவு பெற்று அணுகுண்டைத் தயாரிக்கிறார். கிறிஸ்டோபர் நோலன் இந்த உரையாடலையே படத்தின் ஒரு காட்சியாகவும் வைத்திருப்பார். கண்ணனாக அப்போதைய அமெரிக்க பிரசிடென்ட் ரூஸ்வெல்ட்டும் அர்ஜூனனாக ஓப்பன்ஹெய்மரும் பேசிக்கொள்வதுபோல அச்சு அசலாக அந்த உரையாடலைக் காட்சிப்படுத்தியிருப்பார் நோலன். ஒரே ஒரு வித்தியாசம், பாரதப் போரில் மக்களைக் கொல்வதற்கு முன் நடக்கும் உரையாடல், இங்கே ஜப்பான்மீது குண்டு வீசிக் கொன்றபின் நடக்கும்.
இப்படியாக அவர்கள் இயற்பியல், அறிவியல், குவான்டம் பிஸிக்ஸ் என்று அறிவியல் சார்ந்த படங்கள், அறிவியலாளர்கள் சார்ந்த படங்கள், வரலாற்றுப் படங்கள் என எடுத்துக்கொண்டிருக்க, நாம் கேரளக் கதைகள் கஸ்மீர்க் கதைகள் என்று புளுகிக் கொண்டிருக்கிறோம்.
கில்லியன் மர்பி, ஓப்பன்ஹெய்மராகவே வாழ்ந்திருக்கிறார். என்ன ஒரு ஸ்டைல், ஆட்டிட்யூட்! கூடவே ராபர்ட் டௌனி ஜுனியர், அட நம்ம அயர்ன்மேனா இது ஆச்சர்யப்பட வைக்கும் தோற்றத்தில் கேரக்டரில் வந்து அசத்துகிறார். மார்ஷியன் மேட் டேமென் அட்டகாசமான கதாபாத்திரத்தில் வருகிறார். மொத்தத்தில், ஓப்பன்ஹெய்மர் படமாகவும் மிகச்சிறப்பான அனுபவமாக இருக்கும்.
- முருகன் மந்திரம்

Comments (0)