கதை பேசும் ஓவியம்
கவிதை
வரைபடம் ஒன்றைக் கரம் புகுத்தி
படிக்கச் சொல்கிறான்
என் அப்புக்குட்டி
ஏழுமலை தாண்டி
இரண்டு மலைகளுக்கிடையே
எப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கின்றன
வெண்நிலவும் சிவப்புச் சூரியனும்
ஓடி வருகிறது
மலையடிவாரம் கடந்த
நதியொன்று சலசலப்புடன்
பாடும் பறவை இரண்டைத்
தாங்கியே நிற்கிறது
அசை ஒலியெழுப்பியாய்
படபடத்த இலை மரப்பச்சை
நதி மணலில் கால்த் தடம் பதித்து
அருகில் குடில் சென்று
திண்ணையில் குரைக்கின்ற
நாயின் சிறு பாதம் சுற்றுகிறது
பின், வானம் பார்த்து
ஊர்க்குருவிகள்
எங்கே போகின்றன கூட்டமாய்?
எனக் கேட்டவாறு
நண்பருடன் மிகை நயம் பேசும்போதே
பெயரற்றுத் தொடரும் என்றே
வரைந்துவிடுகிறான் அடிக்குறிப்பை
அப்படியென்றால் பேசியதெல்லாம்
கோடுகளும் நிறங்களும்
கடந்து வந்த எண்ணமும்
கற்பனையின் கதைகளுமா?
பேசும் படம்
அடுத்து வண்ணமேற்றிக்கொண்டிருக்கிறது
ஓவியத்தின் கதைக்காக
- சிவகாமி சரவணன்

Comments (0)