காட்சி 12

காலம் : ஓம்கார் ஆசிரமத்தில் சங்கர கிருஷ்ணன் வந்த மூன்றாம் நாள்
பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன்.

ஓம்கார் சுவாமிகள் : தம்பி, நேற்று மாலை மலை ஏறிப்போய் வந்தீர்கள் போல.. எப்படி இருந்தது..?

சங்கர கிருஷ்ணன்: அருமையான அனுபவமாக இருந்தது சுவாமி. நீங்கள் கொஞ்சகாலம் முன்பு வரை மலை மேலேதான் இருந்தீர்களாமே..?

ஓம்கார் சுவாமிகள் : ஆமாம். கீழே என்னை அவதாரம் போல மக்கள் நினைக்க ஆரம்பித்துப் பல இடங்களில் இருந்தெல்லாம் கூட்டமாக வந்தார்கள். இங்கே வந்து சில ஆண்டுகளில் இந்த ஆசிரமத்திற்குப் பல காரணங்களாக பக்தர்கள் கூட்டம் கூடிக்கொண்டே போனது. நான் தொந்தரவுக்கு உள்ளானேன். தனிமையை விரும்பிய நான் கூட்டத்தின் போதைக்குள் சிக்கிவிட்டதாக உணர்ந்தேன். ஆகவே மலை மேலே போய் இருந்துகொண்டேன். அந்தக் காலத்தில்தான் காந்தியடிகள் வந்திருந்தார். முதலில் அவரது பிரதம சீடர் குமரப்பா மலை ஏறி வந்து என்னைப் பார்த்தார். அவர் சொல்லி, காந்திஜி என்னைப் பார்க்க விரும்பினார். அவர் என்னைப் பார்க்க மேலேறி வருவது சரியாக இருக்காது என்று கருதி நான் கீழிறங்கி வந்து பார்த்தேன்.

சங்கர கிருஷ்ணன்: ஆஹா.. இங்கே காந்தியடிகள் வந்திருக்கிறாரா..? நேற்று பாரதியின் இறுதிச் சடங்கை செய்ய உங்களை அழைத்தார்கள் என்று சொன்னீர்கள். இன்று காந்தியடிகள் இங்கே வந்திருக்கிறார் என்கிறீர்கள். ஒரு பக்கம் வாஞ்சிநாதன் கதை போய்க்கொண்டிருக்கிறது. நான் எதை முதலில் கேட்கட்டும் சுவாமி..?

ஓம்கார் சுவாமிகள் : (சிரித்துக் கொண்டே) எதைக் கேட்டால் என்ன..? பேச்சின் போக்கில் போவோம்.. தானாக எல்லாம் வரும்.

சங்கர கிருஷ்ணன்: ஆசிரமத்தில் உங்களிடம் சிலர் வைத்தியத்துக்கு வருவதைப் பார்க்க முடிந்தது.. அது எப்படி சுவாமி..? வைத்தியம் தெரியுமா..?

ஓம்கார் சுவாமிகள் : ஆசிரமம் மேலே போனதற்கு அதுவும் ஒரு காரணம். எனக்கு சித்த வைத்தியத்தில் ஏதோ கொஞ்சம் தெரியும். இங்கே இருக்கும் குடிகளுக்கும் வருகிற பக்தர்களுக்கு அவசரக் காலத்திலும் மருத்துவ யோசனைகள் சொல்லி வந்திருக்கிறேன். (சிரிக்கிறார்) அவை அதிசயமாகப் பலிக்கத் தொடங்கின தம்பி. மக்கள் ரொம்பவும் நம்பிவிட்டார்கள். (மீண்டும் சிரிக்கிறார்) சாமியாரின் மருத்துவம் வேறு பலனைத் தருவதற்கு முன்பு ஆசிரமத்தை மேலே கொண்டுபோவதுதான் சரியென்று போனேன். என்னைக் கேட்காமல் யாரும் வரக்கூடாது என்று திட்டம் சொல்லி இருந்தேன். நல்ல மக்கள்..! என் பேச்சை மீறவில்லை.
அவர்களும் எனக்கு உத்தரவு போடுவார்கள்; நானும் சிலவற்றைக் கேட்டுக்கொள்வேன். அப்படி ஒரு உத்தரவு, ‘சாமியாருக்கு வயதாகி விட்டது.. மேலே தங்கக்கூடாது. கீழே தங்கள் பார்வையில் இருக்க வேண்டும்’ என்று.

சங்கர கிருஷ்ணன்: நல்லது சுவாமிஜி, பாண்டிச்சேரியில் நடந்த மீதிக் கதையைச் சொல்லுங்கள்.

ஓம்கார் சுவாமிகள் : மீதிக்கதை வேகம் நிறைந்தது. வாஞ்சிநாதனை தர்ம இல்லம் தயார்படுத்தியது. தினமும் காலை வேளையில் வ.வே.சு. அய்யரின் போதனைகள்; மாலையில் கிளர்ச்சியூட்டும் உடற்பயிற்சிகள்; சிலம்ப வித்தைகள். அதன் மூலம் வீர சாகச உணர்வுகளால் மனத்தில் போதையூட்டுவது; பாரத இராமாயண யுத்தக் கதைகள் மூலமாக வன்முறையை மிகச் சாதாரணமானதாக இரத்தத்தில் ஏற்றுவது; தனிநபர்க் கொலைகளை வீரம் என்று நம்பச் செய்வது.. இப்படி நெஞ்சில் வேண்டிய உரம் ஏறின பிறகு வாஞ்சிநாதன் சில இயக்கப் பிரசாரப் பிரசுரங்களோடு செங்கோட்டை வந்து சேர்ந்தார். அவர் தனது இறுதியான வேலையைச் செய்வதற்கான பிரயத்தனங்களைச் செய்தார். மீண்டும் அவர்கள் ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டிலும் புனலூரிலும் கூடியதாகத் தெரிகிறது.

சங்கர கிருஷ்ணன்: (சிரித்துவிடுகிறார்)

ஓம்கார் சுவாமிகள் : ஏன் சிரிப்பு தம்பி..?

சங்கர கிருஷ்ணன்: மன்னிக்க வேண்டும் சுவாமி, நீங்கள் தயார் செய்த நண்பர்களை, ‘அவர்கள்’ என்று குறிப்பிட்டுவிட்டீர்களே..?

ஓம்கார் சுவாமிகள் : அது அப்படித்தானே ஆயிற்று தம்பி.. என் கட்டுப்பாட்டில் அவர்கள் இல்லையே..

சங்கர கிருஷ்ணன்: சரி சுவாமிஜி, ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டில் நடந்ததைச் சொல்லுங்கள்.

ஓம்கார் சுவாமிகள் : அவை எல்லாமே நான் இல்லாத நிகழ்வுகள்.. கேட்டவற்றிலிருந்தே சொல்கிறேன்.. ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டில் நடந்த கூட்டத்தில்தான் வாஞ்சிநாதன் இந்த செயலைச் செய்யப்போகிறார் என்று மற்றவர்களுக்கு தெரியவந்தது.
கலெக்டர் ஆஷைக் கொன்றுவிட்டுத் தன் உயிரையும் மாய்த்துக்கொள்ளப் போகிறார் என்பதும் அவர்களுக்குத் தெரியவந்தது. கற்பனை செய்து பார்த்தால் வாஞ்சிநாதன் திட்டங்களை அவர்கள் எதிர்பார்த்திராததால் அதிர்ச்சிதான் அடைந்திருப்பார்கள்.

(மேடையில் ஒளி மங்கி மாடசாமி வீடாக ஒளி விரிகிறது)

காலம் : 1911ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ஒருநாள் பகல் வேளை.
இடம் : மாடசாமி வீடு, ஓட்டப்பிடாரம்.
பாத்திரங்கள் : வாஞ்சிநாதன், மாடசாமி, சங்கரகிருஷ்ணய்யர், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை மற்றும் சிலர்.

வாஞ்சிநாதன் : (தான் கொண்டுவந்த பிரசுரங்களை எல்லோரிடமும் கொடுக்கிறார். கொடுத்துவிட்டு) ‘ஆரியர்களுக்கு ஒரு ஆப்த வாக்கியம்’ (என்ற பிரசுரத் தலைப்பை வாசித்துவிட்டு) எல்லோரும் இந்தப் பிரசுரத்தைப் படிக்க வேண்டும். நமது நாட்டின் கீழ்மைகளுக்கெல்லாம் காரணங்களைத் தெரியப்படுத்தியிருக்கிறோம். பரங்கியரின் அக்கிரமங்களையும் நமது நாட்டுச் செல்வங்களைக் கொள்ளை கொண்டு போவதையும் பஞ்சத்திலும் நோயிலும் நமது ஜனங்கள் மடிந்துகொண்டிருப்பதையும் வெள்ளையர்கள் உல்லாசமாகத் திரிந்துகொண்டு தேசபக்தர்களை ஒடுக்கி வைப்பதையும் மக்களுக்குப் புரியும் விதமாகக் குறித்திருக்கிறோம்.

மாடசாமி : இந்தப் பிரசுரங்களை என்ன செய்ய வேண்டும்..?

வாஞ்சிநாதன் : மக்களிடம் விநியோகம் செய்ய வேண்டும். நமது இயக்கத்திற்கு மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும்.

சங்கரகிருஷ்ணய்யர் : அது சரி, நமது அடுத்த திட்டம் என்ன..? நீலகண்டரைப் பார்த்தீர்களா.?

வாஞ்சிநாதன் : நீலகண்டர் பாண்டிச்சேரியில் இல்லை; எங்கிருக்கிறார் என்றும் தெரியாது. வ.வே.சு. அய்யர்தான் பாண்டிச்சேரியில் இப்போது இயக்கத்தை நடத்துகிறார். புதிய பரங்கி அரசன் ஐந்தாம் ஜார்ஜ் என்பவன் முடிசூடப் போகிறானாம். நமது நாட்டிலும் வந்து அந்த வைபவத்தைச் செய்யப் போகிறானாம். அவன் இந்தியாவில் காலை வைக்கும் நாளில், பரங்கியர் எதிர்ப்பைக் காட்டுவதற்கு நாடெங்கிலும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றனவாம். நமது கடமையாக நமது ஜில்லாவில் நாம் கலெக்டர் ஆஷைக் கொல்ல வேண்டும். அந்த வேலையை எனக்குத் தந்திருக்கிறார்கள். நீங்கள் எல்லாரும் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
(வாஞ்சிநாதன் நிறுத்துகிறார். எல்லாரும் அமைதியாக இருக்கிறார்கள். பல கணங்கள் கனமாக நகர்கின்றன)

சங்கரகிருஷ்ணய்யர் : அபாயமான திட்டம். இது நீலகண்டருக்குத் தெரியாது என்பது தெரிகிறது; நீ தயார் நிலையில் வந்திருப்பதும் தெரிகிறது. இன்றைய தேதியில், இந்த ஜில்லாவின் பெரிய மனிதர்கள், கனவான்கள், தனவான்கள் எல்லாரையும் கலெக்டர் ஆஷ் பயத்தாலும் நயத்தாலும் தன் வசப்படுத்தி இருக்கிறான். கொஞ்சகாலம் முன்பு பெரிய கூட்டத்தின் நடுவில் மாலையும் கழுத்துமாக அவன் வீற்றிருக்கிற படத்தைப் பார்த்தேன். நீ செய்யப்போகிற காரியத்திற்குப் பிறகு நமக்கு எந்த ஆதரவும் கிடைக்காது. நாம் தலைமறைவாகவே வாழ வேண்டியிருக்கும்.

நடுவில் அமர்ந்திருப்பவர் கலெக்டர் ஆஷ். படம் உதவி: திருநெல்வேலி எழுச்சியும் வ. உ. சி. யும் 1908 நூல்

வாஞ்சிநாதன் : இது தெரிந்ததுதானே.. நாம் எல்லாரும் இரத்தத்தில் சங்கல்பம் செய்திருப்பது மறந்துவிட்டதா..? காரியத்திற்குத் தயாராகும்போது தயக்கமோ பயமோ நமக்குள் வரலாமா..? சிதம்பரம் பிள்ளை சிறையில் துன்பப்பட்டதைக் கேட்டு நமக்கு எத்தனை கோபம் வந்தது..? அதுவெல்லாம் ஆறிப்போனதா..? சொல்லுங்கள்..

மாடசாமி : சகோதரா, நான் துணிந்துவிட்டேன். உன் மகத்தான தியாகத்தை ஆசீர்வதிக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்றாலும் செய்கிறேன்.

மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை : சரி, நானும் சம்மதிக்கிறேன்.

சங்கர கிருஷ்ணய்யர் : நானும் துணிகிறேன்.

மற்றவர்கள் : நாங்களும் சம்மதிக்கிறோம்..

(மீண்டும் எல்லோரும் சேர்ந்து இந்த இரகசியத்தைக் காப்பதாக உறுதிமொழி எடுக்கிறார்கள்)

வாஞ்சிநாதன் : இன்னும் சில வேலைகள் பாண்டிச்சேரியில் பாக்கி இருக்கின்றன. முக்கியமானது, துப்பாக்கியும் அதற்கான பயிற்சியும். அதற்காக நான் மீண்டும் எனது விடுப்பை நீட்டித்துக்கொண்டு பாண்டிச்சேரி போகிறேன். நான் திரும்பியதும் நம் செயலைத் திட்டமிட்டு நிறைவேற்றுவோம். பாரதமாதாவுக்கு நம்மை அர்ப்பணிப்போம். அன்னை நம்மை ஆசீர்வதிப்பாள்.

(திரை விழுகிறது)

  • இரா. கோமதிசங்கர் – திருநெல்வேலி

Comments (2)


Suthakaran

தனிமையை விரும்பிய நான் கூட்டத்தின் போதைக்குள் சீக்கிவிட்டதாக உணர்ந்தேன்… சிறப்பு

Rasal

பாரதியாரின் இறுதிச்சடங்கு, காந்தியடிகள் சந்திப்பு… எனப் பார்க்கும்போது ‘நீலகண்டர்’ பெரிய முக்கியத்துவம் வாய்ந்தவர் தான். 1908-ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், முக்கிய புள்ளிகள் வேறு யாராவது இருக்கிறார்களா? சார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *