பெரியார் பக்கம் -19

பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில் கல்வித் துறையின் பொது இயக்குநர் பொறுப்பில் இருந்த பெருமைக்குரியவர் நெ.து.சுந்தரவடிவேல் அவர்கள். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்து, அந்தப் பொறுப்புக்குப் பெருமை சேர்த்தவர். இராஜாஜி முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் குலக்கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு சுமார் 3000 ஓராசிரியர் பள்ளிகள் மூடப்பட்டன. 

இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து தந்தை பெரியார் போராட்டங்களை நடத்தினார். இதன் விளைவாக, இராஜாஜி முதல்-அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு காமராசர் முதல்-அமைச்சர் பொறுப்புக்கு வந்தார். அப்போது நெ.து.சுந்தரவடிவேல் அவர்களைப் பயன்படுத்தி காமராசர் வழியாக மூடப்பட்ட பள்ளிகளைத் திறக்கச் செய்தார் பெரியார். 

தொடர்ந்து பெரியார் கல்வியில் பெரும் புரட்சிகளைச் செய்தார். நெ.து.சுந்தரவடிவேல் தன்னைப் பெரியாரின் தொண்டராகவே நினைத்து வாழ்ந்து கல்வித் துறையில் சாதனைகள் பல செய்தவர். தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, நெ.து.சுந்தரவடிவேலு புரட்சியாளர் பெரியார் என்னும் ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அதன் சிற்றாவணக் கோப்பு (PDF) அண்மையில் எனக்குக் கிடைத்து. அதை முழுமையாகவும் படித்தேன். 

அந்த நூலின் இறுதிப் பகுதியில், தந்தை பெரியார் அவர்களால் இந்த சமுதாயம் எப்படி மாற்றங்களைப் பெற்றது என்பதைத் தக்க சான்றுகளுடன் விவரித்திருந்தார். அந்த விவரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு கல்வியாளர் பார்வையில் பெரியாரின் சமூகப் பணிகள் மிக அருமையாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தன. நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் நூலிலிருந்த சில பிழைகளை நீக்கியிருக்கிறேன், தற்காலத்திற்கான சொற்களையும் நான் பயன்படுத்தி இருக்கிறேன். இனி பெரியார் பற்றி நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் பார்வையை அப்படியே தந்துள்ளேன். 

‘உயர்வு தாழ்வு என்னும் உணர்ச்சியே, நமது நாட்டில் வளர்ந்து வரும் சாதிச் சண்டை நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்து உயிர்களும் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வரவேண்டும்’ என்னும் தனது குறிக்கோளை அடைய வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார். அவர் எங்கோ ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு, தம்மை நாடி வந்தவர்களுக்கு மட்டும் புரட்சிக் கருத்துகளை எடுத்துரைப்பதோடு நின்றாரில்லை. 

மனதில் பட்டதை எழுத்தில் வடித்து, அச்சாக்கி, வெளியிட்டதோடு அமைதி கொள்ளவில்லை. தற்குறிகள் நிறைந்த நாட்டில் எழுத்தில் வருவதைப் படிக்கும் ஆட்கள் சிலரே. மாறாக, சிங்கத்தின் குகைக்குள்ளே புகுந்து போராடுவதைப்போல், காலமெல்லாம் செயல்பட்டார் பெரியார். தமிழ்நாட்டில் அவர் கால்படாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு சூறாவளிப் பயணம் செய்துகொண்டு இருந்தார். புரட்சிக் கருத்துகளை, மணிக்கணக்கில் விதைத்தார். கேள்விக் கணைகளை வரவேற்பதில், அவற்றைக் கொள்கை விளக்கத்திற்கான நல் வாய்ப்புகளாகப் பயன்படுத்தி, பதில் சொல்வதில், பெரியார் இணையற்று விளங்கினார். இச்செயல்கள் பேரலைகளை எழுப்பின.

ஏமாந்த காலத்தே ஏற்றங்கொண்டோர், வேங்கையெனப் பாய்ந்தனர்; நரிகளென ஊளையிட்டனர்; ஆதிக்கப்புரிகள் ஆட்டங் காண்பதைக் கண்டு அஞ்சி அப்பாவி மக்களை, ஏவிவிட்டனர். அவர்கள் தன்னலக் கோட்டையைக் காக்க, எத்தனையோ சாகசங்களைக் கையாண்டார்கள். திண்ணைக்குத் திண்ணை தூற்றல்கள். மேடைகளில் அவதூறுகள். ஆசிரியர் கடிதங்களின் வழியாகத் தூண்டுதல்கள். ஆட்சியாளரை நெருக்கி வழக்கு போடுதல். இத்தனைக்கிடையிலும் தெளிந்த அறிவுடையோர், முற்போக்குக் கருத்துடையோர், தந்தை பெரியாரையும் அவருடைய இயக்கத்தின் அடிப்படைச் சிறப்புகளையும் அப்போதைக்கப்போது சுட்டிக்காட்டி வந்துள்ளனர். அவற்றில் சிலவற்றைக் கவனிப்போம். 

ஆக்ஸ்போர்டு அறிஞர் பாராட்டு

ஈரோட்டில் பெரியாரைக் கண்டு உரையாடிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு. பெசில் மாத்யூஸ் என்பவர், ‘புறத் தோற்றத்தில் மட்டும் அல்ல, உள்ளுணர்ச்சியிலும் தோழர் ஈ.வே. ராமசாமி வில்லியம் மாரிஸ் போன்றவரே’ என்பதை அவருடன் நான் பேசிக் கொண்டிருந்த 2,3 மணி நேரத்திற்குள் கண்டுகொண்டேன். பொருளற்ற எந்தப் பழைய சமுதாயக் கட்டுப்பாடுகளையும் அடியோடு தகர்த்து எறியவேண்டும் என்னும் அந்தத் துடிதுடிப்பு, காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களையும் பழமைப் பாசி படர்ந்துவிட்ட கருத்துகளையும் உடைத்தெறிய வேண்டும் என்னும் அந்த நெஞ்சழுத்தம், ‘புதியதோர் உலகு செய்வோம்’ என்னும் அந்த உறுதிப்பாடு, இவை அத்தனையிலும் தோழர் ஈ.வே.ரா. வில்லியம் மாரிஸ் அவர்களைப் போலவே செயல்படுகிறார். 

மாரிசைப் போலவே ஈ.வே.ராவும் மிக எளிய வாழ்க்கையே வாழ்கின்றார். ‘சொந்த அச்சகத்தின் வாயிலாகவே, சொந்தக் கருத்துகளைப் பொதுமக்களுக்கு உரைப்பது வில்லியம் மாரிசுக்கும் ராமசாமிக்கும் உள்ள வியக்கத்தக்க இன்னொரு ஒற்றுமை என்பதையும் கண்டேன். தோழர் ஈ.வே.ரா. நடத்துகின்ற ஆங்கில வார இதழ் இருக்கிறதே, அதன் பெயராகிய புரட்சி (Revolt) என்பதை அவருடைய வாழ்க்கை வரலாற்றிற்கே பெயராய்ச் சூட்டிவிடலாம். அது மிகப் பொருத்தமாகவும் இருக்கும்’ என்று பெரியாரின் உண்மையான உருவத்தைக் காட்டினார்.

பனகல் அரசர்

சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக விளங்கிய, பனகல் அரசர் சர்.பி.ராமராய நிங்கவாரு, 1928இல் ஈ.வே.ராமசாமியைப் பற்றி ‘மதிப்பு வாய்ந்த எனது நண்பர் தோழர் ஈ.வே.ராமசாமி தற்காலத்தில் பெரிய சமூகச் சீர்திருத்தக்காரர் ஆவார். அவர் சமூகச் சீர்திருத்தத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறார். தம் கருத்தை நிறைவேற்றுவதில் அவர் எத்தகைய தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார். எந்த ஒரு கொள்கையைத் தாம் நேர்மையானதாக எண்ணினாரோ, அதற்காக அவர் பலதடவை சிறை சென்றதும் உங்களுக்குத் தெரியும். சமூகச் சீர்திருத்தக் கொள்கை முன்னேற இன்னும் எத்தனை தரம் வேண்டுமானாலும் சிறைக்குப் போகவும் மற்றும் தமது உயிரையே கொடுக்கவும் தயாராயிருக்கிறார். ‘சமூகச் சீர்திருத்தத் துறையில் பலர் பல ஆண்டுகள் பாடுபட்டுப் பயன் பெறாமல்போன வேலையைச் சில ஆண்டுகளில் இவர் பயனளிக்குமாறு செய்து விட்டார்’ என்று உரைத்தார். 

சென்னை மாகாண ஆளுநர்

பிற்காலத்தில், சென்னை மாகாணத்தில் ஆளுநராக இருந்த சர்.கே.வி.ரெட்டி நாயுடு 1928இல் பெரியாரை எப்படி மதிப்பிடுகிறார் என்று பார்ப்போம். ‘தனக்கு ஒன்றை உரியதாக்கிக் கொண்டு, அதையே தம் முழுவேலையாகவும் கொண்டு, பல்லாண்டுகளாக வேலை செய்கிற ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று சிறப்பான குணங்கள் அமைய வேண்டும். அவ்விதக் குணங்கள் அமைந்தவர்கள் இத்தென்னிந்தியா முழுவதும் தேடினாலும் நமது நாயக்கரைத் தவிர, வேறு யாரையும் கண்டுபிடிக்க முடியாது. அத்தகைய குணங்கள் எவையெனில், முதலாவது தைரியம்; இரண்டாவது தியாகம்; மூன்றாவது தம்முடைய வேலையை எவ்வாறு நடத்தி அனுபவத்திற்குக் கொண்டுவருவது என்பது.

‘தோழர் ராமசாமி உண்மையான சிங்கம்! சிங்கத்தின் இருதயத்தைப் பெற்றிருக்கிறார். வாழ்க்கையில் அச்சமென்பது அவருக்கு இன்னதென்றே தெரியாது. அத்தகைய அச்சமின்மை இருந்தாலொழிய இத்தகைய செயல்களில் யாரும் வேலை செய்யமுடியாது. ‘அவர் எவ்விதத் தியாகமும் செய்யத் தாயாராயிருக்கிறவர். ‘பழைய காலத்து வீரர்கள் தங்கள் ஆயுதத்தைப் பயன்படுத்தியதுபோல, தோழர் ராமசாமி தமது பேனாவை அச்சமின்றி எங்கும் செலுத்துகிறார்’ என்று புகழ்ந்துரைத்துள்ளார்.

எஸ்.குமாரசாமி ரெட்டியார்

தன்மான இயக்கத்தின் பகுத்தறிவு ஒளி தமிழ்நாட்டோடு நிற்கவில்லை. அது பிற மாநிலங்களிலும் தொலைத்தொடர்புகள் அற்ற காலத்திலேயே பரவிற்று. ‘இந்த இயக்கமானது மக்களின் பேதத்தையும் அறியாமையையும் உயர்வு தாழ்வையும் ஒழிப்பதற்கு ஏற்பட்டதாகும். இவைகள் ஒழிந்தால் தானாகவே சுயமரியாதை உதயமாகிவிடும். இவ்வியக்கம் நாட்டில் எவ்வளவு பரவியிருக்கிறதென்பதற்குப் பம்பாய் முதலிய வெளி மாநிலங்களில் சுயமரியாதை மாநாடுகள் கூடுவதும் அவைகளில் செய்யப்படும் தீர்மானங்களும் போதிய சான்றாகும்’ என்று 20.7.1929இல் திருநெல்வேலியில் நடந்த, மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில், அம் மாநாட்டைத் திறந்துவைத்த எஸ்.குமாரசாமி ரெட்டியார் விளக்கினார்.

எஸ். இராமநாதன்

பெரியாரோடு சேர்ந்து காங்கிரசு தொண்டாற்றி, கதரைப் பரப்புவதில் துணை நின்று, பின்னர், வகுப்புரிமைக்குப் போராடும் பொருட்டு, காங்கிரசை விட்டுப் பெரியாரோடு வெளியேறியவர், எஸ். இராமநாதன், எம்.ஏ.,பி.எல். ஆவார். அவர் தன்மான இயக்கத்தில் பல்லாண்டு, பெரியாருக்குத் துணையாக விளங்கியவர். அவர் பெரியாரைப்பற்றிக் கூறும்போது, ‘வைக்கம் வீரர் என்பவர் ஒரு மனிதரல்லர். அவர் எனக்கு ஒரு மனிதராகத் தோன்றவில்லை. ஒரு கொள்கையாகவே தோன்றுகிறார். அந்தந்த நாடுகளில் இவரது கொள்கை நிலைக்கக் காணலாம். மற்றும் தீவிரமாக எந்த மக்கள் உரிமைப் போராட்டம் புரிகின்றாரோ அந்த மக்கள் இந்தக் கொள்கையையே கொண்டிருப்பதையும் காணலாம்’ எனக் குறிப்பிடுகிறார்.

கலப்புத் திருமணம் 

பகுத்தறிவுப் பகலவன், தன்மான இயக்கத் தந்தை, பெரியார் ஈ.வே.ராமசாமி அரை நூற்றாண்டுக்கு மேலாக அயராது பாடுபட்டதன் விளைவாகக் கலப்புத் திருமணங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன. இயக்கத்தின் ஒத்துழைப்பிலும் இயக்கத்திற்கு அப்பாலும் எண்ணற்ற கலப்புத் திருமணங்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. எல்லாச் சாதிகளிலும் எல்லாப் பெரிய குடும்பங்களிலும் பிற சாதிக் கலப்பு மணம் நடைமுறை வாழ்க்கையாகிவிட்டதைக் காண்கிறோம். சாதிக்குள்ளேயே திருமணம் என்பதை அநேகமாக, சமுதாய ஏணியின் கீழ்படிக்கட்டுகளிலும், பொருளியலில் அடிமட்டத்திலும் இருப்போர் மட்டுமே பின்பற்றி வருகிறார்கள். புரோகிதமற்ற திருமணங்கள், அய்ம்பதாண்டு காலத்தில், இலட்சக்கணக்கில் நடந்துள்ளன. ‘இராகு கால’ திருமணங்களும் எண்ணற்றன. 

1967ஆம் ஆண்டு சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி சட்டத்தை முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணா நிறைவேற்றி வைத்தது, தன்மான இயக்கத்திற்குப் பெரும் வெற்றியாகும். புரோகிதர்களை, சடங்குகளை, நீக்கிவிட்டுத் திருமணம் செய்துகொண்டோர், வைதீக முறையிலேயே திருமணம் செய்து கொண்டவர்களைவிட அதிக சிறப்போடு வாழ்வதைக் காணும் இளைஞர் உலகம், அடுத்தபடிக்கு முன்னேறுவதாக; பதிவுத் திருமணங்களைச் சிக்கனமாகச் செய்து கொள்ளும் பழக்கத்திற்கு வருவதாக செய்திகள் கூறுகின்றன.

கோயில் நுழைவு

தீண்டாமை குற்றம் என்று அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள் ளது. இது பெரியாரின் கொள்கைக்கு வெற்றியாகும். வழக்காடத் துணிவிருந்தால் எவ்வகையில் எவ்வுருவில் தீண்டாமையைக் காட்டினாலும் அவர் தண்டிக்கப்படுவார். அண்மையில் தமிழ்நாட்டில் ஓர் ஊரில், ஆதி திராவிடர் ஒருவருக்குக் கொட்டாங்குச்சியில் தேனீர் ஊற்றியதற்காக, ஓட்டல்காரர் தண்டிக்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்பதற்காகப் போராடிய பெரியார், வைக்கத்தில் வெற்றி கண்டார். கல்பாத்தியில், சுசீந்திரத்தில் அதன்பின் விளைவைக் கண்டார். தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோயில்களிலும் எல்லாச் சாதியாரும் போகலாம் என்னும் சட்டம் நடைமுறையில் இருப்பதை, பெரியார் தம் வாழ்நாளிலேயே கண்டார்.

சமுதாயத்தின் கீழ்ப் படிக்கட்டுகளில் உள்ள பல சாதியார் சமைப்பதை மற்ற சாதியார் ஒன்றாய் இருந்து உண்பதை நடைமுறையாக்கிவிட்டார். சாதி ஏற்றத்தாழ்வைக் காட்டும் அடையாளமாக, ஓட்டல்களில், ‘பிராமணாள்’ என்னும் அறிவிப்பு அநேகமாகப் பறந்து போய்விட்டது. பொதுக் குளங்கள், கிணறுகள், வீதிகள் ஆகியவற்றை எல்லோரும் பயன்படுத்தும் நிலை உருவாகி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சிற்சில சிற்றூர்களில், விட்டகுறை தொட்டகுறையாக, சாதி வேற்றுமை பாராட்டப்படுகிறது. அவ்விடங்களிலும் எல்லா வகையிலும் வேற்றுமை அடியோடு தொலைவதற்காகப் பாடுபடவேண்டியது நம் கடமையாகும். 

இன்றைய நடைமுறைப்படி பார்ப்பனர்கள் மட்டுமே தமிழ்நாட்டு கோயில்களில் கருவறைக்குள் செல்லலாம். இம்முறை பார்ப்பனர் அல்லாதாரை இழிவுபடுத்துதலாகும். எனவே கோயில் கருவறைக்குள் எல்லோரும் நுழைவதற்காகக் கிளர்ச்சி செய்யப் பெரியார் திட்டமிட்டிருந்தார். அதை நடத்தி வெற்றி பெறுவதற்குள் மறைந்துவிட்டார். பின்தலைமுறைக்கு அத்தொண்டை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்.

யாவர்க்கும் ‘அர்ச்சகர்’ தொழில் உரிமை

சாதி வேற்றுமையின் அடிப்படையில் சிலர்தான் இன்ன தொழிலைச் செய்யலாம் என்றும், மற்றவர்கள் செய்யக்கூடாது என்றும் இருக்கும் முறை அவர்களை இழிவுபடுத்துவதாகும். இந்த இழிவும் நீங்க வேண்டுமென்பதற்காக, எல்லோரும் அர்ச்சகராகலாம் என்று பெரியார் போராடியதும், அதற்கு வழி செய்யும் சட்டத்தைத் தமிழக அரசும், சட்டமன்றமும் ஒருமனதாக 12.1.71-இல் நிறைவேற்றியதும் உரிமை விவகாரம். அதற்குத் தடையாக அரசியல் சட்டம் என்னும் ‘நந்தி’ படுத்திருப்பதாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கூறியுள்ளது. சட்டம், மனிதர்களை வாழவிடவேண்டும்; சரிநிகர் சமானமாக வாழவிட வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

தொடரும்.

கட்டுரையாளர்: முனைவர் தி.நெடுஞ்செழியன்

படங்கள்: இணையத்திலிருந்து.


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *