அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் என நினைத்திருப்போம். ஆனால் சில சம்பவங்கள் நம் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றிருக்கும். வந்தியத்தேவனுக்கு அந்த இரவு அப்படித்தான் அமைந்திருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த அனைவரும் ஒரு இடத்தில் ஒன்று கூடியிருந்ததும், உற்ற நண்பனான கந்தமாறன் தன்னிடம்கூட ஏதும் கூறாமல் தன்னைத் தனியே படுக்க வைத்துவிட்டு வந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதும், தன்னைப் பற்றி எச்சரிக்கையாகப் பேசியதும் வந்தியத்தேவனை அங்கு நடப்பவற்றை உற்றுக் கவனிக்கத் தூண்டின.

பழுவேட்டரையர், சாம்ராஜ்யத்தின் அரசுரிமையைப் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார். ஏற்கனவே இளவரசராக இருப்பவர் சுந்தரசோழரின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனபோதும், பழுவேட்டரையர் தன்னுடன் குழுமியிருந்தவர்களிடம் அரசைக் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆதித்த கரிகாலன் காஞ்சியில் பொன்மாளிகை கட்டிவைத்துக் கொண்டு அதற்கு சுந்தரசோழரையும் தாயையும் அழைத்துக் கொண்டிருப்பது யாருக்கும் உவப்பில்லை எனக் கூறினார். மேலும் ஈழத்துக்குப் போர் புரியச் சென்றிருக்கும் அருள்மொழிவர்மன், படையெடுத்துச் சென்ற இடத்திலேயே உணவுக்கு ஏற்பாடு செய்யாமல் தஞ்சையிலிருந்து அனுப்பச் சொல்வது சரியில்லை என்றும், அவ்வாறு அவர் கட்டாயப்படுத்தப் படுவதால், நிதி நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பிலுள்ள அவரும் அவருடைய தம்பியான சின்ன பழுவேட்டரையரும் அதிகமான வரிகளை விதிப்பதற்குண்டான அவசியம் நேர்வதாகச் சொல்லிக் குறைப்பட்டார்.

இதற்கெல்லாம் மேல் சுந்தரசோழரின் உடல்நலம் கெட்டுக் கொண்டிருப்பதையும், அடுத்த வாரிசு யாரென முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அரசு நலனில் அக்கறையுள்ள நமக்கு உண்டென்றும் அவர் சொல்லும்போது கூட்டத்தில் உள்ள அனைவரும் அதிர்ந்தனர். ஏற்கனவே வாரிசாய் உள்ள ஆதித்த கரிகாலனைப் பற்றிக் கேட்க, அவர் முந்தைய நாட்களில் நடந்த பட்டத்திற்குண்டான உரிமைகளைப் பற்றி விரிவாக கூறினார். ஆதித்த கரிகாலனை விட சுந்தரசோழரின் பெரியதகப்பனான கண்டராதித்தர் – செம்பியன் மாதேவி தம்பதியருக்குப் பிறந்த மதுராந்தகனுக்கே அதிக உரிமை உண்டென அவர் அழுத்தந்திருத்தமாகச் சொன்னபோது, யாராலும் மறுத்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டது. சுந்தர சோழர் இதைப்பற்றி எதையும் பேசத் தெம்பிலாது அவர் மகள் குந்தவை தேவியினால்தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அதிருப்தியாகத் தெரிவித்தபொழுது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு, பழுவேட்டரையரை நோக்கி ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

பழுவேட்டரையர் அங்கு கொண்டு வந்து வைத்திருந்த மூடுபல்லக்கைப் பற்றியும், குந்தவை தேவியைப் பழி கூறும் பழுவேட்டரையர், தான் புதிதாக மணந்துகொண்ட மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பதும், இவ்வளவு முக்கியமான கூட்டத்தின்போதுகூட அவரை உடன் கூட்டி வந்திருப்பதையும் சுட்டிக் காட்டினர். பழுவேட்டரையர் சினம் காட்டாமல், முதலில் ராஜாங்க விஷயங்கள் முடிவானதும் அதைப்பற்றிப் பதில் கூறுவதாகக் கையமர்த்தினார். பிறகு மதுராந்தகன் முடிசூடுவதைப் பற்றியான பேச்சுகள் எழுந்தன. அதற்கு ஆதரவு தருபவர்கள் யார் யாரெனத் தெரிந்துகொள்ளப் பழுவேட்டரையர் முயன்றார். அப்போது சம்புவரையர் ஒரு சந்தேகத்தை முன் வைத்தார்.

மதுராந்தகனை செம்பியன் மாதேவி ஒரு சிவக்கொழுந்தாகவே சிறுவயது முதல் வளர்த்து வருகிறார். ராஜ்ய விவகாரங்களில் தலையிடாமல சிவ காரியங்களில் மட்டுமே நாட்டம் செலுத்துபவராகவே மதுராந்தகனை அனைவரும் இவ்வளவு நாள் பார்த்து வருகிறார்கள். இப்பொழுது வாரிசுப் போட்டிக்கு முதலில் செம்பியன் மாதேவி சம்மதிப்பாரா? மற்றும் மதுராந்தகனின் விருப்பம் என்னவென்று தெரியாமல் நாம் கூடி முடிவெடுத்துவிட்டு, பின்னர் அரசரிடம் அவப்பெயர் வாங்கிவிடக்கூடாதே என்றெல்லாம் தன் அச்சத்தைத் தெரிவித்தார்.

அப்பொழுது பழுவேட்டரையர், யாரும் அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும், அதற்குரிய ஆதாரத்தைக் காண்பிப்பதாகவும் கூறி “மதுராந்தகரே! வெளியில் வாருங்கள்” என்று கூற, பல்லக்கைவிட்டு வெளியே வந்து அனைவரையும் வணங்கிய மதுராந்தகனைப் பார்த்து அனைவரும் திகைத்தனர். பின்னர் மதுராந்தகனை வாழ்த்தினர். இவற்றை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனும் அதிர்ந்து, ‘இதற்காகத்தான் ஆழ்வார்க்கடியான் ஒற்றறிய வந்தானா?’ என்று நினைத்தபடி ஆழ்வார்க்கடியான் இருந்த இடத்தைப் பார்க்க, அங்கு யாருமில்லை. இதற்குமேல் இங்கு நின்று கவனித்துப் பார்க்க ஏதுமில்லை என்று தெரிந்து கொண்டவன் அவனுடைய இடத்தில் போய்ப் படுத்து உறங்க முயற்சித்தான். ஒரு பெரும் அரசியல் சுழலில் தான் சிக்கிக்கொண்டதாய் உளைந்தவனால் அவ்வளவு சீக்கிரம் உறங்க முடியவில்லை.

காலையில் கந்தமாறன் வந்து எழுப்பிய பிறகே வந்தியத்தேவனால் எழ முடிந்தது. எழுந்ததும், முதல்நாள் நடைபெற்ற சம்பவங்களை நினைத்துக் கொண்டவன் உடனே அங்கிருந்து கிளம்புவதாகக் கூறினான். கந்தமாறன் முதலில் வருந்தினாலும், பெரிதாக எதுவும் சொல்லவில்லை. கொள்ளிடக்கரை வரையிலும் அவனை வழியனுப்ப கூடவே வந்தான். வந்தியத்தேவன், கந்தமாறன் முன்பே அவன் தங்கை மணிமேகலையைப் பற்றிக் கூறியதை நினைவுபடுத்தி, அவளைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை என வருந்தினான். கந்தமாறன் தர்மசங்கடத்துடன், அவன் தங்கை மணிமேகலையை வந்தியத்தேவனுடன் முன்னம் இணைத்துப் பேசியதை மன்னித்துவிடுமாறு வேண்ட, வந்தியத்தேவன் தன்னைப் போன்ற ஓர் ஏழை இதை எதிர்பார்த்திருக்க வேண்டியதுதான் எனக் கூறினான். கந்தமாறன் எந்த உண்மையையும் அவனிடம் சொல்ல முடியாததற்கு வருந்தினான். அதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன், அவனை சமாதானப்படுத்தி விடைபெற்றான்.

அவன் குதிரையை ஒரு பணியாள் கொண்டுபோக, இன்னொரு குதிரையை அக்கரையில் வாங்கிக் கொடுக்க இன்னொரு பணியாள் உடன் வர, வந்தியத்தேவன் படகில் ஏறியபோது, இன்னொருவரும் அவசரமாக வந்து ஏறினார். அது ஆழ்வார்க்கடியான். படகில் ஒரு வீர சைவரும் இருக்க, வழக்கம்போல இருவரும் சண்டை போட்டுக்கொண்டே அக்கரையில் இறங்கினர்.

வந்தியத்தேவனுக்குக் குதிரை வாங்கிக்கொண்டு வருவதற்காக வந்த பணியாள் கிளம்பிவிட, ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் ஒருவரையொருவர் நேற்று நடந்த விஷயங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ள முயன்றார்கள். இருவருமே ஒருவரை ஒருவர் ஒற்றறிய முயன்றதால், அவர்கள் இருவரால் எதையும் அறிந்து கொள்ள முடியாமல் ஏமாற்றமே மிஞ்சியது. மூடுபல்லக்கில் வந்த பழுவேட்டரையரின் ராணியிடம் கடிதம் கொடுக்கச் சொன்ன ஆழ்வார்க்கடியானுடைய செயல் தவறானது என்று வந்தியத்தேவன் சொல்ல, அவன் மறுத்தான்.

‘மதுரைக்குப் பக்கத்தில் என்னுடைய பெற்றோர் எடுத்து வளர்த்த குழந்தைதான் நந்தினி. ஆண்டாளைப் போன்று பக்தியில் சீலமாய்த் திகழ்ந்தவள். வடநாட்டுக்கு நான் யாத்திரை சென்றிருந்தபொழுது, சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் போர் நடைபெற்றது. அப்பொழுது தப்பித்து ஓடிவந்த அடைக்கலம் புகுந்த வீரபாண்டியனின் மரணத் தறுவாயில் நந்தினி உதவி செய்தபொழுது, படைவீரர்கள் உட்புகுந்து அவனைக் கொன்றுவிட்டார்கள். பழுவேட்டரையர் அவளைப் பிடித்து வந்து கட்டாயமாக மணம் புரிந்திருக்கிறார். அதற்குப் பிறகு நான் அவளைச் சந்திக்க முடியவில்லை. அவளைத் தனியே சந்தித்துப் பேசவும், அவள் விரும்பினால் விடுதலை செய்து போகவும் முயன்று கொண்டிருக்கிறேன்’ என ஆழ்வார்க்கடியான் முடித்தான்.

இதைக் கேட்டவுடனே வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைப் பற்றிய தன் தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டான். எனினும், பல்லக்கிலிருந்தது மதுராந்தகன்தான் என்பதைச் சொல்லவில்லை. ஆனாலும் விளையாட்டுப் போல, ‘சுந்தரசோழருக்கு அடுத்து யார் பட்டத்துக்கு வருவார்?’ என்ற கேள்வியைக் கேட்டு ஆழம் பார்த்தான். ஆனால் ஆழ்வார்க்கடியான் அசராமல், இதெல்லாம் குடந்தை ஜோதிடர்தான் சொல்வார் எனக் கூறி, ஜோசியரின் பெருமைகளையும் கூறினார். குதிரை வந்தவுடன் வந்தியத்தேவன் ஜோசியர் இல்லத்துக்குச் சென்று ஆருடம் பார்த்துவிட்டே தன் பயணத்தைத் தொடர்வது என்று முடிவு செய்துவிட்டே கிளம்பினான்.

அதே சமயத்தில் அரிசிலாற்றின் கரையில் ஒரு படகு சில பெண்களைச் சுமந்துகொண்டு வந்தது. படகில் இருந்து இரு முக்கியப் பெண்மணிகள் இறங்கினர். கொடும்பாளூர் இளவரசி வானதியும், சோழவம்சக் குலக்கொடி குந்தவை தேவியும் படகிலிருந்து இறங்கினர். குடந்தையில் தங்களுக்கு முக்கியமான வேலை இருப்பதாகக் கூறி வானதியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவை கரையில் காத்துக் கொண்டிருந்த ரதத்தில் கிளம்பினாள்.

எங்கு செல்கிறோம் என்று கேட்ட வானதியிடம், குடந்தை ஜோதிடரின் வீட்டுக்குச் செல்லப் போவதாகக் குந்தவை கூறினாள். ரதத்தை ஒதுக்கி நிறுத்தச் சொல்லி சாரதிக்கு ஆணையிட்ட இளவரசியையும் வானதியையும் ஜோசியர் வரவேற்று அமர வைத்தார். வானதி சிறிது காலமாக அடிக்கடி மயக்கமடைவதையும், உற்சாகமற்று இருப்பதையும் பற்றித் தெரிந்துகொள்ள வந்திருப்பதாகக் குந்தவை கூறினாள். அக்காலத்தின் பழக்கமாக உயர்குடும்பங்களைச் சேர்ந்த ஜாதகங்களை ஜோசியர்கள் வைத்திருப்பது போன்று வானதியின் ஜாதகத்தையும் வைத்திருந்த குடந்தை ஜோதிடர், ஜாதகத்தை எடுத்துப் பார்த்து, நம்ப முடியாது திகைத்துப்போனார்.

குந்தவை என்னவென்று வினவ, ஜோதிடர் வானதியின் ஜாதகம் கொண்டிருந்த சிறப்புகளைப் பற்றிக் கூறலானார். வானதியை மணக்கப் போகிறவன் கடல் கடந்து போயிருக்கிறான். அவன் போர்களில் வென்று அரசனாக முடிசூடுவான். இந்தப் பெண்ணின் காலில் இருக்கும் தாமரையினால், பின்னால் ஒரு காலத்தில் பெரும் பட்டமகிஷிகள் கூட இவர் பாதம் பணியக் காத்திருப்பார்கள். இவரின் வயிற்றில் ஆலிலை ரேகை கொண்டுள்ளதால் இவருக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குத் தடங்கல் என்பதே கிடையாது. உலகை வெற்றி கொள்வான்’ என்று கூறிக் கொண்டிருந்தபோதே வானதி மயங்கி வீழ்ந்தாள்.

அவளின் மயக்கத்தைத் தெளிவித்தவாறே வானில் இருக்கும் வால்நட்சத்திரத்தைப் பற்றிய தன் சந்தேகத்தைக் குந்தவை கேட்டாள். ஆனால், ஜோசியர் அதற்கு சரியான மறுமொழி அளிக்காமல் மழுப்பி விட்டார். விழித்த வானதிக்கும் குந்தவைக்கும் அம்மன் பிரசாதத்தை அளித்த ஜோசியரிடம் வானதி, குந்தவை தேவிக்கு அமையப்போகும் கணவரைப் பற்றிக் கேட்டாள்.

‘எங்கிருக்கிறார்? எப்படி வருவார்?’ என்று வானதி கேட்டபோது, ஜோசியர் சொல்வதற்கு முன் குறும்பாக, குதிரையில் ஏறி வருவார், அசகாய சூரர் என்றெல்லாம் குந்தவை பதில் அளித்துக் கொண்டிருக்க, நிஜமாகவே குதிரை வரும் சத்தம் கேட்டது. வாசலில் குழப்பமான ஒலிகள் கேட்டன. கதவைத் திறந்து கொண்டு வந்தியத்தேவன் உள் நுழைந்தான். குந்தவையின் கண்களும் வந்தியத்தேவனின் கண்களும் சந்தித்துக் கொண்டன.

குந்தவையை ஏறிட்ட வந்தியத்தேவன், உடனே சமாளித்துக்கொண்டு சீடனை கடிந்தபடி வெளியே சென்றுவிட்டான். குந்தவையும் வானதியும் விடைபெற்று வெளியில் வந்தபொழுது மன்னிப்பும் கேட்டான். அவர்களின் ரதம் கிளம்பிய பிறகு ஜோதிடரிடம் அவர்கள் யாரெனத் தெரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. வந்தியத்தேவனின் ஜாதகத்தை வைத்திருந்த ஜோதிடர், அவனுக்குக் கடற்பயணம் வாய்க்குமெனினும், உயர்ந்த பதவிகள் அவனைத் தேடிவருமெனவும் ஆருடம் கூறினார். ஆழ்வார்க்கடியானைப் பற்றிக் குறிப்பிட்டபொழுது, அந்த அடையாளத்தில் திருமலையப்பனை மட்டுமே தெரியும் எனக் கூறினார். பொற்கழஞ்சுகளைச் சன்மானம் அளித்த பிறகு வந்தியத்தேவன் வழியெங்கும் இயற்கை எழிலை ரசித்தபடி தன் பிரயாணத்தைத் தொடங்கினான்.

தொடரும்.

  • சவிதா  

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *