பொன்னியின் செல்வன் – 5
சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நடந்த யுத்தத்தில் அவ்வப்போது சிங்கள மன்னர்கள் பாண்டியர்களுக்கு உதவி செய்வது வழக்கமாய் இருந்தது. பாண்டிய மன்னனான வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் வென்றதைத் தொடர்ந்து, ஈழமன்னனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என சோழநாடு விரும்பியது. போர் புரிவதை விரும்பும் சோழத் தளபதிகள், மாவீரர்கள் அங்கு செல்வதற்குப் போட்டி போட்டனர்.
அப்பொழுது இளவலான அருள்மொழிவர்மன், தன்னை அனுப்பும்படி அனைவரிடமும் வலியுறுத்தினார். குந்தவை தேவிக்குத் தன் தம்பியாகிய அருள்மொழிவர்மன் மீது தனிப்பிரியம். அவரும் தமக்கை குந்தவை இட்ட கட்டளைகளை மீறியதே கிடையாது. தன் தம்பியை வீரனாகவே வரித்திருந்த குந்தவைக்கு ஈழம் செல்லத் தகுதியானவன் அருள்மொழிவர்மர்தான் என்று தோன்றியது.
ஈழத்துக்கு வழியனுப்புகையில், தன் தோழியான வானதியை ஆரத்தி எடுக்கப் பணித்தபொழுது, வானதி தனக்கேற்பட்ட மனக்கிளர்ச்சியால் தட்டைத் தவறவிட்டு மயக்கமடைந்தாள். இளவரசரும் பதற, குந்தவை வானதியைத் தாங்கிப் பிடித்து உள்ளே அழைத்து சென்றார். இளவரசர் வந்து வானதியைசி சற்றே சமாதானப் படுத்திவிட்டு விடைபெற்றுச் சென்றார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் வானதிக்கு அடிக்கடி மயக்கம் வந்தது. குந்தவையும் அவளைக் கண்போலப் பார்த்துக் கொண்டிருந்தாள். இது, உடனிருந்த தோழிகளிடையே வானதியின் மேல் பொறாமையைச் வளரச் செய்தது. வானதியின் பயத்தைப் போக்க, தாங்கள் ஜோதிடர் வீட்டுக்குச் சென்று திரும்புவதற்குள் ஒரு பொம்மை முதலையைத் தயார் செய்து வைக்கச் சொல்லியிருந்தாள் குந்தவை.
அவர்கள் இருவரும் திரும்பி வந்தபோது, அனைவரும் ‘முதலை முதலை’ எனக் கத்திக்கொண்டு பயந்தது போல நடித்தனர். வானதி பயப்படவில்லை. ஆனால், இந்த சத்தத்தைக் கேட்டு அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்த வந்தியத்தேவன், பெண்களைக் காப்பாற்றுவதாக எண்ணி ஈட்டியால் முதலையைத் தாக்கினான். அதிலிருந்து பஞ்சும், வாழைநாரும் வெளிவந்தன. சுற்றியுள்ள பெண்களெல்லாம் சிரிக்க, வந்தியத்தேவன் குழம்ப, குந்தவை ஜோதிடர் வீட்டில் பதில் சொல்லாமல் வந்ததற்கும், இங்கு பொம்மை முதலையுடன் விளையாடிக் கொண்டிருந்ததையும்
சொல்லி வருத்தம் தெரிவிக்க, வந்தியத்தேவன் அடைந்த ஏமாற்றத்தைச் சொல்லி மாளாது. இத்தனையும் பெண்களுக்கு நடுவில் நடக்கவும், அசூயை அடைந்த வந்தியத்தேவன் குதிரையை விரட்டிக்கொண்டு வேகமாகக் கிளம்பி விட்டான். அதைக் கண்டு குந்தவை வருந்தியதோடு, தோழிகளையும் கடிந்து கொண்டாள்.
குந்தவையைச் சந்தித்தபிறகு அங்கேயே நின்றுவிட்ட மனதைத் திருப்ப முடியாமல் வந்தியத்தேவன் அலைக்கழிந்தான். குந்தவையின் நினைவால் இயற்கை எழிலை ரசிக்க முடியாமல் புதுவித உணர்வில் தவித்துக்கொண்டே தஞ்சையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
திருவையாறு திரும்பும் வழியில் கடம்பூர் மாளிகையில் பார்த்திருந்த மூடுபல்லக்கு வருவதைக் கவனித்தவன், அதில் இருப்பவர் மதுராந்தகன் என்பதை எப்படியாவது அம்பலப்படுத்திவிட வேண்டும் என முடிவு செய்துகொண்டு பல்லக்கைத் தொடர்ந்தான். பழுவேட்டரையரும் அவரின் பரிவாரங்களும் உடன் வராததால் இன்னும் துணிவு பிறந்தது.
பழுவூர் ஆட்கள் இவன் பின்தொடர்வதைக் கவனித்து விசாரிக்க முயல்கையில், வேண்டுமென்றே பல்லக்கை இடிப்பதுபோல் சென்று காப்பாற்ற வேண்டும் என பல்லக்கில் இருப்பவரிடம் முறையிட்டான். காவலர்கள் பிடிக்க வந்த நேரம் பல்லக்கின் மூடுதிரை விலகியபோது உள்ளே தெரிந்த உருவத்தைக் கண்டு அதிர்ந்தான். மதுராந்தகனை எதிர்பார்த்த வந்தியத் தேவனுக்கு அழகிய மோகினியைப் போன்ற பெண்ணைக் கண்டு பேரதிர்ச்சி. முதலில் பேச்சு வராமல் திகைத்தவன், அவள் நந்தினிதான் என்று யூகித்த கணத்தில், ஆழ்வார்க்கடியானின் பெயரை உபயோகித்து, தங்களிடம் பேச வேண்டும் என்றான்.
பழுவூர் இளைய ராணியான நந்தினி, ஒரு கணம் வியந்தவள் அரண்மனையில் வந்து சந்திக்குமாறு கூற, ‘காவலர்கள் விடமாட்டார்களே’ என வந்தியத்தேவன் நயந்தான். உடனே நந்தினி, ஒரு தந்த மோதிரத்தைக் கொடுத்து, பின் தொடர்ந்து வரவேண்டாம் என எச்சரித்துவிட்டே அந்தப் பல்லக்கை நகரச் சொன்னாள். வந்தியத்தேவன் அவள் அழகில் கிறுகிறுத்துப் போயிருந்தான். பழுவேட்டரையர் இவள் பேச்சைக் கேட்கிறார் என்பது உண்மையானால் அது தவறில்லை என்று நினைத்துக் கொண்டான்.
பல்லக்கு வெகுதூரம் சென்றபிறகே கிளம்பிய வந்தியத்தேவன், தஞ்சையை அடைந்தான். நகரத்தை ரசிக்க ஆவலிருந்தாலும் முதலில் வந்த வேலையைப் பார்க்க வேண்டும் என்ற கடமையினால், கோட்டை பிரதான வாயிலுக்குச் செல்ல, அங்கு யாரும் உள்ளே சொல்லாமல் ஒதுங்கி நின்றிருந்தனர். காவலர் கவனத்தைக் கவராது உள்ளே செல்வது கடினம் என்று உணர்ந்து கொண்டு, அருகிலிருந்த ஒரு இளம் வாலிபனிடம் பேச்சுக் கொடுத்து, வேளக்காரப் படை வெளியில் வருவதற்காகத்தான் அனைவரும் ஒதுங்கி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டான். வேளக்காரப் படை பெரும் ஆர்ப்பாட்டத்துடன் வெளிவந்தது. அவர்கள் வெளியில் வந்த பிறகு முக்கியஸ்தர்களைத் தவிர உள்ளே செல்ல யாருக்கும் அனுமதியில்லை என்று தெரிந்து கொண்டவன், இரவைக் கோட்டைக்கு வெளியே கழித்து விடலாம் என்று முடிவு செய்தான்.
பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சிவபக்தன் போலத் தோற்றமளித்த வாலிபனிடம் பேச்சுக் கொடுத்ததில், அவன் தஞ்சைத் தளிக்குளத்தார் ஆலயத்தில் மலர் கைங்கரியம் செய்து வருபவன் எனத் தெரிந்தது. தங்க இடமிருக்குமா என்று கேட்க, சேந்தன் அமுதன் என்ற அந்த வாலிபன் அவன் வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு கூறினான். அவனுடன் வீட்டுக்குச் சென்ற வந்தியத்தேவன் அவனுடைய தாயார் காது கேளாத, வாய்பேச முடியாத பெண்மணி என்று தெரிந்துகொண்டான். சேந்தன் அமுதனிடம் கோட்டையைப் பற்றிய விவரங்கள் கேட்டு அறிந்தான்.
கோட்டைக்குள்ளே சுந்தர சோழர், பழுவேட்டரையர்கள், முதன்மந்திரி அநிருத்தர், இளவரசர் மதுராந்தகர் அரண்மனைகளும் மற்றும் அதிகாரிகள் வசிப்பிடங்களும் துர்க்கைக் கோவிலும் கணிகையரும் இருப்பதாகக் கூறினான் சேந்தன் அமுதன். கோட்டைக் காவலர் சின்ன பழுவேட்டரையரின் மகளை மதுராந்தகர் மணந்திருப்பதாகவும் அதற்குப் பிறகு அவரின் குணம் சிறிது மாறிவிட்டதாகவும் கூறினான். வெகு சுவையான உணவை உண்ட வந்தியத்தேவன் அயர்ந்து உறங்கினான்.
இதற்கிடையில், வந்தியத்தேவன் கிளம்பிப்போன பிறகு திருமலையப்பன் என்னும் ஆழ்வார்க்கடியான், குதிரை வாங்கி வந்த பணியாளோடு பேச ஆரம்பித்தான். தன் பெயர் இடும்பன்காரி என்று அறிமுகப் படுத்திக்கொண்ட அந்தப் பணியாள் தன் கை விரல்களால் மீன் போன்ற முத்திரையைக் காட்ட, ஆழ்வார்க்கடியான் அதைப் புரிந்து கேள்வி கேட்டபோது ஒன்றுமில்லை என்று மறுத்துவிட்டான்.
ஆழ்வார்க்கடியானிடம் போக்குக் காட்டி அவன் விலகிச் சென்ற சமயத்தில் ஆழ்வார்க்கடியான் மரத்தின் மேல் ஏறிக்கொண்டு திரும்பவும் அவ்விடம் வந்த இடும்பன் காரியைக் கண்காணிக்க ஆரம்பித்தான். வெகுநேரம் கழிந்த பின்பு சோமன் சாம்பவன் என்னும் புதியவன் வந்து மீன் முத்திரையைக் காட்ட, இருவரும் கிளம்பித் திருபுறம்பியம் என்னும் பகைவனின் பள்ளிப்படைக்கு ரகசியமாகச் செல்லவேண்டுமெனப் பேசிக்கொண்டே கிளம்பினர்.
(பள்ளிப்படை என்பது பழந்தமிழகத்தில் போர்க்களத்தில் உயிர் துறந்த வீரர்களுக்கு எழுப்பப்படும் நடுகல்லும், தெய்வமும் இணைந்த கோயிலாகும்). பாண்டியருக்குப் பகை நிலையில் நின்று போரிட்ட பல்லவ மன்னனின் துணைவன் கங்க மன்னன் பிருதிவிபதி நினைவாக எழுப்பப்பட்ட திருபுறம்பியம் பள்ளிப்படைக்கு ஆழ்வார்க்கடியான் வந்து சேர்ந்து இருட்டும்வரை மறைந்து இருந்தான்.
பின் இருவர் இருவராக ஆறுபேர் வந்து கூடினர். பின்னர் சோமன் சாம்பவனும் இடும்பன்காரியும் வந்து இணைந்து கொண்டனர். ரவிதாஸன் என்பவன் இலங்கைக்கும் தொண்டை மண்டலத்துக்கும் இரு குழுவாகப் பிரிந்துச் சென்று பகைவர்களை ஒரே நேரத்தில் கொல்ல வேண்டுமென்றும், அதற்கான பொருளைச் சோழரின் கருவூலத்திலிருந்தே எடுத்து வந்ததாகக் கூறி பொன் நாணயங்களைக் காண்பித்தான்.
இடும்பன்காரி பணியாள் போல சம்புவரையர் மாளிகையில் நடித்து, முதல்நாள் நடந்த சம்பவங்களைத் தெரிந்து கொண்டதைக் கூறினான். ஆழ்வார்க்கடியான் மற்றும் வந்தியத்தேவனைப் பற்றிக் கூறியபோது ரவிதாஸன், ஆழ்வார்க்கடியான் செம்பியன் மாதேவியின் ஒற்றனாய் இருக்கலாம் எனக் கூறி அவனை எங்கு பார்த்தாலும் கொன்று விடுமாறு கூறினான். அப்போது ஆழ்வார்க்கடியான் இருந்த இடத்தில் சலசலப்புத் தோன்ற, நெருங்கி வந்தவர்கள் மீது வெளவாலை எறிந்துவிட்டு ஆழ்வார்க்கடியான் இருளில் மறைந்து தப்பினான்.
வந்தியத்தேவன் காலையில் புத்துணர்ச்சியுடன் நன்கு அலங்கரித்துக்கொண்டு, அரசரைத் தரிசிக்கக் கிளம்பினான். கோவிலுக்கு பூக்கூடையுடன் கிளம்பிய சேந்தன் அமுதனிடம் பேசிக்கொண்டே, குதிரையை அங்கேயே விட்டுவிட்டு கோட்டை வாசலுக்கு நடக்க ஆரம்பித்தனர். சேந்தன் அமுதனின் அன்னையின் தமக்கை இறந்து விட்டார் எனவும் தமையனார் ஒருவர் கோடியக்கரையில் குழகர் கோயிலில் கைங்கர்யம் செய்வதாகவும் கூறினான். சேந்தன் அமுதனின் மாமன் மகளான பூங்குழலி நன்கு பாடுவாளெனவும், அவள் பாடினால் சமுத்திரமும் காட்டு விலங்கும் கூட மெய்மறந்து போகுமெனவும் சிலாகித்தான். சேந்தன் அமுதனுக்கு பூங்குழலி மீது இருந்த ஆசையை உணர்ந்து கொண்ட வந்தியத்தேவன், “திருமணம் செய்து கொள்ளலாமே” என்று கிண்டல் செய்ய, சேந்தன் அமுதன் அதற்கு, பூங்குழலியின் சம்மதத்திற்குக் காத்திருப்பதாகக் கூறினான். பழுவேட்டரையரின் திருமணத்தைப் பற்றிப் பகடியாய் வந்தியத்தேவன் பேச, சேந்தன் அமுதன் அதைக் கண்டித்தான்.
கோட்டைக்குள் செல்லும்போது இத்தகைய பேச்சு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரித்தான். பழுவேட்டரையர்களை எக்காரணத்தைக் கொண்டும் பகைத்துக் கொள்ளக் கூடாது எனவும், அவர்கள்தான் இங்கு அதிகார மையம் என்பதையும் புரிய வைத்தான்.
பழையாறையிலிருந்த சுந்தர சோழரைக்கூட, வீரபாண்டியனின் மரணத்துக்குப் பிறகு பாண்டியர்களால் ஏதாவது ஆபத்து நேரலாம் என்பதால் தஞ்சையில் தங்கள் பாதுகாப்பில் பழுவேட்டரையர்கள் வைத்திருப்பதாகக் கூறினான். இரு கால்களும் உணர்ச்சியற்று இருப்பதால் சக்ரவர்த்தியான சுந்தரசோழர் எங்குமே செல்ல முடியாது என்றும் வருந்தினான். பழுவேட்டரையர்களின் அதிகாரத்தில் ஒட்டுமொத்த நாடும் இருப்பதால்தானே நாட்டுக்கு எதிரான சதியில் ஈடுபடுகிறார்கள் என உள்ளுக்குள் மருகிய வந்தியத்தேவன், சேந்தன் அமுதனிடம் விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய மனக்கோட்டைகளுடன் கோட்டை வாசலை நெருங்கினான்.
- சவிதா

Comments (0)