ஆழ்வார்க்கடியான் என்னும் திருமலை நம்பியை அழைத்து எப்பொழுதும் உலகநடப்புகளை அறிந்து கொள்ளுதல் குந்தவையின் வழக்கமாயிருந்தாலும் பறையறிவிப்பின் மூல காரணத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமே மேலோங்கியிருந்தது. 

ஆழ்வார்க்கடியான் வரும்பொழுது வீதியில் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் கம்சன் போல் முகமூடி தரித்து வேடம் பூண்டு ஆடிக் கொண்டிருந்தவனின் குரலை எங்கோ கேட்டது போலவே இருக்கிறதே என்று யோசித்தபடியே வந்து இளவரசிக்காகக் காத்திருந்தான். குந்தவை நடைமுறை விஷயங்களைக் கேட்டபின், நந்தினியைப் பற்றி காழ்ப்புடன் பேசி நலம் விசாரிக்க, ஆழ்வார்க்கடியான் பொறுமையாகவே தகுந்த பதிலைக் கூறினான். சற்று முன் பறையறிந்து சென்றதைப் பற்றி குந்தவை கேட்கவும், அது ஒரு ஒற்றனைப் பற்றி என்று ஆழ்வார்க்கடியான் கூறவும் குந்தவை ஆர்வமாய்க் கேட்கலானாள். அவன் ஒரு முரட்டு வாலிபனென்றும் சக்ரவர்த்தியின் உடல்நிலையைப் பற்றியும் அடுத்து பட்டத்துக்கு வரப்போகிறவர்களைப் பற்றியும் தன்னிடமும் குடந்தை ஜோசியரிடமும் விசாரித்ததைக் கூற, தான் அங்கு அவனை சந்தித்ததாகக் குந்தவை கூறினாள். மேலும், எங்கு அவனைக் கண்டாலும் தன்னிடம் கொண்டு வந்து சேர்க்குமாறு குந்தவை கூற, ஆழ்வார்க்கடியான் விஷமப் புன்னகை செய்தபடி ‘அவனே உங்களைத் தேடி வருவான்’ என்று கூறினான். செம்பியன் மாதேவியைச் சந்தித்ததையும் குந்தவையைப் பார்க்க வருமாறு அவர் சொல்லச் சொன்னதையும் கூறி ஆழ்வார்க்கடியான் விடை பெற்றான்.

ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து தனது தமையனாரான ஈசான பட்டரைப் பார்க்க சிவன் கோவிலுக்குச் சென்றான். ஈசான பட்டர் சிவனைப் பழித்துப் பேசியதற்காக ஆழ்வார்க்கடியானை வெகுவாகக் கோபித்துக் கொண்டதைப்போல பாவனை செய்தார். அவரின் நடவடிக்கைகளும் விசித்திரமாக இருக்கவே ஆழ்வார்க்கடியான் அவரை விடாமல் பின் தொடர்ந்தான்.  கம்சன் வேடம் பூண்டவனுக்கு ஈசான பட்டர் உதவி செய்வதைப் புரிந்து கொண்டான். காலையில் அந்த மர்ம மனிதனும் ஈசானபட்டரும் மறைந்து செல்வதைக் கவனித்து அவர்களின் பின்னாலேயே சென்றான். இருவரும் ஓடையில் படகில் ஏறியபோது திரும்பிப் பார்த்தவனின் முகத்தைக் கண்டபோது, தன் சந்தேகத்தின்படி அது வந்தியத்தேவன்தான் என்று தெளிந்தான். முதன் மந்திரி அநிருத்த பிரும்மராயரின் அரண்மனைக்குச் சென்று அதன் நந்தவனத்தில் புகுந்து வந்தியத்தேவன் இறங்கப் போகும் இடத்தை நோட்டமிட ஆரம்பித்தான். 

நீரோடைக் கரையில் இருந்து ஈசானபட்டரும் வந்தியத்தேவனும் இறங்கி படிக்கட்டுகளின் வழியாக மேற்புறத்துக்கு வந்ததும் வந்தியத்தேவன் சிலையெனச் சமைந்து நின்றான்.  தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பளிங்குக்கல் மேடையில் அமர்ந்திருந்த குந்தவை எழுந்து நின்று வந்தியத்தேவனை கண்ணோடு கண் நோக்கினாள். உலகமெலாம் ஒருமுறை நின்றுவிட்டதைப் போலவும், அந்த நொடியில் பல யுகங்கள் பயணம் செய்து திரும்பியது போலவும் தாங்கள் யாரென மறந்து ஆதி ஆணும் ஆதிப் பெண்ணுமாய் முதன்முதலாய் கண்டு இச்சை கொண்டது போலவும் இருவரின் மனங்களும் சஞ்சாரம் செய்தன. வெளியில் இதைக் காட்டிக்கொள்ள முடியாமல் இருவரும் தவிக்க, ஈசான பட்டர் தொண்டையைக் கனைக்க, நிஜவுலகை அடைந்த குந்தவை வலிந்து வருவித்துக் கொண்ட கடினக் குரலில், ‘என்னைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என பட்டரிடம் தெரிவித்தது உண்மையா?’ எனக் கேட்க, சீண்டப்பட்டது போல, நீங்கள் யாரெனத் தெரிந்தால்தான் அதைச் சொல்ல முடியும்’ எனத் துடுக்காக வந்தியத்தேவன் கூறினான். 

‘யாரைப் பார்க்க நினைத்தீர்கள்?’ என்று குந்தவை வினவ, சோழர் தொல் குலத்தின் மங்கா மணிவிளக்கை, சுந்தரச் சோழரின் செல்வத் திருமகளை, ஆதித்த கரிகாலனின் தங்கையும் அருள்மொழிவர்மரின் தமக்கையுமான இளைய பிராட்டி குந்தவை தேவியைப் பார்க்க வேண்டுமென நீட்டி முழக்கி நிமிர்வுடன் வந்தியத்தேவன் கூறினான். ‘தானே குந்தவை’ என்று  அவள் கூறவும் குடந்தை ஜோதிடர் வீட்டிலும் அரிசிலாற்றங்கரையிலும் பார்த்ததும் அவரைத்தான் எனக் கேட்டுத் தெளிந்து கொண்டான். அதற்குமேல் அங்கு ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாக அவர்களின் பேச்சு தொடர்ந்தது. எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொண்டிருந்த அதே வேளையில், தங்கள் மனதையும் இருவரும் சொற்களில் மறைத்து வைத்து பரிமாறிக் கொண்டிருந்தனர். வந்தியத்தேவன் கொடுத்த ஓலையைப் படித்த குந்தவை மேலும் மலர்ந்து அடுத்து என்னவென்று கேட்க, ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான் என்று அவன் கூற, அதற்கு முன் முக்கியமானதொரு வேலையை ஒப்படைக்கப் போவதாகக் குந்தவை சொல்ல, வந்தியத்தேவன் மறுத்தான். 

இளவரசர் தன்னை குந்தவையின் அந்தரங்கக் காவலனாக எதை ஏவினாலும் செய்வதற்காகவே அனுப்பினார் எனவும், ஆனால் தான் பழுவேட்டரையர்களைப் பகைத்துக் கொண்டு அவர்களால் தேடப்படுபவனாகவும், நெருங்கிய நண்பனான கந்தமாறானாலேயே துரோகி என்று குற்றம் சாட்டப்படுபவனாகவும் இருக்கிறேன். வீர வைஷ்ணவனான ஆழ்வார்க்கடியான் என்பவன் தன்னை ஒற்று பார்ப்பதாகவும் கூறினான். நந்தினி தன்மேல் ஒரு மந்திரவாதியை ஏவி விட்டிருக்கிறாள் எனவும் இத்தனை இக்கட்டில் தன்னை முக்கியமான காரியத்துக்கு உபயோகப்படுத்துவது குந்தவைக்கு சிக்கலில்தான் முடியும் என்று கூறி வருந்தினான். ஓடையில் படகில் ஏறி அவன் வந்ததிலிருந்து நடந்த கதையை ஒன்றுவிடாமல்  குந்தவை கேட்டுக் கொண்டாள். வந்தியத்தேவனும் வந்து சேர்ந்த கதையைச் சொல்லி, அந்த சந்திப்பு சீக்கிரம் முடிந்து விடாதபடி நீட்டிக் கொண்டே போனான்.

பழுவேட்டரையர்களின் படைவீரர்களால் துரத்தப்பட்ட வந்தியத்தேவன், சேந்தன் அமுதன் காட்டிய வழியில் சென்றுகொண்டிருந்தபொழுது பின்னால் படைவீரர்கள் நெருங்க, சேந்தன் அமுதனிடம் குதிரையை ஓட்டிக்கொண்டு முன்னால் செல்லும்படியும் என்னைக் கேட்டால் ஆற்றில் மூழ்கிவிட்டான் என்று கூறுமாறும் சொல்லித் தப்பிக்க யத்தனித்தான். சேந்தன் அமுதன் பொய் கூறமாட்டேன் எனச் சொல்லவும், வந்தியத் தேவன் நிஜமாகவே நீரில் மூழ்க, தொடர்ந்து வந்த படைவீரர்கள் சேந்தன் அமுதனைத் துரத்திச் சென்ற வேளையில் அவர்களிடமிருந்து தப்பித்து இரவில் அடர்ந்திருந்த தோப்புகளில் மறைந்து பழையாறைக்குச் சென்று கொண்டிருந்தான். இரவில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் உறங்கியபோது நந்தினியின் அரண்மனையில் கேட்ட அதே ஆந்தைக்குரல் கேட்க, தூணில் ஒளிந்து கொண்டு பார்த்தபொழுது அந்த மந்திரவாதி ரவிதாஸன் வந்துகொண்டிருந்தான்.

பார்க்கவே அச்சமூட்டும்படி இருந்த ரவிதாஸன், இருளில் தன்னைக் கவனித்திருக்க மாட்டான் என்று நினைத்திருந்த பொழுது, அவன் வந்தியத்தேவன் கழுத்தை நெறித்து  நந்தினியின் முத்திரை மோதிரத்தைத் தருமாறு கேட்க சமாளித்து தூணைப் பிடித்து காலால் தாக்கிவிட்டுத் தப்பித்தான். பழையாறை நகரில் நுழைய தக்க தருணம் பார்த்துக் காத்திருந்த பொழுது, நாடகக் கோஷ்டியுடன் இணைந்து கம்ஸ வேஷம் தரித்து ஊருக்குள் புகுந்து சிறிது நேரம் தெருக்களில் ஆடிக் களித்தபின் ஆதித்த கரிகாலன் சொன்னபடி ஈசான பட்டரைச் சந்தித்தான். சமணர் முழையில் அவனை ஒளித்து வைத்த ஈசான பட்டர், தக்க நேரம் பார்த்து இளவரசியைச் சந்திக்க அழைத்துச் சென்றார். 

விவரங்களை எல்லாம் கேட்டுக்கொண்ட குந்தவை, இதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறும்படியான அபாயமானதொரு வேலையைத் தரப்போவதாகக் கூற, வானிலேறி விண்ணையே சாடும் வேலையாக இருப்பினும் செய்யக் கூடியவனாக வந்தியத்தேவன் சித்தமானான். திரும்பவும் மண்டபத்திற்கு வந்து  பனை ஓலைத்துணுக்கில் தங்கப் பிடி இட்ட எழுத்தாணியில் குந்தவை எழுதினாள். ‘பொன்னியின் செல்வ! இந்த ஓலை கண்டதும் உடனே புறப்பட்டு வரவும். விவரங்கள் இது கொண்டு வருகிறவர் சொல்லுவார். இவரைப் பூரணமாக நம்பலாம்’ என்று எழுதி அடியில் ஆத்தி இலை போன்ற சித்திரம் ஒன்றை வரைந்து, “உடனே இந்த ஓலையை எடுத்துக்கொண்டு ஈழ நாட்டுக்குச் சென்று அருள்மொழிவர்மரிடம் கொடுத்து, அவரைக் கையோடு கூட்டிவர வேண்டும்” எனக் கட்டளையிட்டாள். 

ஆதித்த கரிகாலரிடம் பணிபுரிந்த வந்தியத்தேவன், சுந்தர சோழரையும் சோழர் குலவிளக்கான குந்தவையையும் சந்தித்த பிறகு, இளவரசர் அருள்மொழிவர்மரையும் சந்திக்கப் போகும் பேறை நினைத்துப் பெருமிதம் கொண்டான். “இப்போதே கிளம்புகிறேன்” என்று ஓலையை வாங்கும்பொழுது குந்தவையின் காந்தள் விரல்களைத் தீண்டியபொழுது மறுபடியும் அவன் உலகம் சுழல மறுத்து நின்றது. ஈசான பட்டரின் குரலைக்கேட்டு நடைமுறைக்குத் திரும்பினான். 

மறுநாள், படைவீட்டு சாலையின் வழியே யானையில் அமர்ந்தபடி குந்தவையும் வானதியும் பராந்தகர் ஆதுரசாலைக்கு வந்து சேர்ந்தார்கள். அந்த வீதியில் ஈழநாட்டுக்குச் சென்றிருந்த வீரர்களின் பெண்டு பிள்ளைகள் குடியிருந்தார்கள். அங்கிருந்தவர்களின் நலத்தை விசாரித்து அவர்களுக்குத் தேவையானதை வழங்க உத்தரவு இடுவது குந்தவையின் வழக்கம். இன்றும் அதுபோல வானதியைப் பரிகசித்தபடி உத்தரவை வழங்கிக் கொண்டிருந்தவளை, தலைமை வைத்தியர் அணுகி வணங்கினார். தான் சொன்ன இளைஞனை இலங்கைக்கு அனுப்பி மூலிகைகள் தருவித்துக் கொள்வதாகச் சொன்ன ஏற்பாட்டை உறுதி செய்துகொண்ட குந்தவை, அவனைப் பற்றிக் கேட்க, வைத்தியர் அந்த இளைஞனுடன் கோடியக்கரை வரை என் மகனும் துணைக்குச் செல்வதாகக் கூறி அவர்களை அறிமுகப் படுத்தினார். 

வானதி வைத்தியர் போல் வேடம் பூண்டிருந்த வந்தியத்தேவனை அடையாளம் கண்டுகொண்டு குந்தவையிடம் கூற, அவள் ஏதும் தெரியாதது போல இருக்கலாம் என்று சமாதானப் படுத்தினாள். குந்தவை வைத்தியரிடம், சக்கரவர்த்திக்கு  வைத்தியம் செய்ய மூலிகை எடுக்கப் போகவேண்டியிருப்பதால் வழியிலுள்ள அரசு அதிகாரிகள் இவர்கள் கோரும் உதவியைச் செய்ய வேண்டும் என்ற திருமந்திர ஓலையையும், கலங்கரை விளக்குக் காவலருக்கு ஒரு ஓலையும் வழங்கப்பட்டதை உறுதி செய்து கொண்டாள். கிளம்பும் அனைத்து ஏற்பாடுகளும் நடந்தபின்னும் ஏதோவொரு சாக்கை வைத்துக்கொண்டு குந்தவையும் வந்தியத்தேவனும் பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒருவழியாக குந்தவை குறிப்புணர்த்த, வந்தியத்தேவனும் வைத்தியர் மகனும் குதிரையில் கிளம்பினர். குந்தவை தன் மனம் வந்தியத்தேவனின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டை எண்ணி அதிசயப்பட்டபடி இருக்க, வானதி அதைக் கண்டுபிடித்தாற்போல் ஏதோ கேட்க, யோசனையுடன் மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

தொடரும்

  • சவிதா

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *