பொன்னியின் செல்வன் – 12
இலங்கையில் நிலைமை அவ்வாறிருக்க, பழையாறையிலிருந்து குந்தவையும் வானதியும் தஞ்சைக்குக் கிளம்பினார்கள். நாட்டில் அரசியல் சூழ்ச்சி நடைபெறுவதை வந்தியத்தேவன் மூலம் கேட்டதிலிருந்து, உடல்நலம் சரியில்லாத தன் தந்தையுடன், சகோதரர்களும் அருகே இல்லாத சூழ்நிலையில், தான் அங்கே இருப்பதுதான் நியாயம் என குந்தவைக்குத் தோன்றிவிட்டது. செல்லும் வழியில் வானதி, அருள்மொழிக்கு ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயர் வந்த காரணத்தைக் குந்தவையிடம் கேட்க, அவள் சொல்லலானாள்.
‘”ருள்மொழிவர்மன் குழந்தையாக இருக்கையில் படகில் குடும்பத்துடன் பொன்னி நதியில் செல்கையில், தவறி நதியில் விழுந்து விட்டான். அனைவரும் பதற, வீரர்கள் நதியில் குதித்துத் தேட, குழந்தை கிடைக்காமல் எல்லோரும் பயந்து விட்டனர். அப்போது படகிலிருந்து சற்று தூரத்தில் ஒரு பெண்ணுருவம் குழந்தையை ஏந்தியபடி தோன்றியது. உடனே சுந்தரசோழர் குதித்து குழந்தையைப் பெற்றுக்கொண்ட வினாடியில் அந்தப் பெண்ணுருவம் சடாரென்று மறைந்து விட்டது. குழந்தையைப் படகில் கொண்டு வந்து சேர்த்த சுந்தரசோழரோ மூர்ச்சையுற்றுப் போனார். பின் அந்தப் பெண் யாரெனத் தெரிந்து கொள்ள முடியாததால் சோழநாட்டின் தெய்வமான பொன்னித் தாயே காப்பாற்றிக் கொடுத்தாள் என்ற பொருளில் ‘பொன்னியின் செல்வன்’ என அருள்மொழிவர்மனை அழைக்கத் தொடங்கினர்” என குந்தவை சொல்லி முடித்தாள். இருவரும் தஞ்சையை அடைந்தார்கள்.
வரவேற்ற நந்தினியிடமும் பழுவேட்டரையர்களிடமும் குந்தவை பூடகமாக வார்த்தைப் போர் நிகழ்த்த ஆரம்பித்தாள். நந்தினியும் அதைப் புரிந்து கொண்டு திருப்பி அடிக்க, அந்தச் சொற்போரில் கலந்துகொள்ள முடியாமலும் புரியாமலும் வானதி தவித்தாள். அன்றைய முன்னிரவில் வானதி தவிர, அனைத்துப் பெண்களும் நவராத்திரி விசேஷ பூஜைக்காக துர்க்கை கோவிலுக்குச் சென்று விட, வானதி தனித்து மாடத்தில் நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு அழுகுரலும் புலம்பலும் கேட்க, கேட்ட இடத்தை நோக்கி நடந்தாள்.
“என்னை ஏன் உயிருடன் சித்ரவதை செய்கிறாய்? உன்னைத் தெரியாமல் கொன்று விட்டதற்கு ஏன் இப்படிப் பழிவாங்குகிறாய்?” என்றெல்லாம் சொல்லிப் புலம்பியும் அழுதும் கொண்டிருந்தது சுந்தர சோழர்தான் என்று தெரிந்து வானதி திகைத்துப் போனாள். அப்படி அவர் பார்த்து புலம்பிக் கொண்டிருந்த உருவம் எதுவென எட்டிப் பார்த்தபொழுது, பழுவூர் இளையராணியின் உருவம் போல மங்கலாகத் தெரியவும் வானதி அங்கிருந்து நகர்ந்து செல்ல முயற்சித்து மூர்ச்சையடைந்தாள்.
அடுத்த நாள் காலையில் சுந்தர சோழர் குந்தவையை அழைத்து வானதியைப் பற்றி விசாரித்துவிட்டு, தஞ்சை அரண்மனை இளம்பெண்களுக்கு ஏற்றதல்ல. இங்கு பேய் நடமாடுகிறது என்றெல்லாம் சொல்ல, குந்தவை அவரின் உடல் தேறும் வரை இங்குதான் இருப்பேன் என மறுமொழி கூறினாள். பெருமூச்செறிந்த சுந்தரசோழர், இனி தான் உடல்நிலை தேற வாய்ப்பில்லை என்றும் அதற்கு தன் மனக்கவலை மட்டுமே காரணம் எனவும் கூறினார். நடக்கும் சதிகளைப் பற்றி குந்தவை லேசாக எடுத்துரைத்து, மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன என்று கூற, சுந்தரசோழர் மகிழ்ந்து செம்பியன் மாதேவியை அழைத்து முதலில் அவர் சம்மதம் கேட்டு மதுராந்தகனுக்கே பட்டம் கட்டி விடலாம் எனக் கூறினார்.
குந்தவை துணுக்குற்று, “இது உங்கள் வாரிசுக்கு நீங்கள் செய்யும் துரோகமில்லையா?” என்று கேட்க, “இல்லை, என் சாபக்கேட்டை என் புதல்வர்களுக்குக் கடத்த விரும்பவில்லை” என்று சுந்தரசோழர் சொல்லவும் குந்தவை அதிர்ந்தாள். மேலும் சொல்லும்படி அவள் வற்புறுத்த, சுந்தரசோழர் அவளிடம் பின்வரும் கதையைக் கூறினார்.
“என் வாலிப பிராயத்தில், இலங்கையில் போருக்குச் சென்றிருந்தேன். போர் தோல்வியில் முடியவே, மனம் குமைந்து யாரும் அறியாமல் கடலில் குதித்து ஒரு தீவில் கரை ஒதுங்கினேன். எதிர்பாராத ஒரு தருணத்தில் என்னைக் கொல்ல வந்த கரடி ஒன்றிடமிருந்து என்னைக் காப்பாற்றினாள் கரையர் குலப் பெண்ணொருத்தி. அவள் வாய் பேச முடியாத ஊமைப் பெண். நான் அவளுடன் அந்தத் தீவில் சில நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தேன். ஒருநாள் என்னைத் தேடிக் கொண்டு நம் நாட்டினர் கப்பல்களில் வந்து இறங்கினர். அந்தப் பெண்ணிடம் கண்டிப்பாகத் திரும்பி வருவதாக வாக்களித்துவிட்டு நான் நம் நாட்டுக்குத் திரும்பினேன். உடனே நான் ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயம் இருந்தது.
அப்பொழுது என் பாட்டனார் பராந்தக சோழன் சாகும் தருவாயில் இருந்தார். சோழநாட்டின் மேன்மையை நிலை நாட்ட வேண்டும் என்று என்னிடம் உறுதி வாங்கிக் கொண்டார். அவருக்குப் பின் என் பெரியப்பா கண்டராதித்தர் சக்ரவர்த்தியானார். அப்போதுதான் அவர் மழவரையர் மகளான செம்பியன் மாதேவியை மணந்திருந்தார். ஆனபோதும் அவர் என்னையே யுவராஜனாக பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். இருவரும் பட்டாபிஷேகம் முடித்து மக்களுக்கு அரண்மனை மேன்மாடத்தின் முன்றிலில் காட்சிதர நின்றிருந்தோம். வாழ்த்துத் தெரிவித்த மக்களுக்கிடையே கண்ணீருடன் அந்த ஊமைப் பெண்ணின் முகம் தெரிய, நான் திகைத்து மயங்கி விழுந்தேன்.
மயக்கம் நீங்கி எழுந்தவுடன் என் நண்பன் அநிருத்தனை அழைத்து அந்தப் பெண்ணின் அடையாளங்களைச் சொல்லி, கண்டுபிடிக்க வேண்டுமெனக் கண்டிப்புடன் கேட்டிருந்தேன். கோடியக்கரையில் நான் சொன்ன அடையாளங்களுடன் ஒரு பெண் இருப்பதாகவும் அழைத்தால் வர மறுத்துவிட்டதாகவும் அநிருத்தன் கூற, நான் நேரடியாகவே சென்றேன். ஆனால், அங்கு சென்று விசாரித்தபொழுது அவள் கலங்கரை விளக்குத் தூணின் மீது ஏறி விழுந்து விட்டதாகவும் பொங்கி வந்த கடலின் சீற்றத்தில் மூழ்கிவிட்டிருக்கலாம் எனவும் கூறினார்கள். நான் அளவுகடந்த துன்பம் அடைந்தாலும், தஞ்சைக்கு அவளை அழைத்து வந்தால் நேரும் சங்கடங்கள் இல்லாமல் போனதை எண்ணி ஒருவகையில் அமைதியும் அடைந்து தஞ்சைக்குத் திரும்பி ராஜ்யப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பித்தேன்.
ஆனால், அவளின் உருவம் என் கனவுகளில் வந்து அலைக்கழிக்கும். நாளடைவில் அதையெல்லாம் மறந்துவிட்டிருந்தாலும் பின்பொருநாள் அருள்மொழிவர்மன் காவிரியில் விழுந்த நாளன்று காவிரியம்மனே வந்து காத்து நின்றதாக நீங்கள் கருதினீர்கள். ஆனால், வந்தது அவள்தான். அதேபோல, ஆதித்த கரிகாலன் இளவரசப் பட்டம் ஏற்றதும் தாய்மார்களின் ஆசி பெற அந்தப்புரம் சென்ற அவனுடன் நான் சென்றபோது, தாய்மார்களுடன் அவளது ஆவியும் நின்றிருந்ததிகைக்க கண்டு அன்றும் நான் மூர்ச்சையுற்றேன்.
அப்போதெல்லாம்கூட என் குற்றவுணர்வும் சித்தப்பிரமை காரணமாகவும் இப்படி எண்ணிக் கொள்கிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போது நள்ளிரவில் நாலைந்து முறையாக வந்து இம்சை செய்கிறாள். அதைப் பார்த்துதான் வானதி மயங்கி வீழ்ந்திருக்க வேண்டும். அதனால்தான் சொல்கிறேன், இந்த சாபமுள்ள சோழ சாம்ராஜ்யம் என் பிள்ளைகளுக்கு வேண்டாம். மதுராந்தகனுக்குக் கொடுத்து விடலாம்” என சுந்தர சோழர் சொல்லவும், குந்தவை குறுக்கிட்டு “இதற்கு செம்பியன் மாதேவி பாட்டி ஒத்துக்கொள்வாரா? உலகம் என்ன சொல்லும்? அரசாள்வதற்கென எந்தத் தகுதியும் வேண்டாமா?” என்றெல்லாம் கேட்டாள். சுந்தரசோழர் அனைத்தையும் மறுத்து வாதிட்டு, உடனடியாக செம்பியன் மாதேவியை அழைத்து வருமாறு குந்தவையிடம் வலியுறுத்தினார். அப்போதைக்கு சுந்தரசோழரை சமாதானம் செய்து, தன் அன்னையைத் தனியே அழைத்து, “ஒரு கணமும் அரசரைத் தனிமையில் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று குந்தவை எச்சரித்தாள்.
ஆதுர சாலை எனப்படும் தர்ம வைத்தியசாலை ஒன்றைத் தஞ்சையில் துவக்கி வைத்தாள் குந்தவை. தனக்குரிய சர்வமானிய நிலங்களை அந்த ஊர் விவசாயிகளே சகல உரிமைகளுடன் அனுபவித்துக்கொண்டு, ஆதுரசாலை வைத்தியருக்கு ஆண்டு தோறும் நெல்லும், தினமும் பசும்பாலும், ஆட்டுப்பாலும், இளநீரும் அனுப்ப வேண்டியது என தான சிலா சாஸனம் செய்து கொடுத்தாள் குந்தவை. அந்த விழாவில் சுந்தர சோழர் பிள்ளைகளுக்கு மக்கள் கொடுத்த ஆசி முழக்கங்கள் பெரிய பழுவேட்டரையருக்கு எரிச்சலை அளித்தன.
காயமுற்று சிகிச்சை பெற்றுக் கொண்டு, நந்தினி அரண்மனையில் இருந்து வந்த கந்தன்மாறனைப் பார்க்கக் குந்தவை சென்றாள். குந்தவை வந்த குதூகலத்தில், கந்தன்மாறன் இன்னும் அதிகமான குற்றச்சாட்டுகளை வந்தியத்தேவன் மீது புனைந்தான். அப்போது வைத்தியர் மகனை கோடிக்கரையில் இருந்து ஒற்றனென்று பிடித்துக் கொண்டு வந்ததை மூவரும் பார்த்தனர். நந்தினி சூழ்ச்சியாகப் பேசி, வந்தியத்தேவனை இலங்கைக்கு அனுப்பிய விஷயத்தைக் குந்தவையிடமிருந்து வரவழைத்தாள். வந்தியத்தேவனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லி குந்தவையை வருத்தினாள்
நந்தினியிடம் சொற்போரில் தோற்றுப்போன குந்தவை, சினத்துடன் சின்ன பழுவேட்டரயரைச் சந்தித்தாள். தான் சக்கரவர்த்திக்கு மூலிகை தேடி வர அனுப்பித்த வைத்தியர் மகனை ஒற்றனென்று சிறைப் பிடித்தது தவறென்று கூறி விடுதலை செய்ய வேண்டினாள். சின்ன பழுவேட்டரையர் பாதாளச் சிறையின் சாவியைக் குந்தவையிடம் கொடுத்து, “நீங்களே விடுதலை செய்து அதற்குப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். குந்தவை அதை ஏற்றுக்கொண்டு சாவியுடன் சிறைச்சாலையை நோக்கி நடந்தாள். சின்ன பழுவேட்டரையர் அதிருப்தியுடன் விலகி நடக்கலானார்.
- சவிதா

Comments (0)