பொன்னியின் செல்வன் 17
வானதியை அனுப்பிவிட்டு பழையாறை சிறைச்சாலைக்குச் சென்று வந்தியத்தேவனைச் சந்தித்தாள் குந்தவை. சற்றும் தயங்காமல் தன் மனதை அவனிடம் திறந்து காட்டினாள். அந்தஸ்து பேதத்தைச் சொல்லித் தயங்கிய வந்தியத்தேவனிடம் தன் கரங்களை நீட்டினாள். உணர்ச்சி மேலிட அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டு தன் கண்களில் ஒற்றிக்கொண்டான் வந்தியத்தேவன். எதிர்ப்பேதும் இல்லாமல் அவனது கரங்களோடு தன் கரங்களைப் பிணைத்துக்கொண்டவள், “உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒருநாளும் பற்றாது” என உறுதிமொழி கூறியதில் அவன் தன்னைமறந்து நின்றான்.
அவன்மீதான முதன்மந்திரியின் குற்றச்சாட்டைக் கூறியவள், ஆதித்த கரிகாலனைக் காத்து நிற்க வேண்டுமென வந்தியத்தேவனிடம் கேட்டுக்கொண்டாள். பழுவூர் இளையராணியைப்பற்றி ஆதித்த கரிகாலனிடம் எடுத்துச் சொல்லி, உடன்நின்று நிழல்போலக் காக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்ட குந்தவையிடம் கரிகாலர் அவ்வளவு சீக்கிரம் அதை நம்பக்கூடியவர் அல்ல என்றும் தன்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்றும் ஆறுதல் கூறினான்.
அங்கிருந்து கிளம்பிய வந்தியத்தேவன் வழியில் ஆழ்வார்க்கடியானைச் சந்தித்தான். கொள்ளிடத்தில் அவனுடன் வந்து சேர்ந்துகொள்வதாக அவன் கூறிவிட்டுப் போய்விட்டான். போனமுறை இதே வழியில் பயணித்ததற்கும் இப்போது பயணிப்பதற்கும் உண்டான வேறுபாட்டை அசைபோட்டபடிச் செல்ல ஆரம்பித்தான். வழியில் வானதி பல்லக்கில் போவதைப் பார்த்தவன் அவளுடன் நின்று பேச விரும்பாமல் குடந்தை ஜோதிடரின் வீட்டுக்குச் சென்றான்.
முதன்முதலாக இளைய பிராட்டியைப் பார்த்ததைக் காதலுடன் நினைவுகூர்ந்தவன், சோதிடரிடம் தூமகேதுவைப்பற்றியும் இளவரசரைப் பற்றியும் ஆருடம் கேட்டுக்கொண்டிருக்கையில் வானதி அங்கு வந்துசேர்ந்தாள். தன்னைப் பார்த்துவிட்டு நின்று பேசாமல் வந்ததைச் சொல்லிக்காட்டியவள், தான் புத்த பிட்சுணி ஆகப்போவதாகவும் தன்னோடு சூடாமணி விஹாரம்வரை துணைக்கு வந்து விட்டுவிடும்படியும் வந்தியத்தேவனிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.
வந்தியத்தேவன், இளவரசரின் பேரில் பூங்குழலிக்கு இருந்த அப்பழுக்கற்ற காதலையும் இளவரசருக்கும் அவள்மேல் உள்ள பிரியத்தையும் தெரிந்துவைத்திருந்ததால் ஒருவகையில் வானதியின்மேல் இருந்த லேசான வெறுப்பு அவள் பேசப்பேசக் குறைந்து இல்லாமல் போய்விட்டது. அவள்பால் உள்ளம் கனிந்திருந்தது.
முதன்மந்திரியின் ஓலையை எடுத்துக்கொண்டு காஞ்சி செல்வதால் தன்னால் வர இயலாது என்பதைச் சொல்லித் தன்மையாகவே மறுத்தான். வானதி சற்று வருந்தியபோதும் துணிச்சலுடன் தனியாகவே செல்வது என முடிவெடுத்து உடனே கிளம்பிவிட்டாள். அத்தனைக்காலம் பயந்தாங்கொள்ளியாகவே இருந்த பெண் இவ்வாறு மாறியிருந்ததைக்கண்டு வந்தியத்தேவனும் சோதிடரும் வியந்துபோனார்கள்.
சோதிடர் கொள்ளிடக் கரையில் காளாமுகர்களின் சங்கமம் நடந்துகொண்டிருக்கும் தகவலை அவனிடம் கூறினார். பின் அங்கிருந்து கிளம்பிய வந்தியத்தேவன், வழியில் ஏதோ அபயக்குரலைக் கேட்டுத் திரும்பினான். வானதியின் தோழியைக் கட்டிப்போட்டுவிட்டு வானதியின் பல்லக்கைச் சிலபேர் கடத்திச் செல்வதைக்கண்டு தொடர்ந்தான். இருட்டில் அவர்கள் செல்லும் பாதை தெரியாமல் மறைந்துபோக திகைத்து நின்றுவிட்டான்.
அப்போது மின்னல் ஒளியில் களத்து மேட்டில் குதிரை ஒன்று ஏறுவது தெரிந்தது. அதன்மேல் இருந்தவர் மதுராந்தகர் என்றும் தெரிந்தது. அங்கிருந்த வீரன் தீவட்டியை உயர்த்தவே, மதுராந்தகரின் குதிரை மிரண்டு தறிகெட்டு ஓடியதையும் அடுத்த மின்னல் வெளிச்சத்தில் கண்டான். காப்பாற்ற நினைத்துத் தொடர்ந்து போக இருளில் பாதை தட்டுப்படவில்லை. மழை வேறு வலுக்க ஆரம்பிக்க, அங்கிருந்த ஒரு மண்டபத்தில் ஒதுங்கினான்.
அப்போது நான்கு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று தனியே நிற்பதைக்கண்டு பேச்சுக் கொடுத்தான். அந்த குழந்தை குதிரை வேண்டுமென அம்மாவிடம் கேட்டதாகவும் அம்மா தர மறுத்ததால் ஓடி வந்துவிட்டதாகவும் கூறியது. மேலும் மண்டபத்திற்கு வெளியில் வந்தால் புலி கடித்து விடுமென அம்மா கூறியதாகவும் காஞ்சியில் தன் முக்கிய எதிரி இருப்பதாகவும் தான் புலியை விழுங்கும் மகர மீன் எனவும் கூற வந்தியத்தேவன் குழப்பமடைந்தான்.
அப்போது ஒரு சிறு கூட்டம், ‘சக்ரவர்த்தி’ என அழைத்தபடி அந்தக் குழந்தையைத் தேடி வந்தது. அவர்களில் தேவராளன், ரவிதாசன், இடும்பன் காரி என அனைவரும் இருந்தனர். அவர்கள் வந்தியத்தேவனை அங்கிருந்து திருப்புறம்பியம் பள்ளிப்படைக்கு நந்தினி வர இருப்பதாகச் சொல்லிக் கூட்டிச் சென்றனர். அங்கு சென்று சிலமணி நேரம் காத்திருந்தபொழுது நந்தினி தன் வழக்கமான ஆடை அணிகலன்களைத் துறந்து தலைவிரிகோலமாய் துர்க்காதேவிபோல் பல்லக்கில் வந்து இறங்கினாள். அங்கு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த குழந்தை அவளை ‘அம்மா’வெனக் கட்டிக்கொண்டது.
எல்லோரையும் முன்வரச் சொன்ன நந்தினி, அந்த வாளை எடுத்துக் குழந்தையின் கையில் கொடுத்தாள். பின் அனைவரிடமும் ‘நான் நாடகம் ஆடுகிறேன் என்றும் அரண்மனை சுகங்களில் செய்துகொடுத்த சபதத்தை மறந்துவிட்டேன் என்றும் சொன்னீர்கள். சபதம் தீர்க்கும் வேளை வந்துவிட்டது. சம்புவரையர் மாளிகையில் சமரசப் பேச்சு நடைபெற அத்தனைத் திட்டங்களும் தீட்டிவிட்டேன். சிற்றரசர்கள் இனிமேல் எப்போதும் ஒன்றுகூடாவண்ணம் அது நிகழ்ந்தேறும். நம் சபதத்தை யார் முடிக்கப் போகிறார்களோ அவரைச் சக்ரவர்த்தியே வாளெடுத்துக் கொடுத்துத் தீர்மானிக்கட்டும். மிச்சமிருப்பவர்கள் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்’ எனக் கூறி அந்தக் குழந்தையிடம் ‘சபதத்தை முடிக்க யார் தைரியசாலி எனத் தோன்றுகிறதோ அவரிடம் இந்த வாளைக் கொடு’ என்று கேட்டுக் கொண்டாள்.
குழந்தை அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு வாளை நந்தினியிடமே கொடுத்தது. அனைவரும் திகைத்தபோதும் வாளை நெஞ்சோடு அணைத்துக்கொண்ட நந்தினி, வீரபாண்டியனின் படுகொலைக்குப் பழிவாங்கும் பாக்கியம் தனக்கே கிடைத்ததாக மகிழ்ந்து கண்ணீர்விட்டாள்.
தொடரும்
- சவிதா

Comments (0)