பொன்னியின் செல்வன் – 18
குழந்தைச் சக்கரவர்த்தியை சிம்மாசனம் போல ஒன்றில் அமரச் செய்து நந்தினி நடத்திய நாடகம் முடிந்தது.
‘ஆதித்த கரிகாலனை பழி முடிக்க வேண்டுமெனில் அவனது கடம்பூர் வருகையைத் தடுக்கச் செல்லும் வந்தியத்தேவனை தடுக்க வேண்டும்..
அவனை நாங்கள் பிடித்து வைத்திருக்கிறோம்’ என்று ரவிதாசன் நந்தினியிடம் சொல்லி வந்தியத் தேவனை அவள் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.நந்தினியும் அவன் தங்களோடு சேர்ந்து விடும்படி மீண்டும் கூறினாள்..வந்தியத் தேவன் மறுக்கவே ரவிதாசன் அவனை கொன்று விடலாம் என்றான்..நந்தினியோ அவனைக் கட்டிப் போட்டுவிட்டு போய் விடலாம் என்று கண்டிப்பாக கூறி விட்டாள்..அதன் படி வந்தியத் தேவனை கட்டிப் போட்டுவிட்டு நந்தினியும் அந்த கூட்டத்தாரும் போய் விட்டார்கள்.
அப்போது அங்கு வந்த ஆழ்வார்க்கடியான் வந்தியத் தேவனை கட்டவிழ்த்த பின்னர் அவனும் வந்தியத் தேவனும் காஞ்சிப் பயணத்தைத் தொடங்கினர்.ஆழ்வார்க்கடியான், காளாமுகர்கள் சங்கமக் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்று பார்த்து வருமாறு தன்னை அநிருத்தர் அனுப்பியதாகக் கூறினான்.நாட்டில் சில முக்கிய குடும்பங்கள் காளாமுகத்தை சேர்ந்திருந்தபடியால் அவர்களின் ஆதரவு மதுராந்தகனுக்கு கிடைத்தால் நல்லது என்பதற்காக, பெரிய பழுவேட்டரையர் மதுராந்தகரை அங்கு வரச் சொல்லியிருந்தார்.அவரை அங்கு போக விடாமல் தடுப்பதற்காக ஒரு வீரனைக் கொண்டு குதிரையை மிரளச் செய்து மதுராந்தகரை கீழே விழ வைத்தது அநிருத்தரின் வேலையாய்த் தான் இருக்கும் என்று ஆழ்வார்க்கடியான் கூறினான்.வானதியை காப்பாற்றவும் அநிருத்தர் தக்க ஏற்பாடு செய்திருப்பார் எனவும் ஆழ்வார்க்கடியான் வந்தியத் தேவனை சமாதானப் படுத்தி, நாம் காஞ்சியை நோக்கி செல்வோமென அறிவுரை கூறினான்.
ஆழ்வார்க்கடியான் சொன்னது போல்தான் நடந்தது.வானதியை கட த்தியவர்கள் அநிருத்தரிடம் கொண்டு வந்துதான் சேர்த்தார்கள்.அநிருத்தர், பொன்னியின் செல்வரைப் பற்றிய உண்மையை கூறச் சொல்லி வானதியை மிரட்டத் தொடங்கினார்.உறுதியுடனும், அச்சம் இல்லாமலும் கேள்விகளை எதிர்கொண்ட வானதி என்ன கேட்டாலும் தான் உண்மையை சொல்லப் போவதில்லை என்று மறுத்தாள்.
அப்போது வந்த யானையைக் காட்டி உண்மையைச் சொல்லாவிடில் இந்த யானை உன்னை தூக்கி எறிந்து விடும் என்று முதன்மந்திரி மிரட்டிய பின்னரும் வானதி சொல்லவில்லை.வானதியை தன் தும்பிக்கையால் தூக்கி தனது மேலுள்ள அம்பாரியில் விட்டது அந்த யானை.அம்பாரியில் தயாராக இருந்த குந்தவை அவளைத் தாங்கிக் கொண்டு, நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள ஆனைமங்கலத்திற்குத்தான் நாமிருவரும் செல்லப் போவதாகக் கூற வானதி சமாதானமுற்றாள்.
வானதியை அனுப்பிவிட்டு அநிருத்தர் திரும்பும் வழியில் மதுராந்தகர் அடிபட்டு கிடப்பதைப் பார்த்து பக்கத்திலிருக்கும் கிராமத்துக்கு எடுத்து சென்று மருத்துவ உதவி செய்தார்.மதுராந்தகரிடம் இதுவரை நடந்ததெல்லாம் தமக்குத் தெரியும் என்று முதன்மந்திரி கூறினார்..கடம்பூருக்கு இளைய ராணியின் மூடுபல்லக்கில் மதுராந்தகன் சென்றதையும் அதன் பேரிலான அதிருப்தியையும் தெரிவித்துக் கொண்ட அவர்,
ராஜ்யத்தின் மீதான உரிமை மதுராந்தகருக்கு இருக்கிறது எனவும் அதை நேரில் சக்ரவர்த்தியிடமே தெரிவித்து உரிமை கோரலாம்.அதற்கு சதிக் கூட்டம் எல்லாம் தேவையே இல்லை என்றார்.
மதுராந்தகரின் ஆற்றாமை சினமாய் தலைக்கேறியது.
‘என்னை பற்றிய ரகசியங்கள் அறிந்தவர் நீர்தான் என எண்ண வேண்டாம். எனக்கும் தெரியும்.என் தாயாரின் வயிற்றில் இருக்கும்போதே எனக்கு எதிராக சதி செய்தவர் நீங்கள்.நான் பிறந்த பிறகும் என்னை கொன்றுவிடுவதற்கு ஏற்பாடு செய்தீர்கள்.
குழந்தை பிறந்ததும் அது பெண் குழந்தையென நினைத்து கோவில் பட்டரிடம் கொடுத்து வளர்க்க ஏற்பாடு செய்தீர்கள்.ஆனால் அரைநாழிகை கழித்து நான் பிறந்தேன். என்னைக் கொல்ல நீங்கள் செய்த ஏற்பாடுகள் தவறிப் போனது.என் ஜாதக பலத்தால் நான் இதுவரை பிழைத்திருக்கிறேன். இதையெல்லாம் பொய் என்று உங்களால் முடிந்தால் மறுத்து பாருங்கள் ‘ என ஆவேசமாக முழங்கினான்.
அநிருத்தர் நிஜமாகவே ஸ்தம்பித்து போனது போலானார்.இளவரசருக்கு இத்தனை விவரங்கள் தெரிந்திருக்கும் போது தான் சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று கூறி அத்துடன் முடித்துக் கொண்டார்.
நாகப்பட்டினத்தில் சூடாமணி விஹாரத்தில் சுரத்துடன் அடைக்கலமடைந்திருந்த பொன்னியின் செல்வனுக்கு ஆச்சாரிய பிஷுவின் பக்கத்து அறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.சுர வேகம் காரணமாக பெரும்பாலும் இளவரசர் பிரக்ஞையற்றே இருந்தார்.கனவிலும் நனவிலும் திடமாக இருக்க இயலாமல் அலைக்கழிந்தார்.
மூன்று நாட்களுக்குப் பின் நினைவுக்கு வந்து ஆச்சார்ய பிட்ஷூவிடம் தன்னைக் கூட்டி வந்தவர்கள் யார்? எப்படி வந்தேன் என்றெல்லாம் கேட்டு அறிந்தார்.
அச்சமயத்தில் பூங்குழலியும் சேந்தன் அமுதனும் இளவரசரைக் கூட்டிச் செல்ல ஓடத்தில் காத்திருப்பதாக செய்தி கிடைத்ததும்ஆச்சாரிய பிஷுவிடம் தன் நன்றியையும், அன்பையும் தெரிவித்து பின்னொரு நாளில் திரும்ப சந்திப்பதாகக் கூறி விடைப்பெற்றார்.
ஓடத்தில் காத்திருந்தவர்கள் மூலம் குந்தவையும், வானதியும் நந்தி மண்டபத்தில் காத்திருப்பதாக அறிந்து கொண்டார்.நந்தி மண்டபத்தில் காத்திருந்த வானதி பூங்குழலியும் ஓடத்தில் வருவதைக்கண்டு ஒதுங்க முயல குந்தவை அவளை அங்கேயே இருக்குமாறு பணித்தாள்.
நலம்பெற்று வந்த இளவரசரை உச்சி முகர்ந்த குந்தவையின் பாதத்தை பணிந்து எழுந்தான் பொன்னியின் செல்வன்.இருவரும் பாசத்தில் கண்ணீர் உகுத்தனர்.
இலங்கையில் நடந்த சம்பவங்களையும் ஊமைராணியைப் பற்றியும் தெரிந்து கொண்ட குந்தவை,பழுவூர் இளையராணி நந்தினி அவர்களின் தமக்கையாகவே இருக்க முடியும் என்பதையும்,அது பற்றி உண்மை தெரிந்தவர்கள் செம்பியன் மாதேவியும், முதன்மந்திரி அநிருத்தரும்தான்.ஆனால் இருவரும் வாயைத் திறக்கவே மாட்டார்கள் என்றும்,
நந்தினியையும் ஊமைராணியும் பார்த்த ஒருவன் வந்தியத்தேவன் மட்டுமே என்றும் கூறினாள்.
வந்தியத்தேவனை வெகுவாகப் பாராட்டிய இளவரசரிடம் அவனை ஆதித்த கரிகாலனிடம் கடம்பூருக்கு வரவேண்டாமென தடுக்கத் தூது அனுப்பியிருப்பதாக குந்தவை கூறினாள்.சுந்தர சோழரை அரண்மனையில் நந்தினி ஆவி போல வந்து பயமுறுத்துவதை வானதி நேரில் கண்டதை இளவரசரிடம் சொல்லச் சொல்லி,
நந்தினி தங்கள் சகோதரி என்னும் உண்மையை அவளுக்குத் தெரிவித்து சோழ குலத்தை பழி வாங்க எண்ணும் அவள் முயற்சியைத் தடுக்கும் வரையிலும்
நாட்டில் நடக்கும் அரசியல் தீவிரங்கள் குறையும் வரையிலும் இன்னும் கொஞ்ச நாள் இளவரசர் சூடாமணி விஹாரத்தில் இருப்பதே நல்லது என எடுத்துரைத்தாள்.
ஒரு நல்ல தருணத்தில் தான் பரிந்துரைக்கும் பெண்ணையே இளவரசர் மணக்க வேண்டுமென வானதியை மனதில் கொண்டு, தமக்கையாக ஆணையிட்டாள்.இதற்குள் வானதியைப் பார்த்ததால் எரிச்சலுற்ற பூங்குழலி, தன் பெரிய அத்தையான ஊமை ராணியின் வாழ்வு அரச குலத்தாராலேயே நலிவடைந்தது எனவும்,
அவர்களை நம்பவே கூடாது என வெறுப்பை சேந்தன் அமுதனிடம் உமிழ்ந்தாள்.
சேந்தன் அமுதன் அவளை மணக்க விரும்புவதை வந்தியத்தேவன் சொன்னதாக பூங்குழலி கூறியதும்தான் எந்த சந்தர்ப்பதிலும் அவளுடன் நிற்பேன் என உணர்ச்சி மிகுந்து கூறினான்.
ஆத்திரம் அடங்காத பூங்குழலி சிறுகல்லை எடுத்து அங்கு உலாவிக் கொண்டிருந்த காளை மாடு ஒன்றின் மீது எறியஅது மிரண்டு வானதியை துரத்த, அவள் கால்வாயில் விழுகையில் இளவரசர் அவளைக் கையில் ஏந்திக் காப்பாற்றினார். குந்தவையிடம், ‘ வானதி இப்போது மயங்கியிருப்பாள் அல்லவா ‘ என இளவரசர் கூறி முடிக்கவும் வானதி சிரித்தபடி அவன் கைகளிலிருந்து எழுந்து அவர்களைத் தாண்டி ஓடினாள்.
மூன்றாம் பாகம் முற்றிற்று..
அடுத்த பகுதியில் நான்காம் பாகம் துவங்கும்..
- சவிதா

Comments (0)