பொன்னியின் செல்வன் – 22
நாகப்பட்டினத்து சூடாமணி விஹாரத்தில் தங்கியிருந்த பொன்னியின் செல்வனுக்கு ஜூரம் குணமாகிவிட்ட பொழுதும் அங்கு மறைந்திருப்பது அசெளகர்யமாய் இருந்தது. எனவே அங்கிருந்த தலைமை பிஷூவிடம், புத்த சமயம் பற்றியும் அவர் சென்று வந்த நாடுகள் பற்றியும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது இளவரசரை புத்த பிட்ஷூகள் சேர்ந்து விஹாரத்தில் மறைத்து வைத்திருந்து புத்த சமயத்துக்கு அவரை மாற்ற முயற்சி செய்வதாக வதந்தி பரவி வருவதாக பிட்ஷூ வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது மக்கள் விஹாரத்தை சூழ்ந்து கொண்டு இளவரசரை வெளியே அனுப்புமாறு கூக்குரலிட்டுக் கொண்டு இருப்பதாக சீடர்கள் பதட்டத்துடன் கூறினர். முருகைய்யன் என்ற படகோட்டியும் அவன் மனைவியும்தான் பெரிதாய் சத்தம் போட்டு வதந்தியைப் பரப்புவதாக சீடர்கள் மேலும் தெரிவித்தனர்.
இளவரசர், இந்த சங்கடத்தை விலக்கவும் அங்கிருந்து மக்கள் அறியாமல் வெளியேறவும் திட்டமிட்டார். வெளியில் திரண்டு நிற்பவர்களில் முருகைய்யன் ஒருவனை மட்டும் அழைத்து வருமாறு சீடர்களிடம் கூறினார். முருகைய்யன் தன் பேச்சை மீறமாட்டான் என உறுதி தெரிவித்த இளவரசர் அவன் உள்ளே வந்தவுடன் முன்போல வாய்க்கால் வழியாக ஆனைமங்கலத்துக்கு சென்றுவிடுவதாகக் கூறினார்.
வெளியே சென்ற பிஷூ, மக்களின் ஆரவாரத்தை அடக்கியபடி இளவரசரை சமீபத்தில் பார்த்தவர் முன்வருமாறு கூற, படகோட்டியும் அவன் மனைவியான ராக்கம்மாளும் முன்வந்தனர். படகோட்டியே உள்ளே சென்று இளவரசர் இருக்கிறாரா என்று பார்த்துக்கொள்ளட்டும் என்றபடி இளம்பிஷு அவனை உள்ளே அழைத்துச் செல்ல, தலைமை பிஷு கூட்டத்தைக் கட்டுப் படுத்தத் தொடங்கினார்.
எக்காலத்திலும் இளவரசரை புத்த மதத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என உறுதி கூறிய ஆச்சாரிய பிஷூ நாகப்பட்டினத்தை நெருங்கி வரும் புயலையும் அதன் ஆபத்தையும் மக்களுக்குச் சுட்டிக்காட்டினார். கடல் அங்கு ஆவேசமாக பொங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சிதறி ஓட ஆரம்பித்தனர். தயங்கி நின்ற ராக்கம்மாளையும் ஒருவன் வந்து காதோடு ஏதோ சொல்லிக் கூட்டிப் போனான்.
தலைமை பிஷூவுக்கு கடல் பொங்கி வந்து சூடாமணி விஹாரத்தையும் மூழ்கடித்துவிடும் என்ற பயத்தினால் இளவரசரை அழைத்துக் கொண்டு நாகப்பட்டினத்தின் கிழக்குப் பகுதியிலிருக்கும் ஆபத்து இல்லாத பகுதியான ஆனைமங்கலத்துக்கு அழைத்துப் போகும்படி படகோட்டியைக் கேட்டுக் கொண்டார்.
படகு ஆனைமங்கலத்துக்கு அருகில் செல்லும்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக் கண்ட இளவரசர் விஹாரத்தில் இருந்த தலைமை பிஷுவுக்கும் ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்கும் எனக் கருதி உடனே படகைத் திருப்ப ஆணையிட்டார். அவர் சந்தேகப் பட்டபடியே புத்தரின் பாத சரணங்களை இறுகப் பிடித்தப்படி தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்த ஆச்சாரியரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து படகில் கொண்டு வந்து சேர்த்தார்.
புயல்காற்றும் சிறு தூறலும் வெள்ளமும் படகைத் தாக்க முருகைய்யன் பிரயாசைப்பட்டு படகை ஓட்ட, வழியில் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகவிருந்த கன்றுக்குட்டியை ஆச்சார்யரும், இளவரசரும் காப்பாற்றினர். ஆனைமங்கல மாளிகையை அடைந்த பொழுது அங்கிருந்த வாயிற்காப்பானை, அங்கே அடைக்கலமடைந்திருந்த மக்களுக்குத் தெரியாமல் வேறு வழியாக மேன்மாடத்துக்கு அழைத்துச் செல்ல பணித்தார்.
மக்களுக்குத் தேவையான பொருளுதவிகளைச் செய்யுமாறு ஆணையிட்டுக் கொண்டிருக்கையில் முருகைய்யன் அவன் மனைவியை நினைத்துக் கவலைப்பட இளவரசர் அவனைத் தேற்றினார். அவன் அங்கு வர நேர்ந்ததைப்பற்றி சொன்னான். தன்னுடைய அத்தையாகிய மந்தாகினி தேவியை பழுவேட்டரையர் கைது செய்து கொண்டு போனதையும், பூங்குழலி அவர்களைப் பின் தொடர்ந்து சென்றதையும், இராக்கம்மாள் இளவரசர் சூடாமணி விஹாரத்தில் இருப்பதை சந்தேகித்து இவனை இங்கு கூட்டி வந்ததையும் விவரமாகக் கூறினான்.
ஈழத்து அரசியை கைதுசெய்த செய்தியைக் கேட்டதும் பதைத்த இளவரசர் உடனடியாகத் தான் கிளம்புவதாக அறிவித்தார். மறுநாள் சிறு வியாபாரி போல மூட்டை ஒன்றை தோளில் சுமந்தபடி முருகைய்யனைக் கூட்டிக் கொண்டு இளவரசர் கிளம்ப, மறைவில் இருந்த இராக்கம்மாள் வேண்டுமென்றே இளவரசரின் காலில் விழுந்தாள். முருகைய்யனின் சமிக்ஞையை கண்டுகொள்ளாமல், இளவரசர் பிழைத்து வந்ததை சந்தோஷத்துடன் மக்களுக்கு அறிவித்தாள். கூட்டம் சேர்ந்ததைக் கண்ட இளவரசர் தான் ஒரு வியாபாரிதான் எனச் சொன்னபோதும் கவனிக்காமல் திரும்ப திரும்ப இளவரசர்.. இளவரசர் எனச் சத்தமாகப் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்க்கலானாள்.
முருகைய்யன் ரகசியமாக இளவரசர் மாறுவேடத்துடன் ஊருக்குச் செல்ல இருப்பதாகக் கூற, அதையும் பழுவேட்டரையருக்கு பயந்து இப்படி போகும் நிலை இளவரசருக்கு வந்து விட்டதே எனக் கூறி ஆர்ப்பாட்டம் செய்தாள்.
கூட்டம் கூடி மக்கள் அனைவரும் வந்துவிட எண்பேராயத்தின் தலைவர், இளவரசர் உயிர்பிழைத்ததற்கு மகிழ்ச்சி அடைந்து ஒருநாளாவது தங்கிப் போகும்படி வற்புறுத்தினார். கூட்டம் அதிகமாக சேர ஆரம்பித்தைக் கண்ட இளவரசர் மறுக்க முடியாமல் மாலையில் கிளம்புவதாக கூற அவருக்குண்டான யானைகள், குதிரைகள், சிவிகைகள், திருச்சின்னங்கள், கொடிகள், பேரிகை, எக்காளம் முதலிய வாத்தியங்கள் எல்லாம் வந்து சேர்ந்து விட்டன.
கூட்டம் கூடி ஐம்பெருங்குழுவின் அதிகாரிகளும், எண்பேராயத்தின் தலைவர்களும் மாளிகையின் வாசலில் வந்து சேர்ந்தனர். பெரும் விருந்து ஏற்பாடு செய்யப் பட்டது. இளவரசர் அங்கிருந்து கிளம்ப தாமதமாவதைக் கண்டு பதட்டமடைந்தார். மேலும் அங்கிருந்தவர்கள் அனைவரும் சக்ரவர்த்தி உயிரோடு இருக்கிறாரா என்பது குறித்தும், பழுவேட்டரையர்களின் அதிகாரம் மீதான அதிருப்தி குறித்தும் பேசிக்கொண்டே இருக்க இளவரசருக்கு உடனே அங்கிருந்து கிளம்பி தந்தையைக் காண வேண்டுமென்ற தவிப்பு உண்டாயிற்று. யானைகளும், குதிரைகளும், மக்களுமாக பெரும் அணியுடன் தஞ்சையை நோக்கி பெருந்திரளாக இளவரசர் புறப்பட்டார்.
கடம்பூரிலிருந்து கிளம்பிய பழுவேட்டரையர் மிகுந்த மன உளைச்சலுடன் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தார். என்னதான் நந்தினியின் முன் எப்பொழுதும் போல அவள் பேச்சைக் கேட்டு பரிவாரங்கள் இல்லாமல் ஒரு பத்துப் பேரை மட்டும் கூட்டிக் கொண்டு மதுராந்தகனை அழைத்து வர தஞ்சைக்கு உடனே கிளம்பி விட்டிருந்தாலும், மூன்று வாலிபர்கள் இடையே அவளைத் தனியாக விட்டு விட்டு வந்தது அவர் மனதை அரித்துக் கொண்டிருந்தது. அவளின் மோகனசக்தி அவளை விட்டு தூரமாக வந்தபின், பூரணமாக விலகியிருந்த சூழ்நிலையில், பல விஷயங்களை சிந்திக்க தொடங்கி னார்.
பழுவேட்டரையர் யோசித்துக் கொண்டே வந்ததில், ஆற்றில் திடீரென ஏறி வந்த வெள்ளத்தை கவனிக்காது தன்னிலையிலேயே மூழ்கிப்போனார். வெள்ளத்திலும் காற்றிலும் தத்தளித்து படகு கரைசேர்ந்த போது பெரும் மரம் ஒன்று சாய்ந்ததில் படகு தலைகுப்புற கவிழ்ந்தது. படகில் கூட வந்தவர்கள் நிலைமையை உடனே சமாளித்து நீந்த தொடங்கி விட்டார்கள்.
நந்தினியின் நினைவிலேயே மூழ்கியிருந்த பழுவேட்டரையர் தன்னைச் சமாளித்துக் கொண்டு உத்வேகம் கொண்டு நீந்தி மேலே வருவதற்குள் வெள்ளம் அவரை படகு கவிழ்ந்த இட த்திலிருந்து வெகுதூரம் கூட்டிச் சென்று விட்டது. வெகு பிரயாசைப்பட்டு நீந்தி கரையை அடைந்த பழுவேட்டரையர் நதிக்கரையோரமாகவே நடந்து சென்று குடந்தை நகரை அடையலாமென நினைத்தார்.
ஆனால் புயல் வலுத்ததால் மறுபடியும் வெள்ளம் வந்து அவரை உருட்டிச் செல்ல இந்தமுறை நாம் சேற்றில் முழுகிவிடப்போகிறோம் என பயந்தார். அப்போது ஏதோ ஒரு சக்தி அவரை உந்த கையில் கிடைத்த கல்லைப் பிடித்துக் கொண்டு வெளியே பாய்ந்தார். அந்த இடத்தில் துர்க்கா பரமேசுவரியின் கோவிலில் முணுக்கென வெளிச்சத்துடன் தெய்வம் அருள் பாலித்துக் கொண்டிருந்தது. தெய்வத்தின் அருளாலேயே தான் காப்பாற்றப்பட்டதாக மகிழ்ந்தவர் அங்கு வைத்திருந்த நிவேதனப் பொருட்களை உண்டு விட்டு அங்கேயே அன்றிரவைக் கழித்தார்.
கனவில் தேவி வந்து நந்தினியை நம்பாதே என்று எச்சரிக்க திடுக்கிட்டு எழுந்தவர் நன்றாக விடிந்திருந்ததையும் சுற்றி வெள்ளம் ஓடிக் கொண்டிருந்ததையும் தற்போது தாம் வெளியே போகவேண்டுமானால் கோவிலுக்கு வெளியே உள்ள மரம் விழுந்தால்தான் பாலம் போல உபயோகப் படுத்தி காட்டுப்பகுதிக்கு செல்ல ஒரே வழி என்பதையும் உணர்ந்தார். பொறுமையுடன் அன்றைய பகலும், இரவும், அடுத்த பகலும் காத்திருந்த பின் மறுநாளைய மாலையில் அம்மரம் வீழ்ந்தது.
துர்க்கா பரமேசுவரியை வணங்கி விடைபெற நினைத்தபோது மந்திரவாதி என யாரோ அழைக்கும் குரல் கேட்டு தூங்குவது போல் பாசாங்கு செய்து ஓரமாக கண்மூடிப் படுத்துக் கொண்டார். வந்தவன் தேவராளன்.
இரவிதாஸன்தான் தூங்குவதாக நினைத்து அருகில் வரும்வரை அழைத்துக் கொண்டே வந்தவன், முகம் பார்த்து விட்டு பயந்து அந்த மரத்தின் வழியாகவே வேகமாக ஓட்டம் பிடித்தான்.
பழுவேட்டரையர், மந்திரவாதியின் ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென அவனைத் தொடர்ந்து சென்றார். தேவராளனின் சேற்றுக் கால்தடத்தை தொடர்ந்து சென்ற பழுவேட்டரையர் தாம் வந்திருக்கும் இடம் பழைய திருப்புறம்பியம் பள்ளிப்படை என்று அறிந்து கொண்டு, தேவராளனும் ரவிதாசனும் பேசுவதை ஒட்டுக் கேட்கலானார்.
சுந்தர சோழனையும் அவரது இரண்டு பிள்ளைகளையும் யமன் நெருங்கிக் கொண்டிருக்கிறான் என பேசிக்கொண்டிருந்ததை மறைவில் இருந்து கேட்டுத் திகைத்தார்.
இரவிதாஸனிடம் தேவராளன், தான் பழுவேட்டரையரை பார்த்து விட்டு வந்ததைப் பற்றிக் கூற, இரவிதாஸன், அவர் மீது கல்லைத் தூக்கிப் போட்டு விட்டு வந்திருக்கலாமே என்று கடிந்து கொண்டான்.
மேலும் இளவரசரை விஹாரத்திலிருந்து வெளிப்படுத்தியது பாண்டியர்களின் ஆபத்துதவிக் கூட்டத்தைச் சேர்ந்த இராக்கம்மாள்தான் என்றும், வரும் வழியில் யானைப்பாகனாக ரேவதாஸக் கிரமவித்தன் யானைப்பாகனாக அமர்ந்து இளவரசன் உயிரை எடுப்பான் எனவும், சுந்தரசோழரது அரண்மனையின் பாதாள சுரங்கத்தில் சோமன் சாம்பவன் அரசரைக் கொல்லக் காத்திருப்பதாகவும் கூறினான்.
தேவராளன் நந்தினியைப் பற்றி அதிருப்தியை வெளியிட, அவளை இனிமேல் பாண்டிமாதேவி என்று அழைக்குமாறும், ஆதித்த கரிகாலனை கொல்லாமல் அவள் ஓயமாட்டாள் எனவும் இரவிதாஸன் அவனை சமாதானப் படுத்தினான்.
வந்தியத்தேவனை நந்தினி காப்பாற்றியது பற்றிய சந்தேகத்தை தேவராளன் கேட்க, முடிந்தால் நந்தினி வந்தியத்தேவன் மூலமாகவே ஆதித்த கரிகாலனை கொல்லுவாள் என்று கூறியவன், சோமன் சாம்பவன் பாதாள சுரங்கத்தில் உள்ள பொக்கிஷங்களை கொண்டு வருவான் எனவும், நந்தினி வேலை முடிந்தவுடன் சுரங்கம் வழியே வெளியேறி வந்து, எல்லோரும் கொல்லிமலை சென்று, சோழநாட்டில் நடக்கும் அல்லோலங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே பாண்டியருக்கு படை திரட்டலாமெனவும் விவரித்தான்.
இதையெல்லாம் கேட்ட பழுவேட்டரையருக்கு தன் தலைமேல் இடிவீழ்ந்தாற் போல் ஆயிற்று. சோழர்குலத்தை பூண்டறுக்க செய்ய சபதமெடுத்தவள் தன் மனைவியாக இத்தனை நாள் இருந்ததை நினைத்து வேதனையுற்றார். அப்போது அவர் கனைத்ததில் திரும்பிய இருவரையும் தன் கைகளால் கொல்ல முயல, தேவராளன் தப்பித்து மண்டபத்தின் மேல் பெயர்ந்திருந்த கல்லை அவர் மீது தள்ள, அந்த இடைவெளியில் இரவிதாஸன் அவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள, மண்டபக் கல்லும் மரமும் ஒருசேர பழுவேட்டரையரின் மேல் விழுந்தது. இருவரும் வேகமாக ஓட்டம் பிடித்தனர்.
- சவிதா

Comments (0)