பொன்னியின்செல்வன் – 24
இளவரசர் வானதியின் பேச்சைக் கேட்டு சிரித்துக் கொண்டே யானையின் மீதிருந்து இறங்கினார். இன்னமும் அவளுக்கு பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்றியது நினைவில் இருக்கிறதா என்று கேட்டு ஆச்சரியப்பட்டார்.
பூங்குழலி களைப்பினால் வாடி நின்றிருந்ததைக் கண்டு ‘சமுத்திரகுமாரி’ என அவளை விளித்து, அதுவரை நடந்ததையெல்லாம் இருவரின் வாயிலாகவும் அறிந்து கொண்டார். யானையினாலும், அங்குசத்தினாலும் பாதிப்பு ஏற்படுமென பழுவேட்டரையர் அறிந்திருந்ததைக் கேட்டு ஆச்சர்யப் பட்டவர், மந்தாகினி தனியே ஆபத்தில் சிக்கியிருக்கிறார் என்றறிந்ததும் பதைத்துப் போனார்.
பூங்குழலி, ‘தன் அத்தை அவருக்கு அந்திமக்காலம் நெருங்கிவிட்டதாக உணர்வதால், கடைசியாக ஒருமுறை பொன்னியின் செல்வனைக் காண விரும்புவதாக’ தகவல் அனுப்பியிருப்பதைக் கேட்டவுடன் ஒரு கணமும் தாமதிக்காமல் தஞ்சை சென்றாக வேண்டும் என்று கூறினார்.
அங்கு தஞ்சையில் காலையில் வழக்கமாக நிகழ்வது போல கோட்டை திறந்ததும் வேளக்காரப் படையினர் உள்ளே சென்றனர். ஆனால் உடனே எல்லாக் கதவுகளும் அடைக்கப் பட்டதைக் கண்டு மக்கள் அனைவரும் திகைத்துப் போயினர். பொதுவாக வேறு ஏதாவது படையெடுப்பின்போதோ அவசர நிலையின் போதோதான் இத்தகைய நடவடிக்கைகள் இருக்கும் என்பதால் அச்சமும் பதற்றமும் அடைந்தனர்.
அப்போது கோட்டையின் வடபுறம் தவிர மூன்று புறங்களிலும் இருந்து சேனைகள் வந்து கொண்டிருந்ததைக் கண்டு பயந்தனர். அருகில் நெருங்கிப் பார்த்தவர்கள் அதன் முகப்பில் சோழச் சின்னமான புலிக்கொடியைப் பார்த்தவுடன் நிம்மதி அடைந்தார்கள்.
சோழர்களின் தென்திசை சேனாதிபதி பூதி விக்கிரம கேசரிதான் படைகளுக்கு தலைமையேற்று வந்து கொண்டிருந்ததும் மக்களுக்கு தெரிந்து போயிற்று. விக்கிரம கேசரி அங்கு வந்திருப்பது தங்கள் பிரியத்துக்குரிய இளவரசர் அருள்மொழியை ஆட்சியில் அமர்த்துவதற்காகவே எனப் புரிந்து கொண்டு அவர்களை மகிழ்ச்சியுடனேயே வரவேற்றனர்.
கூடாரம் அடிக்கப் பட்ட பிறகு விக்கிரம கேசரி தலைமையில் சிற்றரசர்களின் கூட்டம் கூடிற்று. பழுவேட்டரையர்கள் சக்ரவர்த்தியை வெகுநாட்களாக சிறைவைத்து இருப்பதாகவும், அவர்களின் சூழ்ச்சியால் சக்ரவர்த்தி மனம் மாறி தன் இரண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு போரே அறியாத மதுராந்தகனுக்கு பட்டம் அளிக்க விரும்புகிறார் எனவும் சிலர் கூறினர்.
சக்ரவர்த்தி உயிருடன் இருக்கிறாரா என்பது கூடத் தெரியவில்லை என வருத்தப்பட்ட பூதி விக்கிரம கேசரி, இலங்கையில் இளவரசரைக் கொல்ல நடந்த சதிகள் பற்றியும் இங்கு வந்த பிறகு திருவாரூரில் யானைக்கு மதம் பிடித்ததையும் இளவரசர் காணாமல் போனதையும் சொல்லச் குழுவினர் அனைவரும் கடுங்கோபம் அடைந்தனர்.
பழுவேட்டரையர்களை எதிர்த்து கோட்டைக்கதவை திறந்து சக்ரவர்த்தியை விடுவிக்க வேண்டுமென அனைவரும் ஒரே குரலில் முழங்கினர். அப்போது ஒரு காவலாளி வந்து ரகசியமாக அவரின் காதில் ஏதோ சொல்ல, அவர் உடனே எழுந்து தஞ்சைக் கோட்டையின் வடக்கு வாசலுக்கு குதிரையேறிச் சென்றார்.
அங்கு அம்பாரியுடன் கூடிய யானை நின்றிருந்தது. அம்பாரிக்குள் இரண்டு பெண்கள் இருப்பதாகப் பட்டது. யானைப்பாகன் தனது கொம்பை எடுத்து ஊதிவிட்டு, ‘ கொடும்பாளூர் இளவரசி வானதி தேவியார் இளைய பிராட்டியிடம் இருந்து சக்ரவர்த்திக்கு செய்தி கொண்டு வந்திருப்பதாகவும், வானதிதேவிக்கும் அவர் தோழி பூங்குழலி அம்மைக்கும் கோட்டைக் கதவை திறந்து விடும்படியும்’ முழங்கவும், பூதி விக்கிரம கேசரி ஆச்சரியத்துடன் வானதியைப் பார்த்தார்.
யானையிலிருந்த வானதி, பெரியப்பா.. எனப் பேசத்தொடங்க. பூதி விக்கிரம கேசரி, ‘இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் குந்தவை உன்னிடமா செய்தி அனுப்பியிருக்கிறார், அப்படி என்ன சேதி’ என வினவ, ‘அருள்மொழிவர்மரைப் பற்றி செய்தி கொண்டு வந்திருப்பதாக’ வானதி கூறினாள்.
‘இளவரசர் எங்கே இருக்கிறார்’ என்று அவர் கேட்க, ‘அதை மட்டும் சொல்ல முடியாது’ என உறுதியான குரலில் மறுத்து விட்டு யானைப்பாகனை முழங்குமாறு மேலும் கட்டளையிட்டாள்.
இதே சமயத்தில் கோட்டையின் உள்ளே இருந்த சின்னப் பழுவேட்டரையரான காலாந்தக கண்டர் வெகுவாக கலங்கியிருந்தார். பூதி விக்கிரம கேசரி படையெடுத்து வந்திருந்தது எரிச்சலைக் கிளப்பியிருந்ததுடன், பெரிய பழுவேட்டரையர் இன்னும் இங்கு வந்து சேராமலிருந்தது இன்னும் கவலையைக் கிளப்பியிருந்தது.
அநிருத்தருடன் சென்று கொடும்பாளூர் வேளார் படையெடுத்து வந்த செய்தியை சக்ரவர்த்தியிடம் சொல்லலாம் என்று நினைத்துச் சென்றால், அநிருத்தர் சக்ரவர்த்திக்கு உடல்நிலை சரியில்லை எனவும், இந்த சமயத்தில் அதைச் சொல்ல வேண்டாமெனவும் அறிவுரை கூறினார்.
‘இது போன்ற மனம் வருத்தும் செய்திகளால் அரசரின் உடல்நிலை மேலும் சீர்கெட்டால் அதன் பழியும் சின்னப் பழுவேட்டரையரையே சேரும்’ என்று அநிருத்தர் கூற, அநிருத்தரிடமே அரசரிடம் செய்தி சொல்லும் பொறுப்பை விட்டுவிட்டு கோட்டைப் பாதுகாப்பை பலப்படுத்தும் வேலைகளைக் கவனித்தார்.
அப்போது கொடும்பாளூர் இளவரசி கோட்டைக் கதவுக்கு அப்பால் இருப்பதாக சேதி வரவே அவளை அனுமதிக்கவே கூடாது என்று நினைத்தபடி கோட்டைக் கதவை நெருங்கியவர், ஒரு சிறு பெண்ணை அனுமதிக்காமல் தான் பயப்படுவதா என்று யோசித்துக் கொண்டே, கோட்டை மதிலின் மீதிருந்து அவர்களை பார்வையிட்டார்.
அப்போது வானதியும் அவளின் பெரிய தந்தையும் வாக்குவாதம் செய்வதைக் கண்டார். யானைப்பாகன், ‘பெரிய பழுவேட்டரையரிடமிருந்து சின்னப் பழுவேட்டரையருக்கும், இளைய பிராட்டியிடமிருந்து சக்ரவர்த்திக்கும் செய்தி கொண்டு வந்திருப்பதாகவும்’ கொம்பு ஊத, தன் அண்ணன் இந்தப் பெண்ணிடமா செய்தி அனுப்புவார் என்ற சந்தேகத்துடன் கதவைத் திறந்து விட ஆணையிட்டார்.
உள்ளே இரு பெண்களும், யானைப்பாகனுமாக உள்நுழைந்ததும் வானதி தன் வணக்கத்தை தெரிவித்து பெரிய பழுவேட்டரையர், பாண்டிய ஆபத்துதவிகளிடமிருந்து சக்ரவர்த்திக்கு ஆபத்து ஏற்படப் போகிறது, அசட்டையாக இருக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்தி அனுப்பியிருப்பதாக கூறினாள்.
ஆனால், ‘அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான், அதை உங்களிடம் தமையன் சொல்லியிருப்பதில் ஆச்சரியமில்லை’ எனச் சின்னப் பழுவேட்டரையர் அலட்சியமாய் கூறினார்.
‘அரண்மனைக்கு வந்து போகும் மந்திரவாதியைக் குறித்து நீங்கள் கூறியதை தாம் அலட்சியம் செய்ததை மன்னித்து கவனமாக இருக்கும்படி’ பெரிய பழுவேட்டரையர் சொன்னதை வானதி சொல்லியதும் அவர் திகைத்தார்.
மேலும் இங்கு வரப்போகும் ஆபத்தைச் சொல்லவே தன்னை இளைய பிராட்டி அனுப்பியதாகவும், பெரிய பழுவேட்டரையர் ஆதித்த கரிகாலனைக் காப்பாற்ற கடம்பூர் விரைந்துள்ளதாகவும் கூற சின்னப் பழுவேட்டரையர் வானதியை முழுதாய் நம்பி உள்ளே அனுமதித்தார்.
கோட்டைக் காவலை பலப்படுத்த சில உத்தரவுகளை இட்டு விட்டு திரும்புகையில் இரண்டு பெண்களுடன் யானைப்பாகனும் அரண்மனைக்கு உள்ளே சென்றதைக் கண்டு பதைத்த சின்னப் பழுவேட்டரையர் ஒருவேளை அவன் பாண்டிய ஆபத்துதவியாக இருக்க கூடுமோ எனப் பாய்ந்து சென்று அவன் கரத்தை இறுக்கமாகப் பிடித்து ‘ யாரையடா ஏமாற்றப் பார்த்தாய்?’ என கர்ஜித்தார். முன்னே சென்ற இரண்டு பெண்களும் சொல்வதறியாது திகைக்க, மாட்டிக் கொண்ட இளவரசர் வெண்ணெய் திருடிய கள்வனைப் போல் புன்னகைத்தார்.
.இளவரசரை அடையாளம் கண்டு கொண்ட காலாந்தக கண்டர் நடுக்கமடைந்து நாக்குழற மன்னிப்பு கேட்க, அருள்மொழிவர்மர் சிரித்துக்கொண்டே தங்கள் கட்டளைக்கு ஒப்புக் கொடுக்கவே வந்ததாக பணிவுடன் கூறினார்.
காலாந்தக கண்டருக்கு இளவரசர் அருள்மொழி மீது எந்த தீய எண்ணமும் என்றைக்கும் இருந்ததில்லை. அவரைப்போய் அடா என்று பேசியதுடன், தகுந்தமுறையில் வரவேற்பு கொடுக்க முடியவில்லை என்பதும் அவரை நிலைகுலையச் செய்ய, வருந்தி மன்னிப்புக் கேட்டார்,
அத்தகைய வரவேற்பை தந்தை இந்நிலையில் இருக்கும்போது தவிர்ப்பதற்காகவே இம்முறையில் உள்நுழைந்ததாக இளவரசர் சின்னப் பழுவேட்டரையரை அமைதிப் படுத்தினார்.
அந்த கால இடைவெளியிலேயே இளவரசரைக் கண்ணுற்ற படையினர் மனம் மகிழ்ந்து சிறு கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், கோஷம் வெளியில் கேட்காதவாறு அமைதிப் படுத்திய சின்னப் பழுவேட்டரையர் இளவரசரை உடனே உள்ளேயும் அனுப்பி வைத்தார்.
பூங்குழலி கவலையுடன் அவர்களுடன் செல்லாமல் தனித்திருக்கவும் அவளை விசாரித்தவர், பாதாளச்சிறை பற்றியும் அதில் ஒளிந்திருக்கும் ஆபத்து பற்றியும் அவள் சொன்னதைக் கேட்டு நம்பமுடியாமல் திகைத்தார்.
தான் நேரிலேயே காட்டுவதாக அவள் சொல்ல இருவரும் ஒரு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு விரைந்தனர். காலையில் தன் அத்தை அந்த சுரங்கத்தில் ஒளிந்திருந்தவனை அடையாளம் காட்டியதையும், தன் அந்திமக் காலத்தைப் பற்றிச் சொல்லியிருந்ததும் அவளுக்கு நினைவில் வந்து அச்சுறுத்தியது.
அப்போது ‘வீல்’ என்ற அத்தையின் சத்தம் கேட்டு சின்னப் பழுவேட்டரையரைப் பற்றிப் பொருட்படுத்தாமல், பூங்குழலி சக்ரவர்த்தியின் அறையை நோக்கி பாய்ந்தோடினாள்.
அங்கு சக்ரவர்த்தி படுத்திருந்த அறையில் அனைவரும் நின்றிருக்க அவருக்குமுன் மந்தாகினி தேவி சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தாள்.
ஆபத்தை உணர்ந்து கொண்ட பூங்குழலி பாய்ந்து போகுமுன்னர் ஒரு வேல் மேலிருந்து மந்தாகினி தேவியின் மீது பாய்ந்தது.
அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க, ஏதோ ஒரு பொருள் மேலிருந்து வீழ அங்கிருந்த தீபம் அணைந்து விட்டது. இருளில் யாரையும் பார்க்கமுடியவில்லை. அதற்குள் யாரோ மோதிக் கொள்ளும் சத்தமும், மகாராணியின் ‘ஓ’ என்ற ஓலமும் கேட்டது.
சின்னப் பழுவேட்டரையர் விளக்கைக் கொண்டு வரும்படி கட்டளையிட விளக்கு வந்து சேர்ந்திருந்த பொழுது மந்தாகினி தேவி, உடலில் வேல் தாங்கி தரையில் வீழ்ந்து கிடந்தார்., இவ்வளவு காலமும் கால்கள் சக்தியற்று படுக்கையில் கிடந்த சக்ரவர்த்தி தானே தவழ்ந்து வந்து அவரின் அருகில் அமர்ந்திருந்தார்.
மந்தாகினி தேவி சக்ர்வர்த்தியைப் பார்த்துக்கொண்டிருக்க, அவரின் தலையை சக்ரவர்த்தியின் மடிமீது இளவரசர் அருள்மொழி தூக்கி வைத்தார். பூங்குழலி ‘அத்தை அத்தை’ என கதறத் தொடங்க, இளவரசர், ‘ பல காலம் பிரிந்திருந்தவர் சேர்ந்திருக்கின்றனர் அவர்கள் இருவரும் தனியே இருக்கட்டுமென ’ அவளை சமாதானப் படுத்தினார்.
அத்தையைத் தவிர தனக்கு யாருமேயில்லை என பூங்குழலி கதறினாள்.
அப்போது இளவரசர் தனக்கு தாயை விட மேலானவளான போதும், தந்தையுடன் தாய் சேர்ந்து இருப்பதைக் கண்டு தான் ஒதுங்கியிருப்பதாகக் கூறினார்.
மேலும், பூங்குழலியும் அவள் அத்தையும் சோழகுலத்துக்கு எப்பேற்பட்ட நன்மை செய்திருக்கிறார்கள் என விளக்கினார்.
மேலிருந்தவன் எறிந்த வேலை தன் மார்பில் வாங்கிக்கொண்ட மந்தாகினி தேவி, கீழே விழ, அவரைக் காப்பாற்ற மூன்று வருடமாக படுக்கையிலேயே இருந்த சக்ரவர்த்தி அங்கிருந்து நகர்ந்து வந்து விட்டமையால் வேலெறிந்த கொலையாளி, விளக்கை அணைத்து விட்டு கட்டிலில் படுத்திருந்த சக்ரவர்த்தியை மீண்டும் இருளில் குத்த முயன்றதில் கத்தி தலையணையில் சொருகி விட்டிருந்தது.
அதைத் தடுக்க முயன்ற மகாராணி கத்தியதை அனைவரும் கேட்டிருந்தனர். இரண்டு முறையும் சக்ரவர்த்தியைக் காப்பாற்றியது மந்தாகினி தேவிதான்.
மேலும் பூங்குழலியின் உதவியினால் கோட்டைக்கு உள்ளே வந்ததாலும் இந்த நேரத்தில் தந்தையின் அருகே தான் இருந்தததால் தான் சின்னப் பழுவேட்டரையரின் மேல் எந்தப் பழியும் வீழாமல் தப்பிக்க முடிந்தது என இளவரசர் எடுத்துக் கூறினார். சின்னப் பழுவேட்டரையர் தன் கோட்டைக் காவல் பணியைச் சரியாகச் செய்யவில்லை என்பதை குறிப்பால் உணர்த்தினார்.
விழித்துக் கொண்ட சின்னப் பழுவேட்டரையர் பூங்குழலியைப் பாராட்டுவதாக நினைத்து தக்க பரிசில் அளிப்பதாகக் கூறினார். பூங்குழலியோ, தான் போய் தன் அத்தையைக் கொன்றவனைக் கண்டுபிடிப்பதாகக் கூறி விடைப் பெற்றாள்.
சின்னப் பழுவேட்டரையர், ‘பெண்ணே நான் உன்னிடம் தோற்றேன்’ என்று தன் தவறை ஒப்புக் கொண்டவராக அவளுடனே சென்று அவனைப் பிடிப்பதாகக் கிளம்பினார்.
இதில் எதிலும் பாதிக்கப் படாமல் சக்ரவர்த்தியும் மந்தாகினி தேவியும் ஒருவரையொருவர் கண்நோக்கி மானசீகமாக பேசிக்கொண்டிருந்தா[ர்கள். அதில் பரஸ்பரம் அறிந்து கொள்ளுமாறு எத்தனையோ சம்பாஷனைகள் அவர்களுக்குள்ளாகவே நடந்து கொண்டிருந்தது. ‘ தான் இழைத்த பாவத்திற்கு தன்னை மன்னிக்குமாறும், உனக்குப் பிள்ளைகள் இருந்தால் இருந்தால் தான் பார்த்துக் கொள்வதாகவும்’ சக்ரவர்த்தி கூற, மந்தாகினி தேவியின் கண்கள் சுழன்று பொன்னியின் செல்வனின் மேல் சென்று, ‘அவர்தான் என்னுடைய மகன் ‘ என்பதாக காண்பித்து விட்டு நிலைத்தது.
சக்ரவர்த்தியின் உயிரையும் பொன்னியின் செல்வரையும் காத்து நின்ற தெய்வம் தன்னுயிரை ஈந்து தியாகத்தால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தபடி இவ்வுலகை விட்டு நீங்கியது.
சக்கரவர்த்தி மனம் குமைந்து அழுதார்.. இந்தத் துயரினால் அழுதாரோ அல்லது இதே நேரத்தில் வேறொரு இடத்தில் நடந்த துயர சம்பவத்தை உணர்ந்து அழுதாரோ யாரே அறிவார்..?
- சவிதா

Comments (0)