பொன்னியின் செல்வன் – 26
ஆதித்த கரிகாலன் உள்ளே நுழைந்தபோது சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே நுழைந்ததால், சற்று முன்பு மணிமேகலை ஒளிந்து கொண்டதன் விளைவாக திரைச்சீலை அசைந்ததை வைத்து யாரோ ஒளிந்திருக்க வேண்டும் என்பதை அவதானித்துக் கொண்டான்..
நந்தினிக்கு அருகே தரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த வாளை அவள் எடுக்குமுன் குனிந்து, தான் எடுத்தான். அதன் நுனியில் புதிய ரத்தக்கறை இருப்பதைப் பார்த்தான். ‘அவனைப் போன்ற வீரர்களை வரவேற்க இதுவே சரியான முறை’ என நந்தினி கூர்மையாக கூறியதை ரசித்தான். தனது வாளைத் தன்னிடம் கொடுக்குமாறு நந்தினி வேண்ட, ‘மலர் கொய்யவும், மாலை புனையவும் பிரம்மன் படைத்த தளிர்க்கரங்களால் வாளைத் தொடலாகாது’ என அவளிடம் கூறினான்.
பெருமூச்செறிந்தவாறே நந்தினி, ‘இந்த ஏழையின் கைகள் ஆர்வத்துடன் மலர் கொய்து மாலை புனைந்த காலம் உண்டு. அந்த மாலையை சூடுவதற்குரியவர் எப்போது வருவார் என காத்திருந்து காத்திருந்து ஏமாந்த காலமும் உண்டு. அந்த பகற்கனவு கண்ட காலமெல்லாம் மறைந்து இந்த திக்கற்ற அனாதையின் கைகளில் வாளைத் துணைக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. எனவே அந்த வாளை என்னிடம் கொடுத்து விடுங்கள்’ என வேண்டினாள்.
ஆதித்த கரிகாலன், அவள் தன்னை அனாதையென்று சொன்னதை எள்ளல் செய்து அவள் காலால் இட்ட வேலையைத் தலையாய் செய்ய எத்தனையோ பேர் காத்திருப்பதாக கூறினான். அந்த தூர்த்தர்களிடமிருந்து தன் காலை வெட்டிக்கொள்ளவாவது அந்த வாளின் துணை வேண்டுமென நந்தினி பதிலளித்தாள்.
அதற்கு கரிகாலன், ‘பழுவேட்டரையர் இருக்கும்போது அந்த தைர்யம் யாருக்கு வரும்’ என்றான். ‘ அவர் கொள்ளிடத்து வெள்ளத்தில் மூழ்கிவிட்டார் என்று தெரிந்த பிறகு அந்த வாலிபப் புலிகளுக்கு தைரியம் வந்துவிட்டது. அவர்களிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ளவே நான் இந்த வாள் சுழற்றப் பயின்றேன்’, என்றாள் நந்தினி.
‘வாள் வீசக் கற்றுக் கொண்டதற்கு அதுதான் நோக்கமா? உன் வேண்டுகோளைப் புறக்கணித்து உன் உள்ளத்தில் அழியாத புண்ணை உண்டாக்கிய பாதகனைக் கொல்லும் நோக்கமில்லையா?’ என்றான் கரிகாலன்.
‘ஒரு சமயம் இருந்தது உண்மைதான். ஆனால் அந்த வேளை வந்திருக்கும் போது என் கரங்களில் வலிவும் நெஞ்சில் உறுதியுமில்லாமல் போய்விட்டது. இனி இந்த வாளை என் கற்பையும் என் கணவரின் கெளரவத்தையும் மட்டும் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே உபயோகிப்பேன். தயவுசெய்து அதைக் கொடுத்து விடுங்கள்’, என்றாள்.
‘அந்த பொறுப்பை என்னிடம் கொடுங்கள். நான் அந்த பாதகனை தண்டிக்கறேன்.’, என்று கர்ஜித்தபடி ஆதித்த கரிகாலன் திரைச்சீலையை நோக்கிச் செல்ல. நந்தினி அவன் காலைத் தொட்டு மண்டியிட்டுக் கரங்களைக் குவித்துக் கொண்டு ‘ கோமகனே.. வேண்டாம்.. வேண்டாம்’ என்றாள். ‘ உன் கருணையை வேறு எங்காவது வைத்துக்கொள், ஏரித்தீவில் நீ வந்தியத்தேவனைப் பற்றிக் கூறியதெல்லாம் பொய் என நினைத்தேன். கந்தமாறன் சொன்ன பிறகே அனைத்தும் உண்மையென புரிந்து கொண்டேன். நண்பனைப் போல நடித்து சதி செய்யும் சண்டாளனிடம் கருணை காட்டாதே’ எனக் கூறி மேலே நகர்ந்தான்.
நந்தினி திகைத்து வாயிற்படியருகே அசையாது நின்றுகொண்டிருக்கும் கந்தமாறனைப் பார்த்து அவனைத் தடுக்குமாறு கத்தினாள். ஆனால் அவன் ஒரு அசட்டுச்சிரிப்பை சிரித்துவிட்டு பேசாமல் நிற்க, ஆதித்த கரிகாலன் வேகமாய் கத்தியின் நுனியால் திரைச்சீலையை நகர்த்தினான். உள்ளே சிறிய கத்தியுடன் க்றீச்’ என்று கத்தியபடி மணிமேகலை இருக்கவும் ஆதித்த கரிகாலன் ஸ்தம்பித்து நின்றான். பெரிதாகச் சிரித்தவாறே கந்தமாறனை அழைத்து ‘இந்தப் பெண்புலிக்கு எத்தனை வீரப் புலிக்குட்டிகள் பிறக்குமோ தெரியாது. கொண்டுபோய் உன் அம்மாவிடம் விட்டுவிட்டு வா’ என்று இருவரையும் அனுப்பிவிட்டு நந்தினியை ஏறிட்டான்.
ஒரு நாடகம் நடித்து அவர்களை அனுப்பி விட்ட தாகவும் இனிமேலாவது உண்மையை மனம் விட்டு பேசலாமென நந்தினியிடம் கூற, அவள் ‘அத்தனையும் நடிப்பா’ என வியந்தாள். ‘நடிப்பு உனக்கு புதிதா’ எனக் கேட்ட கரிகாலன் ‘மணிமேகலையை தான் கொல்லப்போகும்போது தடுக்காதது ஏன்? அவள் சாகட்டும் என விட்டுவிட்டாயா?’ என்று வினவ, அவள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதாக நந்தினி கூறினாள். ‘அவ்வளவு அன்பை நந்தினி யார் மீது வைத்தாலும் அவர்கள் தனக்கு விரோதியாகிவிடுவார்’ என ஆதித்த கரிகாலன் கூறினார். நந்தினி பதறி இல்லையெனக் கூறினாள்
‘உண்மையைச் சொல்.சோழ சாம்ராஜ்யத்தை பங்கு போடுவதற்கோ, மணிமேகலையை எனக்குத் திருமணம் செய்விப்பதற்காகவோ இங்கு நீ வரவில்லை. நான் நம்ப மாட்டேன். என் உள்ளத்தில் நிரம்பியிருப்பதெல்லாம் நிராசையும் அவநம்பிக்கையும்தான். இந்த நாட்டை விட்டும் இந்த உலகத்தை விட்டும் போய் விடவே நான் விரும்புகிறேன்.அதற்கு முன்னால் ஒரு தடவை உன்னைப் பார்த்துப் போகலாம் எனவே வந்தேன். நீ என்னிடம் ஒரு வரம் கேட்டாய். நான் என் மூர்க்கத்தினால் அதை உனக்குக் கொடுக்கவில்லை. அதற்கு வருத்தப் படுகிறேன். நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய், என்னை எதற்கு வரவைத்திருக்கிறாய்? பழுவேட்டரையரை எதற்காகத் தஞ்சைக்கு அனுப்பி வைத்திருக்கிறாய் என்றெல்லாம் எனக்குத் தெரியும். வீரபாண்டியனுடைய வாளினால் என்னைக் கொன்று பழிமுடிக்கும் நோக்கத்துடனேயே நீ இங்கு வந்திருக்கிறாய். அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டுமெனவே கந்தமாறனையும் மணிமேகலையையும் வெளியில் அனுப்பினேன். இதோ வாளைப் பெற்றுக்கொள்’ என வாளை நீட்டினான் கரிகாலன்.
வாளினைப் பெற்றுக்ககொண்ட நந்தினி நடுங்கி கண்ணீர் விட்டு தேம்பலுடன் அழலானாள்.
‘உன் அந்தரங்கத்தை நான் அறிவேன். உன் பழியை முடிப்பதற்கு கந்தமாறனையோ, பார்த்திபேந்திரனையோ, வந்தியத்தேவனையோ நீ ஏவி விட வேண்டாம். உன் சபதத்தை உன் கையாலேயே முடித்துக் கொள். இதைவிட நல்ல சந்தர்ப்பம் வரப் போவதில்லை. என்னைக் கொல்லுவதினால் எனக்கு நீ எவ்வித தீங்கும் செய்தவளாக மாட்டாய். பேருதவி செய்தவளாவாய்?’ என்று கரிகாலன் கூற, அழுகையை அடக்கிக் கொண்டு நந்தினி, ‘ நான் இங்கு வந்த நோக்கம் பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனால் சந்தர்ப்பம் நேர்ந்திருக்கும் சமயத்தில் எனக்கு அந்த தைரியம் இல்லை. என் கைகள் நடுங்குகின்றன’ என்றாள்.
‘ ஆம். ஏன் உன் நெஞ்சம் உறுதியாயிற்றே.. இளகிவிட்ட காரணம் என்ன?’
‘உங்கள் நண்பர் வந்தியத்தேவன் சொன்ன செய்திதான் காரணம்’
‘ நீயும் நானும் உடன்பிறந்தவர்கள் என்று அவன் சொன்னதை நீ ஏரிக்கரையில் நாம் பேசிக்கொண்டிருந்தபோது அதை நம்பவில்லை என்று கூறினாயே’
‘அவர் என்னைப் பெற்ற அன்னையை இலங்கைத் தீவில் பார்த்ததாகக் கூறினார். அதை நான் நம்புகிறேன். எனக்கொரு வரம் கேட்கிறேன். இதையாவது கொடுங்கள். வீரபாண்டியன் மரணத்திற்கு பழிவாங்குவதாக செய்த சபதத்தை என்னால் முடிக்க இயலவில்லை. என்னை நானே கொன்று கொண்டு முடியலாம் என நினைத்தால் அதற்கும் என்னிட்ம் தெம்பில்லை. நீங்கள் இந்த வாளால் என்னை வெட்டிக் கொன்று விடுங்கள். இனிவரும் ஜென்மங்களில் நான் நன்றியுடன் இருப்பேன்.’
என்று சொல்லியபடி நீட்டிய வாளை ஆதித்த கரிகாலன் வாங்கிக் கொண்டு அந்த அரண்மனையே அதிரும்படி பெரிதாகச் சிரித்தான்.
யாழ்களஞ்சியத்திலிருந்து இதைக்கேட்ட வந்தியத்தேவன் மருண்டான். இளைய பிராட்டி குந்தவை தன்னை இதுபோன்ற சந்தர்ப்பத்திலிருந்து ஆதித்த கரிகாலனைக் காப்பாற்றவே அனுப்பி வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான். தற்போது வெளிவந்து அவர்களைக் குறுக்கீடு செய்யாமல் பொறுமையாக காத்திருக்கலாம் என முடிவு செய்து பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான்.
‘ஒருகாலத்தில் உங்களிடமிருந்து மலர்மாலை சூடுவதாக கனவு கண்டேன். உங்கள் கையால் வாளை சூடும் பேறாவது எனக்குக் கிடைக்கட்டும்’
‘அப்படியானால், நான் இந்த வாளைக் கொண்டு உன்னிடம் சேர்வதற்கு தடையாய் இருப்பவர்களைக் கொல்கிறேன். நீ என்னுடன் வந்துவிடு நந்தினி’
‘என்னால் யாரும் சாக வேண்டாம். நமக்கு என் தலைவிதிதான் தடையாக இருக்கிறது’
‘ அந்த தடையை நான் மாற்றி எழுதுகிறேன். தடை செய்யாதே. வந்தியத்தேவன் சொன்னதைப்பற்றி நாம் சகோதர முறை என யோசிக்கிறாயா?’
‘இல்லை. நான் உங்களுக்கு ரத்த சம்பந்தமே இல்லை. அதில் சந்தேகமும் இல்லை. நான் பழுவேட்டரையரின் மனைவி. உங்களுக்கு பாட்டி முறை.’
‘அந்தக் கதையை சொல்லி என்னை ஏமாற்றாதே நந்தினி. உன்னை விட்டு நான் காஞ்சிக்கு சென்ற பின்னும் என்னை ஓயாமல் வதைத்துக் கொண்டே இருந்தாய். நீ மட்டும் அங்கு குதூகலமாய் பழுவேட்டரையரின் மனைவியாக இருந்து கொண்டு என்னை ஆட்டுவித்தாய்’
‘நான் மட்டும் சுகபோகங்களில் முழுகிக் கிடந்தேன் என நம்புகிறீர்களா?’
‘இல்லையல்லவா? அப்படியானால் கிளம்பு. எத்தனையோ தீவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றை அடைவோம். உன்னைக் காட்டிலும் எனக்கு ராஜ்யம் பெரிதன்று’
‘ராஜ்யத்தை துறந்தாலும் இந்தக் கீழ்க்குல மகள் புராதனமான சோழ சிங்காதனத்தில் ஏறுவதற்கு சம்மதிக்க மாட்டீர்கள் இல்லையா’ கேட்டுவிட்டு ஏளனமாக நந்தினி நகைக்க,
‘என்னைக் காட்டிலும் சோழ சிங்காதனம் உனக்கு பெரியதாய் போயிற்றா? அதற்காகத்தான் என்னை சிறுபிராயத்திலிருந்து விரும்பினாயா?’ என்று குரோதம் ததும்ப கரிகாலன் கேட்டான்.
‘அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இதற்காகவே பழுவேட்டரையரை மணந்தேன். வீரபாண்டியரை காப்பாற்ற முனைந்தேன்’.
அந்த பெயரைக் கூறியதும் கரிகாலன் வெகுவாக கோபப்பட்டு, ‘இதைச் சொன்னால் நான் கோபப்படுவேன். உன்னை வெட்ட வந்தால் அந்த வந்தியத்தேவன் வந்து என்னை வெட்டிவிடுவான் என கணக்கு போட்டிருக்கிறாயா’ என வாளை சுழற்றிக்கொண்டு ஓடத் தொடங்க.நந்தினி அவர் காலில் விழுந்து ‘வாணர்குல வீரரைப்பற்றி தாங்கள் கூறுவது அபாண்டம். அவரைக் கொலை செய்தால், மணிமேகலை தன் உயிரையே விட்டுவிடுவாள். என் நெஞ்சில் உங்கள் திருவுருவத்தைத்தவிர வேறெதுவும் இல்லை. இது சத்தியம்’ என கதறி அழுதாள். கரிகாலன் தணிந்து அவளைத் தன்னுடன் வருமாறு கெஞ்சினான்.
நந்தினி மறுத்து தன்னுடைய உண்மையான கதையை கூறினாள். ‘ என் வாழ்க்கையின் விமோசனம் மரணம் ஒன்றுதான். ஈழநாட்டில் வெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கும் மாதரசி என் அன்னை என்பதை என்னைப்போல பலரும் அறிந்திருந்தனர். என் அன்னையை அத்தகைய வெறியளாக்கிய காரணம் இன்னதென்பதையும் சில காலத்துக்கு முன்பு நான் அறிந்து கொண்டேன். அது என்னவென்றால் என்னுடைய தந்தை… என்னுடைய தந்தை… அவர்தான்’
விக்கி அழுதுகொண்டே ஆதித்த கரிகாலனின் காதில் சொல்லி முடித்தாள். ஒரு கணம் அதைக் கேட்டு பதறித்துடித்த ஆதித்த கரிகாலன், தன் ஆவேசம் தணிந்து அதை ஒத்துக் கொண்டான்.
‘ஆம் நந்தினி. இப்போது எனக்கு எல்லாம் தெரிகிறது. உன் ஆழ்மனதில் நீ எவ்வளவு துன்பபட்டிருக்க வேண்டுமெனவும் புரிகிறது. அன்றைக்கு நீ என்னுடைய காலில் விழுந்து மன்றாடிய போது நான் அதை மறுத்தது எத்தனைக் கொடுமை என்று தெரிகிறது நந்தினி. நான் செய்ததற்கு வேறு பிராயச்சித்தமே இல்லை. நம் இருவருக்கும் நடுவில் உள்ள தடை நீங்க வழியே கிடையாது. இதை எப்படி தாங்கினாய். நான் வாழ்வதை எப்படி சகித்தாய்? நல்லது. நம் இருவருடைய வாழ்க்கைக்கும் பரிகாரம், விமோசனம் ஒன்றுதான். இதோ. நந்தினி.. என் பிராயச்சித்தம்..’
இதையெல்லாம் உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த வந்தியத்தேவனுக்கு தன்னுடைய தந்தை பெயரை நந்தினி சொன்னது மட்டும் நன்றாக கேட்கவில்லை. ஆதித்த கரிகாலன் உரக்கச் சத்தமிட்ட போது கூட அவன் பயப்படவில்லை. ஆனால் நாத்தழுதழுக்க பேசியதைக் கேட்டதும் சிறிது தலையை நீட்டிப் பார்த்தான். அங்கு இருவரும் இல்லை. சுவரில் பதிந்திருந்த நிலைக் கண்ணாடியில் வேட்டை மண்டபத்தின் ரகசியக் கதவு துவாரத்தில் ரவிதாஸனுடைய முகம் தெரிந்தது.
உடனே தனது மறைவிடத்திலிருந்து வந்தியத் தேவன், அறைக்குள் நுழைய முயலுகையில், பின்னாலிருந்து ஒரு கை அவனைச் சுற்றி வளைத்து அவன் கழுத்தை இறுக்கியது. அண்ணாந்து பார்த்ததில் அந்த காளாமுகன் தெரிந்தான். பெருமுயற்சி செய்து விடுவித்துக் கொண்டு தரையில் விழுந்தான். தலையில் பெரிதாக அடிவிழ நினைவை இழந்தான்.
வந்தியத்தேவனுடைய உடலைத் தாண்டிக்கொண்டு காளாமுகன் தன்னை நோக்கிக் கத்தியை உருவிக்கொண்டு வருவதை நந்தினி பார்த்தாள் வியப்புடன் அவள் பார்க்கும்போது எதிரே கரிகாலன் கீழே விழுந்து கிடப்பதையும் அவன் உடலில் வீரபாண்டியனின் வாள் பாய்ந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தாள். பெரிதாய் விம்மலும் சிரிப்பும் கலந்த பயங்கரமான தொனி அவள் தொண்டையிலிருந்து எழுந்தது.
‘அடி பாதகி, சண்டாளி, உன் பழியை நிறைவேற்றி விட்டாயா’ என்று கேட்டுக்கொண்டே காளாமுக உருவத்தில் இருந்த பழுவேட்டரையர் அவளை நெருங்க வேட்டை மண்டபத்தில் இருந்து, புலி உருவில் ரவிதாசனும் வந்தான். புலியைத் தூக்கி பழுவேட்டரையர் மேல் அடிக்க அங்கிருந்த சிறிய விளக்கின் மேல் பட்டு விளக்கு அணைந்தது. அந்த வெளிச்சத்தில் மணிமேகலை ஓடுவது தெரிந்தது. அந்த காரிருளில் சோகம் ததும்பிய விம்மல் குரலும், வெறிகொண்ட சிரிப்பின் ஒலியும், மரணத் தறுவாயில் கேட்கும் முனகல் ஓசையும் மனிதர்கள் விரைந்து அங்குமிங்கும் ஓடும் காலடிச் சத்தமும் கலந்து கேட்டன.
காரிருள் சூழ்ந்தது.
- சவிதா

GOMATHISANKAR
June 1, 2023இந்தப் பகுதியை படித்த போது PS -2 வில் இந்த காட்சி நேர்த்தியாக வந்திருப்பதை உணர முடிகிறது
CMB
June 8, 2023சூப்பர் …👌