பொன்னியின் செல்வன் – 27
காளாமுகனாக வேடமிட்டு வந்திருந்த பெரிய பழுவேட்டரையரால் தாக்கப்பட்டு மயங்கியிருந்த வந்தியத்தேவன், அரைமயக்கத்தில் கண் திறந்து பார்த்தபொழுது, அங்கு காரிருள் அப்பியிருந்தது. கைகளால் துளாவிப் பார்த்தபொழுது, ஒரு திருகுமடல் கத்தி கிடைக்க, அதன் நுனியில் இருந்த பிசுபிசுப்பை உணர்ந்து வந்தியத்தேவன் அதிர்ச்சியுற்றான். தொண்டையில் காளாமுகன் அழுத்திப் பிடித்திருந்த காயத்தால் அவனுக்கு குரலும் வரவில்லை. பெருமுயற்சி செய்து அவன் எழுந்து நடந்தபொழுது எதிலோ தட்டுப்பட்டு விழுந்தவன், குனிந்து தொட்டுப் பார்த்ததும் அதிர்ந்தான். அது ஆதித்த கரிகாலனின் உயிரற்ற உடல் என்பதை அறிந்து கொண்டதும் அதிர்ச்சியும் துயரமும் அவனை அழுத்தின.
வந்தியத்தேவனின் நெஞ்சு விம்மித் தொண்டையை அடைத்து கண்களில் கண்ணீர் பெருகியது. எவ்வளவோ முயன்றும் தன்னால் தடுக்க முடியாமல் போய்விட்ட இயலாமையை நினைத்து மருகித் துடித்தான். இளவரசரை பாதுகாக்க தன்னை அனுப்பிய குந்தவையையும், பொன்னியின் செல்வனையும் இனிமேல் எப்படிக் காண்பேன் என ஆதித்த கரிகாலனின் உடலை மடியில் போட்டுக்கொண்டு அழுதான்.
மனிதர்கள் வரும் சந்தடிகளும், வெளிச்சமும் நெருங்கி வர, நிமிர்ந்து பார்த்தான். கந்தமாறனும், சம்புவரையரும், சில வீரர்களும் தீப்பந்தங்களுடன் வந்தனர்.சம்புவரையர் ‘அடப்பாவி, இளவரசரைக் கொன்றுவிட்டாயா’ என்றபடி பதற, கந்தமாறன் வந்தியத்தேவன்தான் கொன்றிருப்பான் என அநியாயமாக பழிச்சாட்டினான். வந்தியத்தேவன் நொந்துகொண்டே, தான் கொல்லவில்லை என்பதையும், நந்தினியும் அங்கே ஒளிந்திருந்த பாண்டிய ஆபத்துதவிகள் பற்றியும் கூறினான். அவர்களுக்கும் வந்தியத்தேவனுக்கும் தொடர்பு உண்டு என கந்தமாறன் குற்றம் சாட்டி அவனைத் தாக்க வாளை உருவினான். வந்தியத்தேவன் அதை மறுத்துக்கொண்டே இருந்தான்.
அப்போது திரைச்சீலை அசைய, சம்புவரையர் அங்கு பார்க்க, மணிமேகலை வெளியில் வந்து வந்தியத்தேவன் கொலை செய்யவில்லை என்று கூறினாள். கந்தமாறன் மேலும் கோபமடைந்து வந்தியத்தேவன் ஏதோ செய்து அவள் மனதை மாற்றியிருப்பதாகக் கூச்சலிட்டான். மணிமேகலை மறுக்க, சம்புவரையர், அப்போது ‘ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?’ என்று கேட்க, மணிமேகலை ‘நான்தான் கொன்றேன்’ எனக்கூற சம்புவரையர் மற்றும் கந்தமாறனுடன் வந்தியத்தேவனும் திகைத்து போனான்.
சம்புவரையர் மனம் நொந்து போக, கந்தமாறன், மணிமேகலை வந்தியத்தேவனைக் காப்பாற்றவே இந்தப் பழியை ஏற்கிறாள் என்பதைப் புரிந்து அவனைக் கொல்லப் போக, சம்புவரையர் அவனைத் தடுத்தார்.
மேலும் மேலும் அவன் செய்த முட்டாள்த்தனங்களால்தான் பெரும்பழி நேர்ந்திருக்கிறது, வந்தியத்தேவனை உயிருடன் ஒப்படைப்பது முக்கியம் என பரிதவித்துப் பேச, கந்தமாறன் தந்தையின் சொல்லுக்கு பணிந்தான். மணிமேகலையை அந்தப்புரத்துக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு வரும்படி ஆணையிட்ட சம்புவரையரிடம், இப்போதைக்கு வந்தியத்தேவனின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்பதை புரிந்துகொண்ட மணிமேகலை தானே செல்வதாக கூறிச் சென்றாள்.
அங்கிருந்த கட்டிலின் காலில் வந்தியத்தேவனைக் கட்டிப்போட ஆணையிட்ட சம்புவரையரிடம், ‘என் எஜமானனை நானே கொல்லவேண்டுமென என்ன அவசியம். நான் செய்யவில்லை என்பதை நம்புங்கள்’ என்று வந்தியத்தேவன் கேட்டான். அப்படியானால் தடுத்திருக்கலாமே என சம்புவரையர் கேட்க, பழுவூர் இளையராணியும் இளவரசரும் பேசிக்கொண்டிருந்தார்கள். நிலைமை விபரீதமாகும்போது தான் தடுக்குமுன் ஒரு காளாமுகன் வந்து கழுத்தை நெறித்ததால், மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறினான். அப்போது வெளியே மக்களின் பெருங்கூச்சல் கேட்க, சம்புவரையரும் காவலர்களும் அவனைத் தனியே விட்டுவிட்டு வேகமாக வெளியே வந்தனர். மலையமான் படைகள் கோட்டை வாசலில் வந்ததால் ஏற்பட்ட கூச்சல் அது என்று புரிந்து கொண்டனர்.
சம்புவரையர், கந்தமாறனை தப்பித்து போய்விடும்படி கூற, அது தமது பரம்பரைக்கே அபகீர்த்தி ஆகுமென கந்தமாறன் மறுத்துவிட்டான். அதைக்கேட்டு பெருமிதப் பட்ட சம்புவரையர், சுரங்கப்பாதை வழியாக தஞ்சாவூருக்குச் சென்று கரிகாலனின் மரணத்தைப் பற்றி சின்னப் பழுவேட்டரையரிடமும், ஒருவேளை பெரிய பழுவேட்டரையர் அங்கு வந்திருந்தால் அவரிடமும் தெரிவிக்கச் சொன்னார். இளவரசர் அருள்மொழி, தான் சிங்காதனம் ஏறுவதற்காக வந்தியத்தேவனை ஏவிவிட்டிருக்கலாம் என்றெல்லாம் செய்தி பரப்பவேண்டும் என்றும் முடிவுசெய்து கொண்டனர். மணிமேகலையை வாயைத் திறக்காமல் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு கந்தமாறன் கிளம்பினான்.
சிறிதுநேரம் சிந்தித்த சம்புவரையர் விளக்கை நன்றாகத் தூண்டிவிட்டு சுரங்கப் பாதையிலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். பின் அந்தப்புரத்தை அடைந்து அங்கிருந்த பெண்மணிகளிடம் எப்போது வேண்டுமானாலும் மாளிகையை விட்டு வெளியேற வேண்டியிருக்குமென எச்சரித்து விட்டு ஏழெட்டு வீரர்களுடன் அரண்மனை வாயிலுக்குச் சென்று கம்பீரமாக எதிர்வரும் மலையமான் படைகளை எதிர்த்து நின்றார்.
மிகுந்த மனவருத்தத்துடன் நடந்த சம்பவங்களை நினைத்து வந்தியத்தேவன் வருந்திக்கொண்டிருந்த போது சுரங்கபாதையிலிருந்து உஷ்ணம் சூழ அங்கு யாரோ நெருப்பு வைத்துவிட்டிருந்தது புரிந்தது. ஒரு கணம் தன் எஜமானனுடன் தானும் செத்துப்போய்விடலாம் என எண்ணினான். அவரைக் கொன்ற பழியை நாம் சுமக்கத்தேவையில்லை என்று நினைத்தவன் அடுத்த கணமே அதை மாற்றிக்கொண்டான். ஆதித்த கரிகாலனுக்கு செய்ய வேண்டிய இறுதிமரியாதைகளுக்கு அவரின் உடலை பத்திரமாக காப்பாற்றிக்கொண்டு போக வேண்டிய கடமை தனக்கிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு முயன்று தன் கட்டுகளிலிருந்து விடுவித்துக் கொண்டான். தீ நாலாபக்கமும் சூழ இளவரசரின் உடலை சுமந்தபடி, காலில் தட்டுப்பட்ட திருகுமடல் கத்தியையும் எடுத்துக்கொண்டு, யாழ்க்களஞ்சியத்தின் வழியாக முன்பு சதியாலோசனை நடந்தபோது பார்வையிட்ட மேல்மாடிக்கு கஷ்டப் பட்டு சென்றான். அங்கிருந்த மதிலில் இறங்கும்வண்ணம் ஒரு ஏணி சாய்த்து வைக்கப் பட்டிருக்க அதன்மூலம் இறங்கினான். அங்கு யாரையோ எதிர்பார்த்தபடி இடும்பன் காரி நின்றிருந்தான். அவனைச் சமாளித்துவிட்டு, உடலை சுமந்து கொண்டு அரண்மனைவாயிலை நோக்கி சென்றான்.
பார்த்திபேந்திரனும், மலையமானும் எதிரிட்ட வீரர்களை சிதறடித்துவிட்டு வேகமாக வந்து சம்புவரையரின் முன் நின்றனர். ‘ஆதித்த கரிகாலனுக்கு ஆபத்து உடனே படைகளுடன் வந்து காப்பாற்றவும்’ என்று எழுதப்பட்ட ஓலையைக் காட்டிய மலையமான், ‘என் பேரன் எங்கே?’ என சிங்கம் போல முழங்கினார். சம்புவரையர் தன் உடலில் எழுந்த நடுக்கத்தை மறைத்துக் கொண்டு, இளவரசர் பழூவூர் இளையராணியை சந்திக்க சென்றிருப்பதாக கூற, பார்த்திபேந்திரன் மலையமானைக் கூட்டிக்கொண்டு போக கிளம்பினவன் அதிர்ந்தான். அங்கு தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்து தீ’ தீ எனக் கத்திக்கொண்டு நாலாபக்கமும் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
பார்த்திபேந்திரன் அதிர்ந்து போய், மலையமானிடம், சம்புவரையரைக் காட்டி, ‘இவர்கள்தான் ஏதோ சூழ்ச்சி நடத்தியிருக்க வேண்டும். அவர்களை சிறைப்பிடியுங்கள்’ என்று கூற, சம்புவரையர் வாயிலை தகர்த்துக்கொண்டு வந்த அவர்கள்தான் பதில் சொல்லவேண்டுமென திரும்ப கர்ஜித்தார்.
பார்த்திபேந்திரன் தீ எரியும் திசையை நோக்கி ஓட, அந்தப்புரத்தில் இருக்கும் பெண்களெல்லாம் அலறியபடியே வெளியே வந்தனர். அவர்களுடன் வெளியே வந்த மணிமேகலை தீ எரியும் இடத்தைக் கண்டு பதறியபடியே அங்கு ஓடத் தொடங்கினாள். அவளைத் தடுக்க முயன்ற சம்புவரையரிடம் ‘அவர் அங்கிருக்கிறார்’ என்று பதறியபடி ஓட முயலவும், அவளை ஓங்கி அறைந்தார். சம்புவரையரின் கண்ணுக்கு கண்ணான செல்லப் பெண்ணான மணிமேகலை ஸ்தம்பித்து நின்றாள். அவளின் முகத்தைக் கண்டு வருந்திய சம்புவரையர், ‘அங்கு ஓடவேண்டிய அவசியமில்லை’ என்று வாயிலைச் சுட்டிக்க்காட்டினார். அங்கு வந்தியத் தேவன் அவனுடைய தோளில் ஆதித்த கரிகாலனின் சடலத்தை சுமந்தபடி தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தான்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த மலையமானும் அந்த திசையைப் பார்க்க, அவரின் உடல் நடுங்கியது. நா எழவில்லை. தொண்டை அடியோடு அடைத்துக் கொண்டு விட்ட து. வந்தியத் தேவன் மலையமானைப் பார்த்து, ‘ஐயா! இதோ இளவரசர் கரிகாலர். வீரபாண்டியன் தலை கொண்ட இந்த வீராதி வீரரை உயிரோடு தங்களிடம் கொண்டு சேர்க்க என்னால் இயலவில்லை. உடலை மட்டும் கொண்டு சேர்த்தேன். விதியாலும், சதியாலும் கொல்லப்பட்ட உங்கள் பேரப் பிள்ளையை இனி நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு வந்தியத்தேவன் இளவரசர் சடலத்தை மெதுவாய் கீழே இறக்கிவைத்துவிட்டு தடால் என தானும் கீழே விழுந்து நினைவிழந்தான்.
மலையமான், தன் பேரனிடம் அமர்ந்து அந்த வீரத் திருமுகத்தை உற்று நோக்கி ‘ஐயோ’என்றபடி தன் இரும்பையொத்த முதிய கைகளினால் தலையிலும் மார்பிலும் மாற்றி மாற்றி அடித்துக்கொண்டு புலம்பினார். தான் அவனுக்கு போர்த்தொழில் கற்றுக்கொடுத்ததையும், படைக்களத்தில் நின்று போர் புரிந்ததையும், வீர பராக்கிரமச்செயல்கள் செய்ததையும், சொல்லிச் சொல்லி புலம்பினார். அப்படியாவது வீரமரணம் அடைந்திருக்கக் கூடாதா என்றெல்லாம் சொல்லிப் புலம்பினார்.பின்னர் சோகத்திலிருந்து விடுபட்டு ரெளத்திரகாரம் அடைந்து சம்புவரையரிடம், ‘நேருக்கு நேர் நின்று மோதினாலும் கொல்ல முடியாத தன் பேரனை என்ன சதி செய்து கொன்றாய்?’ என்று கர்ஜித்தார். சம்புவரையர் அதை மறுக்க, பார்த்திபேந்திரனிடம் அங்கிருக்கும் அத்தனை பேரையும் சிறைப்பிடிக்குமாறும், அரண்மனையை இடித்து சிதிலமாக்கும்படியும் ஆணையிட்டார்.
பார்த்திபேந்திரன் தீயே அரண்மனையை அழித்து விட்ட தாகக் கூற, அங்கு பார்த்த போது, மாளிகை கொழுந்து விட்டு எரிந்ததை அனைவரும் கண்டு திகைத்துப் போய் நின்றிருந்தனர். தன்னை ஒருவாறு சமனப் படுத்திக்கொண்ட மலையமான், ‘மூன்றாண்டு காலமாக மகனைப் பாராமலிருந்த தன் மகளிடம் இறந்த சடலத்தையாவது கொண்டு போய் காண்பிப்போம், இளவரசனைக் கொன்ற பாவிகளுக்கு அங்கேயே தக்க தண்டனையை சக்ரவர்த்தி வழங்கட்டும்’ எனக் கூறினார்.
- சவிதா

Comments (0)