பொன்னியின் செல்வன் – 28
கொள்ளிடத்தின் வடகரையில் திருநாரையூரில் தன் மனக்கலக்கம் தீர, நம்பியாண்டர் நம்பியைச் சந்தித்துவிட்டு வந்த செம்பியன் மாதேவியை ஆழ்வார்க்கடியான் சந்தித்து, ஆதித்த கரிகாலன் மறைந்த செய்தியைக் கூறினான். பெரிதும் கலங்கிய பெரிய பிராட்டியிடம், இதனால் உள்நாட்டுப் போர் நடக்கும் அபாயம் இருப்பதால் இளைய பிராட்டி குந்தவையுடன் தஞ்சை சென்று அதைத் தடுக்கும் உபாயத்தைச் செய்யுமாறு ஆழ்வார்க்கடியான் கேட்டுக்கொண்டான். செம்பியன் மாதேவி அதைச் செய்வதாக ஒப்புக்கொண்டு ஆதித்தனின் மரணத்தைப் பற்றி விசாரிக்க, வந்தியத்தேவன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் தான் ஒரு ருசுவைத் தேடி மேற்றிசைக்குச் செல்லப் போவதாகவும் கூறினான். மேலும் குந்தவையை வந்தியத்தேவன் பொருட்டு மனங்கலங்காது இருக்குமாறு கூறி விடைபெற்றான்.
திருப்புறம்பியத்தை அடைந்த ஆழ்வார்க்கடியான் அங்கு இடும்பன்காரி, சோமன்சாம்பவன், கிரம வித்தன் மற்றும் இராக்கம்மாள் கூடிப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு, அவர்கள் அனைவரும் பச்சைமலைக்குச் செல்கிறார்கள் எனப் புரிந்துகொண்டான். அவனைப்போலவே அவர்களைப் பின் தொடர்ந்துவந்த பூங்குழலியைக் கண்டு, அவர்கள் செல்லும் இடத்திற்கு இருவரும் சென்றனர். வழியில் ஊமைராணி இறந்ததைக் கேட்டு வருந்தினான். ஒரு இடத்தில் ரவிதாஸன் மற்றும் ஆபத்துதவிகள் மறைந்து கூட்டமாகச் சமைத்துக்கொண்டிருந்ததைக் கண்டனர். ஆழ்வார்க்கடியான் மட்டும் அங்கிருந்த ஒரு குகைக்குள் மறைந்து சென்றான். அங்கு பழுவேட்டரையர், தன் காளாமுகத் தோற்றத்தோடு, அப்போதுதான் மயக்கத்திலிருந்து விழித்திருந்தார். அருகில் நந்தினி தலைவிரி கோலமாய் அமர்ந்து அவரைக் கஞ்சியை உட்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டிருந்தாள்.
முதலில் நந்தினியைக் கண்டு மகிழ்ந்த பழுவேட்டரையர், பின் அவளைப் பலவாறாகத் திட்டத்தொடங்கினார். ஆனால் நந்தினி அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள். இத்தனை நாள் தன்னைப் பட்டமகிஷியாக வைத்திருந்ததற்கு நன்றி கூறினாள்.
ஆதித்த கரிகாலனின் முடிவு தனக்குத் தெரிந்ததானாலே, அதிலிருந்து பழுவேட்டரையரை விலக்குவதற்காகவே, அவரைத் தஞ்சைக்கு அனுப்பி வைத்ததாகக் கூறினாள். ஆனால் விதிவசத்தால் அவர் வந்து சேர்ந்ததைப் பற்றியும் ஆதித்தகரிகாலனைச் சந்தித்தபொழுது, தன்னால் தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் போனதையும் குறிப்பிட்டாள்.
வந்தியத்தேவனின்பால் ஆதித்த கரிகாலனின் கோபத்தைத் தூண்டி, கரிகாலன் அவனைக் கொல்ல வருகையில், மணிமேகலை அவனைக் காப்பாற்ற இளவரசரைக் கொல்லுவாள் எனத் திட்டம் தீட்டி வைத்திருந்ததையும் கூறினாள். அப்போது தெய்வப் பயனாக காளாமுக வேஷத்தில் தாங்கள் உதவிக்கு வந்ததாகக் கூற, பழுவேட்டரையர், இடும்பன்காரியிடமிருந்து தான் வாங்கிவைத்திருந்த கத்தியை நந்தினி மீதே, தான் எறிந்தபோது அது இளவரசர் பேரில் பாய்ந்துவிட்டது எனப் பெரிதும் வருந்தி அவளைத் தூற்றினார்.
நந்தினி அவரைப் பெரும்பாடு பட்டு இங்கு தூக்கிவரச் செய்ததாகவும் மூன்று நாட்கள் அவருக்குப் பணிவிடை செய்து அகமகிழ்ந்து போனதாகவும் இனிமேல் விடைபெற்றுச் செல்லப்போவதாகவும் கூறிக்கொண்டிருந்தாள். இதைக்கேட்டுக்கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து விலகிவந்து பூங்குழலியிடம் அமர்ந்தான். குகையில் பெரிய பழுவேட்டரையரும் நந்தினியும் இருப்பதைக் கூறினான். அப்போது அவள் தன் அத்தையைக் கொன்ற சோமன் சாம்பவனைக் கொல்லக் காத்திருப்பதாகக் கூறினாள்.
பூங்குழலி, அரண்மனையில் தன் அத்தையைக் கொன்றவனைத் துரத்திக்கொண்டு சுரங்கப்பாதை வழியாக வரும்பொழுது, தன்னுடன் சின்ன பழுவேட்டரையரும் வந்தார் எனவும் சுரங்கப் பாதையில் மதுராந்தகன் மறைந்து இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்து, இந்தப் பழி அவர்மீது விழுந்து விடுமோ என அஞ்சி அவரைக் கூட்டிக்கொண்டு திரும்பிவிட்டதாகவும் கூறினாள்.
அப்போது இருவரையும் ரவிதாஸனின் பாண்டிய ஆபத்துதவிக் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அனைவரும் அவர்கள் மீது தாக்குதலுக்குத் தயாராக, நந்தினி உள்ளிருந்து வந்து, அவர்களைத் தடுத்து, ஆழ்வார்க்கடியானிடம் தன் தாய் இருக்குமிடத்துக்குத் தன்னைக் கூட்டிச் செல்லுமாறு கேட்டாள். ஆழ்வார்க்கடியான், சோமன் சாம்பவன்தான் அவள் அன்னையைக் கொன்றுவிட்டான் எனக் குற்றம் சாட்ட, நந்தினி உடைந்துபோய் உட்கார்ந்து அழுதாள். அப்போது சின்ன பழுவேட்டரையரும் கந்தமாறனும் படைகளுடன் வர, பாண்டிய ஆபத்துதவிகள் ஆழ்வார்க்கடியான் தலையிலும் பலமாக ஒரு அடியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
சேந்தன் அமுதனும் ஒரு குதிரையில் கட்டப்பட்டு அங்கு வந்து சேர்ந்தான். சின்ன பழுவேட்டரையரைக் கண்டதும் பூங்குழலி, கொலைகாரர்கள் அவர்கள்தான் என்றும் அவர்களைப் பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டாள். அப்போது குகையிலிருந்து பெரிய பழுவேட்டரையர் எழுந்து வெளியில் வந்தார். திருமலையும் கந்தமாறனும் குகையினுள் நுழைய முயல, பெரிய பழுவேட்டரையர், ரவிதாசனும் மற்றவர்களும் குகையை அடைத்துவிட்டுத் தப்பித்துவிட்டதாகக் கூறினார்.
தளர்ந்து அடிபட்டு பிரேதக்களை பொருந்திய முகத்துடன் தன் மூத்தவரைக் கண்டுகொண்ட சின்ன பழுவேட்டரையர், அவரை வணங்கி அழுது நின்றார். ‘உன் பேச்சைக் கேட்காமல் மோசம் போனேன்’ என்று பெரியவர் வருந்தினார். பின் அதுவரை நடந்ததை சின்ன பழுவேட்டரையர் சொல்லி முடிக்க, பெரியவர் பொறுமையுடன் கேட்டுக்கொண்டார்.
பூதி விக்கிரம கேசரியிடம் கோட்டைப் பாதுகாப்பு இருப்பதையும். தங்கள் குடும்பத்தின் மேல் கைவைக்க கூடாது என எச்சரித்து வந்ததையும் கூறினார். வழியில் கந்தமாறனைக் கண்டு கூட்டி வந்ததாகவும் மற்ற அரையர்களுக்கு, படை திரட்டி வருமாறு ஓலை அனுப்பியுள்ளதாகவும் கூறினார். அப்போது ஓரமாய் உட்கார்ந்திருந்த நந்தினியைப் பார்த்து, தன் உயிரை நந்தினிதான் காப்பாற்றினாள் என்று சின்ன பழுவேட்டரையரிடம் கூறிவிட்டு நந்தினியை நெருங்கினார்.
ஆழ்வார்க்கடியான் நந்தினியிடம் ‘இப்போதாவது வந்தால் வைணவக் கைங்கரியங்கள் செய்யலாம்’ என அழைக்க, நந்தினிஅவன் தன்மீது வைத்திருக்கும் பாசத்துக்கு நன்றி உகுத்தாள். தூரத்தில் நின்று பூங்குழலி தன் அத்தை போலவே நந்தினி இருப்பதை சேந்தன் அமுதனிடம் சொல்லிக்கொண்டிருக்க, நந்தினி தன்னை நெருங்கிய பெரிய பழுவேட்டரையரின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தாள். பின் அங்கிருந்த புரவியின் மேல் ஏறிக்கொண்டு பாய்ந்தாள். அவளைத் தொடர முயன்றவர்களை, பெரிய பழுவேட்டரையர் தடுத்துவிட்டார்.
ஆம். நந்தினி மறைந்தாள்.. இந்தக் கதையில் இனி நந்தினி வரமாட்டாள்.. யார் கண்டது? என்றோ எங்கோ அவளை நாம் சந்திக்கக்கூடும்.

தஞ்சையில் ஆதித்த கரிகாலனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட, கூடவே ஜனசமுத்திரம் அலையலையாக திரண்டது. பழுவேட்டரையர்களின் பால் ஜனங்களின் அதிருப்தி பெரியளவில் இருந்ததால், அவர்களுக்கெதிரான கோஷங்கள் எழுந்துகொண்டேயிருந்தன. ஈமச் சடங்குகள் நடந்து சக்ரவர்த்தியின் குடும்பம் கோட்டைக்குள் நுழைந்த பிறகும் அது தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அப்போது மதுராந்தகனும் இல்லாதபடியால், அவருக்கு எதிரான கோஷங்களுடன் தங்களுக்குக் கிடைத்த தகவலின்படி அநிருத்தரின் மாளிகைக்கு முன்பு சென்று கோஷமிடத் தொடங்கினர். வேளக்காரப் படையினர் வந்து துரத்தியடித்தனர்.
உண்மையில் மதுராந்தகன் அங்குதான் மறைந்திருந்தார். அநிருத்தர், அவருடைய பிறப்பு ரகசியம் தனக்குத் தெரியுமெனவும் ஆனால் அதைச் சொல்ல முடியாதெனவும் கூறியதில் மதுராந்தகன் சஞ்சலம் அடைந்திருந்தான். அப்போது செம்பியன் மாதேவிப் பிராட்டியாரும் அங்கு வந்து சேர்ந்தார். இருவருக்கும் ராஜ்ய உரிமை பற்றிய பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், பிராட்டியார் மதுராந்தகன் தன் மகனில்லை என்ற உண்மையைக் கூற நேர்ந்தது. மதுராந்தகன், அவர் மனம் புண்படும்படிப் பேசி உண்மையைச் சொல்லுமாறு பல்வேறு வார்த்தைகளால் ஏசினான். அநிருத்தரிடம் அந்தக் கதையை சொல்லுமாறு செம்பியன் மாதேவி கேட்டுக்கொண்டார்.
‘செம்பியன் மாதேவி தன் குழந்தைப் பேற்றை எதிர்பார்த்திருந்த சமயத்தில், கண்டராதித்தர் வெளியூருக்குச் சென்றிருந்தார். அதே சமயத்தில், அக்காவும் தங்கையுமான இரண்டு ஊமை ஸ்தீரிகள் அரண்மனைத் தோட்ட த்தில் குடியிருந்தார்கள். கர்ப்பஸ்தீரியான அந்த ஊமைப் பெண்ணை ,அவள் சகோதரியுடன் செம்பியன் மாதேவி க்ஷேத்ராடனம் சென்றபோது சந்தித்துக் கூட்டிவந்து போஷித்துக் கொண்டிருந்தார்.
செம்பியன் மாதேவிக்குக் குழந்தை பிறந்தபோது, அது அசைவில்லாமல் இருந்ததைக்கண்டு பதறி அழுதபடி பார்க்கவந்த அநிருத்தரிடம் தெரிவித்தாள். தன் கணவரிடம் எப்படி இதைச் சொல்வேன் எனக் கதறிய செம்பியன் மாதேவியிடம் அநிருத்தர் ஒரு யோசனை தெரிவித்தார். அதன்படி அரண்மனைத் தோட்டத்தில் இருக்கும் கர்ப்பஸ்தீரிக்குப் பிறந்திருக்கும் இரட்டைக் குழந்தைகளில், ஆண் குழந்தையை எடுத்து வரச் செய்து, செம்பியன் மாதேவியிடம் அளித்தார். இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த அந்த ஊமை ஸ்தீரி மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாள். குழந்தைகள் நன்றாக வளரும் என்று கூறிய அநிருத்தரிடம் விட்டுவிட்டு அவள் மறைந்துவிட்டாள்.
அசைவில்லாமல் பிறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் புதைத்துவிடும்படி, அந்தத் தங்கையான ஊமை ஸ்தீரியிடம் கொடுத்துவிட்டு, இன்னொரு பெண் குழந்தையை, தன் சீடனான ஆழ்வார்க்கடியானிட்ம் கொடுத்து பாண்டிய நாட்டுக்கு அனுப்பிவைத்தார்.
செம்பியன் மாதேவி, இதைச் சிறிதுகாலம் கழித்துத் தன் கணவரான கண்டராதித்தனிடம் உணமையைக் கூறி மன்னிப்பும் கேட்டார். யார் வயிற்றில் பிறந்த குழந்தையாயினும் என்ன, நம் குழந்தை போலவே வளர்ப்போம். ஆனால் ராஜ குடும்பத்துக்கு வாரிசாக வேண்டாம். சிவத்தொண்டாற்றும்படி வளர்ப்போம். அவனுக்கு சிவ சாம்ராஜ்யமே போதும். ராஜ்ய உரிமை வேண்டக்கூடாது என உறுதி வாங்கிக்கொண்டு சில நாட்களில் இறந்தும் போனார்.’
இவற்றையெல்லாம் அநிருத்தர் சொல்லி முடித்ததும் அதிர்ந்த மதுராந்தகன், இது யாருக்கும் தெரியாதெனில் இதற்குப் பிறகும் இதை மறைத்து வைக்குமாறும் அதற்கு ஈடாக அவருக்குப் பரிசளிப்பதாகவும் கூறினான். அநிருத்தர் மறுத்து, செம்பியன் மாதேவி என்ன கட்டளை இடுகிறாரோ அதை மட்டுமே ஏற்பேனெனக் கூற, மதுராந்தகனுக்குச் சினம் மிகுந்தது. செம்பியன் மாதேவியிடம் இதை மறைத்துவிடுமாறு கூற, அவர் அதை ஒத்துக்கொள்ள மறுத்து, நல்வார்த்தைகள் கூறி அவனை ஆற்றுப்படுத்தினார்.
மேலும் அதை வெளியில் சொல்லுவதைத் தான் விரும்பவில்லை எனவும் மதுராந்தகனை, அரசர் கூட்டவிருக்கும் சபையில், ராஜ்யம் ஆளும் சிந்தனை தனக்கில்லை; சிவத்தொண்டில் முழுகப் போகிறேன், என அறிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மதுராந்தகன் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்க, அநிருத்தர் சபை கூட இன்னும் மூன்று தினங்கள் இருப்பதாகக் கூறவும் மதுராந்தகனின் மனத்தில் பலவிதத் தீய எண்ணங்கள் எழத் தொடங்கின. சேந்தன் அமுதனின் தாய்க்கு இந்தச் செய்தி தெரியும் என்பதையும் அறிந்துகொண்டான்.
அப்போது அருள்மொழி உள்ளே வந்து, செம்பியன் மாதேவியின் தாள் பணிந்து, இந்தப் பேச்சுகளை மறைந்திருந்து கேட்டதற்கு மன்னிக்கும்படியும் மதுராந்தகர் அவருடைய மகனில்லை என வெளியில் தெரிவிக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார். இந்த ரகசியம் தனக்கும் தன் தமக்கை இளைய பிராட்டி குந்தவைக்கும் கூடத் தெரியுமென அவர் சொல்ல, அனைவரும் வியப்பிலாழ்ந்தனர். அநிருத்தர் மூன்று நாட்கள் அனைவரும் சிந்தித்து முடிவெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தொடரும்
- சவிதா

Comments (0)