குந்தவை தன் தமையன் கரிகாலனின் இழப்பினாலும் வந்தியத்தேவன் பேரில் அந்தக் கொலைப்பழி விழுந்து கிடப்பதாலும் பெரும் கலக்கத்திலும் வருத்தத்திலும் இருந்தாள். அப்போது வானதி அங்கு வந்து, அவளை ஒரு இளம்பெண் பார்க்க வந்திருப்பதாகக் கூறினாள். வந்தவள் மணிமேகலைதான். அவள் மிகுந்த சோர்வுடன் வந்து நின்றாள். அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தபோதும் தன் தமையன் அவள் அரண்மனையில்தான் கொலையுண்டான் என்பதால் குந்தவையால் மணிமேகலையின்மீது இரக்கம் கொள்ள இயலவில்லை.

ஆனால் வந்தியத்தேவன் – கந்தமாறன் நட்பும் அதனால், கந்தமாறன் தன் தங்கையை வந்தியத்தேவனுக்கு மணம் செய்விக்கலாம் என்ற யோசனை வைத்திருந்ததையும் கடைசியில் ஆதித்த கரிகாலனுக்கு இவளைத் திருமணம் செய்து வைக்கும் யோசனையாக அது மாறிப்போயிருந்ததையும் நினைத்து, அவளின் சோகத்தில் குந்தவைக்கு சுவாரசியம்கூடப் பிறந்தது. என்னவென்று அவளிடமே விசாரிக்கலானாள். அவள் தன் கண்ணீருக்கு மத்தியில் ஆதித்த கரிகாலனைக் கொன்றது தானே எனக் கூறினாள்.

திடுக்கிட்ட குந்தவை, “சம்புவரையரையும் கந்தமாறனையும் காப்பாற்றுவதற்காக இப்படிக் கூறுகிறாயா?” என வினவியபோது, அதை மறுத்த மணிமேகலை, அவர்கள் மதுராந்தகனையும் பின்பு ஆதித்த கரிகாலனையும் தன் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அவர்களைத் தான் வெறுப்பதாகவே கூறினாள். மேலும் ஆதித்த கரிகாலன் தன்னை சகோதரியாக நினைத்து மடல் எழுதியிருப்பதையும் குறிப்பிட, குந்தவை மேலும் திகைத்தாள்.

அவள் வெகுவாகக் கலங்கிப் போயிருப்பதால், அவளுக்கு ஆறுதல் கூறி, அவளிடம் ‘என்ன நடந்தது’ என்று அக்கறையுடன் விசாரித்தாள். அவள், வாணர் குலத்து வீரர் வந்தியத்தேவர், பாதாளச்சிறையில் சிறைப்பட்டிருப்பதை மீட்பதற்காகவே வந்திருப்பதாகவும் அவரை எப்படியாவது விடுவிக்குமாறும் வேண்டிக்கொள்ள, குந்தவை திகைத்தாள்.

குந்தவை வந்தியத்தேவனைப் பார்க்கப் போவதற்கே தயங்கிக்கொண்டிருக்க, மணிமேகலை, அவன் மீதான கொலைப்பழியைத் தன்மேல் ஏற்றுக்கொள்ளச் சித்தமாய் வந்திருப்பதையும் வந்தியத்தேவன் பேரில் அவள் கொண்டிருக்கும் தூய அன்பினையும் கண்டு நெகிழ்ந்தாள். வானதி அவளை மேலும் விசாரித்தாள்.

ஆதித்த கரிகாலனால் வந்தியத்தேவருக்கு ஆபத்து இருப்பதாக நந்தினி தன்னை நம்பவைத்திருந்ததையும் ஆனால் ஆதித்த கரிகாலருக்கு அந்த எண்ணமேயில்லை என்று அவர் குந்தவையிடம் ஒப்படைக்கச் சொல்லி எழுதியிருந்த ஓலையில்  இருந்து தான் தெரிந்துகொண்டதையும் மணிமேகலை கூறினாள். குந்தவை அந்த ஓலையை வாங்கிப் படித்தாள்.

தன் விதியைத் தாண்டி, தான் செல்லப் போவதாகவும் வந்தியத்தேவன் முடிந்தவரை தன்னைக் காபந்து பண்ணியதாகவும் இதையும் மீறி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு, தானே பொறுப்பு என ஆதித்த கரிகாலன் அதில் எழுதியிருந்தான்.

குந்தவை ஒருவாறு தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு மணிமேகலையிடம், அவள் ஆதித்த கரிகாலரைக் கொன்றதாகச் சொன்னால் அவரின் புகழுக்கு அபகீர்த்தி ஏற்படும் எனவும் இதை வந்தியத்தேவரும் விரும்பமாட்டார்; தவிர வந்தியத்தேவர் அந்தப் பழியைத் தானே ஏற்கவும் முனைந்து மணிமேகலையைக் காப்பாற்றவே விரும்புவார் எனவும் கூறினாள். மனமுடைந்து போன மணிமேகலை, எப்படியாவது வந்தியத்தேவனை இப்பழியிலிருந்து காப்பாற்றுமாறு வேண்டினாள்.

அப்போது அங்கு பொன்னியின் செல்வர் வர, வானதியையும் மணிமேகலையையும் சற்றுத் தள்ளி இருக்குமாறு கூறிவிட்டு, தம்பியுடன் குந்தவை தனித்துப் பேசலானாள். அப்போது தனக்குப் பட்டம் சூட்டுவதைப்பற்றித் தன் அதிருப்தியைத் தெரிவித்தவர், மணிமேகலையைக் கண்ணுற்று என்னவென்று வினவ, பாதாளச் சிறையில் இருக்கும் வந்தியத்தேவனைக் காப்பாற்றுவதற்காக சம்புவரையர் மகள் வேண்டி நிற்பதை குந்தவை வருத்தத்துடன் கூறினாள்.

பெரிதும் அதிர்ந்துபோன பொன்னியின் செல்வர், வந்தியத்தேவனை இத்தனை நாள் தாம் நினைத்துப் பாராமல் இருந்ததைக் குறித்து வெட்கினார். தான் நன்றிகெட்ட செயல் செய்துவிட்டதாக வருந்தி, உடனே அவனை விடுவிக்கும் ஏற்பாடுகளைச் செய்யப்போவதாகச் சொல்லிக் கிளம்ப, அப்போது அங்கு வந்த மலையமானும் பூதி விக்கிரம கேசரியும் அவரைப் போகவிடாது வாயிலிலேயே பலவந்தமாகத் தடுத்தனர்.

திகைத்துப்போன அருள்மொழிவர்மரிடம் பூதி விக்கிரம கேசரி கோட்டைக்காவல் பாதுகாப்பு, சின்ன பழுவேட்டரையரிடம் இருந்து தன்னிடம் வந்திருப்பதைக் கூறினார். மலையமான், வந்தியத்தேவனை இளவரசர் விடுவித்தால் ஆதித்த கரிகாலனின் கொலைப்பழி அவர் மீதே திரும்ப வாய்ப்பிருப்பிருக்கிறது எனக் கூறினார்.

சக்ரவர்த்தி மதுராந்தகனுக்குப் பட்டம் சூட்ட முடிவு செய்திருப்பதாகவும் சம்புவரையர் மற்றும் மற்ற குறுநில அரசர்களை அழைத்துவர பார்த்திபேந்திரன் போயிருப்பதாகவும் ஆனால் மதுராந்தகன் பட்டம் சூடுவதில் தங்களுக்கு விருப்பமில்லை எனவும் பூதி விக்கிரம கேசரி தெரிவித்தார்.

கரிகாலன் மரணம் பற்றிய உண்மை வெளிப்படும்வரையில் இளவரசர் அமைதியாக இருப்பது நல்லது என்ற அவர்களின் முடிவை குந்தவை ஒப்புக்கொள்ள, வந்தியத்தேவனைப் பாதாளச் சிறையில் சென்று பார்த்துவிட்டாவது வரலாம் என்று அனைவரும் முடிவு செய்து மணிமேகலையுடன் கிளம்பினர். அங்கு சென்று பார்த்தபொழுது வைத்தியர் மகன் பினாகபாணி மட்டுமே இருந்தான்.

வைத்தியர் மகன் பழையாறையில் வந்தியத்தேவனால் அவமானப்படுத்தப்பட்ட பிறகு முதன்மந்திரி அநிருத்தரிடம் சென்றான். முன்னொரு சமயம் அவன் பாதாளச்சிறையில் இருந்தபொழுது பக்கத்துச் சிறையில் இருந்த பைத்தியக்காரன் என்று தன்னைச் சொல்லிக்கொண்டவனுக்கு இலங்கையில் பாண்டிய நாட்டு ரத்தினஹாரம் மற்றும் மணிமகுடம் இருக்குமிடம் குறித்தும் சோழகுலத்துப் பட்டத்து வாரிசு ஒருவரின் பிறப்பு ரகசியம் குறித்தும் தெரியும் என்றும் தன்னை விடுதலை செய்தால் அதைச் சொல்வதாகவும் தன்னிடம் கூறியதாகச் சொன்னான்.

அநிருத்தர் அதைப்பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வதற்காக  சேனாதிபதியிடமிருந்து விடுதலை உத்தரவை வாங்கி அளிக்க, அதை எடுத்துக்கொண்டு பினாகபாணி பாதாளச் சிறையை அடைந்தான். அங்கு பக்கத்தில் இருந்த வந்தியத்தேவனை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து இழுக்காகப் பேசிவிட்டு, அந்த ரகசியம் அறிந்த பைத்தியக்காரனிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான். தானே அந்த ரகசியங்களைத் தெரிந்துகொண்டால் நல்லது எனக் கேட்டுக்கொண்டிருந்தவனை, பக்கத்து அறையிலிருந்து சுவர்களை இடித்துத் தள்ளிவிட்டு வந்த வந்தியத்தேவன், அடித்துக் கட்டிப் போட்டான். வந்தியத்தேவன் பைத்தியக்காரனுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறி பினாகபாணி, பொன்னியின் செல்வர் முதலானவர்களிடம் அழுதான்.

கடம்பூரில் இருந்து வந்தியத்தேவனைக் கட்டி இழுத்துவந்தபோது, அவனுக்கு தீக்காயங்களாலும் தன் எஜமானனுடைய மரணத்தைத் தடுக்க முடியாத குற்றவுணர்ச்சியாலும் பெரிதும் மயங்கிய நிலையிலேயே தஞ்சைக்கு வந்தான். அவன்மீது இளவரசரைக் கொன்ற குற்றத்தைச் சுமத்திப் பாதாளச்சிறையில் அடைத்திருந்தார்கள்.  அப்போது பக்கத்துச் சிறை அறையிலிருந்த பைத்தியக்காரன் என்று தன்னை சொல்லிக்கொண்டவன், பினாகபாணி தன்னை விடுவிக்கப் போவதாகக் கூறவும், இருவரும் திட்டம் தீட்டி அவனைக் கட்டிப்போட்டுவிட்டு பினாகபாணி போல வந்தியத்தேவன் உடுத்திக்கொண்டு வாசலில் காத்திருக்கும் அநிருத்தரின் ஆட்களுடன் வெளியே சென்றனர்.

வழியில் பொன்னியின் செல்வர், குந்தவை, மணிமேகலை, வானதி, சேனாதிபதி என அனைவரும் எதிரே வர, தன்னைப் பார்க்கத்தான் போகிறார்கள் என அறியாத வந்தியத்தேவன் அவர்கள் கண்ணில் பட்டுவிடாமல் நின்றுகொண்டான். இவ்வளவு அருகிலிருந்தும் யாரிடமும் அணுகி உதவி கேட்க முடியவில்லையே என மருகினான். பின்னர் அநிருத்தரின் ஆட்களிடமிருந்தும் தப்பி, பைத்தியக்காரனும் வந்தியத்தேவனும் முன் பழுவூர் ராணியைச் சந்தித்த பெரிய பழுவேட்டரையர் அரண்மனையில், அதே வழியில் சென்று மதிலேறிக் குதித்து மறைந்துகொண்டனர்.

இருண்டபின்னேதான் சுரங்கப் பாதையை அடைய முடியுமென்பதால், மறைந்து உட்கார்ந்திருந்தபோது வந்தியத்தேவன் அந்தப் பைத்தியக்காரனின் கதையைக் கேட்டான்.

அவன் பெயர் கருத்திருமன். கருத்திருமன் ஒரு படகோட்டி. ஒருநாள் கலங்கரை விளக்கத்திலிருந்து கீழே விழுந்த, புத்தி சுவாதீனமற்று இருந்த ஊமைப் பெண்ணொருத்தியைக் கருத்திருமன் காப்பாற்றினான். அவளை ஈழ நாட்டில் விட்டு வரும்படி சோழ நாட்டு அதிகாரி ஒருவர் கூறியதால், ஓடத்தில் ஏற்றிக் கூட்டிப் போனான். வழியில் இன்னொரு மனிதரைக் காப்பாற்ற நேர்ந்தது. அவர் பாண்டிய அரசர் என்று தெரிந்தது. பின்னர் பாண்டிய அரசர், இலங்கை அரசன் மகிந்தனுக்கு, கருத்திருமன் மூலம் ஓலை கொடுத்தனுப்பினார். மகிந்தன் பாண்டியனுக்கு அடைக்கலம் அளித்தான். பாண்டியனின் தந்தை முன்பு, இலங்கையில் தங்கள் குலத்தின் புராதன ரத்தினஹாரத்தையும் மணிமகுடத்தையும் மறைத்து வைத்திருந்த இடத்தையும் கருத்திருமன் பார்த்துக்கொண்டான்.

பின்னர் பாண்டியருடன் ஊர் திரும்பியபின் அந்த  ஊமைப் பெண்ணை, கோடியக்கரையில் அவளது சகோதரியான வாணியுடன் பார்த்து அதிர்ச்சியுற்றான். அப்போது அந்தப் பெண் கருவுற்று இருந்தாள்.  அவர்களின் தமையனாரான கலங்கரை விளக்கக் காவலர் தியாகவிடங்கரின் வீட்டில் இரு சகோதரிகளும் இருந்தனர். மந்தாகினியின் தங்கையான வாணியின் மீது ஆசைப்பட்டுத் திருமணம் செய்துகொள்ள நினைத்தபோது, கோடியக்கரை குழகர் கோயிலுக்கு வந்த செம்பியன் மாதேவி, அக்கா தங்கை இருவரையும் தன்னுடனே அழைத்துச் சென்றதால், வருந்தி பாண்டிய நாட்டுக்கே கருத்திருமன் சென்றுவிட்டான்.

பாண்டிய அரசர் நாட்டை மீட்கும் முயற்சியில் இருந்தார். அவரைச் சந்தித்தபோது, அவர் அந்த ஊமைப்பெண்ணை முடிந்தால் கூட்டி வரும்படி கூறினார். பழையாறையில்  வாணியைச் சந்திக்கச் செல்லும்போது அவள் ஒரு குழந்தையைப் புதைக்க முயன்றுகொண்டிருந்தாள். அவளுக்குக் கேட்கும் திறன் இல்லாததால், குழந்தை அழுததைக்கூடக் கேட்க இயலாமல் இறந்துவிட்டதாகத் தவறாக நினைத்திருந்தாள். பின்னர் அந்தக் குழந்தையைக் காப்பாற்றியதாகவும் கூறித் தன் கதையை முடித்தான். வந்தியத்தேவனுக்கு இப்போது அந்தக் குழந்தையைப் பற்றிய எல்லா உண்மையும் புரிந்துபோனது.

அதற்குள் இருட்டிவிட, இருவரும் சுரங்கப்பாதை வழியே சென்று, சில பொற்காசுகளையும் நிலவறையிலிருந்து எடுத்துக்கொண்டு கோட்டையை விட்டு வெளியேறினர். அப்போது நதியில் ஒரு ஓடம் கட்டிப் போடப்பட்டிருந்ததைக் கண்டு அருகே செல்ல, மறைவிலிருந்து சிலர் வந்து வந்தியத்தேவனைத் தாக்கி ஓடத்துடன் கட்டிப் போட்டனர்.

தன்னை கட்டிப்போட்டது ஆழ்வார்க்கடியான்தான் எனத் தெரிந்துகொண்ட வந்தியத்தேவன், அவனைத் திருப்பித் தாக்கிப் படகில் கட்டிப்போட்டான். முதன்மந்திரியிடம் கொண்டுபோவதற்காகவே தன்னைத் தாக்கினான் என்பதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன், தாங்கள் இருவரும் ஈழத்துக்குத் தப்பிபோவதாகவும் அதற்கு இரண்டு குதிரைகள் எங்கு கிடைக்கும் எனவும் ஆழ்வார்க்கடியானிடம் கேட்டான்.

பெரிய பழுவேட்டரையரை அழைத்துக்கொண்டு வரும்போது, சேந்தன் அமுதன் குதிரையிலிருந்து கீழே விழுந்து அடிபட்டு அவனது குடிசையில் படுத்துக் கிடப்பதாகவும் அவனைப் பூங்குழலியும் வாணி அம்மையாரும் பார்த்துக்கொள்வதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறி, அங்கு சென்றால் அந்தக் குதிரைகளை எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினான். அப்போது கருத்திருமன், சேந்தன் அமுதனுக்கு அடிபட்ட விஷயம் செம்பியன் மாதேவியாருக்குத் தெரியுமா என்றும் கேட்டுக்கொண்டான். பின் இருவரும் அங்கு செல்லத் தொடங்கினர்.

பூங்குழலி, அடிப்பட்டிருந்த சேந்தன் அமுதனுக்குப் பணிவிடைகள் செய்துகொண்டிருந்தாள். சேந்தன் அமுதன், தனக்குக் குணமாகிவிட்டால் பூங்குழலி தன்னை விட்டுப் போய்விடுவாள் என்பதால், தான் குணமாக விரும்பவில்லை என்று கூற, பூங்குழலி நெகிழ்ந்தாள். பூங்குழலிக்கு அருள்மொழிவர்மர் மேல் அன்பிருப்பதைப் பற்றி அவன் வினவ, வானதியே அவருக்கு உரியவள் என்றும் தன் அத்தைக்குக் கிடைக்காத சிங்காதனத்தின் மேல் எனக்கு  ஆசை ஏற்பட்டது என்றும் கூறினாள்.

சேந்தன் அமுதனை அத்தகைய வீரதீரப் பராக்கிரமச் செயல்களைச் செய்யுமாறு கேட்க, அவன் மறுத்து சிவத்தொண்டு செய்வதே தன் வாழ்வின் லட்சியம் எனக் கூறினான். தன் பதவி ஆசைகளையெல்லாம் விட்டுவிட்டு, சேந்தன் அமுதனையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகப் பூங்குழலி சொல்ல, சேந்தன் அமுதன் மனமகிழ்ந்தான். அப்போது செம்பியன் மாதேவியும் மதுராந்தகனும் காவலர்களுடன் வருகை புரிந்தனர். உடல்நிலை சரியில்லாத சேந்தன் அமுதனைப் பார்க்க வந்ததாகக் கூறி நலம் விசாரிக்க, அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு கோடியக்கரை செல்லப்போவதாக அவர் காலில் விழுந்து வணங்கினர். செம்பியன் மாதேவி பெரிதும் மகிழ்ந்து அவர்களை ஆசீர்வதித்தார்.

அப்போது வாணி அம்மையும் வர, அவரிடம் விஷயத்தைக் கூறிவிட்டு செம்பியன் மாதேவி விடைபெற்றுக்கொண்டார். மதுராந்தகனும் அவரும் ஓரமாய் இறக்கி வைக்கப்பட்டிருந்த பல்லக்கின் அருகே சென்றனர். சேந்தன் அமுதனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போதே செம்பியன் மாதேவிக்கு அவன்தான் தன்னுடைய மகன் என்று தெரியுமெனவும் இது இறைவனின் திருவிளையாடல் என மனதில் தீர்மானித்துக்கொண்டு, மதுராந்தகனைப் பெற்ற மகனுக்கு மேலாக வளர்த்ததாகவும் கூறினார். மேலும் மதுராந்தகன் சோழ சிங்காதனம் ஏறினால், அவனுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு வாய் பேச முடியாத நிலை ஏற்படும் என்பதும் அவர் மதுராந்தகன் பட்டம் சூட்டுவதைத் தடுக்கும் முக்கியக் காரணமாகும் என விளக்கினார். அப்போது மதுராந்தகனுக்கு, தன் மகளுக்கு இன்னும் பேச்சு வராமலிருப்பது நினைவில் வந்தது.

தான் பின்னர் வருவதாகக் கூறி செம்பியன் மாதேவியை அனுப்பிவிட்டு, பல்லக்கிலிருந்து குறுவாளை எடுத்துக்கொண்டு  சேந்தன் அமுதன் குடிசையை நோக்கி  மதுராந்தகன் நடக்கத் தொடங்கினான். அவன் முகத்தில் குரோதமும் வஞ்சமும் நிரம்பியிருந்தது.

  • சவிதா


Comments (2)


Govindaraj R
Govindaraj R
July 21, 2023

மகாபாரதம் போன்று பொன்னியின் செல்வன் கதை பல கிளைக் கதைகளளுக்கு ஊற்றாக உள்ளது.

Govindaraj R
Govindaraj R
July 21, 2023

மகாபாரதம் போன்று பொன்னியின் செல்வன் கதை பல கிளைக் கதைகளளுக்கு ஊற்றாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *