குட்டீசுடன் கும்மாளம்

இப்ப எல்லாம் நாம வேலைக்குப் போறதைவிட அதிகமா கவலைப்படறது குழந்தை வளர்ப்பு பற்றிதான். இதைப் பார்க்கும் வீட்ல இருக்கற பெரியவங்க “அட, நாங்க எல்லாம் அஞ்சாறு புள்ளைகளை அழகா பெத்து வளர்த்தோம். ஆனா இவங்க ஒண்ணு ரெண்டு புள்ளைகள வைச்சிகிட்டு பண்ற அலம்பல் இருக்கே… தாங்க முடியல” அப்படின்னு சொல்லுவாங்க.

நாம குழந்தைகளா இருந்த காலத்தில் எல்லா சொந்த பந்தங்களும் அக்கம் பக்கத்தில் ஒன்னு மண்ணா இருந்து வந்தாங்க. இன்னைக்கு நாம குழந்தை களுக்குச் சொல்ற “ஷேரிங் ரொம்ப நல்லது” அப்படிங்கிற விஷயம் அப்ப இயல்பா வாழ்க்கை முறையில இருந்துச்சு. பெரியப்பா தன் கொழந்தைகளுக்கு மட்டும் இல்லாம தம்பி பிள்ளைகளுக்கும் சேர்த்தே வாங்கிட்டு வருவார். அதே மாதிரி சித்தப்பா, அத்தைகள், மாமன்கள் எல்லா ருமே அப்படி இருப்பாங்க. எங்க அப்பா வேலை முடிஞ்சு வரும்போதே நெறைய மிட்டாய், தின்பண்டம் வாங்கிட்டு வருவார்.

வீட்டுக்கு அரை கிமீக்கு முன்னாடி இருக்கற இடத்தில் நாங்க மற்ற பசங்களோடு விளையாடிட்டு இருப்போம். அப்பாவோட பைக் சத்தம் கேட்டதும் எல்லா பசங்களும் “மிட்டாய் மாமா! மிட்டாய் மாமா!!”ன்னு பின்னாடியே வருவாங்க. வீட்டுக்கு வந்ததும் எல்லாருக்கும் எடுத்துக் குடுப்பார். ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல… எல்லா நாட்களும் இப்படிதான் பண்ணுவார். இதைப் பார்த்து இயல்பா ஷேரிங் குணம் எங்களுக்குள் வந்துச்சு. அதே மாதிரி வீட்ல என்ன செஞ்சாலும் நம்ம கையில கொடுத்து அதை அக்கம் பக்கம், சொந்தக் காரங்களுக்கு தந்துட்டு வரச் சொல்லுவாங்க. இது மாதிரி எல்லா விசயங்களும் பெரியவங்க சொல்லித் தந்து தெரிஞ்சுக்காம செயல்முறை யாவே நாம கத்துக்கிட்டோம்.

ஆனா இன்னைக்கு சூழ்நிலை அப்படியா இருக்கு? வாழ்தல் வேண்டி படிப்பு துரத்த, வாசல், முற்றம், மரங்கள் என்ற அழகிய வீட்டை விட்டுப் பல மைல்கள் தாண்டி ஆயிரம் சதுரஅடி வீட்டுக்குள் நாமும் சிறைப்பட்டு, பிள்ளைகளையும் சிறைப்படுத்தி வாழ்கிறோம். அக்கம்பக்கத்துல இருக்கறவங்க யாருன்னே நமக்குத் தெரியாது. நிறைய சம்பாதிக்கணும்னு சொல்லி, காசைக் குடுத்து அனைத்து வசதிகளையும் கைக்கு அருகில் கொண்டு வந்தாச்சு. குழந்தைகளை நம்முடைய நீட்சியா நெனைச்சு நம்ம கனவுகள் ஆசைகள் எல்லாம் அவங்க மேல திணிச்சு, “வாழ்க்கை ஒரு பந்தயம். ஓடு.. ஓடு…ன்னு அவங்கள பந்தயக் குதிரைகள் ஆக்கி வைச்சிருக்கோம். குழந்தைகளை குழந்தைகளா வாழ விடுறோமா? பணம், புகழ்ங்கற வட்டத்திற்குள் அவங்களையும் சிக்க வைச்சு, கடைசியில “நான் அப்படி அருமையா வளர்த்தேன்… இன்னைக்கு என் பேச்சைத் துளி கூட மதிக்கறது இல்ல”ன்னு நெறைய பேர் புலம்பிட்டு வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்காங்க. ஒரு கணம் யோசிச்சுப் பார்த்தா தவறு எங்கே ஆரம்பம் ஆகுதுன்னு நாம் உணர்வோம். விதை ஒண்ணு போட்டு மரம் ஒண்ணு வளரணும்னு எதிர்பார்த்தா எப்படி நடக்கும்? நம்மிடம் ஆயிரம் தவறுகளை வைத்துக் கொண்டு பிள்ளைகள் மட்டும் சரியானவர்களாய் வளரணும்னு நினைச்சா அது எப்படி சரியாகும்? அதனால் நாம முதல்ல மாறணும். பின்னர் பிள்ளைகளும் அவங் களாகவே நம்மைப் பார்த்து மாறுவாங்க.

இப்ப உள்ள குழந்தைகள்கிட்ட பட்டிமன்றத் திற்கு ஒரு தலைப்பு வைக்கச் சொல்லிக்  கேட்டா “அதிகம் அட்வைஸ் பண்றது அம்மாவா? அப்பாவா?” ன்னுதான் தலைப்பு தருவாங்க. பொதுவா யாருக்குமே அறிவுரை சொல்றது பிடிக்காது. ஆனா செலவில்லாம கொடுக்கற விசயம் அப்படிங்கறதால எல்லாரும் அறிவுரைகளை அள்ளி வீசுவோம். அறிவுரை என்பதை விட அதையே ஆலோசனைகளா பிள்ளைகள் கிட்ட சொல்லிப் பாருங்க. ஆலோசனைகள் சொல்லி, ஆரோக்கியமான விவாதம் அவர்களிடம் பண்ணும்போது அவங்க அதை ஏத்துக்குவாங்க. அறிவுரைக்கும் ஆலோ சனைக்கும் ஒரு நூலிழைதான் வித்தியாசம். ‘அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே’ என்பதை விட “இப்படி செய்யலாமே, அப்படி செய்யலாமே” என ஆலோசனைகள் கூறலாம்.

அடுத்து நாம செய்யற இன்னொரு தப்பு ஓப்பீடு. நம்ம குழந்தைகளை மற்றவங்க குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பேசும்போது குழந்தைகளிடம் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை வந்துடும். அதனால ஒப்பிடுதல் கண்டிப்பா வேண்டாம். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள்.

Loving worried mom psychologist consoling counseling talking to upset little child girl showing care give love support, single parent mother comforting sad small sullen kid daughter feeling offended

நம்ம குழந்தையிடம் என்ன தனித்திறமை இருக்கு அப்படின்னு கண்டு பிடிச்சு அதில் அவங்களுக்கு நிறைய விருப்பம் இருந்தால் மட்டுமே அவங்கள அந்த வகுப்புகளுக்கு அனுப்பணும். “பக்கத்து வீட்டுப் பொண்ணு பாட்டு கிளாஸ் போறா. அதனால நீயும் போ”ன்னு சொல்லி திறமைகளைத் திணிக்க கூடாது.

எந்தவொரு மனிதரும் ஏங்குவது அங்கீகாரத்துக்கும், பாராட்டுக்கும்தான். அதனால சின்ன சின்ன விசயங்கள் செய்யும் போது அவங்கள பாராட்டி, சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து ஊக்குவிக்கணும்.

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்னு ஆரோக்கியமா வாழ்றது.  ஆரோக்கி யமான குழந்தைதான் நல்லபடியாக வளரும். அதனால உடற்பயிற்சியின் அவசியத்தைக் குழந்தைகளுக்கு உணர்த்தணும். முன்னுதாரணமா நாமும் உடற்பயிற்சிகள் செய்தால்தான் பிள்ளைகளும் அதைப்பார்த்து  கடைப்பிடிப்பாங்க.

‘நாம எப்போதாவது பிள்ளைகளிடம் சாரி சொல்லி இருக்கோமா?’ன்னு ஒரு கணம் யோசிச்சுப் பாருங்க. ‘என் குழந்தைகிட்ட நான் எதுக்கு சாரி கேக்கணும்?’ அப்படின்னுதானே பெற்றோர்கள் நினைக்கிறோம். அதை மாத்தி, கண்டிப்பாக பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சாரி, ப்ளீஸ், தேங்க்யூ போன்ற கோல்டன் வார்த்தைகளைப் பயன்படுத்தணும். அப்போதான் குழந்தைகளும் அந்த வார்த்தைகளைப் பள்ளிகளிலும், வீடுகளிலும், வெளியிடங்களிலும் பயன்படுத்துவாங்க.

குழந்தை வளர்ப்பில் நம் மனதில் இருத்த வேண்டிய இரண்டு முக்கிய  விசயங்கள்…

1. குழந்தைகள் நம்மால் வந்தவர்களே தவிர நமக்காக வந்தவர்கள் அல்ல.

2. குழந்தைகள் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை கேட்ட வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார்கள்.

இந்த இரண்டையும் விசயங்களையும் நினைவில் கொண்டு நம்மை நாம் செதுக்கிக் கொண்டாலே, குழந்தை வளர்ப்பு என்பது இனிமையானதொரு அனுபவமாகிவிடும்.


Comment (1)


Thanjikumar
Thanjikumar
June 4, 2021

‘குட்டீசுடன் கும்மாளம்’ குழந்தை வளர்ப்பு பற்றிய கருத்துக்கள் இன்றைய நவீன உலகிற்கு பயன்படும் வகையில் அருமையான பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *