என்ன நடக்கிறது எல்லையில்?
இசுலாமிய வெறுப்பை மக்களிடம் வளர்ப்பதற்காக, பாகிஸ்தானை மட்டுமே இந்தியாவின் எதிரியாகச் சித்தரித்து வந்த மோடி தலைமையிலான அரசு, இந்திய ஒன்றியத்தின் தென்கோடி முனைக்கு கூப்பிடு தொலைவில் உள்ள இலங்கைத் தீவில், ஈழத் தமிழர்களிடமிருந்து சிங்கள அரசு அபகரித்த பகுதியில் தனது இருப்பைச் சீனா நிலைநிறுத்திய போதும், தமிழகத் தலைவர்கள் பலரும் எச்சரித்தபோதும்கூட சீனா குறித்து மோடி அரசு கவலை கொள்ளவில்லை. மாறாக சீன அதிபரை மாமல்லபுரம் அழைத்து வந்து குலாவியது.

ஆனால் தற்போது லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பதற்றம் நிலவி வந்த நிலையில், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும் என்று மழுப்பப்பட்டது. இந்நிலையில் ஜூன்16 பிற்பகலில், இந்திய சீன இராணு வத்தினர் இடையில் நடந்த மோதலில் மூன்று இந்திய வீரர்கள் அடித்தே கொல்லப் பட்டதாக செய்திகள் வந்து திகைக்க வைத்தன. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்ற வீரரும் ஒருவர். ஆனால், அடுத்த சில மணி நேரத்திற்குள்ளாக இருபதுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் சீன ராணுவத்தால் கொல்லப் பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன. லடாக் பகுதி மக்கள் மிகுந்த பதற்றத்தில் இருப்பதாகவும் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, கொரோனா நோய்ப் பரவல், கடும் பொருளாதார வீழ்ச்சி, அரசால் கைவிடப் பட்டு கால்நடைகளான அப்பாவி மக்கள், வேலை இழப்பு, 20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்புகள் என எல்லாப் பக்கமும் தோல்வி அடைந்த மோடி அரசு, தற்போது வெளியுறவுக் கொள்கையிலும் தோல்வியடைந்திருப்பது அம்பலமாகிவிட்டது. பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமையோ, துணிவோ இன்றி மௌனம் காக்கும் பிரதமர், நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
Comments (0)