சாதிப் படுகொலையும் நீதிப் படுகொலையும்!

பட்டப் பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த படுகொலை அது. அந்தக் கொலைக்கு எதிராக சமூகத்தின் ஒரு பகுதி கொந்தளித்த அதே வேளையில், சமூகத்தின் மற்றொரு பக்கம் அக்கொலையைக் கொண்டாடியது. நியாயம் கற்பித்தது. கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட போது சற்றும் தளராமல் போராடி, கொலைக்குக் காரணமானவர்களை விடுவித்துவிட்டது. இன்றும் இந்த சமூகத்தின் அழுகிப்போன பகுதி, தன் வெற்றியைக் கொண்டாடுகிறது. கொலையுண்டவனின் ஆன்மாவும், குடும்பமும் கொலை நடந்த நடுத்தெருவில் நீதியைத் தேடுகிறது.

கொலைக்கான நியாயம் கற்பிப்பவர்கள் கவுசல்யாவின் கற்பை ஏலம் போடுகிறார்கள். அவரது மறுமணத்தைக் கேலிப் பொருளாக்கு கிறார்கள். கவுசல்யாவைக் கண்ணால்கூடக் கண்டிராதவர்களெல்லாம் அவரது உடல் வேட்கையை அளவெடுக்கிறார்கள். அழுகிய பிணத்தினும் கேவலமாக நாற்றம் வீசுகிறது அவர்களின் சொற்களிலிருந்து. இன்னும் சில நீதிமான்களோ, கவுசல்யாவைப் பெற்று, இருபது ஆண்டுகள் வளர்த்தவர்களின் உணர்வுகளைக் கண்டு வேதனையில் உழல்கிறார்கள். கவுசல்யா வின் பெற்றோர் மட்டுமே பெற்று வளர்த்தார்கள். சங்கரின் பெற்றோர்கள், அவரைப் பொம்மைக் கடையிலிருந்து இலவசமாக வாங்கி வந்திருக்கக் கூடும். சங்கருக்காகவும், அவரின் பெற்றோருக் காகவும் வருத்தப்பட நாங்கள் என்ன தாழ்த்தப் பட்டவர்களா? இல்லையே! நாங்கள் ஆண்டைகள், சிங்கங்கள், ஓநாய்கள், வெறி நாய்கள், மொத்தத்தில் சாதிப்பசிக்காகப் மனிதர்களைக் கொன்று பிணங்களைப் புசிக்கும் நவீன மிருகங்கள். இன்னொரு குழுவினரும் இருக்கிறார்கள். “பாலூட்டி, சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பெற்றோர் விருப்பத்துக்கு மாறாகக் குழந்தைகள் நடக்கலாமா?” என்று கேட்கும் நடுநிலைத் தராசுகள் அவர்கள். “பாராட்டி சீராட்டி வளர்த்த குழந்தையை ஆள் வைத்து வெட்டலாமா?” என்ற கேள்வியை யார் அவர்களிடம் எழுப்புவது?

இந்தப் பழங்கதைகள் என்றும் தொடர்கதைகள் தான். அதனால் நாம் அதைப்பற்றி இங்கே பேசப்போவதில்லை. வேதனை என்னவெனில், சமூகநீதியைக் காப்பாற்ற அறைகூவல் விடுக்கும் பல கட்சிகள் தற்போது வாயே திறக்கவில்லை என்பதுதான். என்ன செய்வது? அடுத்த ஆண்டு தேர்தல் வரவிருக்கும் சூழலில், அவர்கள் வாயில் ஓட்டு எனும் திண்டுக்கல் பூட்டு மாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள்தான். அங்கே அரியாசனத்தில் பசுவின் கன்றுக்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழன்கள் இல்லை. மாறாக ‘மனு’ நீதிச் சோழன்கள் இருக்கிறார்கள். கவுசல்யாவின் பெற்றோரும் கொலைகாரர்களும் ஒரு மாதமாகத் தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரம் இருந்தும், அவர்கள் என்ன பேசினார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லை என்கிறார்கள். இனிமேல் நாட்டு மக்கள் அனைவரது தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆவணப்படுத்திவிடலாம். இல்லையேல் பெரும்பான்மைச் சதிச்செயல்கள் குற்றம் என நிரூபிக்கப்படாமலே போய்விடக்கூடும். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்பியிருந்தால், ‘’உங்களுக்குச் சம்பந்தம் இல்லாத ஆட்களுடன் ஒரு மாதம் அப்படி என்னதான் பேசினீர்கள்? எதற்காகப் பேசினீர்கள்?’’ என்றாவது ஒரு வார்த்தை அந்தச் சதிகாரர்களிடம் கனம் கோர்ட்டார் அவர்கள் கேட்டிருக்க லாம். அல்லது, எந்த ஒரு கொலை வழக்கையும் விசாரிக்கும்போது கொலைக்கான காரணம் (Motive) என்ற ஒன்று முக்கியக் காரணியாக எடுத்துக்கொள்ளப்படும். அதையாவது கருத்தில்கொண்டு, “நடுரோட்டில் மக்கள் மத்தியில் வைத்துக் கொடூரமாகக் கொள்ளும் அளவிற்கு, சங்கருக்கும் உங்களுக்கும் என்ன முன் பகையா? சொத்துத் தகறாரா? அதிகாரப் போட்டியா? தொழில் போட்டியா? அல்லது குறைந்தபட்சம் வாய்க்கால் தகராறாவது உண்டா?” எனக் கேட்டிருக்கலாம். அதையெல்லாம் விசாரிப்பது ‘ஹைகோர்ட்’ கடமையில் வராது என நினைக்கிறேன்.

சரி, கொலைகாரர்களுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையைக் குறைக்க ‘ஹைகோர்ட்’ சொல்லும் காரணம் என்ன? ‘அவர்கள் இளம் வயதுக்காரர்கள். இதற்கு முன்பு அவர்கள்மீது கொடூரக் குற்ற வழக்குகள் எதுவும் இல்லை’ என்பதுதான். இதனால், இந்த ‘ஹைகோர்ட்’ அறிவிப்பது என்னவென்றால், கொடூரக் குற்றச் செயல்களை இளம் வயது நபர்களை வைத்து அரங்கேற்றுங்கள். அவர்களும் முதல் தலைமுறைக் குற்றவாளிகளாக இருக்கட்டும். நீங்கள் புத்திசாலியாக இருந்தால் நிர்பயா வழக்கை உதாரணமாக எடுத்துக் கொண்டு பதினாறு, பதினேழு வயது இளைஞர் களை வைத்துக் காரியத்தை முடித்தால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அவர்கள் புனிதர்களாக வெளியே வந்துவிடுவார்கள்.

ஒரே ஒரு பேட்டரி வாங்கித் தந்த காரணத் துக்காக, கால் நூற்றாண் டுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் சிறை சென்ற போது அவருக்கு இளவயதுதான். கொலைச் சதித்திட்டம் தீட்டத்தான் கவுசல்யாவின் பெற்றோர் போனில் பேசினார்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை என்றால், பேரறிவாளன் வாங்கித் தந்த பேட்டரிதான் குண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பதும் நிரூபிக்கப்படாத ஒன்றுதானே?! பெயர் ஒன்றாக இருந்ததாலேயே குண்டு சாந்தனுக்காகச் சிறையில் வாடும் சாந்தன், உள்ளிட்ட எழுவருமே அன்றைக்கு இளம் வயதினர்தான். அவர்கள் மீதும் இதற்கு முன்பாக எந்த ஒரு கொடூரக் குற்றமும் பதிவாகி இருக்கவில்லை. இத்தனைக்கும் “நான் பொய் வாக்குமூலம் எழுதித்தான் அவரைக் குற்றவாளி ஆக்கினேன்” என்று விசாரணை அதிகாரியே ஒப்புதல் வாக்குமூலம் தந்தபின்னும், ஒரு தொலைக்காட்சி விவாத முடிவில், வழக்கில் தொடர்புடைய சாந்தன் இருக்குமிடம் தெரிந்தபோது, ஒரு அப்பாவி சாந்தன் தண்டனை அனுபவிப்பதை அறிந்தும், தங்கள் விசாரணை இலட்சணம் பல்லிளித்துவிடக்கூடாது என்பதற்காக, வழக்கில் தொடர்புடைய சாந்தனைச் சுட்டுக் கொன்றதை விசாரணை அதிகாரிகள் காரசாரமாக விவாதித்துக் கொண்டபோதும், எந்த ‘ஹைகோர்ட்டும்’ அவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வில்லை. ஒவ்வொரு காவல்துறை அதிகாரிகள், நீதிமன்றகள், நீதிபதிகளுக்கும் தனித்தனியே சட்ட நூல்கள் இருக்கிறது போலும். தீர்ப்பை விமர்சிக்கலாம். ஆனால், நீதிபதிகளை யாரும் விமர்சிக்கக் கூடாது. ஏனெனில் அவர்கள், விண்ணிலிருந்து வந்த தேவ மைந்தர்கள். கடவுளின் அவதாரங்கள். காலம் காலமாக நமக்குக் கற்பிக்கப்பட்டதெல்லாம், அவதாரங் களின் மீது கேள்விகளையோ, விமர்சனங் களையோ எழுப்பக்கூடாது என்பதுதானே..

யாருக்குத் தெரியும்? வருங்காலத்தில் ஆணவக் கொலைகள் அங்கீகரிக்கப்படலாம். கொடூரக் குற்றங்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படலாம். கொலை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்படலாம். அதை வேடிக்கை பார்த்து ‘உச்’ கொட்ட மட்டுமே நமக்கு அனுமதி வழங்கப்படலாம். மற்றபடி… சாதிக்கு ஒரு நீதி! நீதிக்குதான் இல்லை நாதி!