மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள்!
பெரும் பதட்டமும் பரபரப்பும் என்னைச் சூழ்ந்து கொண்டது. இவ்வளவு பிரமாண்டமான ரயில் நிலையத்தில் உயரமான படிக்கட்டுகளில் ஏறி இறங்கி நீண்ட பிளாட்பாரங்களில் நடந்து கவுண்ட்டர் கவுண்ட்டராகத் தேடி, தேவையான பதிலைப் பெறுவது பெரும் சங்கடத்தையும் மனச்சோர்வையும் தந்தது.
கொல்கத்தா ரயில் நிலையம் நான் நினைத் ததற்கு மேலாக பிரம்மாண்டமாக இருக்கிறது. இருக்காதா என்ன? 1911 வரை இந்தியாவின் தலைநகரமாக கொல்கத்தாதான் இருந்தது. அதற்கேற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்டது இந்த ரயில் நிலையம். இந்தியாவின் மிகப் பரபரப்பான ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று. இந்த ரயில் நிலையத்தைச் சிறு நகரம் என்று கூடச் சொல்லலாம். உணவகங்கள், சிறு கடைகள், பல்பொருள் அங்காடிகள் எனப் பல தரப்பட்ட கடைகள் எல்லாம் நீண்டுகொண்டே செல்கிறது.
இரவு மணி 11:45க்கு அசாம் செல்லும் காமரூபம் எக்ஸ்பிரஸ் வண்டியில் நான் ஏறியிருக்க வேண்டும். இப்போதோ மணி 12:20. 11 மணியிலிருந்து வண்டியைப் பற்றிய விபரத்தைத் தேடி அலைந்து கொண்டே இருந்தேன். பயணிகள் விசாரணை அலுவலகம், கவுண்ட்டர்கள், கடைநிலை ஊழியர்கள், நடைமேடைக் கடை வியாபாரிகள் என்று எவரிடத்திலும் சரியான பதில் கிடைக்கவில்லை. “வரும்… வெயிட் பண்ணுங்க..!” என்பது ஒரு சிலரின் பதிலாக இருந்தது. எப்போது வரும், எந்த நடைமேடையில் நிற்கும், எந்த நேரத்தில் ரயில் கிளம்பும் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
நிலைய நிர்வாகம் முறையாக அறிவுப்பு ஏதும் செய்யவில்லை. அறிவிப்புப் பலகையிலும் இதுகுறித்த தகவல் எதுவ்மில்லை. அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் என எவரிடத்திலும் முறையான பதிலும் இல்லை. உடலும் உள்ளமும் சோர்ந்து போனேன். ஆனாலும் ஓரிடத்தில் நிற்கவோ உட்காரவோ முடியவில்லை. ரயில் ஏதாவது ஒரு நடைமேடைக்கு வந்து கிளம்பிச் சென்று விட்டால் மொத்த பயணத் திட்டமும் தோல்வியாகி விடும். கால்கள் இருப்புக் கொள்ளாமல் நடந்துகொண்டே இருந்தன.
“அண்ணா… தமிழ்நாடா?”
திடுக்கிட்டுத், தமிழ் வந்த திசை நோக்கித் திரும்பி பார்த்தேன். நுழைவாயிலுக்கு அடுத்த முதன்மையான பயணிகள் கூடத்தில் கடைகளின் ஓரமாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் உட்கார்ந்திருந்தது. அதிலிருந்த ஒரு இளம்பெண்தான் என்னை நோக்கி கேட்டாள்.
ஆச்சரியமாக இருந்தது. கடுமையான மன உளைச்சலில் இருந்த எனக்கு தமிழைக் கேட்டது மகிழ்ச்சியையும் தந்தது .
“ஆமா… தமிழ்நாடுதான் சென்னையிலிருந்து வர்றேன்..!”
சரி எங்க போறீங்க..?
“சிலிகுரிக்கு”
“சிலிகுரிக்கா..? அங்க என்ன..?”
“அங்கிருந்து சிக்கிமுக்கு.. கேங் டாக்.!”
“ஓ… டூர் போறீங்களா..? தனியாவா?”
கண்களை அகல விரித்துக்கொண்டு அழகான தமிழ் உச்சரிப்புடன் மிகவும் இயல்பாக உரையாடினாள் அந்தப் பெண்.
அவளது அம்மாவும் அப்பாவும் கூடவே இருந்த அண்ணனோ தம்பியோ ஒரு இளைஞனும் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தனர் .
“ஒரு மணி நேரமா டென்ஷனா அலையறீங்களே.. என்ன பிராப்ளம்..?”
“காமரூபம் எக்ஸ்பிரஸ்ல டிக்கெட் பதிவு பண்ணி இருந்தேன். வண்டி கிளம்புற நேரம் 11:45 ன்னு டிக்கெட்ல போட்டு இருக்கு. இங்க வண்டியும் இல்ல, வண்டி பத்தின தகவலும் இல்லை. அதான் டென்ஷன்..!”
மனப் பதட்டம் குறையாமல் சொல்லி முடித்தேன்.
“ஓ…இதுதான் பிரசினையா…? இருங்க வரேன்..!”
என்று கூறிவிட்டு அவளது அப்பாவிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு வந்தாள்.
“சரி.. வாங்க போகலாம்..!”
என்று கையைப் பிடித்துக்கொண்டு அழைத்தாள். இறுகப் பற்றி இருந்த கையை விடுவிக்க முயற்சித்தேன். ஆனால் அவள் விடவில்லை.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நேபாளம் – போன்ற நாடுகளில் ஆண் பெண் வேறுபாடுகள் குறைவு. பெண்களும் ஆண்களைப் போலவே செயல்படுவதைப் பலரும் பல இடங்களில் பார்த்திருக்கலாம்.
என் கையைப் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த அவளுக்கு, கடினமான என் தோல் பையை இடையூறாய் இருந்தது.
“இது எதுக்கு இப்ப..?”
எந்த தயக்கமும் இல்லாமல் நெடுநாள் பழகிய தோழியைப்போல எனது தோல் பையை எடுத்துக் கொண்டு போய் அவர்கள் குடும்பம் உட்கார்ந்திருக்கும் இடத்தின் நடுவில் வைத்தாள். தயங்கினேன். திரும்பித் திரும்பி என் தோள் பையைப் பார்த்தேன். புரிந்து கொண்டாள்.
“தைரியமா வாங்க.. சேஃப்டியா இருக்கும்..!”
மீண்டும் கையைப் பிடித்துக் கொண்டு எதிரில் சற்றுத் தொலைவில் முதல் மாடியில் இருக்கும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றாள். நள்ளிரவு நேரம் என்பதால் வழிகளிலும் படிக்கட்டுகளிலும் வராண்டாவிலும் பலதரப்பட்ட பயணிகள் படுத்துக் கிடந்தனர். தாறுமாறாக வழியை மறித்துக் கொண்டு படுத்துக் கிடப்பவர்களைச் சத்தமாகத் திட்டி னாள். சில நேரம் ஷூ அணிந்த காலாலேயே அவர்களை ஒதுக்கித் தள்ளி முன்னேறினாள்.
அவளது ஒவ்வொரு செயலும் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. திடமான நடை. எதற்கும் தயக்கமில்லை. புதியவன் அன்னியன் என்ற எந்தத் தடையும் இல்லை.
“நீங்க..?”
அவளை நோக்கிக் கேட்டேன்.
“மணிப்பூர். ஆனா உங்க ஊர்ல தான் படிக்கிறேன். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் பொலிட்டிகல் சயின்ஸ். இரண்டாவது வருசம் ..!”
கவுண்ட்டர்களில், அதிகாரிகளின் அலுவலகங்களில் சில வங்காளிகள் தூங்கி வழிந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் வங்காளத்தில் எனது ரயில் பற்றிக் கேட்டாள். ஒருவர் இன்னொருவரைக் கைகாட்ட அவர் இன்னொரு அலுவலகத்தில் மற்றொருவரைக் கைகாட்ட… இப்படியே இரண்டு மூன்று அலுவலகம் சென்று வந்தோம். எங்கும் சரியான பதில் இல்லை அவளது சொந்த மொழியான மணிப்புரியில் பலவிதமாக வசைபாடித் தீர்த்தாள்.
பொறுக்க முடியாமல் நானும் கேட்டேன்.
“ஏன் இங்க எல்லாமே இப்படி இருக்கு?
“ஆமா… இது என்ன.. சென்ட்ரலா? எக்மோரா? இல்ல கோயம்புத்தூரா..? இங்க எல்லாமே இப்படித்தான் இருக்கும். எந்த ட்ரெயினும் நேரத்துக்கு வராது. உங்க ஊரு மாதிரி அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்ல…
இங்க எட்டு மணி நேரம் பத்து மணி நேரம்கூட ஆகும். இருந்து வெயிட் பண்ணி பொறுமையாதான் போகணும்.!”
எனக்கு பதில் கூறிக் கொண்டிருந்தாளே ஒழிய அவளது கண்கள் இங்கும் அங்கும் அலைந்து கொண்டே இருந்தன. எங்காவது விடை கிடைக்குமா?
இந்தியாவிலேயே தென்னக ரயில்வே தான் சிறப்பான செயல்பாட்டிற்காகப் பாராட்டப் படுகிறது. ஓரளவு நேர ஒழுங்கு, உறுதி செய்த பெட்டிகள், உறுதி செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள் கட்டுப்பாடு, முறையான தகவல் அறிவிப்பு எனப் பலவற்றையும் சொல்லலாம். வடக்கு ரயில்வே, மேற்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே, தென் கிழக்கு இரயில்வேக்களில் நிலைமை தலைகீழ்.
பொறுப்பற்ற ரயில்வே நிர்வாகம் மற்றும் சோம்பேறித்தனமான ஊழியர்கள் மட்டுமல்ல, புயல் மழை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, மலைப்பாதைகளில் மண்சரிவு என பிற இயற்கை இடர்களையும் இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.
இரவு 1:40.
சிறிது நேரம் என்னைத் தனியே ஓரிடத்தில் உட்கார வைத்துவிட்டு எனது பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு சென்றவள், பத்து நிமிடம் கழித்துத் திரும்ப வந்தாள். எனது உடல் சோர்வை அவள் கவனித்திருக்க வேண்டும்.
முகத்தில் கடுகடுப்பு குறைந்து புன்னகை பூத்திருந்தது.
“…ப்பா.. முடிச்சாச்சு.. வாங்க போகலாம்”
என்றபடியே பயணச்சீட்டை எனது சட்டைப் பையில் திணித்தாள்.
“பிளாட்பார்ம் நம்பர் 14. டைம் 2.30. காமரூப் எக்ஸ்பிரஸ்.!”
என்றபடியே முன்னிலும் விரைவாகப் படியிறங்கி ஓடினாள். படுத்துக் கிடப்பவர்களை தாண்டிக் குதித்து ஓடும்போது, அவள் ஒரு தடகள வீராங்கனை போலவே எனக்குத் தெரிந்தாள். அவளைப் பின் தொடர்வது எனக்குக் கடினமாக இருந்தது.
இரவு 2.00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. விரைந்து சென்று தனது குடும்பத்தாரிடம் மணிப்புரியில் ஏதோ கூறிவிட்டு, எனது தோள் பையை எடுத்துக் கொண்டாள். உட்கார்ந்திருந்த அவளது அப்பா, அம்மா, சகோதரன் எல்லோரும் எழுந்து நின்று என்னை நோக்கிச் சற்று குனிந்தவாறு கைகூப்பினர்.
நெகிழ்ச்சியில கண்களின் ஓரம் நீர் துளிர்ப்பது போல் இருந்தது எனக்கு. பதிலுக்கு நானும் கைகூப்பி வணங்கிப் புறப்படுகையில், அவளது தாய் சிறு பொட்டலத்தை எடுத்து என் கையில் திணித்தாள். அதில் இரண்டு மூன்று சப்பாத்திகள்.
“வாங்க.. சீக்கிரம் வாங்க..,”
என்று என் பையைத் தூக்கி கொண்டு எனக்கு முன்னே நடந்தாள். கொல்கத்தா ஹௌரா ரயில் நிலையத்தில் மொத்தமுள்ள 23 நடைமேடைகளில் 14வது நடைமேடையைத் தேடி, ஏறி இறங்கி வந்து சேருவதற்கு 15 நிமிடம் பிடித்தது. எனது பெட்டி எண், இருக்கை எண்ணை சரியாகத் தேடிப்பிடித்து பையை வைத்தாள்.
நேரம் பின்னிரவு 2.20.
“எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல… எவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்கீங்க…ரொம்ப நன்றி..!”
நெகிழ்ந்து போன மனதிலிருந்து வார்த்தைகள் சரியாக வரவில்லை. தடுமாற்றமாய்த்தான் வந்தது.
“எதுக்கு தேங்ஸ்லாம்.. என்னை மாதிரி உள்ளவங்களை, எங்க ஸ்டேட்காரங்களையெல்லாம் நீங்க எவ்வளவு நல்லா பாத்துக்கறீங்க!!
சொந்த ஊரா இருந்தாலும் எங்க ஊர்ல எங்களுக்கு எந்த சுதந்திரமும் இல்ல.
ஆனா உங்க ஊர்ல எங்களுக்கு சுதந்திரம் மட்டுமில்ல, இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பும் இருக்கு. எல்லாத்துக்கும் மேல் எங்க வாழ்க்கைக்கான முன்னேற்றத்தையும் நாங்க அங்கதான் தேடிக்கிறோம். அதுக்காக உங்களுக்கு, உங்க தமிழ்நாட்டுக்கு நாங்கதான் தேங்க்ஸ் சொல்லணும்!”
காமரூபம் எக்ஸ்பிரஸ் மெல்ல நகரத் தொடங்கியது. நடைமேடையில் நின்றபடியே கையசைத்துக் கொண்டே இருந்தாள் அந்த மணிப்புரி மாணவி.
நடைமேடை விளக்குகளின் வெளிச்சம் பட்டு அவள் கருப்பாகவும் வெள்ளையாகவும் மெல்ல மறையத் தொடங்கினாள். இருளில் மறைந்தது அவள் மட்டும்தானா..?
இனம், மதம், மொழி, மாநிலம், எல்லைகள் எல்லாமும்தான்..!
Comments (0)