மூடிய கேள்விகள்?
மூடிட்டுப் போ என்கிறார்கள்..
தீர்வு அறியாததற்கும்
விடை தெரியாததற்கும்
எப்போதும் பேசும் பேச்சு இது..
திறனாய்ந்த மருத்துவன்
காயத்தை திறந்து பார்க்கிறான்..
நோய்மை புரியாத வைத்தியன்
கடவுளுக்குத் தான் தெரியும்
என்று மூடிட்டுப் போகிறான்..
இயங்காமல் இருப்பது நோய்மை..
மூடுண்ட தொழிற்கூடமே
நோய்மைப்பட்ட நிறுவனமாகிறது..
திறக்காத வான்குடைதான்
எமனேறும் வாகனமாகிறது..
இதழ்கள் மூடிய மலருக்குள்
எப்போதும் வண்டின் குடைச்சல்..
மூடிக் கிடக்கும் வானம் அழுகிறது..
வெளிறி கிடக்கும் வானம்தான்
விண்மீன்களால் ஜொலிக்கிறது..
பெருவெடிப்பே ஜீவனின் ஆதாரம்..
உறுதிறத்தலே லௌகீக ரகசியம்..
கதவடைத்தல் என்பது
வீட்டு கதவடைப்பது போல்
நிதம் நடக்கும் சங்கதியாகிறது..
கதவடைக்கிறோம் எனும் பேரில்
சிறகுகளைக் கத்தரிக்கிறீர்கள்..
பசி ஓலத்தில் துஞ்சமறுக்கும்
விழிகளை அறைந்து சாத்துகிறீர்கள்..
வேர்களுக்கு சொட்டுநீர் பொசியும்
அடைப்பான்களை இறுக மூடிவிட்டு
கனிகளைக் கணக்கிடுகிறீர்கள்..
ஆமை ஓட்டுக்குள் ஒடுங்குவதும்
அரவம் புற்றுக்குள் பதுங்குவதும்
ஒன்றெனும் அசமத்துவம் பேசுகிறீர்கள்..
கதவடைப்பதை விடுதலை என்றீர்கள்!
கதவடைப்பதை பாதுகாப்பு என்றீர்கள்!
உங்களின் இந்த விளையாட்டிற்கு
பாம்புகள் மட்டுமே பல்லிளிக்கின்றன..
பால் கனியோடு கூத்தடித்து
விட்டில்களுக்காக விளக்கேற்றும்
உமது கதவடைத்தல் ஓர் ஆடம்பரம்…
இரவு ஒன்பதுமணி முதல் விடியவிடிய
வெற்று ஒட்டடைக் கோலில்
விரகதாப வலைப்பின்னி காத்திருக்கும்
உமது கதவடைத்தல் சிற்றின்பம்..
சயனித்தலைக் கடக்கவியலாத
உமது சரசத்தை சம்சாரி விஞ்சுகிறான்..
அவன் சாவோடு சல்லாபிக்கிறான்..
விதியோடு விவாகம் செய்கிறான்..
வியாதியோடு விழுந்து புரளுகிறான்..
மூடுவதிலோ, திறப்பதிலோ
எமக்கு எந்த வேறுபாடும் இல்லை..
மூடிக் கிடக்கும் போது
இந்திரனால் பங்கப் படுவதும்
திறந்திருக்கும் போது
கௌதமனால் சாபம் பெறுவதும்
அகலிகைகளான எமக்கு வாடிக்கை..
வறண்ட நதிகளில் தவறிவிழும்
எங்கள் மோசேக்களின் கைக்கோல்
ஜீவாதார வழிகளை அடைத்துவிடுகிறது.
துன்பக்கடலை பிளக்கும்போதும்
பெரும் பிரளயத்தைக் கிளப்பி
எம்மை ஜலசமாதி அடையச் செய்கிறது..
கதவடைப்பில் சிக்கும் எலிகளை
என்றேனும் நீர் எண்ணியதுண்டா?
உமது வீட்டு அடுப்பெரிய
ஊர் பிணங்களின் சிதைகளில்
சுள்ளி சேகரிக்கிறவர் நீங்கள்..
பொங்கிவரும் பாலில்
தெளிக்கும் தண்ணீராக
இருக்க வேண்டிய ஊரடங்கை
கொதித்து வெளியேறும் ஆவிக்கு
ஊற்றும் பாலாக மாற்றியவர் நீர்!
வாசல்களை அடைக்கும் நீங்கள்
மூச்சு முட்டும்போது விருட்டென
விசிறிகளைத் திறந்து விடுகிறீர்கள்..
இன்னல்கள் எதையும் அகற்றாமல்
ஜன்னல்களைத் திறந்து வைக்கிறீர்கள்..
கண்ணீர் கதவுகளை அடைத்து
கண்ணோட்டத்தை பறிகொடுக்கிறீர்கள்..
தண்ணீர் மதகுகளை அடைத்து
வயிற்றோட்டத்தில் பரிதவிக்கிறீர்கள்..
மூடி மறைப்பதே ராஜதர்மம்..
அடைத்து வைப்பதே அநுகூலமென்பதை
உம் திறக்கப்படாத கோப்புகள் சொல்லும்..
மூடிட்டுப் போகும் பேச்சும்
வெறும் பேச்சாகத்தான் இருக்கிறது..
காணிக்கை செலுத்த புதியவகை
உண்டியல்களை நிறுவுகிறீர்கள்..
படையல்களை வரிசைப்படுத்தும்
சாத்வீக முறைகளைக் கற்பிக்கிறீர்கள்..
நெய்வேத்திய பொருட்களின் தீர்வையை
கடவுளர்களிடம் சேர்ப்பிக்கிறீர்கள்..
பிரசாதத்தைக்கூட கண்ணில் காட்டாமல்
பூசாரிகளை விட்டு களவாடுகிறீர்கள்..
மூளைகளை மூடி வைத்துவிட்டு
வாய்களை அகல திறக்கிறீர்கள்..
ஆலயங்களை மூடிவிட்டு
பிரார்த்தனைகளை முடுக்குகிறீர்கள்..
மோசமான ஓட்டுநர்கள் எப்போதும்
பக்தியை வளர்க்கிறார்கள்..
மதக்கடைகளை அடைத்துவிட்டு
மதுக்கடைகளை திறந்துவைத்தீர்கள்..
ஏதாவது ஒரு போதையில்
மக்கள் மயங்காது போனால்
உமக்கு கைகால்கள் உதறுகிறது..
வகுப்பறைகளை மூடிவிட்டு
வகுப்புவாதத்தை மூட்டி விடுகிறீர்கள்..
ஏழை எளியவர்க்கு சோறுபோடும்
அட்சயப் பாத்திரங்களைக் கழுவி
கவிழ்த்து வைக்கிறீர்கள்..
இருட்டில் தத்தளித்துத் தவிக்கும்
மக்களின் கதி என்னவென்றால்
கடவுளுக்கே வெளிச்சம் என்கிறீர்கள்..
மொத்தத்தில் –
வைபோகங்கள் சிறுகதையானாலும்
அனுபோகம் நெடுந் தொடராகிறது..
பொறுப்பு கையுறை போட்டுக் கொண்டது.
கடமை முகமூடி அணிந்து கொண்டது..
தர்மம் மூடிட்டுப் போய்விட்டது..
மணலைக் கயிறாகத் திரித்து
துன்பமலையை மத்தாக்கி
ஊழல்கடலைக் கடைந்தபோது
வெளியானது ஊரடங்கு காமதேனு..
வேண்டியதைத் தரும் தேவதையால்
ஊமைகள் கண்ட கனவு
உத்தேசமாய் பலித்துப் போனது..
மாடுகளுக்கே மகுடம் சூட்டும் தேசத்தில்
காமதேனுவை எதிர்க்கும் மன்னரும்
ராஜ்ஜியத்தை இழந்து தவசியாவார்..
Comments (0)