ஒச்சையிட்டபடி கடந்து போகும் காலம்
“மாப்ளே ஐயப்பா, நான் பொதுவாத்தான் சொன்னேன். என்னையத்தான் எடுத்துக்கோ. நான் இன்னா நிக்கேன். நாளைக்கு இருப்பேன்னு உறுதியாச் சொல்ல முடியுமா?”– என்று இயல்பான பேச்சினூடே முந்தைய நாளில் சொல்லும் கோயா அடுத்த நாளே கொலையுண்டு கிடக்கிறான். அவனது மரணச் செய்தி, உறக்கம் கலையாத அந்த ஊரில் தீயாகப் பரவுகிறது. ஊரின் பிரதான இடமான ஜங்ஷன் முக்கு கடைவீதிதான் இப்படி எல்லாத் தகவல்களும் உலவும் இடம். கோயாவின் கொலைச் செய்தி பரவியதிலிருந்து ஊரே பரபரப்பான முகத்தைச் சூடிக்கொள்கிறது.

இதில் குறிப்பாக, ஊரின் அனைத்துப் பிரச்சனைகளும் கை,கால் முளைத்து சிறகடித்துப் பறக்குமிடம் சாலம்துவின் டீக்கடையாக இருக்கிறது. காவல் துறை வருகிறது. கொலையுண்டவனுக்குத் தெரிந்தவர்கள், நண்பர்களென ஒவ்வொருவராக அழைத்துச் சென்று தனது பாணியில் விசாரணையை முடுக்கி விடுகிறது. எப்போதும் அதிகாரம் எளிய மனிதர்கள் மீதுதான் தனது முழு பலத்தையும் காட்டும். இந்த நாவலிலும் அப்படி ஒன்றுமறியாத அப்பாவிகளையே நெருக்குகிறது. இதனால் தவறே செய்யாத பூமணி என்பவன் இறந்து போகிறான், மோசே பைத்தியம் ஆகிறான், ஐயப்பன் ஊரையே காலி செய்துகொண்டு கேரளாவில் தஞ்சமடைகிறார்.

நாவலின் கதைக்களம் ஒரு கொலையின் பின்னணியில் சூடுபிடிக்கத் தொடங்கினாலும் வழமையான த்ரில்லர் கதைகளாக இல்லாமல் அந்த ஊரின் அமைப்பையும், எளிய முறையில் ஜீவிதம் செய்யும் மனிதர்களின் அன்றாடத்தையுமே அதிகமாகப் பதிவு செய்திருக்கிறது.
நாவலாசிரியர் மீரான் மைதீன் நாகர்கோவிலைச்சார்ந்தவர். இதற்கு முன்பான இவரது நாவல்களிலும், கதைகளிலும் நாஞ்சில் மொழியைப் பிரத்யேகமாகப் படம்பிடித்துக் காட்டியது போலவே, இந்த நாவலிலும் அம்மொழியைக் கையிலெடுக்க, நழுவியோடும் உயிர் மீனின் லாவகத்தன்மையோடு வாசகனுக்கு விளையாட்டு காட்டியுள்ளார்.
குடும்பத்தைப் பிரிந்து காவல் சங்கக் கட்டிடத்தில் காவலாளியாகப் பணி செய்து வருபவன் கோயா. ஊரில் மட்டுமல்லாது கொஞ்சம் உலக விசயங்களிலும் ஞானமுடையவன். ஒருசிலருக்கு அவனுடைய மேதாவித்தனமான பேச்சுகள் சுவாரஸ்யம் தந்தாலும் ஒரு சிலருக்கு சமயங்களில் அலுப்பூட்டுகிறது. ஆனாலும் யாரோடும் பகைமை இல்லாது இருப்பவன். இரக்க குணம் கொண்டவன். அவனுக்கு ஆற்றங்கரையோரம் குடிசையமைத்து வாழும், இடுப்புக்கு கீழே கால்கள் சூம்பிப்போன மனோரஞ்சிதம் மீது கூடுதல் பிரியம் இருக்கிறது. அடிக்கடி அவளது வீட்டுக்கு இவனுடைய போக்கு கண்டு ஊர் வாய்க்கு வழக்கம்போல கண் காது முளைத்து விடுகிறது. பிறகு அது எப்படி ஒரு கொலைப்பாதகம் வரை நீள்கிறது என்பதே முழு நாவலும்.

சொந்த ஊரிலேயே இருக்கும் காவல் நிலையம் என்றாலும் காவல் நிலையம் என்றதும் அது ஒரு போகக்கூடாத இடமாகவே இன்றளவும் சாமானிய மக்களின் மனதில் தீர்க்கமாகப் பதிந்திருக்கிறது. அதேபோல காவல் துறையின் கிடுக்கிப்பிடிக் கேள்விகளில் கூட்டத்தோடு நின்றிருக்கும் ஒருவன் சிக்கும்போது அதற்குப் பலவாறு கிளை வரைந்து வேர் பாய்ச்சும் கூட்டமாகவும் அதே சாமானியர்களின் மனங்கள் இருக்கிறது. தன்னை விசாரிக்க அழைக்கப் போகிறார்கள் என்று தெரிந்ததும் நிற்காமல் சிறுநீர் கழிக்கும் நெட்டை ஆகட்டும், விசாரணை முடிந்து வெளியே வரும் ஐயப்பனிடம்,
“ரேகை மட்டும் எடுக்கானுவளா…இல்ல கேள்வியும் கேக்கானுவளா “,?-எனும் கோலப்பனுக்கு, “ரேகையும் எடுத்துட்டு நல்ல முறுவலா ஒரு தோசையும் கொஞ்சோல கெட்டிச் சட்டினியும் தரானுவோ.” ஒரு மாதிரி விரக்தியிலும்,இயலாமையிலும் ஐயப்பன் சொல்லும் போது வாசகன் அடுத்து என்ன நடக்கும் என்ற மனநிலையை மறந்து சட்டென சிரித்து விடும் இடங்களாக இருக்கின்றன. அதுபோல பஷீரும், சரவணனும் பொறியாளர் அன்வரின் ஏமாற்று வேலைகளைப் பகடி செய்யும் இடங்களும், பஷீரின் காதல் கதையும் கொஞ்சம் இறுக்கமான மனதைத் தளர்த்திக் கொள்ளும் இடங்களாகும்.

இவர் கதை சொல்லும் யுக்தி முறை அலாதியானது. உதாரணமாக, தொடக்கத்திலேயே நாவலின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் வந்துவிடுகிறார்கள். உள்ளே போகப்போக மீண்டும் மீண்டும் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு காட்சிகளும் தொடங்கும் விதம் சினிமா காட்சிகளைபோல் பல திருப்பங்களைத் தருகின்றன. புறம்போக்கு நிலத்தை பொய் பத்திரம் தயார் செய்து ஊரை ஏமாற்றும் குமாஸ்தா சதாசிவம்தான் கொலைகாரன் என்று வாசிப்பவர்கள் நம்பும் வேலையில் ஆசிரியரின் மாயாஜால எழுத்து வேறொரு பக்கம் கொண்டு போய்விடுகிறது.
ஜின்னா, ஐயப்பன், பூமணி, மோசே,மனோரஞ்சிதம், சதாசிவம், நெட்டை, கோலப்பன், பஷீர், சரவணன் என்ற கதாபாத்திரங்களின் வழி தொன்னூறு சதவீதம் கதை நிகழ்ந்தாலும் மொத்தமும் அதிகாரத்திற்கு அடங்கி ஒடுங்கி அஞ்சும்போது, அதற்கு எதிரான இயலாமை வாசகனின் உள்ளளத்திலும் கனல்கிறது. தன் மகன் வயதுடைய நீலன் எஸ் ஐ “உன் அம்மைக்கு மாப்பிள்ளை பாக்க” என்று தன்னுடைய அதிகாரத் திமிரை ஐயப்பனிடம் வெளிப்படுத்தியதிலிருந்து அவ்வார்த்தை ஐயப்பனைத் தூங்கவிடாமல் செய்கிறது. நாட்டில் அதிகாரத்தில் இருந்தாலே போதும் வயது வித்தியாசமின்றி யாரிடமும் நடந்து கொள்ளலாம் என்பதற்கு இப்படி சிலர் இன்றும் சாட்சியாக இருக்கிறார்கள். அந்த ஒற்றைச் சொல் ஐயப்பனைத் துரத்துவதை ஆசிரியர் “கற்பனையில் ஒருவனை சன்னம் சன்னமாகக் கொன்று போடக்கூடிய அளவுக்கு வன்மம் நிறைந்த வார்த்தைகள் துரதிர்ஷ்டவசமானவை” என்றெழுதி நீலன் சொன்னது ஐயப்பனிடம் மட்டுமல்ல எளியவர்கள் எல்லோருக்கும் அதிகாரம் இப்படித்தான் ஒருதலைப்பட்சமாகச் செயல்படும் என்பதாகச் சொல்லியுள்ளார்.

ஒட்டுமொத்த நாவலிலும் மும்மத மக்களையும் கதாபாத்திரங்களாக அமைத்திருக்கிறார். எல்லோரிடமும் உள்ள கேலி, கிண்டல் அறியாமைகளை தன்னுடைய எழுத்துக்களில் பதிந்துள்ளார். ஒரு கட்டத்தில் கொலையாளி சிக்கி, பின் ஜாமீனில் வெளியே வந்து கொஞ்ச காலம் ஊரோடு ஒட்டாமல் இருந்தவன் பிறகு சகஜமாகிவிடுகிறான். கோயாவை மறந்து எல்லோரும் அவரவர் வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். அடுத்த ஒரு பரபரப்பான செய்தி கிடைக்கிறது. வழக்கம் போல அதற்கு இறக்கைகளைப் பொருத்திப் பறக்கவிடும் வேலைகளை ஊர் தொடங்குவதாக முடிகிறது. ஒச்சை என்றால் உற்றுக்கேட்டல், இரைச்சல் என்று பொருள். ஒரு இரைச்சல் கேட்டால் கூட்டம் கூடிவிடும் ஊர், ஒவ்வொரு காலத்திலும் இதையேதான் செய்து கொண்டிருக்கிறது.
பெரிய பூடகமாக எந்த விவரணைகளுமில்லாமல் எளிய மனிதர்களின் அன்றாடங்களை மிக எளிமையாகப் பதிவு செய்வதே ஆசிரியர் மீரான் மைதீனின் பாணியாக இருக்கிறது. அதே சமயம் மொழியில் அழகியலையும், நையாண்டிகளையும் ஒரு சேரக் கலந்து கொடுத்து வாசகனைக் கட்டிப்போடும் வித்தை தெரிந்தவர். எளிய மனிதர்கள் மீதே எப்பொழுதும் தன்னுடைய படைப்புலகத்தைக் கட்டமைக்கும் மீரான் மைதீனுக்கு வாழ்த்துகள்.
நூல்: ஒச்சை
வகை: நாவல்
ஆசிரியர்: மீரான் மைதீன்
வெளியீடு: புலம்
விலை: ரூ.180
விமர்சனம்: சேலம் ராஜா
Banurekha S
July 22, 2021அருமை.
Raja
July 22, 2021மிக்க மகிழ்ச்சி
Banurekha S
July 22, 2021அருமையான மதிப்புரை.
Raja
July 22, 2021மகிழ்ச்சி
சேலம் ராஜா
December 12, 2023மிக்க மகிழ்ச்சிங்க
பார்கவி தி
July 23, 2021ரொம்ப அழகான விமர்சன உரை அண்ணா…உள்ளதை உள்ளப்படியே தங்கள் பாணியில் எடுத்துக்கூறிவிட்டீர்..
சேலம் ராஜா
December 12, 2023மிக்க மகிழ்ச்சிங்க