என்னைத் தொட்டால் உங்களுக்குத் தீட்டு

அது சுதந்திரத்திற்கு முந்தைய காலம். இங்கிலாந்தின் ஒரு வட்ட மேஜை மாநாடு. மேன்மை தங்கிய ஐந்தாம் ஜார்ஜ் வருகிறார். அவருக்கு இந்தியப் பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தும் படலம்.

His highness, இவர் இந்தியாவின் அம்பேத்கர், இவர் தமிழ்நாட்டில் இருந்து ஏ. டி. பன்னீர்செல்வம்.. என்று தொடர்ந்து வரும்போது, இவர் என்று அடுத்தவரைப் பார்க்க, அவர் இரு கைகளைப் பின்னால் கட்டியிருக்கிறார். அவருடைய கோட்டில் “தாழ்த்தப்பட்டவர்” என்று எழுதியுள்ளது. மன்னரை அவமதிக்கும் செயல் என்று உணர்ந்தே அவர் இதைச் செய்கிறார். அருகில் வந்த மன்னரிடம், நான் தீண்டப்படாதவன், என்னைத் தொட்டால் உங்களுக்குத் தீட்டுப்பட்டுவிடும்‘ என்று தைரியமாகச் சொல்கிறார். என்னவென்று விசாரித்த மன்னரிடம், எங்கள் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை இதுதான் என்று கூறி விளக்கம் அளிக்கிறார். யாராவது கீழே விழுந்தாலும் அதுதான் நிலைமை என்பதை விசாரித்து அறிந்த மன்னர், அவரிடத்தில் கோபம் கொள்ளாமல் புரிந்து கொள்கிறார்.

இவ்வளவு தைரியமாக மன்னரிடம் பேசிய அந்த மாமனிதர்தான் இரட்டைமலை சீனிவாசன். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் சமூக சீர்திருத்தத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களில் மிகவும் சீனியர். அம்பேத்கர் பிறந்தபோது இவருக்கு 30 வயது. ஆனால் அதே அம்பேத்கருடன் இங்கிலாந்தில் நடந்த வட்ட மேஜை மாநாட்டிற்குச் சென்று வந்தவர்.

1859 ஜுலை 7 அன்று செங்கல்பட்டில் இரட்டைமலை – ஆதிஅம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். கோவை கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த சீனிவாசன் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்று விளங்கினார். இந்திய துணைக்கண்டத்தின் தாழ்த்தப்பட்ட மக்களில் இருந்து பட்டப்படிப்பை முடித்த முதல் பெருமைக்குரியவர், இரட்டைமலை சீனிவாசன்.

சிறு வயதிலேயே சமூக அமைப்பின் சமமின்மையில் வருந்தியவர், அந்த நிலையை மாற்றுவதையே தன் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டார். திராவிடர் கழகம் என்று தொடங்கி, திராவிட மகாஜன சபா என்று பெயர் மாற்றம் பெற்ற அமைப்பின் மாநாடு உதகையில் நடந்தபோது, தன் உறவினர் அயோத்திதாசப் பண்டிதருடன் இவர் இயற்றிய 10 தீர்மானங்கள் தமிழகத்தின் சமூக நீதிக்கான பாதையில் முதல் காலடியானது. அப்போதைய காலகட்டத்தில் விடுதலைக்காகப் பணியாற்றிக் கொண்டிருந்த காங்கிரஸ் மீதும், அரசியல் மீதும் நம்பிக்கையற்றவராகவே இருந்தார் சீனிவாசன். சக இந்தியரிடமே வேறொரு இந்தியன் சுதந்திரம் கேட்பது கேவலம் என்பார். இன்றும் அந்த அவலம் நீடிப்பதை நாம் அறிவோம்தானே!

பறையன் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்து சிறப்பாக நடத்தினார். பெயர்க்காரணம் கேட்டபோது, ‘தன்னைத்தானே பெருமை பாராட்ட பறையர்கள் முன்வரும்போதுதான் அவர்களின் தன்னம்பிக்கை பெருகும்’ என்று பதிலளித்தார். அது சிறந்த பிரசாரப் பத்திரிக்கையாகத் திகழ்ந்தது. பறையன் இதழின் முதல் பிரதியை மதிப்புரைக்காக சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்பியபோது, அதன் ஆசிரியராக இருந்த சி.ஆர்.நரசிம்மன், அதனைக் கையால் தொடாமல் குச்சி வைத்து புரட்டிப் பார்த்தார் என்ற செய்தி, அக்காலத்தில் நிலவிய தீண்டாமையின்  நிலைமையை நமக்குச் சொல்லாமல் சொல்கிறது. கல்வியின் மூலம்தான் சமூக முன்னேற்றம் நிகழும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

ICS என்னும் இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு இங்கிலாந்தில் நடந்து வந்தது. அதை இந்தியாவிலும் சேர்ந்து நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரியபோது, அதை எதிர்த்து ஆங்கிலேய அரசுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு அவர் சொன்ன காரணம் கவனிக்கத்தக்கது. “இந்தியாவில் நடத்தினால் பிராமணர்கள் அதிகம் எழுதுவார்கள். மேலும் அவர்களுடைய சட்டங்கள், அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை ஏற்பதில்லை. எனவே இங்கிலாந்தில் மட்டும் நடத்தினால் போதுமானது” என்று எழுதினார்.

இந்தியாவின் பிரச்சினைகளை இங்கிலாந்தில் நேரடியாகச் சொல்ல வேண்டும் என்று கிளம்பியவர், அவர் சென்ற கப்பல் தென்ஆப்பிரிக்காவில் நின்றதால் அங்கேயே இறங்கிக் கொண்டார். இவரின் ஆங்கிலப் புலமை காரணமாக நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் பணி கிடைத்தது. அங்கேதான் இவர் காந்தியைச் சந்தித்தார். இவருடைய நட்புதான் காந்திக்கு திருக்குறளையும், தமிழில் கையெழுத்து இடுதலையும் கற்றுத் தந்தது. பின்னொரு காலத்தில் இந்த நட்புதான் பூனா ஒப்பந்தத்தில் காந்தியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவும் செய்தது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய சீனிவாசன், நீதிக்கட்சியின் மேலவை உறுப்பினராகி அமைச்சராகிறார். இவர் காலத்தில் சிறப்பான தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டு ஆணைகள் ஆகியுள்ளன. பொதுக் கிணறுகள், பொதுச்சாலைகள், ஆலயங்கள் பயன்படுத்துவதில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் வேற்றுமை பாராட்டக்கூடாது, சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆணையாக்கப் பட்டது. ஆதி திராவிடர் என்ற பொதுப்பெயர் பல்வேறு பெயர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.

இரண்டாவது வட்ட மேஜை மாநாடு இங்கிலாந்தில் நடந்தபோது அம்பேத்கருடன் சேர்ந்து மாநாட்டில் கலந்து கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாகப் பேசி, ஆங்கிலேயர்களிடம் ஒப்புதல் பெற்றார். இந்தியா திரும்பியவுடன் காந்தி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், சமாதானத்திற்காகப் பெரும் பங்காற்றினார். பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டவர்களில் இரட்டைமலை சீனிவாசனும் ஒருவர்.

ஆங்கிலேய அரசாங்கத்திற்கு ஆதரவான நிலையே எடுத்தார் என்று ஒரு குற்றச்சாட்டு இவர் மீது வைக்கப்படுகிறது. ஆனால் இது ஒரு உத்தியாகத்தான் பயன்படுத்தப்பட்டது என்று தமிழகத்தின் சமூக சீர்திருத்தம் ஒரு இருநூற்றாண்டு வரலாறு என்ற தன் நூலில் அருணன் கூறுகிறார்.

தன் இறுதி மூச்சு வரை தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த இரட்டைமலை சீனிவாசன், தன் 86 ம் வயதில் செப். 1945-ல் இயற்கை எய்தினார். இந்தியா சுதந்திரம் அடைவதை அவர் பார்த்துச் சென்றிருக்கலாமோ என்ற எண்ணம் வராமல் இல்லை.

  • கோவை பிரசன்னா

Comments (2)


Mansoor

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை..
தொடர்ந்து எழுதுங்க சார்..
வாழ்த்துகள் ..

பானுரேகா
பானுரேகா
July 8, 2022

சிறப்பான கட்டுரை.முகநூலில் தான் இவரைப்பற்றி அறிந்தேன்.இக்கட்டுரையில் கூடுதல் தகவல்கள்.உள்ளன.வாழ்த்துகள் பிரசன்னா சார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *