மயிலை சீனி எனும் தமிழ்த் தேனீ
வாழ்நாள் முழுதும் வரலாற்றைத் தேடிய
மயிலையின் வானம்பாடி
ஆழ்ந்த தமிழ்ஞானி
ஆனால் படிக்கவில்லை பள்ளிதாண்டி
கோயில் வரலாறெனில் அதன் கொடி வரலாறாய் விரியும்
சமய வரலாறெனில் தத்துவமும் குடைபிடிக்கும்
பண்பாட்டைச் சொல்லவந்தால் பயன்பாடும் சேர்ந்துவரும்
மொழியின் வரலாறென்றால் மூதறிஞரும் முகமன் சொல்வார்
அதனால்தான்
பாரதிதாசன் இப்படி அறையலுற்றார்
‘தமிழையே வணிகமாக்கித்
தன்வீடு மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கு
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ்முதலாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
கால் தூசும் பெறாதென்பேன்’
மொழிக்கு சமயங்களின் கொடைகளை
முத்தான பலநூல் வழி மொழிந்ததெல்லாம்
மொழிச் சரிதம் படிப்போருக்கு முழுநிலவாய்க் கூடவரும்
‘கிறித்துவமும் தமிழும்’ அவர் எழுதிய முதல்நூலாம்
பொறிவாயில் ஐந்தவித்த புத்தனைப் பின்தொடர்ந்த
‘பௌத்தமும் தமிழும்’ அடுத்து வந்தது
‘சமணமும் தமிழும்’ ‘இசுலாமும் தமிழும்’
‘இந்துமதமும் தமிழும்’ என்றெல்லாம்
சமயத்தோடு மொழிவரலாற்றைச் சேர்த்து எழுதினார்
அழகர் கோவில் வரலாறு எழுதப் புகுந்த
அறிஞர் தொ.பரமசிவன்
மயிலை வேங்கடத்தின் ஆய்வையே
முதற்புள்ளியாகக் கொண்டார்
தரவில்லாமல் இருண்டிருந்த களப்பிரர் வரலாற்றை
இலக்கிய வெளிச்சத்தில் கரம்பிடித்து அழைத்து வந்தார்
பல்லவ மன்னர்கள் வரலாற்றைப்
பலநூல்களாய் எழுதித் தந்தார்
மகாபலி புரத்தை மாமல்லபுரம் என்றுகண்டு
தமிழர் மனதில் மகிழ்ச்சி பெய்தார்
மகேந்திரப் பல்லவனின் மத்த விலாச அங்கதத்தை
தமிழில் தந்தவரும் மனோன்மணியத்தை
பதிப்பு செய்தவரும் மயிலையார்தான்
நுண்ணிய கலை ஆய்வும் அவரே தொடங்கிவைத்தார்
சங்க கால வரலாறு தொட்டு
சமகால இலக்கிய வரலாறு வரை
மயிலை சீனி வேங்கடசாமியின் கொடை உண்டு
கல்வெட்டு ஆய்வுக்கும் செப்பேட்டு ஆய்வுக்கும்
சொல்வெட்டுச் செய்த மயிலை சீனி வேங்கடசாமிக்கு
சூலை எட்டில் நினைவு தினம்
தமிழைக் கொண்டாடுமுகத்தான்
தமிழ்த் தேனீயை அறிந்து போற்றுவோம்
- கோமதி சங்கர்

Comments (0)