காவியக் கலை

கவிஞர் பொன்மணிதாசன் கவிதை

புன்னகை யொளியில் பூத்தநல்
என்னை சிலிர்ப்பாக்கும் – அவள்
கண்ணடி காணும் கவிதை மொழியோ
கண்களை விரிவாக்கும்!

விரிகுடை போலிரு விற்புரு இரண்டு
விழியிடம் கடன்கேட்கும் – நான்
சொரிகிற பார்வை சூட்சம மறிந்து
சூடும் நாணமதுவாக்கும்!

கரைய மறந்த கார்முகில் குழலது
காலை தான்நோக்கும் – என்விரல்
சிறைபடச் செய்த சிகையின் அழகு
சேர்த்தநல் வலையாக்கும்!

வரைய இருந்த வனப்புறு அழகின்
வடிவம் அவளாக்கும் -நான்
நிறைய நிறைய நினைத்த வண்ண
நித்திலப் பூவாக்கும்!

உண்டு உருண்டு உதடுகள் உலர
உணர்வுகள் உசுப்பேத்தும் – தேனில்
வண்டு விழுந்த வகையென் மனது
வழிதொட கொதிப்பேத்தும்!

கண்டு நெருங்கி கலப்பது காவிய
கலையில் ஒன்றாக்கும் – அவளைக்
கொண்டு குலவி கொஞ்சும் வேளை
குமணன் நானாக்கும்!

  • பொன்மணிதாசன்

Comment (1)


N.Paneer Selvam
N.Paneer Selvam
June 9, 2023

பொன்மணி தாசனின் கவிதை அற்புதம்..சொற்கட்டும் இலக்கிய நயமும் மிகுந்து கவிதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.. கவிஞருக்கு என் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *