பதவி வாங்கும் கருவி

கவிஞர் பொன்மணிதாசன் கவிதை

பெட்டியிலே பணமிருக்கும்
பேருசொல்ல ஆளிருக்கும்
வட்டிக்கென்று சென்றபணம்
வளர்ச்சியிலே தானிருக்கும்

ஒட்டிசில உறவிருக்கும்
உறவினிலும் முரணிருக்கும்
அட்டியிலை பெற்றப்பேரு
ஆகாசம் தொட்டிருக்கும்!

வீட்டுக்கே சாமிவரும்
வீராப்பு பேசவரும்
ஓட்டுக்கு பணங்கொடுத்தால்
ஓடோடிப் பதவிவரும்

மாட்டுக்கும் மரியாதை
மறக்காமல் தேடிவரும்
நாட்டுக்குள் இவருக்கென்று
நாற்புறமும் புகழுவரும்! 

வந்தநோய் விரட்ட
வரிசையிலே மருத்துவரும்
அந்தநோய் தீர்ப்பதற்கு
ஆயிரமாய் செவிலியரும்

எந்தபணம் கொடுத்தாலும்
ஏற்காமல் முதுமைவரும்
அந்தநாள் வந்துவிட்டால்
அடுத்தநொடி தனிமைவரும்!

அறிவார் அறியவரும்
அறிவார்ந்த தத்துவத்தை
விரிவாய் சொல்வதென்றால்
விடுகதை யந்தவித்தை

புரியாமல் ஆடும்களம்
பூமியடா நீயறிந்தால்
தெரியாமல் வந்தநிலை
தெளிவாக்கு மிந்தகதை!

  • பொன்மணிதாசன்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *