டாஸ்மாக்கில் விற்பது பஞ்சாமிர்தமா?
தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை மாணவர்கள் எடுக்க வேண்டுமென்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது. எல்லாம் சரி, தமிழக அரசின் பார்வையில் போதைப்பொருள் என்பது குட்கா, கஞ்சா, ஹெராயின், அபின் போன்றவையாகத்தான் இருக்கிறது. அரசால் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள், போதைப்பொருட்களின் கணக்கில் வராதது, வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. 
மதுபானங்கள்தான் தற்போது மிக மிக எளிதாகக் கிடைக்கக்கூடியதாக, அரசின் அனுமதியுடன் வாங்கிப் பயன்படுத்தக்கூடிய போதைப்பொருட்களாக இருக்கின்றன. அதேபோல, தினசரிச் செய்தித்தாள்களைத் திறந்து, கொலை, கொள்ளை, வன்புணர்வு, தற்கொலை எனப் பத்து செய்திகளை வாசித்தோமானால், அவற்றில் ஏழெட்டு சம்பவங்களுக்கு அடிப்படையாகவோ, பின்புலமாகவோ மதுப்பழக்கம் இருக்கும். மது போதையில் வன்புணர்வு, மதுப் பழக்கத்தால் கணவன் மனைவி இடையே தகராறு, மதுப் பழக்கத்தால் கடனாளியாகித் தற்கொலை, மதுபானம் வாங்கப் பணம் தராததால் மனைவி அடித்துக் கொலை, இப்படியான செய்திகள் மிகச் சாதாரணமாகிவிட்டன. இவையொன்றும் அரசின் பார்வைக்குப் போகாத ரகசியச் செய்திகள் அல்ல. ஆனால், இவற்றையெல்லாம் இத்தனைக் காலமாக அரசாங்கங்கள் கண்டுங்காணாமல்தான் கடந்து வருகின்றன. மதுபான விற்பனையாலும், மதுப் பழக்கத்துக்குப் பலர் அடிமையாவதாலும் அரசுக்கும் அரசியலுக்கும் கிடைக்கும் பல்வேறு நன்மைகளே அதற்குக் காரணம். 
குடி நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை, குடிநோயால் கணவன் உயிரிழந்ததால் இளம் விதவையான பெண்களின் எண்ணிக்கை, மது போதையால் நடக்கும் கொலை, கொள்ளை, வன்புணர்வு, விவாகரத்துகள் என அனைத்துப் புள்ளி விவரங்களையும் சேகரித்தால், தீவிர மதுப்பழக்கத்தால் ஏற்பட்டுள்ள சமூகத்தீமையின் வீரியம் பளிச்சென அனைவருக்கும் புரியும். அவ்வளவு ஏன், ஒவ்வொருவரும் அவரவர் குடும்பம், உறவினர்கள் மட்டத்தில் தீவிர மதுப்பழக்கத்தில் சிக்கியவர்கள் குறித்துக் கணக்கெடுத்தாலே இதன் தீவிரத்தன்மை புரியும்.
இவற்றைத் தடுத்து நிறுத்த அரசு என்ன செய்ய வேண்டும்? முதலில், குடிப்பழக்கம் ஒரு சமூகக்கேடு என்பதை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாக்காச்சி போர்டில் எழுதிவைப்பதல்ல இது. தீவிர மதுப்பழக்கத்தால் ஏற்பட்டுள்ள சமூகக்கேடுகள் குறித்த புள்ளி விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.
குடிப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மிகத் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்க வேண்டும். குடிப்பழக்கத்தால் ஒருவர் மீதான மரியாதை எந்த அளவுக்கு இழிவு நிலைக்குச் செல்கிறது, குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பம் எப்படிச் சீரழிகிறது என்பது குறித்த பிரச்சாரங்கள் திண்ணைப் பிரச்சாரம் போல முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்தப் பிரச்சாரங்கள், நேரடியாக மக்கள் மத்தியிலும், அனைத்து ஊடகங்களின் வழியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், சமூக அக்கறையுடனும் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதால் விளையும் தீமைகள் குறித்து ஒவ்வொரு வீட்டிலும் பேசப்படும். தீவிர மதுப்பழக்கம் தவறென்ற சிந்தனை பரவத் தொடங்கும். இதுதான் மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சரியான முன்னெடுப்பாக இருக்கும்.
பொதுவாக, மதுபானக்கடைகளை ஒழித்துவிட்டால், மதுப்பழக்கத்தை ஒழித்துவிடலாம் என்ற சிந்தனை பலருக்கும் உண்டு. ஆனால், அது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதற்குப் பல்லாண்டுகளாக மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் தொடரும் கள்ளச்சாராயச் சாவுகளும், அங்கே விற்பனையாகும் போலி மது பானங்களும், சாராயம் குறித்த புள்ளிவிவரங்களுமே சாட்சி. அதேவேளை, மதுபானக்கடைகளை முற்றாக மூடுவதற்குப் பதிலாக, எண்ணிக்கையை இஷ்டத்துக்கு அதிகரிப்பதை நிறுத்த வேண்டும். 
இப்போது, சிறு கிராமத்திலும்கூட இரண்டு மூன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தனியார் மதுபானக்கடைகளும் ரெக்கரியேஷன் கிளப் என்ற பெயரில் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, ஊருக்கு வெளியே மதுபானக் கடைகளைக் கொண்டுசெல்ல வேண்டும். அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கும், குடியிருப்புகளுக்கும் அருகிலுள்ள மதுபானக் கடைகளை ஒழிக்க வேண்டும். நம்மூரில் ஒரு விசித்திரம் என்னவென்றால், குடியிருப்புகளுக்கு அருகிலிருக்க வேண்டிய கல்விக்கூடங்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமாகத் தொலைவில் இருக்கின்றன. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்க வேண்டிய மதுபானக்கடைகள் குடியிருப்புப்பகுதியில் இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும்.
இறுதியாக, மது பானங்கள், போதைப்பொருட்கள் பயன்பாடென்பது, தமிழ்நாடு என்றில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சவாலான பிரச்சனையாக தற்போது உள்ளது. குஜராத்திலுள்ள அதானி துறைமுகத்தில் கடந்த ஆண்டில், இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டது. அடுத்தடுத்து, அதே துறைமுகத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பிலும், 350 கோடி ரூபாய் மதிப்பிலுமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல், குஜராத்திலுள்ள மற்ற துறைமுகங்களிலும் போதைப் பொருட்கள் பிடிபட்டன. அதாவது, மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத் மாநிலம்தான், போதைப்பொருட்களின் சர்வதேசச் சந்தையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது, போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையும் அங்குதான் அதிக அளவில் நடக்கிறது. 
குஜராத் மட்டுமல்லாது, இந்தியா முழுக்கவே போதைப்பொருட்கள் சப்ளை அதிதீவிரமாக நடக்கிறது. பெருமுதலாளிகளின் உலகமாக மாறிவரும் இன்றைய சூழலில், போதைப்பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதோடு, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வைத் தீவிரமாக முன்னெடுப்பதும்தான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கக்கூடும். அந்த விழிப்புணர்வு வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். நம் எதிர்காலம் நம் கைகளில்.
- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

Comments (0)