கற்பைப் பிடித்துத் தொங்குகிறதா இலக்கிய உலகம்?

தமிழினி இணையத்தில் எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய இசைவு என்ற சிறுகதை நேற்றிலிருந்து (05.09.2022) இலக்கிய இணைய உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. சரி, அப்படி என்னதான் பஞ்சாயத்தைக் கிளப்பி வைத்திருக்கிறார் என்று பார்க்கலாம் என்று கருதி, அந்தப் பக்கத்திற்குச் சென்று கதையை வாசித்தேன்.

மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே உறவு உண்டாகி, மருமகனின் பிள்ளைக்குத் தாயாகிவிடுகிறார் மாமியார். தொடக்கத்தில் இருவரையும் கண்டிக்கும் மகள், கதையின் இறுதிக்காட்சியில் இந்த உறவு தந்தைக்குத் தெரியாமல் மறைப்பதை, அந்த உறவுக்கான இசைவு எனக் குறிப்பால் உணர்த்துவதாகக் கதை முடிகிறது.

இணைய வெளியில் பலரும் விமர்சித்ததைப்போல, நகர்ப்புற நாகரிகத்துக்குத் தம்மை வரித்துக்கொண்டு, மேட்டிமைச் சிந்தனைக்குள் குடியேறிவிட்ட தற்காலச் சமூகத்துக்கும், மனதின் ஒரு மூலையில் கதைக்களம் குறித்த தெளிவு இருந்தாலும், எங்கே நாம் இதை எதிர்க்கவில்லையென்றால் பெரும்பான்மைச் சமூகம் நம்மையும் ஒரு பாலியல் குற்றவாளி ஆக்கிவிடுமோ என்ற பதற்றத்தில் சிக்கிக்கொள்வோருக்கும் நிச்சயமாக இந்தக் கதை ஒரு அதிர்ச்சியாகவோ ஆபாசமாகவோ தோன்றுவதில் வியப்பில்லை.

அண்மையில் வெளியான, வீட்ல விசேஷம் திரைப்படத்தில், திருமண வயதில் வீட்டில் மகன் இருக்க, குழந்தை பெற்றுக்கொண்ட தாயின் மனப் போராட்டம், அந்தக் குடும்பத்திலேயே நிலவிய குழப்பம், இறுதியில் உண்டான தெளிவு ஆகியவை நகைச்சுவை இழையோட, நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. அந்தப் படமும் முற்போக்காளர்களால் சிலாகித்துப் பேசப்பட்டது. முக்கியமாக, அந்தப் படத்தில் பாட்டி கதாபாத்திரம் பேசும் ஒரு வசனம் முக்கியமானது. ‘எத்தனை வயது கடந்தாலும் கணவன் மனைவிக்குள் நெருக்கம் இருந்தால்தானே குழந்தை பிறக்கும்?! 50-களைக் கடந்த பின்னும் பிறக்கும் இந்தக் குழந்தை, அந்தக் கணவன் மனைவிக்குள் இன்னமும் நீடிக்கும் காதலின் சாட்சி’ என்பதாக இருக்கும்.

வீட்ல விசேஷம் திரைப்படத்துக்கும் இசைவு சிறுகதைக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு, பிறந்த அந்தக் குழந்தைக்குத் தந்தை யார்  என்பதுதான். இசைவு கதையில் மாமியாரின் குழந்தைக்கு மருமகன் தந்தை ஆகிறான். அதாவது, தன் மகனுக்கு, தானே மைத்துனனும் ஆகிறான். இந்த உறவுச் சிக்கல்தான் கதையில் விழுந்துள்ள சிக்கலான முடிச்சு. இந்த முடிச்சுதான் எல்லோரையும் பதற்றம் கொள்ள வைக்கிறது. அந்தப் பதற்றமே இந்தக் கதையை, மஞ்சள் பத்திரிக்கை கதை, சரோஜாதேவி கதை என்றெல்லாம் வகைப்படுத்தச் செய்கிறது.

மணி பார்க்கும் கடிகாரம்கூட ஊருக்கு ஒன்றோ இரண்டோ மட்டுமே இருக்கும் அளவினான குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த, மிகவும் எளிமையான மக்களோடு வாழ்ந்து பழகிய என்னைப் போன்றோருக்கு இப்படியான கதைகள், வெறும் கதைகள் மட்டுமே. அதாவது, இவ்வாறான நிகழ்வுகளை எங்கள் இளம் வயதிலேயே கதைகளாகவும் செய்திகளாகவும் கேட்டும், தவிர்க்க இயலாத சில தருணங்களில் கண்டும் கடந்தும் வந்திருக்கிறோம்.

தொழில்நுட்ப வளர்ச்சியும் சினிமாவும் மிகமிக அரிதாக இருந்த காலத்தில் வாழ்ந்த எளிய மக்கள் இத்தகைய நிகழ்வுகளை மிக எளிதாகப் புறந்தள்ளி, கடந்து சென்று, வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்ளாமல் வாழ்ந்த மக்களைக் கண்டு வளர்ந்தவர்கள் நாங்கள். மாமியார் மருமகன் மட்டுமல்ல, மாமனார் மருமகள், கணவன் இருக்கும்போதே தன்னுடைய மனம் கவர்ந்த தன்னைவிட வயதில் இளைய ஆடவனைத் தன் வீட்டோடு வைத்துக்கொண்ட பெண், மனைவியின் நண்பன் வந்தால், அந்த நண்பனின் வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவன், நெருங்கிய உறவுக்குள்ளேயே இரண்டு வெவ்வேறு வீடுகளில் இரட்டைப் பிள்ளைகளைப் போல அச்சு அசலான பிள்ளைகள், இப்படிப்பட்ட மனிதர்களைச் சந்தித்துவிட்டு, அவர்களோடு பழகிவிட்டுத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். ஒரு திரைப்படத்தில், ஊருக்குள் திருவிழா நடக்கும் நேரத்தில், மைக் செட்காரர் வீட்டுக்குள் ஊர்ப் பெரிய மனிதர் நுழைந்து, ‘சுத்தபத்தமாதானே இருக்க?’ என்று கேட்பாரே, அதற்கு இணையான காட்சியை கண்ணால் கண்ட சாட்சிகள் நானும் என் தம்பியும்.

அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும்கூட, இரண்டு பெண்கள் மீதும், தான் சமமான காதல் வைத்திருப்பதாக அந்த நாயகன் சொல்வார். அதனால் இரண்டு பெண்களுமே அவரைத் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். ஆனால், ஒரே மேடையில் இரண்டு பெண்களை ஒரு ஆண் திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஒரு அழைப்பிதழும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அது பலராலும் ஏளனமும் செய்யப்பட்டது.

தமிழ் சினிமா ஊதி ஊதிப் பெருக்குவதற்கு முன்பாக இந்தச் சமூகம் கற்பைக் குறித்து அத்தனை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தாலி மற்றும் கற்பு குறித்தான சென்ட்டிமென்ட்களைக் காட்டுத் தீயினும் வேகமாகப் பரப்பிய பெருமை சினிமாவையே சாரும். அதன் நீட்சியைத் தற்போது தொலைக்காட்சித் தொடர்கள் செய்து வருகின்றன என்று கருதுகிறேன்.

அண்மையில் ஒருவர், ஒரு ஆணுக்குப் பல பெண்கள் மீது ஈர்ப்பு வந்தால் அது மனநலக் கோளாறு என்று எழுதி இருந்தார். காதல் ஒரே ஒருவரிடம் மட்டும்தான் வரவேண்டும் என்ற சிந்தனையின் மறுபக்கம்தான் அது என்றுதான் அதை என்னால் எடுத்துக்கொள்ள முடிந்தது. ஒரு மனநோயாளி தன்னை ஒருபோதும் மனநோயாளி என்று ஒப்புக்கொள்ள மாட்டார் என்று சொல்வதைப் போல, ஈர்ப்பு வந்தாலே மனநோயாளி என்றால், இங்கே ஏராளமான மனநோயாளிகள் தங்களை மறைத்துக்கொண்டு வாழ்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். உண்மையாகவே – நேர்மையாகவே – ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மீது ஈர்ப்பு வரவில்லை என்றால், அவர்கள் எங்கோ பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது கட்டுப்படுத்தப் பட்டிருக்கலாம் என்பது என்னுடைய கணிப்பு.

இன்னும் சில இடங்களில், காமம் சார்ந்த செயல்களை விலங்குகளோடு ஒப்பிட்டு வசை பாடுவதும், அதற்கு முரணாக, கருவுற்று இருக்கும் பெண் விலங்கை ஆண் விலங்கு அணுகாது என்பதும் எனக்குள் சிரிப்பை உண்டாக்கும் நகைச்சுவைகளே அன்றி வேறல்ல. விலங்குகளுக்கு காமம் என்பது இனப்பெருக்கச் செயல்பாடு என்று மட்டுமே இங்கே வரையறுக்கப்படுகிறது. ஆனால், விலங்குகள் மனிதர்கள் கையில் அகப்படாதவரை அவற்றுக்குக் காமம் தோன்றிய உடனே வடிகாலும் கிடைத்துவிடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், மனிதன் கையில் சிக்கிக்கொண்ட விலங்குகளுக்கு அவற்றின் இயல்பான காம உணர்வுக்கான வடிகால் மறுக்கப்படுகிறது என்பதே உண்மை.

கண்ணகியைக் கற்புக்கரசி என்று சொல்லித்தானே மெரினாவில் சிலை வைத்துப் போற்றுகிறோம்? கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண்ணில் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று மேடை போட்டு முழங்குகிறோம்? கணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு மதுரையை எரித்த கண்ணகி, தன்னைத் தவிக்கவிட்டு வெளியேறிய கணவனுக்கும் தண்டனை தரவில்லை. அல்லது தானும் இன்னொரு துணை தேடிக்கொள்ளவில்லை.

இன்சூரன்ஸ் துறையில் நீங்கள் இழப்பீடு கோரும்போது ‘விபத்துக்கான/ மரணத்துக்கான காரணம்’ – cause of accident/ death – என்வென்று ஆய்வு செய்வார்கள். உதாரணமாக, ஒரு வண்டியில் பிரேக் ஆயில் லீக் ஆகி, அதன் காரணமாக பிரேக் பிடிக்காமல் விபத்து நடந்தால், அது வண்டியின் பராமரிப்பில் கோளாறு என்ற காரணத்தால் இழப்பீடு நிராகரிக்கப்படும். ஆனால், மழையின் காரணமாக, சாலை சேறும் சகதியுமாக இருந்து வண்டி பிரேக் பிடிக்காமல் வழுக்கிச் சென்று விபத்து நேர்ந்தால் அது தங்கள் கட்டுப்பாடுக்குள் இல்லாத விபத்தாகக் கருதப்பட்டு இழப்பீடு வழங்கப்படும். அதேபோல, கோவலன் வறுமை நிலைக்கு வந்து மதுரைக்கு வந்ததற்கு அவனேதான் காரணம். இருந்தாலும் தண்டனை என்னவோ ஒட்டுமொத்த மதுரை மக்களுக்கும். ஆனால் நமக்கு முக்கியமானது என்னவோ, கணவன் கைவிட்டுப்போன பின்னும் அவனுக்காகவே காத்துக்கிடந்த அவளின் கற்பு நெறிதானே?

இன்னமும் இந்தச் சமூகம் கற்பு எனும் கற்பிதத்தைத்தான் பிடித்துத் தொங்குகிறதா? அல்லது, மற்றவர்களுக்கு உற்ற துணை யார் என்பதை இந்தச் சமூகம்தான் தீர்மானிக்க விரும்புகிறதா? ஒழுக்கத்துக்கான அளவுகோலாகப் பெண்களின் உடலை மட்டுமே வைத்திருக்கவே இந்தச் சமூகம் விரும்புகிறதா? காமம் என்பதைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே ஒழுக்கசீலர் சான்றிதழ் வழங்கப்படுமா? காமத்தைக் கடந்து இந்தச் சமூகத்தில் நிலவும் பிற சிக்கல்கள் யாவும் உரிய தீர்வினை எட்டிவிட்டனவா? ஒரு பெண்ணுக்குத் தன்னுடைய உடல் மீதான உரிமையை இந்தச் சமூகம்தான் எப்போதும் தீர்மானிக்குமா? இப்படி ஏராளமான கேள்விகள் என் உள்ளத்தில் ஊற்றெடுத்தவண்ணம் இருக்கின்றன. எனக்குள் எழும் இன்னொரு முக்கியமான கேள்வி, இவர்களில் எத்தனை பேர் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தை வாசித்திருப்பார்கள் என்பதே.

இந்தக் கதையிலும் அந்தப் பெண்ணுக்கு விருப்பமான ஆண், மருமகனைத் தவிர வேறு ஒருவராக இருந்திருப்பின் இந்தப் பதற்றம் உருவாகி இருக்காது என்றே நான் கருதுகிறேன். அதை முற்போக்குச் சிந்தனை என்றும்கூடச் சிலர் கொண்டாடி இருக்கக்கூடும். ஆனால் அந்தப் பெண்ணின் விருப்பத்தையோ அல்லது கதாசிரியர் விருப்பத்தையோ, விமர்சிப்பவர்கள் தீர்மானிக்க முடியாது அல்லவா? இதற்கும் ஒரு உதாரணம் சொல்கிறேன். தோழர் சி. ஞானபாரதி எழுதிய அவஸ்தை என்ற சிறுகதையின் ஒரு காட்சியில், வறுமையில் வாடும் ஒரு ஏழைப் பெண்ணின் வீட்டைக் குறித்த வர்ணனையில், வீட்டின் சமையலறையில் சடை சடையாக ஒட்டடை தொங்குவதாக எழுதி இருந்தார். அந்தக் கதையை வாசித்துவிட்டு நான் அவரோடு உரையாடுகையில், வறுமைக்கும் தூய்மைக்கும் தொடர்பு இல்லையே தோழர்; சிறிய வீடாக இருந்தாலும் அந்தப் பெண் வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ளலாம் அல்லவா? என்று கேட்டேன். அதற்கு ஞானபாரதி தோழர் சொன்ன பதில், “நீங்கள் பார்த்த வீடுகள் அவ்வாறு இருக்கலாம் தோழர். ஆனால், நான் பார்த்த பெண்ணின் வீடு எப்படி இருந்ததோ அதைத்தான் எழுதியுள்ளேன்” என்பதுதான். ஒருவேளை தோழர் இராசோ-வும் இதே பதிலைச் சொல்லக்கூடுமல்லவா?

  • நல்லு இரா. லிங்கம்
  • செப்டம்பர் 9, 2022

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *