மடிக்கனம் – கவிதை

புழுதியை எழுதியெழுதிக்
களைத்த பகல் கூடடைந்திருக்க
விழித்திருக்கிறது
நெடுஞ்சாலையின் இரவுவாடை

மையொழுகும் விழி
பொய்யொழுகும் இதழ்
திட்டுத் திட்டாக
கோகுல் சாண்டலொழுகும் கன்னக்கதுப்பு

புருவஞ்சுருக்கிக் கவனங்குவித்து
பழக்கப்பட்ட லாரிக்காரனுக்காய்
விழிநோக நிற்குமந்தக் கனகாவின்
ஈரமொழுகும் ரவிக்கை வாடைக்கு
இரவைக்கிழித்து ஊளையிடுகிறது
முட்புதருக்குள் குட்டிகளைப் பதுக்கி வெளியேறும் மடிசரிந்த நாயொன்று

குப்பையோரம் கிடந்த கொட்டாங்குச்சியில்
தன் பாரம் அத்தனையும் இறக்கி வைத்துவிட்டு
மேலும் கொஞ்சம் பவுடர் பூசிக்கொள்கிறாள் கனகா

மடிகனத்த நெடுஞ்சாலைக் கிளிகளின் யாமம்
விமோசனமில்லாப் பெருஞ்சாபம்

  • அன்பு மணிவேல்

Comments (3)


GOMATHISANKARR
GOMATHISANKARR
June 4, 2023

சபாஷ்

பானுரேகா
பானுரேகா
June 4, 2023

💐💐

சுதர்சனம்.E.S
சுதர்சனம்.E.S
June 15, 2023

மையொழுகும் விழி
பொய்யொழுகும் இதழ்

அருமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *