கவிதைகள்
நித்தக் கோடி
மூச்சுமுட்டும் நெருக்கடியில்
சேமிப்பைத் திரட்டிய களைப்போடு
விதவிதமான காரணங்கள் சுமந்து
திரள்கிறது கூட்டம்
எப்போதும் வரம்பெல்லைக்கு உட்படாமலே
கையில் வந்து சேர்கிறது
மானம் மறைக்கக் கண்டுபிடிக்கப்பட்ட
ஆடம்பரம்
துண்டு விழும் பணத்தை
எதில் சரிக்கட்டுவதென்ற யோசனையானது
மழுப்பித் திணிக்கப்படுகிறது
கட்டைப் பைகளுக்குள்
வெளியே வரும்போது
பொறாமையோடு திரும்பிப்பார்க்க வைக்கின்றன
தினமொரு புத்தாடையுடுத்தும்
ஜவுளிக்கடை பொம்மைகள்

தேவை
உங்கள் இருப்பை மீறி
யாராவது ஏங்கினால்
உடனே விட்டுக்கொடுத்துவிடுங்கள்
கசியும் விழிநீரை
யாரும் அறியாதபடி
துடைத்துக் கொள்ள
சிறிது நேரமேனும்
சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்க
அருகில் கடக்கும்
பேருந்திலிருந்து வரும்
எதிர்பாராத சிறு புன்னகையைத்
தரிசிக்க
வயிற்றுவலியை முகபாவத்தில்
பிறரறியாவண்ணம்
மறைத்துக்கொள்ள
பழைய காதலை
பயணப் பொழுதுகளில் அசைபோட்டு
உயிர்த்திருக்க
தேவைப்படலாம்
அவர்களுக்கு ஒரு
ஜன்னல் இருக்கை
- கி. சரஸ்வதி

பானுரேகா
June 28, 2023💐அருமை
பானுரேகா
June 28, 2023💐💐
Gopi Kuppanna
July 4, 2023First two lines.. Is it iruppai or irukkai?
Editor
July 4, 2023இருப்பை – இருக்கையில் அமர்ந்திருத்தலைக் குறிக்கிறது.