தினந்தோறும் தேர்வுகள் – திணறும் மாணவர்கள்

நமது கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்று நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆம், கல்விமுறை மாறிக்கொண்டேதான் உள்ளது. ஆனால் நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, தற்போதைய கல்விமுறை என்பது, அதன் பொருளை மறந்து, தேர்வுகள், திறன்கள், வேலைவாய்ப்பு எனத் தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது.

அண்மையில், ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிட்ட கடிதம் ஒன்று தமிழ்நாடு தேர்வுகள் துறையிலிருந்து பள்ளிகளுக்கு வந்தது. அதில், தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அறிவித்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்காக பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். வெற்றிபெறுவோரில் 500 மாணவர்கள் மற்றும் 500‌ மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் இளநிலைப் பட்டம் முடிக்கும்வரை ஆண்டுதோறும் 10000 ரூபாய் வழங்கப்படும்.

அதாவது மீண்டும் புதிய கல்விக்கொள்கையின் ஒரு பகுதி நடைமுறைக்கு வருகிறது. திறன்கள் குறித்து மட்டுமே பேசுவதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020. நுழைவுத் தேர்வு வேண்டாம் என்கிறோம்; ஆனால் திறனறித் தேர்வுக்கு அவர்களைத் தயார் செய்யும்படி கூறுகிறோம். லட்சக்கணக்கான குழந்தைகள் படிக்கும் இடத்தில் வெறும் ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் எனில், சமவாய்ப்பு இதில் எங்கே இருக்கிறது எனும் கேள்வி எழுகிறது.

இதற்கு அடுத்ததாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விக்கான மாநிலத்  திட்ட இயக்குனரும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும் கூட்டாக ஒரு இணைச் செயல்முறைக்கான சுற்றறிக்கையை இம்மாதம் அனுப்பியுள்ளனர். அந்தச் சுற்றறிக்கையில், ‘மாநில மதிப்பீட்டுப் புலம்’ என்ற பெயரில் 6 முதல் 12 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (High Tech Lab) வழியாக வினாடி-வினா தேர்வுகளை நடத்த அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போதுதான் பல்வேறு மாவட்டங்களிலும் 6-12 வகுப்புகளுக்கு முதல் இடைப்பருவத் தேர்வுகள் நடந்துவருகின்றன. இன்றுதான், அதாவது ஆகஸ்ட் 12 அன்று மாலைதான் தேர்வுகள் முடிவடைகின்றன. அடுத்த மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, அதாவது ஆகஸ்டு 16 முதல் 29 வரை மாணவர்களுக்கு வினாடி-வினா தேர்வுகளை நடத்தி, அதைப் பதிவு செய்யும்படி வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பிவைத்துள்ளனர். ஒவ்வொரு வகுப்புக்கும் இரண்டு நாட்கள் தேர்வுகள் என்றாலும் ஆய்வகங்களில் மாணவர்களைப் பகுதி பகுதியாக அனுப்ப வேண்டியிருப்பதால், ஆசிரியர்களால் வகுப்புகளைக் கவனிக்கவோ பாடங்களை நடத்தவோ இயலவே இயலாது.

இந்தத் தேர்வுகள் முடிந்து அடுத்த சில நாட்களில், செப்டம்பரில், காலாண்டுத் தேர்வுகள் வந்துவிடுமே! ஒரு தேர்வு முடிந்த அடுத்த சில நாட்களில் மீண்டும் மீண்டும் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படுமென்றால், நமது கல்வியின் நோக்கம்தான் என்ன? குழந்தைகள் பள்ளிக்கு வருவதே தேர்வுகளை மட்டுமே எழுதிக்கொண்டிருப்பதற்கா? ஆசிரியர்கள் எதற்கு? பாடம் நடத்துவதற்கா அல்லது தேர்வுகள் நடத்துவதற்கா?

இந்த வினாடி-வினா தேர்வு நடைமுறையிலும் கொள்குறி வகை வினாக்கள்தான் இடம்பெறுகின்றன. எனில், ஆறாம் வகுப்பு முதலே நாம், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்கிறோம் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல அறிந்துகொள்ள முடிகிறது அல்லவா?

குறிப்பாக, இத்தகைய தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் கொள்குறி வகையாகவே இருக்கும். எந்தத் தேர்வு என்றாலும் பாடப்பொருள் அறிவை, கொள்குறி (multiple choice) வகை வினாக்களாகவே எதிர்கொள்ளும்படி மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள். நுழைவுத்தேர்வுகளை வன்முறை என்கிறோம். ஆனால் ஒவ்வொரு தேர்வும் நுழைவுத்தேர்வு மற்றும் போட்டித்தேர்வுகளின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்படுகிறது.

“கல்வி என்பது பள்ளியில்தான் தொடங்குகிறது என்று நினைப்பது நமது அறிவீனத்தையே காட்டுகிறது. அதேபோல அச்சிடப்பட்ட பாடங்களை ஒரு குழந்தையின்மீது திணித்து, அது அந்தக் குழந்தையின் மூளைக்குள் ஏறிவிட்டதா எனத் தேர்வுகள் மூலம் பரிசோதிப்பதும் கல்வி அல்ல. குழந்தைகளுக்கு நீங்கள் எதையும் கற்றுக்கொடுக்க முடியாது. அவர்களாகவே கற்று அறிவதற்கான சூழலை மட்டுமே உருவாக்க முடியும்” என்கிறார் மரியா மாண்டிசோரி.

ஆனால் நாம், நமது பள்ளிகளில் என்ன செய்துகொண்டுள்ளோம் தெரியுமா?

முதல் வகுப்பு முதல் ஆன்லைன் தேர்வு. எண்ணும் எழுத்தும் திட்டம் வகுப்பறைகளில் நடப்பது, அதன் நீட்சியாக குழந்தைகளுக்கு அலைபேசி செயலி வழியாகத் தேர்வு. ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வகுப்புகள் வரையிலும் தேர்வு, தேர்வு, தொடர்ந்து தேர்வுகள் மட்டுமே‌.

சில பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் வகுப்பறைகளில் பாடங்களைக் கற்றுத் தருவதும் தேர்வுகள் நடத்துவதும் நடைமுறையில் இருந்தாலும் தற்போது இருக்குமளவுக்கு குழந்தைகளுக்கு மன அழுத்தமோ பாடச் சுமைகளோ இருந்ததில்லை. பாடநூலில் உள்ள பாடங்களை நடத்துவதற்கான சூழலும் சுதந்திரமும் ஆசிரியர்களுக்கு இருந்தது.

அந்தந்தப் பாட ஆசிரியர்கள், தமது மாணவர்களின் சூழல் மற்றும் அவர்களின் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றையும் இன்னபிற சூழல்களையும் கருத்தில்கொண்டு, பாடங்களில் உள்ள வினாக்களை சிறு தேர்வுகளாக அவ்வப்போது நடத்துவார்கள். அதன் மதிப்பீட்டுக்குப் பிறகு, குறிப்பிட்ட மாணவர்களுக்கு எங்கெல்லாம் கவனம் தேவையோ, அங்கு சிறப்புக் கவனம் தருவார்கள்.

அதேபோல, பாடநூல்களும் இத்தனைக் கனமாகவோ குழப்பங்கள் நிறைந்ததாகவோ இருக்காது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறனையும் அன்றைய பாடநூல்கள் பெற்றிருந்தன. ஆனால் அதற்கு எதிர்மாறாக, தற்போதைய பாடநூல்களின் அளவும் அதீதப் பாடப்பொருள்களும் குழந்தைகள் கல்வியை வெறுப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருப்பதைக் குறித்து நாம் எங்காவது கவனம் கொள்கிறோமா?

கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களும் இது குறித்தான கள உண்மைகளை வெளியே சொல்வதில்லை; கல்வித்துறை அதிகாரிகளும் ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. உலகத் தரத்தில் கல்வி தருவதாகக் கூறி, போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு ஏதுவாகப் பாடநூல்களை வடிவமைக்கின்றனர், பாடநூல் குழு உறுப்பினர்கள்.

பாடநூல்களை வெறுக்கும் மனநிலைக்குச் தள்ளப்படும் குழந்தைகளை இங்கு  ஒவ்வொரு வகுப்பிலும் பார்க்கலாம். இவர்கள் எட்டாம் வகுப்பு வரை இலவசத் தேர்ச்சி பெற வைக்கப்படுகின்றனர். தடையில்லாத் தேர்ச்சியின் (No Detention Policy) மோசமான விளைவுகளால் குழந்தைகள் ஒன்பதாம் வகுப்பிலும்கூடத் தமிழ் எழுத்துகளைப் படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தாய்மொழியில் சரளமாகப் படிக்கத் தெரியாத ஒரு தலைமுறையைத்தான் இந்தக் கல்வி முறை உருவாக்கி வைத்துள்ளது.

ஆங்கில வழிக்கல்வி, அவர்களது கல்வி  வாழ்க்கையைப் பதம் பார்க்கும் அடுத்த கத்தி. ஆங்கிலத்தில் அடிப்படை வாசிப்பைக்கூடக் கற்றுத் தராமல், ஆங்கிலப் பாடத்தில் 100% தேர்ச்சி தரும் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் கொண்டுள்ள அற்புதமான கல்வித்துறை நம்முடையது. ஆம், ஒரு மொழியை மொழியாகவே கற்பிக்கத் தெரியாமல் செயல்படும்போது, மற்ற பாடங்களான அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் போன்ற பாடங்களில் உள்ள ஆங்கில அறிவை எப்படிக் கடத்த முடியும் என்ற கேள்வி நம்மிடையே இருந்தால், நாம் மாணவர்களுக்குத் துரோகம் இழைக்கமாட்டோம்.

எல்லாமே இங்கு ஆவணங்கள்தான். குழந்தைகளுக்கு வாசிக்கத் தெரிகிறதா? எழுதத் தெரிகிறதா? சிறு தேர்வு வைத்துள்ளீர்களா? யூனிட் டெஸ்ட் வைத்துள்ளீர்களா? மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களா? மதிப்பெண் குறைந்தால் அதற்குக் குறைதீர் கற்பித்தல் செய்கிறீர்களா? மெல்லக் கற்போர் பயிற்சி நடக்கிறதா? பள்ளி நூலகத்திலிருந்து புத்தகங்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதா?  ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படுகிறதா? இவை அனைத்தையும் எமிஸ் இணையதளத்தில் ஏற்றினாயா? இல்லையெனில் அதை உடனே செய்ய வேண்டும். இவைதான் இன்று அரசுப் பள்ளிகளில் நடக்கும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்.

அடுத்ததாக, வாரத்தேர்வு வைத்தீர்களா? மாதத் தேர்வு வைத்தீர்களா? சிறப்பு வகுப்புகள் வைத்தீர்களா, வைக்கவில்லையா? வைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை; ஆனால் தேர்ச்சி வீதம் குறையக் கூடாது. அவரவர் சூழலுக்கு ஏற்ப, சிறப்பு வகுப்புகள் நடத்துவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்துகொள்ளலாம். ஆனால் தேர்ச்சி சதவீதத்தில் கவனம் தேவை. எனில், பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தாமல் இருக்குமா? ஒரு கட்டத்தில் எதுவும் கற்றுக்கொள்ளாமலேயே, குழந்தைகள் தேர்வுகளை எதிர்கொள்ள ஆரம்பித்துவிடும் சூழல்தான் தற்போது நிலவுகிறது.

இவை மட்டுமா? உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (High Tech lab) வழியாக ஒவ்வொரு மாதமும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வுகள். அனைத்தும் கொள்குறி வகை வினாக்கள் எனில், மாணவன் எப்போதுதான் சிந்தனை செய்வது? சொந்த நடையில் எழுதுவது? எப்போது தான் கற்ற கல்வி மூலம் இந்தச் சமூகத்துக்காக வினையாற்றுவது? என்பன போன்ற சந்தேகங்களுக்கெல்லாம் நம்மிடம்  பதிலே இல்லை. கல்வித்துறையிலும் சந்தேகமே ஏற்படுவதில்லை என்பதுதான் நம்முடைய ஆகப் பெரிய கவலை.

எப்போது வேண்டுமானாலும், நாளொன்றுக்கு  குறைந்தபட்சம் சுமார் மூன்று ஆணைகளாவது பள்ளிகளுக்கு வருகின்றன. மாணவர் எண்ணிக்கை, கணக்கீடுகள், போட்டி அறிவிப்புகள், பயிற்சிகள், எமிஸ் பதிவேற்றங்கள், மாணவர்கள் விவரங்கள், கல்வி உதவித் தொகைகள் என, தொடர்ச்சியான பணிகள். இவை அனைத்தும் இயல்பான வகுப்பறைகளை முற்றிலும் பாதிக்கின்றன. இவற்றுடன் மாணவர்களது உடல்நலக் குறைவு, அவர்கள் விடுப்பு எடுப்பது, உறவினர் வீடுகளுக்கு செல்வது, உள்ளூர்ப் பண்டிகைகள், ஆசிரியர்கள் உடல் நலமின்மை, விடுப்பு எடுப்பது, பயிற்சிக்குச் செல்வது என, இப்படிப் பலவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமாகிறது.

தற்காலத்தில் அலைபேசிகளின் ஆதிக்கம், திரைப்படங்கள், சமூக ஊடகங்கள், போதைப்பொருள் பழக்கங்கள், இப்படி இன்னும் சில கவன ஈர்ப்பு விஷயங்களைத் தாண்டி மாணவர்களைக் கல்விக்குள் அழைத்து வரவேண்டிய தேவை உள்ளது.

ஒரு கல்வி ஆண்டில் மாணவர் – ஆசிரியர்  இருவரும் இணைந்து, எத்தனை நாட்கள் கல்விச் செயல்பாட்டில் ஈடுபடுகின்றனர் என்று கணக்கிட்டால், நம்முடைய போதாமை முழுமையாக வெளிப்படும்.

அரைகுறைக் கல்வியைக்கூடப் பெறாமலேதான் மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடிக்கின்றனர். அனைவரும் தேர்ச்சி என்ற சுலோகத்தை மட்டும்தான் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். அது அல்லவே கல்வி. அதனால் எந்தப் பயனும் கிடையாது என்பதை, குழந்தைகள் உயர்கல்வி செல்லும்போதுதான் உணர்கின்றனர். பள்ளிக் கல்வியை முடித்தபிறகும் பல வகையான போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், நீட், JEE உள்ளிட்ட பலவும் இதில் அடங்கும்.

குழந்தைகள் பாறைகளாக மாறிப்போகும் மனநிலையில், இறுகிப்போய்தான் வாழ்கின்றனர். அவர்களது மாணவப் பருவம் மிகவும் வறட்சியாகவே இருக்கிறது. தேர்வுகளை வெறுக்கும் குழந்தைகளது மனநிலை காக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சியில் கல்வித்துறை ஈடுபடவேண்டும். குழந்தைகளது மனநிலை மிகவும் முக்கியமானது என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகள் முழு மனதோடும் ஆர்வத்தோடும் கற்றலில் ஈடுபடும் சூழலையும் மனநிலையையும் உருவாக்க வேண்டியதே இன்றைய முக்கிய மற்றும் அவசரத் தேவை.

  • சு. உமாமகேஸ்வரி
    கல்விச் செயற்பாட்டாளர்

Comments (2)


YozenBalki

நூற்றுக்கு நூறு உண்மை! கல்வி என்பது மாணவர்களின் தனிப்பட்ட உள்ளார்ந்த திறமையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக செயல்பட வேண்டும். ஆனால் இன்றைய கல்விமுறை ஏதோ பாடத்திட்டம் பற்றிய அடுக்கடுக்கான புத்தகங்களை தேவை தேவையின்மை என்பதை கருத்தில் கொள்ளாமல் ஒரு வகுப்பில் உள்ள எல்லா குழந்தைகளின் தலையிலும் திணிக்கிற வறட்டுத் தன்மை உடையதாக இருக்கிறது. ஒரு பாடத்தில் குழந்தைகள் கேள்வி கேட்டு அதற்கு ஆசிரியர்கள் பதில் சொல்லக்கூடிய முறைகள் இங்கு குறைவு, அல்லது அப்படி இல்லவே இல்லை எனலாம். இது நான் ஒரு உளவியல் துறை சார்ந்தவன் என்ற வகையில் நம் நாட்டு குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு மனச்சுமையை ஏற்படுத்தும் என்பதை அறிவேன். அதைத் தாண்டி எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அது என்னவெனின், இத்தனை கடுமையான பாடத்திட்டங்களை குழந்தைகள் தலையில் திணித்தும் முதல் 300 உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட இந்திய பல்கலைக்கழகங்கள் காணப்படாதது, தேர்ச்சி பெறாதது ஏன்? இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி அமைப்பு என்று கருதப்படுகின்ற IIT கோரக்பூரே 340 வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆக நமது வறட்டுத்தனமான மனப்பாட கல்வி முறையை ஒழித்துக் கட்ட வேண்டிய முக்கியமான சூழலில் நிற்கிறோம். நம் நாட்டு குழந்தைகளின் தலையில் உள்ள சுமையை இறக்கி வைக்க வேண்டும். பின்லாந்து போன்ற நாடுகளின் சுமையற்ற முதன்மை கல்விமுறையை இங்கு கொண்டு வர வேண்டும். கட்டுரையாளர் மிக அற்புதமாக எழுதி இருக்கிறார் அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

YozenBalki

இது ஐஐடி கவுகாத்தியின் உண்மையான நிலைமை.
உலகளாவிய முதல் 300 பல்கலைக்கழகங்களில் 364 வது இடத்திற்கு அது போய் இருக்கிறது!
ஆக இதற்கு கீழ் இருக்கிற என் ஐ டி, மற்ற பிற பல்கலைக்கழகங்களை பற்றி சொல்ல வேண்டாம்! அதற்கும் கீழே இருக்கிற கல்லூரிகள் பள்ளிக்கூடங்களின் கதி என்ன?
உண்மை இவ்வாறு இருக்க குழந்தைகள் மீது வீணான புத்தக சுமை எதற்கு? நமது கல்வி முறையில் எங்கோ மிகப்பெரிய தவறு இருக்கிறது அதை நாம் சீர்திருத்தம் செய்தே ஆக வேண்டும்.

https://m.timesofindia.com/city/guwahati/iit-g-jumps-20-spots-to-rank-364th-in-qs-world-university-rankings/amp_articleshow/101354234.cms

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *