நாடகம்

காட்சி 1

காலம்: 1921ஆம் ஆண்டில் ஒருநாள் காலை
களம்: திருவல்லிக்கேணி – பாரதியார் வீடு
பாத்திரங்கள்: நீலகண்டர், சகுந்தலா பாரதி, செல்லம்மா பாரதி மற்றும் பாரதியார்

வீட்டு முற்றத்தில் ஒரு பதின்ம வயதுப் பெண் சத்தமாகத் ‘திருக்குறள்’ படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் பாரதியாரின் இரண்டாவது புதல்வி சகுந்தலா.

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்

யாசகம் பெற்றுத்தான் உயிர் தரிக்க வேண்டியவாறு இந்த உலக மக்களுக்கு இழிவு இருக்குமானால், இந்த உலகத்தைப் படைத்தவனும் கெட்டு ஒழியட்டும்.”

(வாசலில் குரல் கேட்கிறது)

குரல்: “அண்ணா.. பாரதி அண்ணா..”

சகுந்தலா எழுந்து வாசலுக்கு வருகிறாள். 30 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் நிற்கிறார். தாடி அடர்ந்த முகம், அழுக்கான ஆடை, ஆங்காங்கே சில கந்தல்கள். கண்களில் சகுந்தலாவைத் தெரிந்துகொண்டதன் காரணமாக அன்பு கனிந்து நிற்கிறது.

சகுந்தலா: “அப்பா இல்லையே.. வெளியே போயிருக்கிறார்..”

வாசலில் நிற்கும் மனிதர்: “பாப்பா.. நீ சகுந்தலாதானே?! என்னைத் தெரியவில்லையா..? நான் நீலகண்டன்.. நீலகண்ட பிரம்மச்சாரி.. பாண்டிச்சேரியில் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறேன்.”

சகுந்தலா: “சரியாக நினைவுக்கு வரவில்லை மாமா.. உள்ளே வாருங்கள். அம்மாவைக் கூப்பிடுகிறேன். அம்மா.. அம்மா..”

நீலகண்டர் உள்ளே வருகிறார். வீட்டின் உள்ளிருந்து பாரதியாரின் மனைவி செல்லம்மா வருகிறார்.

நீலகண்டர்: “நமஸ்காரம் மன்னி.. நான் நீலகண்டன்.. தெரியறதா..?”

செல்லம்மா: “ஏன் தெரியவில்லை..? வாருங்கோ நீலகண்டன்.. இந்த நாற்காலியில் சித்த உட்காருங்கோ.. உங்கள் அண்ணா வெளியில் போயிருக்கிறார்.. இருங்கோ.. வந்துவிடுவார்.. குடிக்க ஜலம் கொண்டு வருகிறேன்.”

சமையல் உள்ளுக்குள் சென்று தண்ணீர் கொண்டுவந்து தருகிறார் செல்லம்மா. நீலகண்டர் குடித்து முடிக்கிறார்.

செல்லம்மா: “மிகவும் இளைத்துவிட்டாற்போல் காண்கிறது..”

நீலகண்டர்: “கொஞ்சம் அலைச்சல்..”

செல்லம்மா: “ஜெயிலில் இருந்து எப்போ வெளியே வந்தேள்..?”

நீலகண்டர்: “இரண்டு வருசம் ஆச்சு..”

செல்லம்மா: “இந்த ஊருக்கு எப்போ வந்தேள்..?”

நீலகண்டர்: “ஒரு கெழமை இருக்கும்.. இன்னைக்குத்தான் அண்ணா வீட்ட கண்டுபிடிச்சேன்.. பாப்பாவுக்கு என்னை ஞாபகம் வரலை போல..”

செல்லம்மா: “அப்போ அவ சின்ன பொண்ணு. அதனால ஞாபகம் இருக்காது..” (சகுந்தலாவைப் பார்த்து) “சகுந்தலா, இவர் நீலகண்டர்.. நீலகண்ட பிரம்மச்சாரி.. தீவிர தேசபக்தர்.. அப்பாவோட சிநேகிதர்.. பத்து வருசத்திற்கு முன்னே நாம பாண்டிச்சேரில இருக்கச்சே, திருநெல்வேலி ஆஷ் கலெக்டர் கொலை நடந்த வழக்கிலே எட்டு வருசம் ஜெயில்ல இருந்தவர்..”

(வாசலில் சத்தம் கேட்கிறது. பாரதியார் பாட்டொன்றைப் பாடியவாறே உள்ளே வருகிறார்)

பாரதியார்: “பாரத சமுதாயம் வாழ்கவே.. ஜய ஜய ஜய பாரத சமுதாயம் வாழ்கவே..”

நீலகண்டர்: (எழுந்தவாறே) “அண்ணா..”

பாரதியார்: “யார்..?”

நீலகண்டர்: “நீலகண்டன் அண்ணா.. என்னைத் தெரியலையா..?”

பாரதியார்: “ஆஹா..! வாரும் நீலகண்டன்.. எப்போ வந்தீர்..?”

நீலகண்டர்: “சித்த நேரம் முன்னேதான்..”

பாரதியார் : “ஜெயில்ல ரொம்ப சிரமப்படட்டீர் போல.. உடம்பு துரும்பாயிட்டுதே ஓய்..”

நீலகண்டர் : “கொஞ்சம் படுத்தினார்கள்தான்.. நானும் விட்டதில்லை. அரசியல் கைதிகளுக்குண்டான மரியாதையை ஜெயில்ல தொடர்ந்து கேட்டதினால, என்னைக் கலகக்காரனாவே நடத்துனாங்க..”

பாரதியார் : “அதல்லவோ உம்மோட பெருமை.. நீலகண்டன்னாலே சிம்மம் அல்லவா..?”
(செல்லம்மாவைப் பார்த்து) “செல்லம்மா.. சாப்பாடு தயார்தானே?” (கனவில் இருப்பவர் போன்ற தோற்றத்தில் கண்களை அகல விரித்து, நீலகண்டரிடம்) “ஓய் நீலகண்டன்.. ருசிய தேசத்து சேதி ஒன்னு தெரியுமோ..? அங்கே போல்ஸ்விக்-ன்னு ஒரு கட்சியாம். மக்கள் ராஜ்ஜியம் கொண்டு வந்திருக்கிறார்களாம். அங்கே இனிமேல் பசி, பட்டினி எதுவுமிராதாம்.. அதுபோல சமுதாயம் இந்தப் புராதன பாரத தேசத்திற்கு வந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்..?”

நீலகண்டன் (குறுக்கிட்டு): “அண்ணா.. ஒரு நாலணா வேண்டும்..”

பாரதியார்: “ஏன்..?”

நீலகண்டன்: “சாப்பிட்டு முழுதாக ஒன்றரை நாள் ஆச்சு.. பசியில் நீங்கள் பேசுவதுகூட சரியாகக் காதில் விழவில்லை அண்ணா. நாலணா தந்தீர்கள் என்றால் ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வருவேன்..”

பாரதியார்: “பாண்டியா.. இதென்ன கொடுமை..!! செல்லம்மா.. நம்ம வீட்டில் ஆகாரம் ஏதேனும்..?”

செல்லம்மா மௌனமாக உள்ளே சென்று திரும்பி வந்து, நீலகண்டரிடம்

செல்லம்மா: “இந்தாருங்கள்.. போய் ஏதேனும் ஆகாரம் முடித்து வாருங்கள்..”

நீலகண்டர்: “வந்தனம் மன்னி..”

(நீலகண்டர் வெளியே நடக்கிறார்)

பாரதியார்: “அம்மா.. காளி.. உன் பக்தர்கள் நிலையைப் பார்.. இந்த நாட்டில் பெரிய புரட்சியைக் கொண்டுவருவதற்காக சிறையேற்ற மனிதர், பட்டினியில் அலைவதென்றால் நீ இருக்கிறாய் என்பதை எப்படி நம்புவது..?”
(பாடுகிறார்)

“இனியொரு விதிசெய்வோம் – அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக் குணவிலையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்”

(திரை விழுகிறது)

(நாளை தொடரும்)

  • இரா.கோமதிசங்கர் – திருநெல்வேலி

Comments (23)


சுதாகரன்
சுதாகரன்
August 15, 2023

யதார்த்தத்தின் முதல் எளிய படி. தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 15, 2023

நன்றி சுதாகரன்.

Anita Srikanth
Anita Srikanth
August 15, 2023

படிக்க படிக்க நாடகம் கண்ணு முன்னாடி தெரியுது அண்ணா….
பாரதியாரா கண்ணு முன்னாடி நீங்க தான் வரீங்க…
செம ண்ணா…
காத்திருக்கேன்…படிக்க

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 15, 2023

நன்றி அனிதா..

தமிழன் காசி
தமிழன் காசி
August 15, 2023

உண்மையில் கண்முன்னே காட்சியாக இருந்தது… நானே திருவல்லிக்கேணி வீட்டு வாசலில் உட்கார்ந்து இதை எல்லாம்பார்ததுபோல இருக்கு…தோழர் வாழ்த்துகள்

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 15, 2023

மிக்க நன்றி தோழர்.. உங்கள் பாராட்டு உற்சாகம் தருகிறது. தொடர்ந்து படித்து விமர்சனம் தாருங்கள்.

பா விமலா தேவி
பா விமலா தேவி
August 15, 2023

பாரதி கதை மூலம் தான் உங்கள் நட்பு கிடைத்தது. இதோ இப்போது கூட உங்களால் நாடக வடிவில் வரும் கதையும் படிக்க ஆர்வமூட்டும் வகையில் உள்ளது. தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்-…..

தொடரட்டும் உங்கள் பணி…

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 15, 2023

மிக்க நன்றி விமலா தேவி.. தொடர்ந்து வாசித்து விமர்சியுங்கள்..

பானுரேகா
பானுரேகா
August 15, 2023

அருமைங்க சார் .படிக்கும்போதே காட்சி கண் முன்னே விரிகிறது. எனக்கு ஒரு சந்தேகம் ஏன் பாரதியின் வீட்டில் சாப்பிடுங்கள் என்று சொல்லவில்லை?

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 15, 2023

நன்றி மேடம்..
செல்லம்மாவிடம் பாரதி சாப்பாடு பற்றி கேட்க, அவர் மௌனம் காத்து பின் நாலணா கொடுக்கிறார். காரணம் பாரதி வீட்டிலும் உபசரிக்கும் நிலை இல்லை என்பது தான்.

N.Paneer Selvam
N.Paneer Selvam
August 15, 2023

வாழ்த்துகள்..தங்கள் எழுத்துப்பணி சிறக்க அந்த பாரதியின் பராசக்தி அருள்புரிவாள்.

பாரதியார் பாண்டியா ..இதென்னக் கொடும்சி என்று சொல்வதாக எழுதியுள்ளீர்கள்.. யார் அந்த பாண்டியா?

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 15, 2023

நன்றி தோழர்..
பாரதியார் உணர்ச்சி வேகத்தில் பேசும் போது முன்னால் இருக்கும் நண்பர்களை அப்படித்தான் அழைப்பார் என்று குறிப்புகள் உள்ளன.

பழனியப்பன் சுந்தரம்
பழனியப்பன் சுந்தரம்
August 16, 2023

அருமை ஐயா,
கதை நடக்கும் காலத்தின் கதாபாத்திரங்களுடன் நானும் ஒருவனாக உணர்வு,
தொடருங்கள் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
– பழனியப்பன் சுந்தரம்

பழனியப்பன் சுந்தரம்
பழனியப்பன் சுந்தரம்
August 16, 2023

அருமை ஐயா,
புரட்சியை விதைத்தவர்கள் எல்லாம் கண்ட பட்டினியும், உயிர் கொடையும், தளராத மணமும், இப்போது இருக்கும் பாராதத்தை உண்டாக்கி இருக்கின்றது, படிக்கும் போது ஒருவித சிலிர்ப்பும், உணவில்லா வீட்டில் புரட்சி கவிஞனுடன் உழன்று கொண்டிருந்த இருந்த செல்லம்மாவே அந்த காளியாய் கவனிக்கின்றேன்,
தொடருங்கள் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
– பழனியப்பன் சுந்தரம்

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 16, 2023

மிக்க நன்றி.

S JEYAKUMAR
S JEYAKUMAR
August 16, 2023

அருமையான அனுபவம்.வாழ்த்துக்கள் ஐயா.தொடர்ந்து படிக்கிறேன்.

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 16, 2023

மிக்க நன்றி

M. Chandrasekaran
M. Chandrasekaran
August 16, 2023

மிக அற்புதமாக உள்ளது உங்கள் நாடக வரிகள். கண்களில் நீர் சேரப்படித்தேன். மகா கவிஞன் கண்முன் நிறுத்திய பதிவு.

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 16, 2023

மிக்க நன்றி.

Rajee Arumugam

அருமை அப்பா.. நாடக வடிவில் புரட்சியை தருவது என்னையும் அந்த காலத்திற்கு அழைத்து செல்வதாக உள்ளது. வாழ்த்துக்கள் அப்பா..

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 16, 2023

நன்றி ராஜி

ஹமீது சிராஜூதீன்
ஹமீது சிராஜூதீன்
August 17, 2023

இன்று தான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பம் அருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் சார்.

உமாமகேஸ்வரி.சு
உமாமகேஸ்வரி.சு
August 22, 2023

வாசிக்க வாசிக்க காட்சிகள் கண் முன்னே நிற்கிறது. அருமையான தொடர். எத்தனை மனிதர்கள் போராடித்தந்த நாடு இது.. இப்போது எப்படி கொள்ளைக்கூட்டத்தினரிடம் சிக்கித் தவிக்கிறது. உரையாடல் வடிவில் இன்னும் சிறப்புங்க சகோதரரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *