காலை உணவுத்திட்டத்தில் பாகுபாடு?!

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. உணவு மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருப்பதாகவும் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் திட்டத்துக்கு நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

கோதுமை ரவா உப்புமாவுடன் காய்கறி, பருப்பு சாம்பார்; சேமியா காய்கறிக் கிச்சடி, வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார், அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், சோள காய்கறிக் கிச்சடி, ரவா கேசரி என, திங்கள் முதல் வெள்ளி வரை தரமாகவும் சுவையாகவும் பாதுகாப்பான முறையிலும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கப்படுவது போற்றத்தக்கது.

அதுபோக, பிஞ்சுக் குழந்தைகளின் காலைப் பசியாற்றும் நோக்கில் இதற்கு வித்திட்ட தமிழக முதலமைச்சர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அரசுக்குக் கூடுதல் சுமை மிகுந்த திட்டம்தான் எனினும், அறிவுப்பசியுடன் வயிற்றுப்பசி போக்குவதும் ஓர் நல்லாட்சியின் இன்றியமையாத கடமை என்பதை உணர்ந்து செயல்படும் முதல்வரின் சிந்தனையை அனைத்துத் தரப்பு மக்களும் நிச்சயம் வாழ்த்தி வரவேற்பர். இந்த ஆட்சியின் தனித்துவம் மிக்க திட்டம் இது.

அதேவேளையில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்புகள் படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டம் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஒரு புள்ளி விவரப்படி 24310 அரசுத் தொடக்கப் பள்ளிகளுடன் 7024 அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் ஐந்தாம் வகுப்பு முடிய உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பசிப்பிணி போக்க உள்ளது அறியத்தக்கது. எட்டு வகுப்பு முடிய உள்ள உயர் தொடக்கப்பள்ளிகளாக விளங்கும் நடுநிலைப் பள்ளிகளில், தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் காலை உணவு என்பதை மேலும் சற்றுப் பெரிய மனத்துடன் அணுகி, அரசின்மீது தூக்கி வைக்கப்படும் பாரத்தைப் பொறுத்துக்கொண்டு ஒரே வளாகத்தில் பயிலும் 6,7,8 வகுப்புக் குழந்தைகளும் பயனுறத்தக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதுடன், உரிய உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது உடனடித் தேவையாக இருக்கிறது.

பிறரைப் பார்க்கவைத்து உணவு உண்ணும் வழக்கம் தமிழர் பண்பாட்டில் என்றும் இருந்ததில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும். அந்த வகையில், தம் பள்ளியில் படிக்கும் தம்பி, தங்கைகள் அரசின் ருசியான வகைவகையான காலை உணவு உண்பதை ஒவ்வொரு நாளும் நேரில் கண்டு, தமக்கு இதுபோன்ற ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று ஏங்கும் மனத்தைக் கல்வியால் ஈடுகட்டுவது என்பது மிகவும் சிரமமான, சிக்கலான காரியமாகும். ஆசிரியர்களாலும் இதனைச் சரிசெய்தல் என்பது இயலாத ஒன்று.

ஆகவே, அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் தொடக்க வகுப்புகளுக்குரிய குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், ஏனைய உயர் தொடக்க வகுப்புகளில் கல்வி பயின்று வரும் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கும் அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல் மனிதாபிமானத்துடன் மாணவர் மற்றும் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு எவ்வளவு இயலுமோ அவ்வளவு விரைவில் இக் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி நீட்டித்துச் செயல்படுத்துதல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

போலவே, அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளும் இந்தத் திட்டத்தில் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மதிய உணவுத் திட்டத்தைக் காமராஜர் அறிவித்தபோது தொடங்கி, அதனைச் சத்துணவுத் திட்டமாக எம்.ஜி.ஆர். மாற்றியபோதும், முட்டை மற்றும் தானியச் சிற்றுண்டி வகைகளைக் கலைஞர் இந்தத் திட்டத்தில் சேர்த்தபோதும், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்கிடையே பாகுபாடு எதுவும் காட்டப்படவில்லை.

பிற திட்டங்களெல்லாம் அரசுப்பள்ளிகளைப் போலவே அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்கும் செயல்படுத்தப்படும்போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டபோது, அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகள் புறக்கணிக்கப்பட்டார்கள். தொடர்ந்து இப்போது காலை உணவுத் திட்டத்திலும் அவர்கள் கைவிடப்பட்டுள்ளார்கள். மதிய உணவு உண்ணும் அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம் மட்டும் மறுக்கப்படுவது அறமன்று என்கிறார்கள் அந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பெற்றோர்களும்.

மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளே பெரும்பாலும் பயில்கிறார்கள். குறிப்பாக, அரசுப்பள்ளிகள் அருகில் இல்லாத கிராமப் பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு, அந்தப் பகுதியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளிகளே இருக்கும் ஒரே வாய்ப்பு. மிகச் சொற்ப அளவிலான நகர்ப்புறப் பள்ளிகளை மனத்தில் கொண்டு ஒட்டுமொத்தமாக அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களைப் புறக்கணிப்பது சரியான நடைமுறையாக இருக்காது.

எனவே, தமிழக அரசு தூரிதமாகச் செயல்பட்டு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் நடுநிலை வகுப்புக் குழந்தைகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எடுக்கும் என நம்புவோம்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

  • முனைவர் மணி கணேசன்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *