காட்சி 17

காலம் : 1921 செப்டம்பர் 11ஆம் நாள் முற்பகல்
இடம் : இந்த வரலாற்றின் ஆரம்பக் காட்சியில் நாம் பார்த்த திருவல்லிக்கேணி பாரதியார் வீடு
பாத்திரங்கள் : பாரதியார், செல்லம்மா, சகுந்தலா, வ.வே.சு.அய்யர், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, பரலி நெல்லையப்பர், குவளை கிருஷ்ணமாச்சாரி, ஹரிஹரசர்மா, வைத்தியர், இன்னும் சிலர்.

(பாரதி கண்மூடிப் படுத்திருக்கிறார். பக்கத்தில் செல்லம்மாவும் சகுந்தலாவும் இருக்கிறார்கள். நீலகண்டரும் குவளை கிருஷ்ணமாச்சாரியும் அருகில் நின்றுகொண்டிருக்கிறார்கள். வாசலில் சத்தம் கேட்கிறது. பலர் உள்ளே வரும் சலசலப்பில் செல்லம்மாவும் சகுந்தலாவும் எழுந்து வாசலைப் பார்க்கிறார்கள்.
முதலில் வ.வே.சு.அய்யர் உள்ளே வர, சில போலீஸ் ஜவான்கள் பின்னால் வருகிறார்கள்
)

செல்லம்மா : வாருங்கள் சுவாமி, உங்கள் சிநேகிதரைப் பாருங்கோ. பயமாக இருக்கிறது சுவாமி.

வ.வே.சு.ஐயர் : பயப்பட வேண்டாம் செல்லம்மா. பாரதி குணமாகிவிடுவார். ஆகாரம் ஏதேனும் பண்ணினாரா..?

செல்லம்மா : காலையில் சிறிது கஞ்சி மட்டும் குடிச்சார். வைத்தியரை அழைக்க ஹரி போயிருக்கிறார்.

வ.வே.சு.ஐயர் : (பாரதியின் பக்கத்தில் அமர்ந்து) பாரதி.. பாரதி..

பாரதியார் : (மெதுவாக கண்விழித்து) யார்? ஐயரா..? வாரும்..

வ.வே.சு.ஐயர் : எப்படி இருக்கிறீர்..?

பாரதியார் : ஒன்றுமில்லை ஐயரே, வயிற்றுக் கடுப்பு இருக்கிறது; களைப்பாகவும் இருக்கிறது. சரியாகிவிடும். (சுற்றுமுற்றும் பார்க்கிறார். போலீஸ் ஜவான்கள் கண்ணில் பட) செல்லம்மா இந்த ஜவான்கள் நம் வீட்டுக்கு ஏன் வந்திருக்கிறார்கள்..?

வ.வே.சு.ஐயர் : அவர்கள் என்கூட வந்தார்கள். என்னைப் போலீஸ் நிலையம் அழைத்துப் போகிறார்கள். போகும் வழியில் உம்மைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்துவிட்டேன்.

செல்லம்மா : என்ன விஷயம் சுவாமி?

வ.வே.சு.ஐயர் : ‘தேசபக்தன்’ பத்திரிகையில் ஒரு வியாசம் வந்திருந்தது. அது ராஜ துவேசத்தைக் கொண்டிருக்கிறது என்று என்மீது வாரண்ட்டு. நான் ‘தேசபக்தன்’ ஆசிரியன் என்பதால், என்னை அழைத்துப் போகிறார்கள். அது இருக்கட்டும்.. (பாரதியைப் பார்த்து)
பாரதி.. நான் போய்வருகிறேன். உடம்பைக் கவனித்துக்கொள்ளும். அசட்டையாக இராமல் வைத்தியர் தரும் மருந்தைச் சாப்பிடும்.. வரட்டுமா..?

பாரதியார் : (வ.வே.சு. அய்யரின் கரத்தைச் சிறிது பற்றி, பின் விடுகிறார்) சரி அய்யரே.. விசாரணை முடிந்ததும் வாருங்கள்.

வ.வே.சு.அய்யர் : (எல்லாரையும் கும்பிட்டுக்கொள்கிறார். நீலகண்டரையும் கும்பிட்டுக்கொண்டே) நல்லது.. வருகிறேன்..
(வ.வே.சு.அய்யரும் அவருடன் வந்தவர்களும் சென்றுவிடுகிறார்கள்)

சகுந்தலா : (குவளையில் கஞ்சியுடன்) அப்பா.. இன்னும் கொஞ்சம் கஞ்சி தரட்டுமா..? (பாரதி தலையாட்ட, சகுந்தலா கஞ்சியைப் புகட்டுகிறார். அப்போது வைத்தியருடன் ஹரிஹர சர்மாவும் வருகிறார்)

வைத்தியர் : (பாரதியிடம் நெருங்கி) பாரதி.. எப்படி இருக்கிறீர்? (கேட்டுக்கொண்டே பாரதியின் மணிக்கட்டைப் பிடித்து நாடி பார்க்கத் தொடங்க)

பாரதியார் : (கையை உதற முற்படுகிறார். பலம் இல்லாததால் பெருமூச்சு விடுகிறார்) எனக்கு என்ன? நான் நன்றாகத்தான் இருக்கிறேன். செல்லம்மா.. இது என்ன, வைத்தியரை அழைத்தாயா? ஏன் என்னை இப்படித் தொந்தரவு செய்கிறீர்கள்? என்னை விட்டுவிடுங்கள்; எனக்கு ஒன்றுமில்லை.

வைத்தியர் : சரிதான் பாரதி, உமக்கு ஒன்றுமில்லைதான். நான் தரும் மருந்தை மட்டும் சாப்பிட்டுவிடுங்கள்; உமது களைப்பெல்லாம் போய்விடும். (செல்லம்மாவிடம் மருந்துப் பொட்டலங்களைக் கொடுத்தவாறே) இந்த மருந்தை இரண்டு மணிக்கொரு தடவை கொடுங்கள். நாளைக்கு வந்து பார்க்கிறேன். தொடர்ந்து கஞ்சியே கொடுத்து வாருங்கள்.

(பாரதி முனகுவதும் மருந்தை உட்கொள்ள மறுப்பதும் சகுந்தலா அவரைக் கெஞ்சியே மருந்தையும் கஞ்சியும் கொடுப்பதாகப் பகல் பொழுது கடந்து மாலை வருகிறது)

செல்லம்மா : பாப்பா.. விளக்கேற்றிவிடம்மா..

(சகுந்தலா விளக்கேற்றுகிறாள்)

பாரதியார் : (முன்னிரவில் கண்விழித்து) நீலகண்டரே, ஹரிஹரனும் நீங்களும் பக்கத்தில் வாருங்கள். (பக்கத்தில் வந்து அமர்ந்துகொள்கிறார்கள்) இப்போ கொஞ்சம் பரவாயில்லை.
ஆப்கானிஸ்தானத்து மன்னன் அமானுல்லாகான் பற்றி ஒரு வியாசம் மனத்தில் வருகிறது. அதை எழுதி சுதேசமித்திரனுக்கு அனுப்பவேண்டும்.

நீலகண்டர் : சரி, செய்யலாம். உங்களுக்குக் கொஞ்சம் தெம்பு வரட்டும்.

பாரதியார் : இப்போ தெம்பாகத்தான் இருக்கிறேன். அமானுல்லாகான் யார் தெரியுமா..? உலக யுத்தத்தில் ஜெர்மனிப் பக்கம் இருந்தவன். இப்போ வெள்ளைக்காரர்கள் யுத்தத்தில் ஜெயித்திருப்பதால், அவனை அவதூறு பண்ணிக்கொண்டு வருகிறார்கள். (மூச்சுவிடத் திணறுகிறார்)

ஹரிஹர சர்மா : அமைதியாக இருங்கள், பிறகு பேசலாம். சகுந்தலா இங்கே வா. அப்பாவுக்குக் கொஞ்சம் தீர்த்தம் கொடேன்..

செல்லம்மா : மருந்து கொடுக்கும் நேரம்தான். பாப்பா மருந்தும் கஞ்சியும் கொடுத்துவிடு.

(சகுந்தலா மருந்து கொடுக்க முயல, பாரதி சாப்பிட மறுக்கிறார். சகுந்தலா வற்புறுத்திப் புகட்ட, மருந்து பாதி இறங்கியும் இறங்காமலும் போகிறது)

பாரதியார் : எனக்கு ஒன்றுமில்லை, விடுங்கள்…

(படுத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொள்கிறார். பரலி நெல்லையப்பரும் சுதேந்திரநாத் ஆர்யாவும் வருகிறார்கள். பாரதியாரோடு இருந்த நினைவுகளைப் பேசிக்கொள்கிறார்கள். நள்ளிரவு கடந்த பின்னர் பாரதியார் சிந்திப்பதை நிறுத்திக்கொள்கிறார். மறுநாள் காலையில் பாரதியாருக்கு இறுதிச் சடங்குகள் செய்வது பற்றி யோசிக்கிறார்கள்.)

காலம் : 1921 செப்டம்பர் 12ஆம் நாள் காலை

சகுந்தலா : (செல்லம்மாவிடம்) அக்காவுக்குச் சொல்லணுமே அம்மா.. அக்காவும் அத்திம்பேரும் வந்துருவாங்களா..?

குவளை : நானும் ஹரிஹரனும் போய் எல்லாருக்கும் தந்தி கொடுத்துட்டோம். ஆனா அவா எல்லோரும் இன்னைக்கே வந்துட முடியாதே..

வந்திருந்தவர்களில் ஒருவர் : எல்லாரும் வரவரைக்கும் காத்திருக்க முடியுமோ ஓய்..? வந்தவாளை வச்சுக் காரியங்களை செய்ய ஆரம்பிச்சுடணும்.

நீலகண்டர் : அண்ணாவோட சென்னை சிநேகிதர்களாவது வரவேண்டாமோ.?

பரலி நெல்லையப்பர் : பத்திரிகைச் செய்திகூட இனிமேல்தான் வரணும். காத்திருந்து செய்யலாமா..?

வந்திருந்தவர்களில் இன்னொருவர் : சம்பிரதாயப்படி இறந்த நாளிலேயே காரியங்களைச் செய்யணும். அஸ்தமனம் வரை போகக் கூடாது.

மீண்டும் முதல் நபர் : வருகிறவர்கள் வரட்டும்.. நாம ஆரம்பித்து விடலாம்.

இரண்டாமவர் : சரி.. பாரதிக்குக் கிரியைகள் யார் செய்யறது..? தம்பி நீலகண்டர், உன்மேல் அவருக்கு ரொம்பப் பிரியம் அல்லவா..? பாரதிக்கு ஈமக் கிரியைகள் நீ செய்யலாமே..?

நீலகண்டர் : என்ன..! நானா..? என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சடங்குகளில் எல்லாம் சிறிதும் நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராக இருந்தாலும் நான் இந்தச் சடங்குகளைச் செய்ய மாட்டேன்.. பாரதிக்கு எப்படிச் செய்ய முடியும்?!

இன்னொருவர் : அப்போ, ஹரிஹர சர்மாவைச் செய்யச் சொல்லலாம்.

(ஹரிஹர சர்மா பாரதிக்கான இறுதிச் சடங்குகளைச் செய்வது என்று முடிவாகிறது. பாரதியின் இறுதிப் பயணம் தொடங்குகிறது)

  • இரா. கோமதிசங்கர் – திருநெல்வேலி

Comments (3)


Rasal

தமிழ் கவிதை மண்ணில் மடிந்துவிட்டதே 😔😌😔

சுதாகரன்
சுதாகரன்
August 31, 2023

மரணத்தை மிகை அழுத்தமின்றி இயல்பான போக்கில் சொல்லி, நன்றாக கடத்தி விட்டிர்கள்..

Anita Srikanth
Anita Srikanth
August 31, 2023

பாரதியாரோட மரணம் என்னவோ பண்ணுது ண்ணா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *