நீலகண்ட பிரம்மச்சாரி – 23
காட்சி 23 காலம் : 1936ஆம் வருடம் மே மாதம் இரண்டாம் தேதிஇடம் : ஓம்கார் ஆசிரமம்பாத்திரங்கள் : ஜே.சி.குமரப்பா மற்றும் சிலர் ஜே.சி.குமரப்பாவுடன் வந்தவர் : (அங்கிருக்கும் ஆசிரமவாசியிடம் கன்னடத்தில்) இதோ, இவர் பெயர் ஜே.சி.குமரப்பா. மகாத்மா காந்திஜியின் சீடர். சுவாமிஜியைப் பார்க்க வந்திருக்கிறார். ஆசிரமவாசி : சுவாமிஜி அந்தக் குன்றின் மேல் இருக்கிறார். இப்போதெல்லாம் அவர் கீழே வருவதில்லை. அவரைப் பார்க்கவேண்டுமென்றால் நீங்கள்தான் மேலே போய்ப் பார்க்க வேண்டும். ஜே.சி.குமரப்பாவுடன் வந்தவர் : (குமரப்பாவிடம் இந்தியில்)ஐயா, சுவாமிஜி இப்போது அந்தக் குன்றின் மேல் இருக்கிறாராம். கீழே வருவதில்லையாம். நாம்தான் மேலேறிப் போய்ப் பார்க்க வேண்டுமாம். குமரப்பா : அதற்கென்ன? அவரைப் பார்க்கத்தானே வந்திருக்கிறேன்! குன்றேறலாம் வாருங்கள். (மேடை, குன்றின் மீதிருக்கும் ஓம்கார் சுவாமிகளின் குடில் அமைப்புக்கு மாறுகிறது) குமரப்பா : (தன்னுடன் வந்தவரிடம் இந்தியில்) ஆசிரமம் மிகுந்த எளிமையுடன் காட்சி அளிக்கிறது. ஒரு பிராமணன் வசிக்கும் ஆசிரமத்தில் பிராமணரல்லாதவரும் சேர்ந்து வசிப்பது வியப்பளிக்கிறது. (‘வாருங்கள் குமரப்பா’ என்ற தமிழ்க் குரல் குமரப்பாவை வரவேற்க, சிலிர்த்துத் திரும்புகிறார். கனிவும் சிரிப்பும் பொங்கிப் பொலியும் தோற்றத்தில் ஓம்கார் சுவாமிகள் குடிலின் வாசலில் வந்து கும்பிட்ட கைகளுடன் குமரப்பாவை வரவேற்கிறார்.) குமரப்பா : (தானும் கும்பிட்டவாறே தமிழில்) தாங்கள்…? ஓம்கார் சுவாமிகள் : அடியேன்தான் நீங்கள் தேடி வந்திருக்கும் ஓம்கார். குமரப்பா : வணக்கம் சுவாமி. ஓம்கார் சுவாமிகள் : குமரப்பா வந்திருக்கிறார் என்றவுடன், நானே வந்து வரவேற்க வேண்டும் என்று வந்துவிட்டேன். உள்ளே வாருங்கள்.. (எல்லோரும் உள்ளே வருகிறார்கள். குடிலின் உள்ளே சுவாமியைத் தவிர இருவர் அமர்ந்தாலே இடித்துக்கொண்டுதான் அமர வேண்டும் என்பதுபோலச் சிறிய அறை) குமரப்பா : இத்தனை சிறிய அறையா? ஓம்கார் சுவாமிகள் : (சிரிக்கிறார்) குமரப்பா கேட்டதாலேயே இந்தக் கேள்வி அர்த்தமுடையதாகிவிட்டது. ஆமாம், என் தனிமையின் பொருட்டு ஏற்படுத்திக்கொண்ட குடில் இது. குமரப்பா : என்னை அறிவீர்களா? ஓம்கார் : தமிழர் என்றும் தஞ்சாவூர்க்காரர் என்றும் காந்தியின் சீடர்களில் மிகவும் கறாரானவர் என்பது வரையிலும் அறிவேன். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. காந்திஜியும் அவர் சீடர்களும் நந்தி மலைக்கு வந்திருக்கிறீர்கள் என்று காலைப் பத்திரிகையில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். காந்திஜி நலமா? ஓய்வெடுக்க வந்திருப்பதாகப் போட்டிருந்தார்களே? குமரப்பா : ஆமாம். இரத்த அழுத்தம் சீராக இல்லை. மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் இந்த மலைச்சாரலுக்கு ஓய்வெடுக்க வந்திருக்கிறார். சில நாட்கள் இங்குதான் இருப்பார். ஓம்கார் : என்னைப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது என் நற்பேறு. குமரப்பா : நாங்கள் நந்திமலைக்கு வந்த ஓரிரு நாட்களில் உங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அடிவாரத்தில் நாங்கள் தங்கியிருக்கும் விருந்தினர் விடுதியிலிருந்து பார்க்கும்போது, இரவில் குறிப்பிட்ட நேரத்தில் மலையிலிருந்து அடிவாரத்தை நோக்கி விளக்கு ஒன்று அசைவதும் பதிலுக்கு கீழே இருந்து மேலே ஒளி செல்வதையும் பார்க்க முடிந்தது. இந்த சமிக்ஞை குறித்து விசாரித்தபோது, மேலே ஒரு சாது இருக்கிறார் என்றும் அவர் ஆசிரமத்தின் தலைவர் என்றும் தெரிந்தது. மேலும் விசாரிக்க, பூர்வோத்திரத்தில் புரட்சிக்காரராக இருந்த நீலகண்ட பிரமச்சாரிதான் அவர் என்பதும் தெரிந்தது. ஆகவே ஆவல் மேலிட்டுக் கிளம்பி வந்தேன். விசாரித்ததில் உங்கள் ஆசிரமப் பணிகளும் வியப்பளித்தன. சுவாமிஜி, அது என்ன சமிக்ஞை? ஓம்கார் சுவாமிகள் : கீழே ஆசிரமத்தில் போதிய தனிமை எனக்குக் கிடைக்கவில்லை. மக்கள் தங்கள் லோகாயதச் சிக்கல்களுக்கெல்லாம் என்னிடம் தீர்வைத் தேடி வந்துவிடுகிறார்கள். கடவுள் பக்தியில் சிந்தையைச் செலுத்தியும் சுயநலமின்றியும் உங்கள் மனம் சொல்லும் முடிவை நாடுங்கள் என்று சொல்வதைத் தவிர வேறு தீர்வு என்னிடம் ஏது? ஆகவே தனிமைக்காக மேலே வந்துவிட்டேன். யாரும் சொந்தக் காரணங்களுக்காக மேலே வரவேண்டாம் என்றும் கண்டிப்பாகச் சொல்லியிருந்தேன். நான் மேலே நலத்துடன் இருக்கிறேன் என்பதை ஆசிரமவாசிகள் தினமும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்கள். அதற்காகவே இந்த ஒளி உரையாடல். குமரப்பா : நல்லது. உங்கள் பழைய புரட்சி வாழ்க்கையை இந்த ஆன்மீக மாற்றம் செரித்துக்கொண்டதா? அவை எந்தப் புள்ளியில் பொருந்திப் போகின்றன? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம், செரித்துக்கொண்டது. அவை முற்றிலும் மாறுபட்டவை. புரட்சிக்காரன் என்ற அடையாளத்தை உதறிக்கொண்டு பிறரோடு இணங்கி இருப்பதற்கு நான் தேடிக்கொண்ட புதிய வாழ்க்கை இது. தனித்த சிறை வாழ்க்கையில் என் உள்ளத்துடன் மட்டுமே பேசிக்கொண்டு என்னை நான் கண்டுகொண்ட எனது ஆன்ம வெளிப்பாட்டை, ஆசிரமம் என்ற கூட்டு வாழ்க்கையில் வெளிப்படுத்துகிறேன். தொண்டு என்பதை மட்டுமே இரண்டு வாழ்க்கையிலும் பொருந்திப்போகிற புள்ளி என்று சொல்லுவேன். அது இருக்கட்டும்.. உங்கள் பழைய கிறித்தவ மரபு சார்ந்த வாழ்க்கையும் காந்தியடிகளுடன் உங்கள் சேவையும் எந்தப் புள்ளியில் பொருந்திப்போயின அன்பரே? குமரப்பா : நான் உங்களைக் கேட்டால் நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள்? அவையும் பொருந்தாதவைதான். தேசத் தொண்டு, சுயத்தை முன்னிறுத்தாத அரசியல், அஹிம்சையும் சத்தியமும் இணைந்த வாழ்க்கை நெறி, சலிப்பில்லாத போராட்டம், இப்படிப் பல புள்ளிகளில் என் வாழ்க்கை அடியோடு மாறிப்போனது. (உரையாடலுக்குப் பிறகு குமரப்பா விடை பெறும் நேரத்தில்) ஒரு வேண்டுகோள். நான் ஆசிரமத்தைப் பார்வையிட விரும்புகிறேன். அனுமதிக்க வேண்டும். ஓம்கார் சுவாமிகள் : நீங்கள் ஆசிரமத்தைப் பார்வையிடுகிறீர்கள் என்பதே பெருமை அல்லவா? (ஆசிரமவாசியிடம்) இவருக்கு ஆசிரமத்தைச் சுற்றிக் காட்டுங்கள். குமரப்பா : வருகிறேன்.. வணக்கம். ஓம்கார் சுவாமிகள் : காந்திஜியிடம் நலம் விசாரித்தததாகச் சொல்லுங்கள். குமரப்பா : சொல்கிறேன்.. யார் கண்டது? அவரே உங்களைப் பார்க்க விரும்பினாலும் ஆச்சரியமில்லை. வருகிறேன். ஓம்கார் சுவாமிகள் : வாருங்கள். (குமரப்பா விடைபெற்றுச் செல்கிறார். ஆசிரமவாசியும் அவருடன் செல்கிறார். மேடையில் காட்சி மாறி, சங்கர கிருஷ்ணனுடன் ஓம்கார் சுவாமிகள் பேசுகிறார்) ஓம்கார் சுவாமிகள் : தம்பி.. குமரப்பா பற்றி உங்களுக்குத் தெரியுமா? சங்கர கிருஷ்ணன் : தெரியாது சுவாமி. ஓம்கார் சுவாமிகள் : மிகச் சிறந்த பொருளாதார மேதை. காந்தியப் பொருளாதாரத்தை விளக்கிச் சொல்வதில் அவருக்கு இணை அவர்தான். காந்திஜியின் சீடர்களிலேயே மிகவும் கறாரானவர். ஒரு சமயம் குமரப்பா பீகார் நிலநடுக்க நிவாரணப் பணியில் இருந்தார். அவர்தான் நிவாரண நிதிப் பொறுப்பைக் கவனித்து வந்தார். நிவராணப் பணியில் இருக்கும் தொண்டர்களுக்கு ஒருநாள் உணவுக்கு மூன்றணாதான் விதித்திருந்தார். அப்போது நிவாரணப் பணிகளைப் பார்வையிட காந்தியடிகள் வந்திருந்தார். அவருக்காக பால் மற்றும் பழங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். காந்தியடிகளின் செயலாளர் தேசாயிடம் மூன்றணாவுக்கு மேல் செலவு செய்ய முடியாது, காந்தியடிகளிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டார் குமரப்பா.அடுத்த நாள் காந்தியடிகள் வந்த காருக்குப் பெட்ரோல் போட்ட பில் வந்தது. முடியாது என்று மறுத்தார் குமரப்பா. காந்தியடிகள் இதை அறிந்ததும், ‘நான் நிவாரணப் பணிக்கு வந்திருக்கும் பெட்ரோல் செலவையும் மறுப்பீர்களா?’ என்று கேட்டதற்கு, ‘பொதுமக்கள் தந்திருக்கும் நிவாரண நிதியை, நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்பதால், இந்தச் செலவு மறுக்கப்பட்டது’ என்று சொல்லிவிட்டார். காந்திஜி அதை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் நிவாரணப் பணியில் சேராத செலவுகள் எதையும் கோர வேண்டாம் என்று தன் செயலர் தேசாயிடம் சொல்லிவிட்டார். சங்கர கிருஷ்ணன் : ஆஹா! எப்படியான மனிதர்கள்..! சரி, காந்திஜியுடனான உங்கள் சந்திப்பு குறித்துச் சொல்லுங்கள் சுவாமி. (திரை விழுகிறது)