நீலகண்ட பிரம்மச்சாரி – 17

நீலகண்ட பிரம்மச்சாரி – 17

காட்சி 17 காலம் : 1921 செப்டம்பர் 11ஆம் நாள் முற்பகல்இடம் : இந்த வரலாற்றின் ஆரம்பக் காட்சியில் நாம் பார்த்த திருவல்லிக்கேணி பாரதியார் வீடுபாத்திரங்கள் : பாரதியார், செல்லம்மா, சகுந்தலா, வ.வே.சு.அய்யர், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, பரலி நெல்லையப்பர், குவளை கிருஷ்ணமாச்சாரி, ஹரிஹரசர்மா, வைத்தியர், இன்னும் சிலர். (பாரதி கண்மூடிப் படுத்திருக்கிறார். பக்கத்தில் செல்லம்மாவும் சகுந்தலாவும் இருக்கிறார்கள். நீலகண்டரும் குவளை கிருஷ்ணமாச்சாரியும் அருகில் நின்றுகொண்டிருக்கிறார்கள். வாசலில் சத்தம் கேட்கிறது. பலர் உள்ளே வரும் சலசலப்பில் செல்லம்மாவும் சகுந்தலாவும் எழுந்து வாசலைப் பார்க்கிறார்கள்.முதலில் வ.வே.சு.அய்யர் உள்ளே வர, சில போலீஸ் ஜவான்கள் பின்னால் வருகிறார்கள்) செல்லம்மா : வாருங்கள் சுவாமி, உங்கள் சிநேகிதரைப் பாருங்கோ. பயமாக இருக்கிறது சுவாமி. வ.வே.சு.ஐயர் : பயப்பட வேண்டாம் செல்லம்மா. பாரதி குணமாகிவிடுவார். ஆகாரம் ஏதேனும் பண்ணினாரா..? செல்லம்மா : காலையில் சிறிது கஞ்சி மட்டும் குடிச்சார். வைத்தியரை அழைக்க ஹரி போயிருக்கிறார். வ.வே.சு.ஐயர் : (பாரதியின் பக்கத்தில் அமர்ந்து) பாரதி.. பாரதி.. பாரதியார் : (மெதுவாக கண்விழித்து) யார்? ஐயரா..? வாரும்.. வ.வே.சு.ஐயர் : எப்படி இருக்கிறீர்..? பாரதியார் : ஒன்றுமில்லை ஐயரே, வயிற்றுக் கடுப்பு இருக்கிறது; களைப்பாகவும் இருக்கிறது. சரியாகிவிடும். (சுற்றுமுற்றும் பார்க்கிறார். போலீஸ் ஜவான்கள் கண்ணில் பட) செல்லம்மா இந்த ஜவான்கள் நம் வீட்டுக்கு ஏன் வந்திருக்கிறார்கள்..? வ.வே.சு.ஐயர் : அவர்கள் என்கூட வந்தார்கள். என்னைப் போலீஸ் நிலையம் அழைத்துப் போகிறார்கள். போகும் வழியில் உம்மைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்துவிட்டேன். செல்லம்மா : என்ன விஷயம் சுவாமி? வ.வே.சு.ஐயர் : ‘தேசபக்தன்’ பத்திரிகையில் ஒரு வியாசம் வந்திருந்தது. அது ராஜ துவேசத்தைக் கொண்டிருக்கிறது என்று என்மீது வாரண்ட்டு. நான் ‘தேசபக்தன்’ ஆசிரியன் என்பதால், என்னை அழைத்துப் போகிறார்கள். அது இருக்கட்டும்.. (பாரதியைப் பார்த்து)பாரதி.. நான் போய்வருகிறேன். உடம்பைக் கவனித்துக்கொள்ளும். அசட்டையாக இராமல் வைத்தியர் தரும் மருந்தைச் சாப்பிடும்.. வரட்டுமா..? பாரதியார் : (வ.வே.சு. அய்யரின் கரத்தைச் சிறிது பற்றி, பின் விடுகிறார்) சரி அய்யரே.. விசாரணை முடிந்ததும் வாருங்கள். வ.வே.சு.அய்யர் : (எல்லாரையும் கும்பிட்டுக்கொள்கிறார். நீலகண்டரையும் கும்பிட்டுக்கொண்டே) நல்லது.. வருகிறேன்..(வ.வே.சு.அய்யரும் அவருடன் வந்தவர்களும் சென்றுவிடுகிறார்கள்) சகுந்தலா : (குவளையில் கஞ்சியுடன்) அப்பா.. இன்னும் கொஞ்சம் கஞ்சி தரட்டுமா..? (பாரதி தலையாட்ட, சகுந்தலா கஞ்சியைப் புகட்டுகிறார். அப்போது வைத்தியருடன் ஹரிஹர சர்மாவும் வருகிறார்) வைத்தியர் : (பாரதியிடம் நெருங்கி) பாரதி.. எப்படி இருக்கிறீர்? (கேட்டுக்கொண்டே பாரதியின் மணிக்கட்டைப் பிடித்து நாடி பார்க்கத் தொடங்க) பாரதியார் : (கையை உதற முற்படுகிறார். பலம் இல்லாததால் பெருமூச்சு விடுகிறார்) எனக்கு என்ன? நான் நன்றாகத்தான் இருக்கிறேன். செல்லம்மா.. இது என்ன, வைத்தியரை அழைத்தாயா? ஏன் என்னை இப்படித் தொந்தரவு செய்கிறீர்கள்? என்னை விட்டுவிடுங்கள்; எனக்கு ஒன்றுமில்லை. வைத்தியர் : சரிதான் பாரதி, உமக்கு ஒன்றுமில்லைதான். நான் தரும் மருந்தை மட்டும் சாப்பிட்டுவிடுங்கள்; உமது களைப்பெல்லாம் போய்விடும். (செல்லம்மாவிடம் மருந்துப் பொட்டலங்களைக் கொடுத்தவாறே) இந்த மருந்தை இரண்டு மணிக்கொரு தடவை கொடுங்கள். நாளைக்கு வந்து பார்க்கிறேன். தொடர்ந்து கஞ்சியே கொடுத்து வாருங்கள். (பாரதி முனகுவதும் மருந்தை உட்கொள்ள மறுப்பதும் சகுந்தலா அவரைக் கெஞ்சியே மருந்தையும் கஞ்சியும் கொடுப்பதாகப் பகல் பொழுது கடந்து மாலை வருகிறது) செல்லம்மா : பாப்பா.. விளக்கேற்றிவிடம்மா.. (சகுந்தலா விளக்கேற்றுகிறாள்) பாரதியார் : (முன்னிரவில் கண்விழித்து) நீலகண்டரே, ஹரிஹரனும் நீங்களும் பக்கத்தில் வாருங்கள். (பக்கத்தில் வந்து அமர்ந்துகொள்கிறார்கள்) இப்போ கொஞ்சம் பரவாயில்லை.ஆப்கானிஸ்தானத்து மன்னன் அமானுல்லாகான் பற்றி ஒரு வியாசம் மனத்தில் வருகிறது. அதை எழுதி சுதேசமித்திரனுக்கு அனுப்பவேண்டும். நீலகண்டர் : சரி, செய்யலாம். உங்களுக்குக் கொஞ்சம் தெம்பு வரட்டும். பாரதியார் : இப்போ தெம்பாகத்தான் இருக்கிறேன். அமானுல்லாகான் யார் தெரியுமா..? உலக யுத்தத்தில் ஜெர்மனிப் பக்கம் இருந்தவன். இப்போ வெள்ளைக்காரர்கள் யுத்தத்தில் ஜெயித்திருப்பதால், அவனை அவதூறு பண்ணிக்கொண்டு வருகிறார்கள். (மூச்சுவிடத் திணறுகிறார்) ஹரிஹர சர்மா : அமைதியாக இருங்கள், பிறகு பேசலாம். சகுந்தலா இங்கே வா. அப்பாவுக்குக் கொஞ்சம் தீர்த்தம் கொடேன்.. செல்லம்மா : மருந்து கொடுக்கும் நேரம்தான். பாப்பா மருந்தும் கஞ்சியும் கொடுத்துவிடு. (சகுந்தலா மருந்து கொடுக்க முயல, பாரதி சாப்பிட மறுக்கிறார். சகுந்தலா வற்புறுத்திப் புகட்ட, மருந்து பாதி இறங்கியும் இறங்காமலும் போகிறது) பாரதியார் : எனக்கு ஒன்றுமில்லை, விடுங்கள்… (படுத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொள்கிறார். பரலி நெல்லையப்பரும் சுதேந்திரநாத் ஆர்யாவும் வருகிறார்கள். பாரதியாரோடு இருந்த நினைவுகளைப் பேசிக்கொள்கிறார்கள். நள்ளிரவு கடந்த பின்னர் பாரதியார் சிந்திப்பதை நிறுத்திக்கொள்கிறார். மறுநாள் காலையில் பாரதியாருக்கு இறுதிச் சடங்குகள் செய்வது பற்றி யோசிக்கிறார்கள்.) காலம் : 1921 செப்டம்பர் 12ஆம் நாள் காலை சகுந்தலா : (செல்லம்மாவிடம்) அக்காவுக்குச் சொல்லணுமே அம்மா.. அக்காவும் அத்திம்பேரும் வந்துருவாங்களா..? குவளை : நானும் ஹரிஹரனும் போய் எல்லாருக்கும் தந்தி கொடுத்துட்டோம். ஆனா அவா எல்லோரும் இன்னைக்கே வந்துட முடியாதே.. வந்திருந்தவர்களில் ஒருவர் : எல்லாரும் வரவரைக்கும் காத்திருக்க முடியுமோ ஓய்..? வந்தவாளை வச்சுக் காரியங்களை செய்ய ஆரம்பிச்சுடணும். நீலகண்டர் : அண்ணாவோட சென்னை சிநேகிதர்களாவது வரவேண்டாமோ.? பரலி நெல்லையப்பர் : பத்திரிகைச் செய்திகூட இனிமேல்தான் வரணும். காத்திருந்து செய்யலாமா..? வந்திருந்தவர்களில் இன்னொருவர் : சம்பிரதாயப்படி இறந்த நாளிலேயே காரியங்களைச் செய்யணும். அஸ்தமனம் வரை போகக் கூடாது. மீண்டும் முதல் நபர் : வருகிறவர்கள் வரட்டும்.. நாம ஆரம்பித்து விடலாம். இரண்டாமவர் : சரி.. பாரதிக்குக் கிரியைகள் யார் செய்யறது..? தம்பி நீலகண்டர், உன்மேல் அவருக்கு ரொம்பப் பிரியம் அல்லவா..? பாரதிக்கு ஈமக் கிரியைகள் நீ செய்யலாமே..? நீலகண்டர் : என்ன..! நானா..? என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சடங்குகளில் எல்லாம் சிறிதும் நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராக இருந்தாலும் நான் இந்தச் சடங்குகளைச் செய்ய மாட்டேன்.. பாரதிக்கு எப்படிச் செய்ய முடியும்?! இன்னொருவர் : அப்போ, ஹரிஹர சர்மாவைச் செய்யச் சொல்லலாம். (ஹரிஹர சர்மா பாரதிக்கான இறுதிச் சடங்குகளைச் செய்வது என்று முடிவாகிறது. பாரதியின் இறுதிப் பயணம் தொடங்குகிறது)

                 நீலகண்ட பிரம்மச்சாரி – 16

                 நீலகண்ட பிரம்மச்சாரி – 16

காட்சி 16 காலம் : 1921ஆம் வருடம் ஜூலை மாதம்இடம் : சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை (சந்திப்பு தொடர்கிறது)பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர் சுரேந்திரநாத் ஆர்யா : தீர்ப்புக்கு அப்பீல் முயற்சிகள் செய்தீர்களா..? நீலகண்டர் : என்வரையில் அன்றும் சரி, இன்றும் சரி, பிரிட்டிஷ்காரன் கோர்ட்டை நான் நம்புவதில்லை.. ஆகவே என்னைத் தவிர எல்லாரும் அப்பீல் செய்தார்கள். நான் எதிர்பார்த்தது போலவே அப்பீல் மனுக்களை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது. பாரதியார் : உமது செயலால் நீர் தனித்துத் தெரிகிறீர்..! சிங்காரவேலர் : வெள்ளைக்காரன் கோர்ட்டைப் பற்றிய உமது அபிப்பிராயம் சரிதான். அதிலும் இது வெள்ளை அதிகாரியைக் கொன்ற கொலை வழக்கு. அப்பீலை எப்படி ஏற்பார்கள்..? நீலகண்டர் : அதிலும் சங்கர கிருஷ்ணய்யர் உள்ளிட்ட எல்லாரும் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றே வாதாடினார்கள். அதிலும் மணியாச்சி சம்பவத்தில் வாஞ்சியுடன் இருந்ததாக அடையாளம் குறிக்கப்பட்ட சங்கர கிருஷ்ணய்யர், ‘வாஞ்சியுடன் கடிதத் தொடர்பு இருந்ததை வைத்து என்னைக் குற்றத்தில் சேர்த்திருக்கிறீர்கள். ஆனால் வாஞ்சியின் கொலைத் திட்டங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மணியாச்சியில் அவருடன் நான் இருக்கவில்லை’ என்றும் வாக்குமூலம் கொடுத்தார். ‘என்னுடனும் அவருக்குப் பழக்கமில்லை’ என்று நீதிமன்றத்தில் கூறினார். அவர்களின் நிலையைக் குறித்து நான் இரக்கம் கொண்டேன். தீர்ப்பளித்த நீதிபதிகளில் இந்தியரான சங்கரன் நாயர், வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனியைச் சீர்குலைத்த காரணத்திற்காகவும் தேசபக்தர்களுக்கு கலெக்டர் ஆஷின் மீது கோபம் இருந்ததைக் குறித்திருக்கிறார். ஆனால் வாஞ்சியின் கடிதம் அதை தேசம் தழுவிய பயங்கர இயக்கத்தின் வேலை எனக் குறித்தது. சனாதன விரோதிகள் என்று ஆங்கிலேயரைப் பொதுவாகக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையிலேயே வெள்ளை நீதிபதிகள் இதனைச் சதி என்றும் அதன் சூத்திரதாரி நான் என்றும் குறிப்பிட்டனர். ஆர்யா : சிதம்பரம் பிள்ளைக்கு ஆஷ் கொலையுண்ட செய்தி, ஜெயிலில் சொல்லப்பட்டபோது அவர் மகிழ்ந்திருக்கிறார். நெறி சார்ந்த மனிதரான அந்த மகானுக்குக்கூட, இந்தக் கொலை ‘நல்லதோர் செய்தி’யாகப் பட்டிருக்கிறது. பாரதியார் : சரி அன்பர்களே, நேரமாகிவிட்டது. இந்த வாரக் கடைசியில் நான் ஈரோடு செல்லப் போகிறேன். போய்விட்டு வந்து நாம் சந்திக்கலாம். ஆர்யா : பாரதி, சென்ற மாதம் உன்னை யானை தள்ளிவிட்டதிலிருந்தே நீ சீக்கிரம் சோர்வடைந்துவிடுவதாகத் தெரிகிறது. உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள். பாரதியார் : உடம்பு இருக்கட்டும்.. பராசக்தி துணை வருவாள். காலன் என்னிடம் வரப் பயப்படுவான். பாரேன், யானை என்னைத் தள்ளியதோடு நின்றுவிட்டதல்லவா..! ஈரோட்டில்கூட ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில்தான் பேசப்போகிறேன். சிங்காரவேலர் : பாரதி, உமது நம்பிக்கையும் உத்வேகமும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றன. நீர் இந்த தேசத்தின் சொத்து. உமது தேக நிலை குறித்து அஜாக்கிரதையாக இருக்கவேண்டாம். பத்திரமாகப் பயணம் செய்யுங்கள். ஆர்யா : பாரதி, நீ கிளம்பு. நிலவு காய்கிறது; நாங்கள் சற்று நேரம் இருந்துவிட்டு வருகிறோம். சிங்காரவேலர் : நானும் பாரதியுடனேயே செல்கிறேன். நீலகண்டரே, எனது வீட்டுக்கு வாருங்கள். (ஆர்யாவைப் பார்த்து) நீர் அவரை அழைத்து வாரும். (பாரதியாரும் சிங்காரவேலரும் விடைபெற்றுச் செல்கின்றனர்) நீலகண்டர் : (ஆர்யாவைப் பார்த்து) ரொம்ப நேரமாய்க் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நீர் கிறித்தவப் பாதிரி உடையில் வந்ததைப் பார்த்தவுடன் திடுக்கிட்டுப் போனேன். இது பாரதிக்குத் தெரிந்திருப்பதால் அவரை வைத்துக்கொண்டு கேட்பதற்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. ஆர்யா : அது பெரிய கதை; சுருங்கச் சொல்கிறேன். சிதம்பரம் பிள்ளைக்கு ஜெயில் தண்டனை கொடுத்ததை எதிர்த்து மூர் மார்க்கெட்டில் பேசியது உமக்குத் தெரியும் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம். அதனால் உன்னைக் கைது செய்து கொண்டு போனார்கள். ஆர்யா : சிறைச்சாலைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளவும் முயன்றேன். ஆனால் பிழைத்துக்கொண்டேன். வெளியே வந்த பிறகு, வைதீகர்களுடன் எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் கிறித்தவத்தைத் தழுவினேன்; வெளிநாடு சென்றேன்; திருமணம் ஆனது. என் மனைவி ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்தவள். நீலகண்டர் : வைதீகத்தின் தீமைகளை மதம் மாறி எதிர்க்க முடியாது. மதத்திற்குள்ளேயே இருந்துகொண்டுதான் போராட வேண்டும். ஆர்யா : இதையேதான் பாரதியும் சொன்னார். சரி போகட்டும்.. அடுத்தாற்போல் என்ன செய்யப் போகிறீர்? நீலகண்டர் : இன்னும் ஒன்றும் தோன்றவில்லை. ஆர்யா : சரி, யோசிக்கலாம். சிங்காரவேலரிடம் அழைத்துப் போகிறேன். உமது சிறைவாசம் எப்படி இருந்தது..? நீலகண்டர் : சிறையிலும் நான் கலகக்காரனாகத்தான் இருந்தேன். அரசியல் கைதிகளுக்கான முறையில் நான் நடத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.மற்றவர்களுக்கும் சிறைச் சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல். பல சிறைகளுக்கு மாற்றினார்கள். இறுதியில் பெல்லாரிக்குக் கொண்டு போனார்கள். 1914இல் ஒருமுறை சிறையிலிருந்து தப்பவும் செய்தேன். ஆர்யா : சிறையிலிருந்து தப்பினீரா?! எப்படி நீலகண்டரே..?! நீலகண்டர் : 1914இல் உலகப்போர் மூண்டதல்லவா..? அப்போதுதான் நாங்கள் புரட்சியைத் திட்டமிட்டிருந்தோம். இந்தச் சமயத்தில் சிறையில் இருப்பதா என்று தப்பித்தேன். அங்குள்ள ஆட்களையே தப்பிக்கும் திட்டத்திற்குப் பயன்படுத்திக்கொண்டேன். மூன்றாம் நாள் என்னைப் பிடித்துவிட்டார்கள். (மேடை ஒளிமாற்றத்தில் ஓம்கார் அறை ஒளியில் வருகிறது) சங்கர கிருஷ்ணன் : பாரதியாருடன், அதுதான் நீங்கள் கடைசியாகப் பேசியதா..? ஓம்கார் : அவர் ஈரோடு சென்று வந்த பிறகும் அவரைத் தினமும் சந்தித்து வந்தேன். சிலசமயம் ஆர்யாவும் வருவார். தமது ஈரோடு பிரயாணம் பற்றி, பாரதி ஒரு கட்டுரையும் எழுதினார். அவரது கடைசி நாளில்.. (திரை விழுகிறது )

நீலகண்ட பிரம்மச்சாரி – 15

நீலகண்ட பிரம்மச்சாரி – 15

காட்சி 15 காலம் : 1921ஆம் வருடம் ஜூலை மாதம்.இடம் : சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை (சந்திப்பு தொடர்கிறது)பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர். ஆர்யா : நீலகண்டரே, சரணடையும் முடிவைக் கல்கத்தா போய் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது..? நீலகண்டர் : நான் இயங்கி வந்த இயக்கத்தின் நண்பர்கள் வங்கத்தில்தான் இருந்தார்கள். உண்மையில் நான் மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். புதுச்சேரி நண்பர்கள் ஏதோ செய்யப்போகிறார்கள் என்று அறிந்திருந்தேன். அவர்களின் இலக்கு ஆஷ் என்பது தெரியாது.புதுச்சேரியைவிட்டு வெளியேறிய நான், திருநெல்வேலிக்குச் சென்று தோழர்களைப் பார்த்து என் நிலைமையை விளக்கி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது எத்தனைத் தவறாகப் போய்விட்டது..?!என்மேல் அவர்களுக்கிருந்த சந்தேகங்களையேனும் நிவர்த்தி செய்திருக்கலாம். இந்தக் கொலையைப்பற்றித் தெரிய வந்திருந்தால் தடுக்க ஒரு முயற்சியும் எடுத்திருக்கலாம். ஆஷ் கொலையுண்டதைப் பத்திரிகைகளில் பார்த்த நான், என் பெயர் தேடப்படும் சதிகாரர்கள் பட்டியலில் இருப்பதை அறிந்ததும், இதுபற்றி யோசித்துத் தெளிவு பெற எனக்குக் கல்கத்தா நண்பர்களே உதவமுடியும் என்பதால், நான் அங்கு சென்றேன். சரணடைந்துவிடலாம் என்று அங்குதான் முடிவு செய்தோம். ஆர்யா : சரணடைவது உமது குணமில்லையே நீலகண்டர்..? நீலகண்டர் : சரணடைவதைத் தவிர வேறு இரண்டு வழிகளை யோசித்தோம்..முதலாவது, நண்பர்கள் உதவியைப் பெற்று எங்கேனும் வெளிநாட்டுக்குத் தப்பிவிடுவது. இரண்டாவது, நமது தேசத்திலேயே தலைமறைவாக வாழ்வது. முதல் வழியில் போனால் இந்தியா விடுதலை பெறும்வரை தேசத்திற்குள் வர முடியாது. சுதந்திரம் பெறப் பல காலம் ஆகலாம். அதுவரை தேச சேவைக்கு வரவே முடியாது. இரண்டாம் வழியில் தேசத்தில் இருக்கலாம். ஆனால் பல காலம் ஒளிந்து வாழ வேண்டும். பயந்துகொண்டே தேச சேவை செய்ய வேண்டும். அது ஆபத்தானது. ஆஷ் கொலையில் எனக்கு நேரடித் தொடர்பு இல்லாததாலும் சதியின்போது நான் திருநெல்வேலியில் இல்லாததாலும் வழக்கிலிருந்து தப்பிக்க சரணடைவதே சரியாக இருக்கும் என்று யோசித்தோம். சிறைத் தண்டனை என்றாலும் சிறிய காலமே அமையும் என்பதால் சீக்கிரம் வெளியே வந்து தேசப் பணியைத் தொடரலாம் என்று கருதியதால், கல்கத்தாவிலேயே சரணடைந்து வாக்குமூலம் கொடுத்தேன். ஆர்யா : (பாரதியாரைப் பார்த்து) ஏன் பாரதி.. கடலூரில் உன்னைக் கைது செய்தபோது, ஆஷ் கொலை வாரண்டில் உன் பெயர் இருந்ததைச் சாக்காக வைத்துக்கொண்டார்கள் என்கிறார்களே? பாரதியார் : 1908இல் நான் புதுச்சேரி வந்தபோது, என் பேரில் எந்த வாரண்டும் இல்லை. ஆஷ் கொலைச் சதியில் புதுவையில் இருந்தவர்களுக்குத் தொடர்பு இருந்தது என்பதை வாஞ்சிநாதன் மற்றும் அவரது சகாக்களின் கடிதங்கள் வாயிலாகத் தெரிந்துகொண்ட பிரிட்டிஷ் அரசு, எங்கள் மீது 1911இல் வாரண்ட் பிறப்பித்தது. பல ஆண்டுகள் சென்றபின்னும் அதற்கு உயிர் இருந்தது, கடலூரில்தான் தெரியவந்தது. ஆர்யா : அப்போ நீலகண்டர் வாக்குமூலத்திற்கு முன்பே பாண்டிச்சேரியின் தொடர்பு பிரிட்டிஷ் அரசுக்கு தெரிந்திருக்கிறதே.. அப்படியானால் நீலகண்டர் புதுவைச் சுதேசிகளை காட்டிக்கொடுத்தார் என்ற பேச்சு வந்தது எப்படி..? நீலகண்டர் : என் வாக்குமூலம் திருநெல்வேலியில் இரண்டு நாட்களாகப் பெறப்பட்டது. ஆனால் இரண்டாவது நாள் வாக்குமூலத்தை என்னை நிர்ப்பந்தித்து வாங்கினார்கள். ஜூலை 12 அன்று, முதல் வாக்குமூலத்தில், நான் அறிந்த விவரங்களையே சொன்னேன். இதில் எனது புதுச்சேரித் தொடர்புகள் பற்றிச் சொல்லவேண்டியிருந்தது. பாரதியார் : உண்மையில், புதுச்சேரி தர்மாலயத்தில் என்ன நடந்தது என்றே எனக்கும் அரவிந்தருக்கும் தெரியாது. எங்களைத் தவிர்த்தே எல்லாம் செய்தார்கள். நீலகண்டரும் அப்போது அங்கு இல்லை என்பதால் அவருக்கும் திட்டங்கள் தெரிந்திராது. (மேடையில் ஒளி மாறி ஓம்கார் அறை வருகிறது. ஓம்கார் அறையில் சங்கர கிருஷ்ணனும் ஓம்கார் சுவாமிகளும் பேசிக்கொண்டிருக்கின்றனர்) சங்கர கிருஷ்ணன் : உங்களிடம் ஏன் நிர்ப்பந்திக்க வேண்டும்..? ஓம்கார் சுவாமிகள் : அவர்கள் வழக்கில் ஒரு உருவத்திற்கு வந்திருக்க வேண்டும். என்னைத் தனியாகவே வைத்திருந்தார்கள். வழக்கு என்ன, யார் என்ன சொல்லியிருப்பார்கள் என்பது எதுவும் எனக்குத் தெரியாது. நான் மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். இரண்டாம் நாள் வாக்குமூலத்தை அதிகாரிகள் ஒருபக்கம் அச்சம் காட்டியும் மறுபக்கம் விடுதலைக்கு ஆசை காட்டியும் தயார் செய்து வாங்கினார்கள். மாஜிஸ்டிரேட் தம்பு என்பவர் முன்னிலையில் அப்ரூவர் தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை கொடுத்த வாக்குமூலத்திற்கு ஒத்துப்போகிற மாதிரி என் வாக்குமூலத்தை மாற்றினார்கள். என் குழப்பத்தாலும் எனக்குச் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மை என்று நம்பியும் அப்படிக் கொடுக்கவேண்டியதாயிற்று. ஆனாலும் முழுமையாக எதுவும் சொல்லிவிடவில்லை. சங்கர கிருஷ்ணன் : அப்புறம் என்னாச்சு..? ஓம்கார் சுவாமிகள் : உயர்நீதிமன்றத்தின் விசாரணையின்போது நீதிபதியிடம் நடந்த உண்மையைக் கூறினேன். என்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்து அவ்வாறு பொய் சொல்ல நேர்ந்த என் பலவீனத்தை நீதிமன்றத்திலேயே குறிப்பிட்டேன். இப்போது நினைத்தாலும் அதை வெட்கப்படும் செயலாகவே உணர்கிறேன். நீதிமன்றம் என் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால் தீர்ப்பு என்னவோ அப்ரூவர் வாக்குமூலத்தை ஒட்டியதாகவே அமைந்தது. அதுவும் கொலை வழக்கின் தீர்ப்பில் நான் காசிக்குப் போனதை, எனது திருநெல்வேலி நண்பர்களிடம் வசூல் செய்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்ட திருடனாகச் சித்தரித்துச் சொல்லியிருந்தார்கள். புதுச்சேரியிலிருந்து நானாக வெளியேறினேனா அல்லது மற்றவர்கள் என்னை வெளியேற்றினார்களா என்பதைச் சந்தேகமாகக் குறிப்பிட்டிருந்தார்கள். சங்கர கிருஷ்ணன் : தீர்ப்பை எதிர்த்து நீங்கள் அப்பீலுக்குப் போகவில்லையா சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : (புன்னகைக்கிறார்) (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி -14

நீலகண்ட பிரம்மச்சாரி -14

காட்சி 14 காலம் : 1921ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள்இடம் : திருவல்லிக்கேணி கடற்கரைபாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர். (பாரதியாரும் நீலகண்டரும் கடற்கரையில் அமர்ந்திருக்கின்றனர். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கவிதையை பாரதியார் படித்துக் காட்டுகிறார்.) பாரதியார் : கேள்! விடை கூறினள் மாதா! நம்மிடையாவனே யிங்கு தோன்றினன்? இவன் யார்?உலகப் புரட்டர் தந்திர உரையெலாம்விலகத் தாய்சொல் விதியினைக் காட்டுவான்.மலைவு செய்யாமை; மனப்பகை யின்மை ;நலிவுறுத்தோரை நாம் எதிர்த்திடாமை ;தீச்செயல் செய்யும் அரசினைச் சேராமை;ஆச்சரியப்பட உரைத்தனன் -அவையெலாம்.வருக காந்தி ! ஆசியா வாழ்வே !தரும விதிதான் தழைத்திட உழைப்பாய்.ஆன்மா அதனால் ஜீவனை யாண்டுமேனெறிப் படுத்தும் விதத்தினை யருளினாய்.. நீலகண்டர் : (குறுக்கிட்டு) அண்ணா நிறுத்துங்கள். பாரதியார் : என்ன பாண்டியா? நீலகண்டர் : என்ன பாட்டு இது..? பொருள் தெரிகிறது. காந்தி மகான் தோன்றியதை பாரத மாதா சொல்வது போல அமைத்திருக்கிறீர்கள். ஆனால் சந்தக் கட்டு ஏதும் இல்லாமல் வழக்கமான உங்கள் நயம் எதுவுமில்லாமல் இருக்கிறதே..! பாரதியார் : (சிரிக்கிறார்) பலே.. சரியாகத்தான் சொன்னீர் நீலகண்டர். இது என் பாட்டு இல்லை. அமெரிக்கா தேசத்தில் வாழ்ந்து வரும் ஸ்ரீமதி மாட் ரால்ஸ்டன் ஷர்மன் என்ற மாது எழுதிய ஆங்கிலக் கவிதை. தமிழில் மொழிபெயர்த்து எழுதினேன். சுதேசமித்திரனுக்கு போகப் போகிறது. நீலகண்டர் : அண்ணா, சாகாவரம் பெற்ற பாடல்களை வடித்தவர் நீங்கள். ஆனால் உங்கள் கற்பனை சௌந்தர்யம் இந்த மொழிபெயர்ப்பில் வரவில்லையே.. சுதேந்திரநாத் ஆர்யா : (சிங்காரவேலருடன் வந்துகொண்டே) அது எப்படி அமையும் நீலகண்டரே.. மூலத்தின் ஜீவன் எத்தகையதோ, அதுதான் மொழிபெயர்ப்பிலும் வரும். இதே காந்தியைப் பற்றி ‘வாழ்க நீ எம்மான்‘ என்று பாரதி பாடியது எத்தனை ஜீவன் ததும்பியதாக இருந்தது..? பாரதியார் : ஏதேது, நீங்கள் இருவரும் எனக்கு மொழிபெயர்க்கவே வராது என்று சொல்வது போல இருக்கிறது.. (எல்லாரும் சிரிக்கிறார்கள்) ஆர்யா : ‘வந்தேமாதரம்’ மொழிபெயர்ப்பு ஒன்று போதுமே, பாரதி பெயரைச் சொல்வதற்கு..பாரதி, உன்னைக் கேலி செய்து எவ்வளவு நாள் ஆச்சு?! கோபம் இல்லையே..? சிங்காரவேலர் : ஆர்யா, இந்தக் கவிதையின் கூர்மையைக் கவனியுங்கள். இதில் பாரதி, காந்தியின் அரசியல் பாதையைச் சுட்டிக் காட்டுகிறார். வெளிநாட்டார் வியாக்கியான உலகம், காந்தியின் வருகையை ஆசியாவின் எழுச்சியாகப் பார்ப்பதைக் கவனியுங்கள். காந்தியின் வழியை திலகர் வழி வந்தவர்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். என்ன பாரதி சரிதானே..? பாரதியார் : நாட்டின் வருங்கால அரசியலில் காந்தியின் பாத்திரம் தவிர்க்க முடியாதது சிங்காரவேலரே.. கவிதையை நீங்கள் யோசிக்கும் விதத்தை வியக்கிறேன். அது போகட்டும் ஆர்யா. நீலகண்டரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தாயே.. ஆர்யா : ஆமாம் பாரதி.. நீலகண்டரே நீர் வந்திருப்பதை பாரதி சொன்னார். சிறைவாசம் முடிந்து எத்தனை நாள் ஆயிற்று..? நீலகண்டர் : இரண்டாண்டுகள் ஆயிற்று. பல இடங்கள் அலைந்து திரிந்தேன். சென்னைக்கு வந்தும் நாலைந்து நாட்கள் திக்குத் தெரியாது அலைந்தேன். சாப்பாட்டுக்கு வழியில்லை. கோயிலில் பிரசாதம் வாங்கிப் பசி ஆறினேன். வெட்கத்தைவிட்டு யாசகமும் பெற்றேன். ரயிலடியிலும் கடற்கரையிலும் கோயில் மண்டபங்களிலும் படுத்துக்கொண்டேன். சிலநாள் முன்புதான் பாரதி அண்ணா வீட்டைக் கண்டுபிடித்தேன். பாரதியார் : பார் ஆர்யா, இவர் ஒரு சிம்மம். ஒரு தடவை இயக்கத்திற்கு நன்கொடை தருவேன் என்று இவரை அலையவைத்த ஒரு பெரிய மனிதரைத் துப்பாக்கியைக் காட்டிப் பணியவைத்தவர். பெரிய விவேகி.. அப்படிப்பட்டவர் பட்டினியாய் அலைந்திருக்கிறார் பார்.. சிங்காரவேலர் : அதற்கும், காலத்தை வென்று நிற்கப் போகிற நவ கவிதை ஒன்று உம்மிடம் பிறந்து வந்ததே.. நீலகண்டர் : அண்ணா, இவர் யார்..? இதற்கு முன்பு நான் பார்த்ததில்லையே.. இவர் என்ன சொல்கிறார்..? நான் பட்டினியாய் அலைந்ததில் கவிதை வந்ததா..? எப்படி…? பாரதியார் : இவர் சிங்காரவேலர்.. பெரிய மேதை.. தொழிலாளர் மேன்மைக்காக உழைத்து வருகிறார். அவர்களை ஐக்கியப்படுத்தி வருகிறார். ருஷ்யாவின் போல்ஸ்விக் கட்சியைப் போல் நமது நாட்டிலும் சமதர்மக் கட்சியொன்றை ஏற்படுத்த முயன்று வருகிறவர்களில் இவரும் ஒருவர்.நீர் பட்டினியாய் என் வீட்டுக்கு வந்த அன்று ஒரு பாட்டு வந்தது. அதைக் கடற்கரைக் கூட்டத்தில் பாடினேன். சிங்காரவேலர் அந்த விருத்தாந்தத்தை அறிந்தவர்..அதைத்தான் சொன்னார். (சிங்காரவேலரைப் பார்த்து) இவர்தான் நீலகண்டர்.. நீலகண்ட பிரம்மச்சாரி. உமது தொழிலாளர் சங்கங்களில் வேலை செய்யக்கூடிய திறமை வாய்ந்தவர். தொண்டால் சிறை அளந்து வந்திருக்கிறார். சிங்காரவேலர் : பாரதியிடம் இத்தனை புகழ்ச் சொல் பெறுவது கடினம் தம்பி.. நீ விரும்பினால் என்னுடன் வந்து உதவி செய்யலாம். நீலகண்டர் : அண்ணா, இப்படித்தான் சிதம்பரம் பிள்ளையிடம் அனுப்பி வைத்தார். அவரிடம் நான் தேறவில்லை. இப்போது உங்களுடன் அனுப்புகிறார். சிங்காரவேலர் : ஆஷ் கொலை வழக்கில் அதிக நாள் தண்டனை பெற்றவர் நீர்தான் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம், சதிக் குழுவை உருவாக்கியவன், சதியைத் திட்டமிட்டவன் என்றெல்லாம் சொல்லிக் குற்றப் பத்திரிக்கை வாசித்தார்கள். ஆனால் இந்தத் திட்டத்தில் நான் இல்லவே இல்லை. ஆர்யா : நீர் சரணடைந்தபோது இதைக் குறிப்பிட்டிருந்தீர் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம்.. பத்தாண்டுகளுக்கு முன்னால் இதே மாதத்தில்தான் கல்கத்தாவில் நானாக முன்வந்து சரணடைந்தேன்; வாக்குமூலமும் கொடுத்தேன். 1911ஆம் வருடம் ஜூலை 11ஆம் தேதி திருநெல்வேலிக்குக் கொண்டுவந்தார்கள். (மேடை இருளில் போய் ஒளியில் வரும்போது ஓம்கார் அறை) சங்கர கிருஷ்ணன் : ஆஷ் கொலையின்போது காசியில் இருந்தேன் என்று சொன்னீர்களே.. கல்கத்தாவுக்கு எப்போது போனீர்கள்.? ஓம்கார் : சொல்கிறேன். (திரை விழுகிறது)